பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / தொழில்நுட்பங்கள் / மூலிகை மற்றும் நறுமணப் பயிர்களை மதிப்புக்கூட்டும் வழிமுறைகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மூலிகை மற்றும் நறுமணப் பயிர்களை மதிப்புக்கூட்டும் வழிமுறைகள்

மூலிகை மற்றும் நறுமணப் பயிர்களை மதிப்புக்கூட்டும் வழிமுறைகள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

உலரவைத்தல்

உலர வைத்தல் முறை பழங்காலம் முதல் இன்று வரை நடைமுறையில் உள்ளது.  சூரிய வெட்பத்தைக் கொண்டும், மின்சாரத்தால் இயக்கக்கூடிய உலர் இயந்திரங்களை கொண்டும் மூலிகை மற்றும் நறுமணப் பயிர்களில் உள்ள ஈரப்பதத்தை நீக்கி உலர்ந்த பொருட்களாக தயாரிக்க முடியும். மின்சாரத்தால் இயக்கக்கூடிய உலர்ப்பானில் பயிர்களை 40 முதல் 70 டிகிரி சென்டி கிரேடு வெப்பநிலையில் உலர வைக்கலாம். இது வெப்பநிலை பயிர்களை பொறுத்து வேறுபடும். நறுமணப் பயிர்களை 40 டிகிரி சென்டி கிரேடு வெப்பநிலையில் உலர்த்தும் போது அதில் உள்ள வாசனைப் பொருட்கள் வெளியேறாது.  கொத்தமல்லி, வல்லாரை, துளசி, புதினா, ரோஸ்மேரி, செம்பருத்தி பூ, தூதுவனை, கீழாநெல்லி, மணத்தக்காளி கீரை மற்றும் காய், நாவல் கொட்டை, முடக்கத்தான் இலை, வில்வ இலை, கண்டக்காய், அருகம்புல் போன்றவற்றை உலர வைத்துப் பதப்படுத்தலாம்.  மூலிகை மற்றும் நறுமணப் பயிர்களில் உள்ள ஈரப்பதத்தை நீக்கி காற்று புகா வண்ணம் பாலிதின் பைகளில் நீண்ட நாட்கள் வரை பாதுகாக்க முடியும்.

சூப் பவுடர் தயாரித்தல்

தயார் நிலையில் சூப் பவுடர் செய்து மூலிகை மற்றும் நறுமணப் பயிர்களின் மதிப்பை உயர்த்தலாம். தூதுவளை, முடக்கத்தான் கீரை, ரோஸ்மேரி, வல்லாரை மற்றும் மணத்தக்காளி கீரை போன்றவற்றை உலர்த்தி பொடி செய்து கொண்டு சுவைக்கேற்றவாறு, மிளகு, உப்பு, சோளமாவு, சிட்ரிக் அமிலம், சீரகம் சேர்த்து காற்று புகா வண்ணம் பாலிதின் பைகளில் அடைத்து விற்பனைக்கு அனுப்பலாம். இன்றைய காலகட்டத்தில் தயார் நிலை சூப் பவுடர் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தினசரி வாழ்க்கையிலும், விருந்துகளிலும் சூப் சிறப்பு மிக்க இடத்தையும், மதிப்பையும் பெற்றிருக்கிறது. இந்த தயார் நிலை சூப் பவுடரால் நல்ல இலாபம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

ஊறுகனி (கேண்டி) தயாரித்தல்

சோற்று கற்றாழை, நெல்லிக்காய், இஞ்சி, அத்திப்பழம் முதலியவற்கைக் கொண்டு ஊறுகனி தயாரிக்கலாம்.  தோல் மற்றும் கொட்டை நீக்கிய மூலிகைத் துண்டுகளுடன், சர்க்கரையை சேர்த்து 2, 3 நாட்களில் கொஞ்சம், கொஞ்சமாக கலந்து மெதுவாக சூடாக்கினால் பழச்சாற்றில் சர்க்கரை கலந்து நன்கு உறிஞ்சுப்பட்டு விடும். பிறகு பாகு இறுகும் வரை (70 டிகிரி பிரிக்ஸ்) கொதிக்கவிட்டு ஆற வைக்க வேண்டும். பழத்தண்டுகளை பாகிலிருந்து வடிகட்டி எடுத்து சல்லடையில் வடிகட்டிய பிறகு காற்றில் உலர வைக்க வேண்டும்.

