பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

அங்கக முறையில் முருங்கை சாகுபடித் தொழில் நுட்பங்கள்

அங்கக முறையில் முருங்கை சாகுபடி செய்வதற்கான தொழில் நுட்பங்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

சுமார் நுாறு ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பிய நாடுகளில்தான் அங்கக வேளாண்மை முறைகள் தோற்றுவிக்கப்பட்டன. ஆரம்பத்தில் இது உதாசீனப்படுத்தப்பட்டாலும், இதன் மகத்துவம் கடந்த இருபது ஆண்டுகளாக தெளிவாக உணரப்பட்டு வருகிறது. அங்கக உரங்களின் பயன்பாட்டால் இயற்கை வளங்களின் இழப்பினைக் குறைக்கலாம். அதனால் அங்கக வேளாண்மையில் பயிர்களின் உற்பத்திக்கு செயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு தவிர்க்கப்படுகிறது.

பயிர்ச்சுழற்சி, பயிர்க்கழிவுகள், கால்நடைக் கழிவுகள், பயறுவகைப் பயிர்கள், பசுந்தாள் உரங்கள், பண்ணை சாரா அங்கக உரங்கள், இயந்திரமுறை உழவு, தாதுஉப்புக்கள் அடங்கிய பாறைச் சிதறல்கள் மற்றும் இயற்கை பூச்சி எதிரிகள் ஆகியனவற்றைச் சார்ந்து அங்கக வேளாண்மை முறை செயல்படுகின்றது. மேற்கண்ட கூறுகள் மண்வளத்தையும் திடத்தையும் பூச்சிகள் மற்றும் களைகள் போன்றவற்றைக் கட்டுப்படுத்தவும் பயன்படுகின்றன.

காய்கறிப்பயிர்களுக்குள், அங்கக வேளாண்மை முறையில் சாகுபடி செய்வதற்கு மிகவும் உகந்த பயிர் முருங்கை ஆகும். முருங்கை (முருங்கா ஒலிஃபெரா) இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் ஒரு காய்கறிப் பயிராகும். கீரைக்காகவும் முதிர்ந்த அல்லது இளமுதிர்ந்த காய்களுக்காகவும், பயிரிடப்படும் இப்பயிர் கனிகானா’, முல்லக்கி, முருகி, சாஜன் மற்றும் முரிங்கா என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

தென்னிந்திய உணவு வகைகளில் இது சிறப்பிடம் பெறுகிறது. தனித்துவம் வாய்ந்த விரும்பத்தக்க மணமுடைய காய்கள் இதன் சிறப்பியல்பு ஆகும். பூமொட்டுக்களும் உணவாகப் பயன்படுகின்றன. இத்துடன் இதில் மருத்துவ குணமும் உள்ளது. சத்துக்கள் குறைந்த, அதிவேக வளர்ச்சியுடைய, வறட்சியைத் தாங்கக் கூடிய மற்றும் பல்வேறு சூழ்நிலைகளிலும் பயிரிடுவதற்கேற்ற காய்கறிப்பயிரான முருங்கை உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.

அங்கக வேளாண் முறை உத்திகள்

தொழு உரம்

அடியுரமாக தொழுஉரம் இடப்பட்டு உழவு செய்யப்படுகிறது. இதில் 0.6% தழைச்சத்து, 0.35 % மணிச்சத்து மற்றும் 0.6 % சாம்பல் சத்து ஆகியன உள்ளன. இது மக்குவதற்கு சுமார் ஒராண்டு ஆகும். பொதுவாக காய்கறிப் பயிர்களுக்கு வயலைத் தயார் செய்யும்போது அல்லது நடவின்போதும் பின்பு ஒராண்டுக்குப் பயிர்களைச் சுற்றியும் தொழுஉரம் இடப்படுகிறது. முருங்கை நடவு செய்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு 2.5 மீட்டர் சதுர இடைவெளியில் 45 செ.மீ x 45 செ.மீ x 45 செ.மீ. முறையே நீள, அகல மற்றும் ஆழமுள்ள குழிகள் தோண்டப்படுகின்றன. ஒரு குழிக்கு 15 கிலோ வீதம் தொழுஉரம் அளிக்கப்படுகிறது. ஒராண்டு வயதுடைய முருங்கை மரத்தினைச் சுற்றி 60 செ.மீ. துாரத்தில் வட்டவடிவ குழி தோண்டி, அதில் ஒரு மரத்திற்கு 75 கிலோ தொழு உரம் இட்டு, குழியை மூடிவிட்டு நீர்ப்பாய்ச்சுதல் வேண்டும். மீண்டும் ஜூன் மாதத்தில் 1 மீட்டர் துாரத்தில் குழி தோண்டி தொழு உரம் இட வேண்டும்.