பானங்கள் தயாரித்தல்

சோற்றுக் கற்றாழை, அருகம்புல், நோனி, வில்வப்பழம், நாவல்பழம் மற்றும் நெல்லிக்காய் போன்ற மூலிகைகளிலிருந்து பானங்கள் தயாரிக்கலாம். ஒவ்வொரு மூலிகை மற்றும் நறுமணப் பயிர்களின் தன்மைக்கேற்ப பானங்கள், மூலிகைச்சாறு, ஸ்குவாஷ், உடனடியாக பருகக்கூடிய பானம், சிரப் தயாரிக்கலாம். லெமன் கிராஸ், ரோஸ்மேரி, ரோசா இதழ்கள் மற்றும் நன்னாரி வேர் போன்றவைகளை கொண்டு, நறுமணமேற்றிய சிரப் தயாரிக்கலாம். சோற்றுக் கற்றாழை, வில்வம், நாவல்பழம், நோனி, நெல்லிக்காய் மற்றும் அருகல்புல் கொண்டு சர்க்கரை சேர்க்காமல் மூலிகை பானம் தயார் செய்யலாம். சர்க்கரை, சிட்ரிக் அமிலம், இராசயணப் பாதுகாப்பான் மற்றம் இயற்கை வண்ணச்சாறு சேர்த்து ஸ்குவாஷ் உடனடியாக பருகக்கூடிய பானம் மற்றும் சிரப் தயாரிக்கலாம். செம்பருத்திப்பூ இதழ்களைக் கொண்டு வண்ணமேற்றிய பானங்கள் தயாரிக்கலாம்.

தயார் நிலை பொடி மற்றும் சிற்றுண்டி கலவை வகைகள்

கண்டந்திப்பிலி, கொத்தமல்லி இலை, வல்லாரை இலை, தூதுவளை இலை, மணத்தக்காளி கீரை, நெல்லிக்காய, நாவல் பழக்கொட்டை, முடக்கத்தான் கீரை போன்றவற்றை உலர வைத்து, பொடி செய்து கொள்ள வேண்டும்.  பருப்பு வகைகள், மிளகு,சீரகம், வரமிளகாய், உப்பு சேர்த்து, பொடி செய்து தயார் நிலை சாதப்பொடி, ரசப்பொடி, சாம்பார்பொடி, பக்கோடா மிக்ஸ், தோசை மிக்ஸ் மற்றும் அடை மிக்ஸ் தயார் செய்யலாம்.  மேலே குறிப்பிட்ட பொடி மற்றும் சிற்றுண்டி வரை மூலிகை பொடி வகைகளை சேர்க்கலாம்.

வற்றல், அப்பளம் மற்றும் வடகம் தயாரித்தல்

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வற்றல், அப்பளம் மற்றும் வடகத்தை மிகவும் விரும்பி சாப்பிடும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. சுண்டக்காய். மணத்தக்காளிக் காய், மிதுக்கங்காய், தூதுவளைக்காய் இவற்றை லேசாக தட்டி வெய்யிலில் உலர்த்த வேண்டும். மாலையில் வெயில் போனதும், வற்றலை மோரில் ஊற வைக்க வேண்டும். காலையில் வெயில் வந்ததும் வற்றலை மட்டும் எடுத்து உலர்த்த வேண்டும். மாலையில்  திரும்பவும் அதே மோரில் ஊற வைத்து, மோர் தீரும் வரை ஊற வைத்து பின்பு நன்றாகக் காய விட வேண்டும். எண்ணெய்யில் வறுத்து சாப்பிட உபயோகிக்கலாம். அப்பளம், அரிசி வடகம் மற்றும் ஜவ்வரிசி வடகம் தயாரிக்கும் போது உலர வைத்து பொடி செய்து செம்பருத்தி பூதூதுவளை, வல்லாரை மற்றும் முடக்கக்கதான் பொடிகளை 5 முதல் 10 சதவிகிதம் வரை சேர்த்து அப்பளம் மற்றம் வடகம் செய்யலாம்.