உயிர் உரங்கள்

பயிர்த்தாவரங்களின் வேர்களைச் சுற்றி, பயனுள்ள நுண்ணுயிர்களின் எண்ணிக்கையையும் அவற்றின் செயல்பாட்டையும் அதிகரித்து, மண்வளத்தை மேம்படுத்தவும் மண்ணில் அளிப்பதற்கேற்ற வகையில் சில திடப்பொருட்களுடன் கலந்து தயாரிக்கப்பட்ட பயனுள்ள நுண்ணுயிரிகள் அடங்கிய கலவையே ‘உயிர் உரம்’ ஆகும். இவை எளிமையான மற்றும் செயற்கை உரங்களுக்கு உறுதுணையான சத்து மூலங்கள் ஆகும்.

அங்கக வேளாண்மையில் உயிர் உரங்களும் முக்கியப்பங்கு வகிக்கின்றன. அசோஸ்பைரில்லம் காற்றோட்டமான பகுதிகளில் வாழக்கூடிய, காற்றில் உள்ள தழைச்சத்தினை கிரகித்து உயிருக்கு அளிக்கக்கூடிய மற்றும் பயிர்களுடன் கூட்டுறவு இணை வாழ்க்கை நடத்தக்கூடிய ஒர் உயிர் உரம் ஆகும். இது கேப்சூல்கள் (விப்ராய்டு) எனப்படும் பசைத்தன்மையுள்ள குறைந்த அளவே நகரும் தன்மையுள்ள வடிவங்களை உருவாக்கி வேர்ப்பகுதியில் வகிக்கின்றன (பெர்க் மற்றும் குழு, 1980). இதனை விதைநேர்த்தி செய்தோ, நாற்றுக்களின் வேர்களில் நனைத்தோ வயலில் அளித்தோ பயன்படுத்தலாம். முருங்கை விதைகளை 625 கிராம் விதைக்கு 100 கிராம் அசோஸ்பைரில்லம் என்ற அளவில் விதைப்பதற்கு முன் கலந்து விதைப்பதால் பயிர் வேகமாக முளைத்து, துரித வளர்ச்சி மற்றும் அதிக மகசூல் ஆகியவற்றை தருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

மண்ணில் உள்ள கரையாத பாஸ்பேட்டு உப்பினை சில அமிலங்களை உமிழந்து கரையும் பொருளாக மாற்றி, பயிர்கள் எளிதில் பயன்படுத்தத்தக்க வகையில் மாற்றித்தரும் உயிர் உரமாக பாஸ்போபாக்டீரியா செயல்படுகிறது. இது ஒரு தனித்து வாழும் நுண்ணுயிரி ஆகும். மேலும் சில கிரியா ஊக்கிகளின் உதவியாலும் இவை பாஸ்பேட் தாதுக்களைக் கரைக்கின்றன. முருங்கைக்கு பாஸ்போபாக்டீரியா அளிப்பதால் மணிச்சத்தின் அளவினைக் குறைத்திடவும் மகசூலை அதிகரித்திடவும் செய்யலாம்.

மண்புழு உரம்

மண்புழுக்களின் கழிவுகளால் தயாரிக்கப்பட்டது மண்புழு உரமாகும். இவற்றில் கரிமச்சத்து மிக அதிக அளவில் (47%) உள்ளது. இது மண்ணில் ஒரு சிறந்த பிடிப்புப் பொருளாக இருந்து பயிர் வளர்ச்சியையும் வேர் வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது. இதனை முருங்கைக்கு உயிர் உரங்களுடன் மற்றும் இதர அங்கக உரங்களுடன் சேர்த்து இடலாம்.

அங்கக உரங்களைப் பயன்படுத்துவதால் முருங்கையின் வளர்ச்சி மகசூல் மற்றும் மகசூல் காரணிகள் அனைத்தும் மேம்படுத்தப்படுவதாக ஆராய்ச்சிகள் மூலம்  கண்டறியப்பட்டது.

மேலும் பசுந்தாளுரம் மற்றும் குறைந்த அளவில் தொழுஉரம் இடப்பட்ட மரங்களைவிட, தொழுஉரம் ஒரு மரத்திற்கு 15 கிலோ என்ற அளவிலோ அல்லது மண்புழு உரம் ஒரு மரத்திற்கு 5 கிலோ என்ற அளவிலோ உயிர் உரங்களுடன் (அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபேக்டீரியா) சேர்த்து இடுவதால் மரங்களின் தண்டுப்பகுதி பெருத்துக் காணப்பட்டது. அதைப்போன்று முருங்கைக் காய் மகசூலும் அதிக அளவில் தொழுஉரம் இடப்பட்ட வயலில் (8.5 டனர்கள் / எக்டர்) கிடைத்தது. ஒவ்வொரு மரத்திலும் அதிக எண்ணிக்கையில் காய்கள் உருவாவதால் மகசூல் அதிகரித்தது. எனவே, உற்பத்திச் செலவைக் குறைப்பதுடன் சுற்றுச்சூழல் மாசுபடுவதைக் குறைக்க வேண்டியிருக்கும். இன்றைய சூழலில் அங்ககமுறையில் முருங்கை பயிரிடுதல் சாலச் சிறந்தது ஆகும்.