வணிக முறையில் சில மதிப்பூட்டப்பட்ட மூலிகைகளிலிருந்து உணவுப் பொருட்கள் தயாரித்தல் பற்றிக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நெல்லிக்காய் பழரசம் (ஸ்குலாஷ்)

தேவையான பொருட்கள்

நெல்லிக்காய் பழச்சாறு – 1லிட்டர், சர்க்கரை – 1.75 கிலோ, தண்ணீர் - 1 லிட்டர், சிட்ரிக் அமிலம் - 20 கிராம், பாதுகாப்பான் பொட்டாசியம் மெட்டா பை சல்பைட் - 700 பி.பி.எம்.

செய்முறை

நன்கு முற்றிய நெல்லிக்காயை தேர்ந்தெடுக்க வேண்டும். நெல்லிக்காய்களை சுத்தமான நீரில் நன்கு கழுவ வேண்டும். பின்பு கொட்டைகளை நீக்கி சதைப் பகுதியை எடுத்து சாறு எடுக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீரையும், சர்க்கரையும் அத்துடன் சிட்ரிக் அமிலத்தையும் எடுத்துக் கொண்டு சர்க்கரைபாகு தயார் செய்ய வேண்டும் (சர்க்கரை  பாகு நன்கு கொதிக்கும் வரை சூடுபடுத்த வேண்டும்) பாகை வெள்ளைத் துணியில் வடிகட்டி நன்கு ஆறவைக்க வேண்டும். பின்பு பாட்டிலின் மேல் பாகத்தில் அரை அல்லது ஒரு அங்குலம் இடைவெளி இருக்குமாறு பழச்சாற்றை நிரப்பி, பாட்டிலைக் காற்று புகாமல் மூடி வைக்க வேண்டும். பரிமாறுவதற்கு முன் பழச்சாற்றுடன் தண்ணீர் சேர்த்து பரிமாற வேண்டும். (ஸ்குவாஷ் 1 பங்கு தண்ணீர் 3 பங்கு).

நோனி மற்றும் நெல்லிக்காய் பழரசக் கலவை (ஸ்குவாஷ்) தயாரித்தல்

தேவையான பொருட்கள்

நோனி பழச்சாறு – 600 மில்லி லிட்டர் நெல்லிக்காய் பழச்சாறு – 400 மில்லி லிட்டர் சர்க்கரை – 175 கிலோ, தண்ணீர் - 1 லிட்டர், சிட்ரிக் அமிலம்- 20 கிராம், பாதுகாப்பான் பொட்டாசியம் மெட்டா பை சல்பைட் - 700 பி.பி.எம்.

செய்முறை

நன்கு பழுத்த நோனி பழங்களையும், நன்கு முற்றிய நெல்லிக் காய்களையும் சேகரித்துக் கொள்ளவும், இப்பழங்களையும் கழுவி விதைகளை நீக்க வேண்டும.  பின்பு இவற்றிலிருந்து தனித்தினயே பழச்சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு இவற்றிலிருந்து தனித்தனியே பழச்சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.  பழச்சாற்றை வடிகட்டி வைத்துக் கொள்ளவும். சர்க்கரைப் பாகை தனியே தயாரித்துக் கொள்ளவும். சர்க்கரை பாகை வடிகட்டி குளிர வைக்க வேண்டும். பின்பு 60 சதவிகிதம் நோனி, 40 சதவிகிதம நெல்லிக்காய் சாற்றுடன் சர்க்கரைப் பாகு சேர்க்க வேண்டும். இத்துடன் பாதுகாப்பானை சேர்ந்து நன்கு கலக்க வேண்டும். பின்பு சுத்தம் செய்யப்பட்ட பாட்டில்களில் பழரசத்தை அடைத்து மேல் மூடியிடுதல் வேண்டும்.

சோற்றுக் கற்றாழை (கேண்டி தயாரித்தல்)

தேவையான பொருட்கள்

சோற்றுக் கற்றாழை துண்டுகள்- ஒரு கிலோ, உப்பு – 40 கிராம், கால்ஸியம் குளோரைடு – 20 கிராம், சர்க்கரை – 1.0 கிராம், சிட்ரிக் அமிலம் - 5 கிராம், பொட்டாசியம் மெட்டா பை சல்பைட் - 300 பி.பி.எம்.

செய்முறை

நன்கு விளைந்த சோற்றுக் கற்றாழைளை தேர்வு செய்து, முன் பகுதி மற்றும் பின் பகுதியை நீக்கி விட வேண்டும். தண்ணீரில் நன்கு கழுவிய பின்பு தோலை கத்தியால் சீவி எடுத்துவிட்டு சதைப்பகுதியை மட்டும் பிரித்து எடுத்து சிறு துண்டுகளாக நீள வாக்கில் வெட்ட வேண்டும். வெட்டிய சதைப்பகுதியை 2.0 சதவிகிதம் உப்பு மற்றும் 1.0 சதவிகிதம் கால்சியம் குளோரைடு கரைசலில் சுமார் அரை மணி நேரம் ஊற வைக்கவும் (2 லிட்டர் தண்ணீர் 40 கி உப்பு, 20 கிராம் கால்சியம் குளோரைடு) குளிர்ந்த நீரில் ஊறிய சோற்றுக் கற்றாழையை நன்கு அலசிய பின்பு, ஆவியில் சுமார் 2-3 நிமிடம் வேக வைக்க வேண்டும். வேக வைத்து கற்றாழையை தண்ணீரிலிருந்து வெளியே எடுத்துவிட்டு தயார் செய்த சர்க்கரை பாகில் (400கிராம் சர்க்கரை 10 600 மில்லி தண்ணீர் - 400 பிரிக்ஸ்) ஒரு நாள் ஊற வைக்க வேண்டும். இரண்டாவது நாள் சர்க்கரை பாகிலிருந்து ஊறிய கற்றாழையை நீக்கி விட்டு, மறுபடியும் 200 கிராம் சர்க்கரையை, சர்க்கரைப் பாகில் சேர்த்து கொதிக்க வைத்து, ஆறிய சர்க்கரைப் பாகில் கற்றாழையை ஒரு நாள் ஊற வைக்க வேண்டும். மேலே குறிப்பிட்ட முறையில் மூன்றாவது மற்றும் நான்காவது நாள் வரை கற்றாழையை சர்க்கரைப் பாகில் ஊற வைக்க வேண்டும். நான்காவது நாளின்போது சர்க்கரைப் பாகில் சிட்ரிக் அமிலம் மற்றும் பாதுகாப்பான் சேர்க்க வேண்டும். நான்கு நாட்கள் கழித்த பிறகு கற்றாழையை சர்க்கரை பாகில் இருந்து வெளியே எடுக்காமல் அப்படியே 7 நாட்கள் வரை சர்க்கரைப் பாகில் ஊறு வைக்க வேண்டும். இதனால் சர்க்கரை கற்றாழையில் ஊடுருவி செல்ல ஏதுவாக இருக்கும். ஏழு நாட்கள் கழித்த பிறகு கற்றாழையை வெளியே எடுத்து, வெதுவெதுப்பான தண்ணீரில் அலசி நன்றாக காய வைக்க வேண்டும். உலர்ந்த பின்பு, பொடி செய்த சர்க்கரையை கற்றாழையின் மேல் தூவி பாலிதீன் பைகளில் பேக் செய்ய வேண்டும்.