நிலப்போர்வை அமைத்தல்

மண்ணில் ஈரப்பதத்தை நிலைநாட்டவும் களைகளின் வளர்ச்சியைக் குறைக்கவும் ஒர் சிறந்த வழி நிலப்போர்வை அமைத்தல் ஆகும். முருங்கை மரத்தின் அடியிலும் வரிசைகளுக்கு இடையே உள்ள இடங்களிலும் வைக்கோல், பருத்தித் தண்டுகள், இலைகள், மரத்துாள் போன்ற தாவரக்கழிவுகளை நிலப்போர்வையாகப் பரப்பி விடலாம்.

நிலப்போர்வை, மண்ணிற்கு அங்ககச் சத்தினை அளிப்பதுடன் பகலில் இதமான குளிராகவும் இரவில் மிதமான வெப்பத்துடனும் தகுந்த சூழ்நிலையை உருவாக்குகிறது. முருங்கை மரத்தினை செயற்கை உரங்கள் அளிக்காமலேயே விளைவிக்க முடியும். கேரளாவில் (தென்னிந்தியா) முருங்கை மரத்தினைச் சுற்றி 10 செ.மீ. ஆழத்தில் குழியிட்டு, அதில் மழைக்காலங்களில் பசுந்தழைகள், அங்கக உரங்கள் மற்றும் சாம்பல் ஆகியவற்றால் நிரப்பி, மண்ணால் மூடிவிடுவதால் மகசூல் அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மறுதாம்புப் பயிரிலும் மேற்குறிப்பிட்ட பொருட்கள் மரத்தின் ஆரம்ப வளர்ச்சியை ஊக்குவித்ததன் மூலம் ஒருங்கிணைந்த உர நிர்வாகத்தின் அவசியத்தை உணர்த்துகின்றன. மேலும் சத்துக்களை உட்கொள்ளும் திறன் மற்றும் பயன்படுத்தப்பட்ட சத்துக்களின் சதவீதம் ஆகியனவும் உயர்த்தப்பட்டன. இத்துடன், நார்ப்பொருள், புரதச்சத்து அஸ்கார்பிக் அமிலம், கரோட்டின் அளவு மற்றும் வாழ்நாள் ஆகிய தரக் காரணிகளும் பஞ்சகாவ்யம் தெளிப்பதால் உயர்த்தப்படுவதாகக் கண்டறியப்பட்டது.

அங்கக முறையில் பயிர்ப்பாதுகாப்பு

முதிர்ந்து கொண்டிருக்கும் நிலையில், காய்கள் கிட்டோனியா டிஸ்டிக்மேட்டா எனப்படும் பழக்குழவியால் தாக்கப்படுகின்றன. இவற்றை ஒருங்கிணைந்த முறையில் பாதுகாக்க முடியும். அவையாவன.

 1. வளர்ச்சிப்பருவம் மற்றும் பூக்கும் பருவங்களில் 0.04 சத பெண்தியன் 80 இ.சி. மருந்தினைத் தெளிக்க வேண்டும்.
 2. 50 சதவீத காய்ப்பிடிப்புப் பருவத்தில் 0.03 சத நிம்பிசிடின் மருந்தினை 150 பி.பி.எம். என்ற அளவில் தெளிக்க வேணடும்.
 3. 5௦ சதவீத காய்ப்படிப்புப் பருவத்தில் ஒரு மரத்திற்கு 2 லிட்டர் வீதம் வேப்பங்கொட்டைச் சாற்றினைத் தெளிக்க வேண்டும்.
 4. ஒரு வார இடைவெளியில் காய்களை அறுவடை செய்ய வேண்டும்.

பஞ்சகாவ்யம்

கீழ்க்காணும் இடுபொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு அங்ககப் பொருள் பஞ்சகாவ்யம் என்றழைக்கப்படுகிறது.

 • பசு மாட்டுச் சாணம் - 7 கிலோ
 • பசு மாட்டுக் கோமியம் - 10 லிட்டர்
 • தண்ணீர் - 10 லிட்டர்

மேற்காண்பவற்றை ஒன்றாகக் கலந்து மண்பானையில் 15 நாட்கள் வரை வைத்திருந்து, பின்பு பின்வருவனவற்றைச் சேர்க்க வேண்டும்.

 • பசும்பால் - 3லிட்டர்
 • பசுவின் தயிர் - 2 லிட்டர்
 • பசு நெய் - 1 லிட்டர்
 • இளநீர் - 3லிட்டர்
 • நாட்டு வெல்லம் - 3 கிலோ
 • வாழைப்பழம் - 12 எண்கள்

இவற்றை காலையிலும் மாலையிலும் நன்றாகக் கலக்க வேண்டும்.

அடுத்த 25 நாட்களில் பஞ்சகாவ்யம் தெளிப்பதற்குத் தயாராகிவிடும். இதனை 3 சதக் கரைசலாக (100 மி.லி. நீரில் 3. மி.லி. பஞ்சகாவ்யம்) ஒரு மாத இடைவெளியில் பயிருக்குத் தெளிக்கலாம். பஞ்சகாவ்யத்தில் பயிருக்குத் தேவையான நுண்ணுயிரிகளும் பூச்சிநோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் காரணிகளும் நிறைந்துள்ளன.

ஆதாரம் : தோட்டக்கலைக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்

2.93650793651
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top