வல்லாரை சூப் மிக்ஸ்

தேவையான பொருட்கள்

ஊலா வைக்கப்பட்டு பொடி செய்த வல்லாரை – 30 கிராம், வெங்காய பவுடர் - 10 கிராம், மக்காச் சோள மாவு – 20 கிராம், சீரகத்தூள் - 5 கிராம், மிளகுத்தூள் - 5 கிராம் உப்பு – 10 கிராம், உலர வைக்கப்பட்டு பொடி செய்த தக்காளி – 10 கிராம், சர்க்கரை – 5 கிராம்.

செய்முறை

மேலே குறிப்பிட்ட எல்லாப் பொருட்களையும் நன்றாக சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். பிறகு பாலீதீன் பைகளில் நன்றாக பேக் செய்து கொள்ள வேண்டும்.

உபயோகிக்கும் முறை

10 கிராம் சூப் மிக்ஸ் எடுத்துகொண்டு, அத்துடன் 150 மில்லி தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து நன்றாக ஆறவைத்து இளம் சூட்டில் பரிமாறலாம். தேவைப்பட்டால் நறுக்கிய கொத்துமல்லி இலை, துருவிய சீஸ் அல்லது வெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.

தூதுவளை சாதப் பொடி தயாரித்தல்

தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு – 500 கிராம், கடலைப் பருப்பு – 400கிராம், வடமிளகாய் - 20 எண்ணிக்கை, உளுத்தம் பருப்பு – 50 கிராம், சீரகம் - 10 கிராம், மிளகு – 10 கிராம், தூதுவளை இலைப்பொடி – 100 கிராம், பெருங்காய்த்தூள் - 5 கிராம், உப்பு – 90 கிராம்.

செய்முறை

மேலே குறிப்பிட்ட அனைத்துப் பொருட்களையும், தனித்தனியாக வறுக்கவும். பிறகு மிக்ஸியிலோ அல்லது அரவை இயந்திரத்திலோ நன்றாக அரைக்கவும்.  அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக கலந்து, சல்லடையால் சலித்து கொள்ளவும் பொடியை பாலீதீன் பைகளில் அடைக்கவும்.

மூலிகை மற்றும் நறுமணப் பயிர்களைக் கொண்டு மேலே குறிப்பிட்ட சில செய்முறைகளில் மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்களாக மாற்றலாம். மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் ஆறு மாதம் முதல் ஒரு ஆண்டு வரை வைப்புத்திறன் கொண்டுள்ளதாக இருக்கும். இந்தொழிலை வியாபாரரீதியாக மேற்கொள்வதன் மூலம் விவசாயிகள் அதிக வருமானத்தையும் லாபத்தையும் பெறுவதோடு மற்றவர்களுக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கலாம். நல்ல தரமான முறையில் மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் ஆறு மாதம் முதல் ஒரு ஆண்டு வரை வைப்புத்திறன் கொண்டுள்ளதாக இருக்கும். இந்தொழிலை வியாபாரரீதியாக மேற்கொள்வதன் மூலம் விவசாயிகள் அதிக வருமானத்தையும் லாபத்தையும் பெறுவதோடு மற்றவர்களுக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கலாம்.  நல்ல தரமான முறையில் மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரித்தால் நம் நாட்டில் மட்டுமல்லாமல் அயல் நாட்டிலும் வரவேற்பை பெறலாம்.

ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை

3.15942028986
கல்யாணி Apr 20, 2019 09:04 PM

பயிற்சி ஏதாவது கிடைக்குமா?

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top