பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

முருங்கையில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள்

முருங்கையில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

மொரிங்கா ஒலிபெரா மொரிங்கேசியே குடும்பத்தைச் சார்ந்தது. முருங்கையில் கீரை, காய், விதை போன்ற அனைத்து பாகங்களும் சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இலை, தண்டு மற்றும் விதை இவற்றில் புரோட்டின் சத்து அதிக அளவில் காணப்படுகிறது.

புரோ வைட்டமின் ஏ, வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி, தாதுப் பொருட்கள் (இரும்புச்சத்து), சல்பர் நிறைந்த அமினோ அமில மிதியோனைன் மற்றும் சிஸ்டைன் ஆகியவை முருங்கையில் உள்ளன. முருங்கையில் வைட்டமின் ஏ, இரும்புச்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம் ஆகிய சத்துக்களும், மற்ற காய்கறி, பழங்களான கேரட், ஸ்பினச், ஆரஞ்சு மற்றும் வாழை போன்றவற்றை விட அதிக அளவில் சத்துக்கள் காணப்படுகின்றன. பால் மற்றும் முட்டையுடன் ஒப்பிடுகையில் புரோட்டினின் தரம் முருங்கையில் உயர்ந்து காணப்படுகிறது. முருங்கையில் மதிப்பூட்டப்படும் பொருட்கள் தயாரிப்பதன் மூலம் அதிக பயனர்களைப் பெறலாம்.

இலையில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள்

அ. முருங்கை இலைப்பொடி தயாரித்தல்

முருங்கை இலைகளை அறுவடை செய்தவுடன் இலைக்காம்புகளை நீக்க வேண்டும். இலைகளை நன்கு நீரில் கழுவிய பிறகு நிழலில் உலர்த்த வேண்டும் (சூரிய ஒளியில் உலர்த்தினால் வைட்டமின் ஏ சத்து குறையும்). உலர்த்திய இலைகளை பொடி செய்து, பொடியினை காற்று புகாத கலன்களில் அடைக்க வேண்டும். முருங்கைப் பொடியினை 2 அல்லது 3 தேக்கரண்டி அளவு எடுத்து சூப் மற்றும் சாஸ் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் ஊட்டச்சத்தினைப் பெறலாம். ஒளி மற்றும் ஈரப்பதம் கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் 6 மாதம் வரை பொடியினை சேமிக்கலாம்.

ஆ. முருங்கை சாறு

முருங்கை இலையுடன் நீர் சேர்த்து இயந்திரத்தினால் ஆன கலனில் இட்டு அரைக்க வேண்டும். 10 கிலோ இலைக்கு 1 லிட்டர் தண்ணீர் சேர்க்க வேண்டும். பெரிய அளவில் தயார் செய்வதற்கு சுத்தியலால் ஆன அரைவையினைப் பயன்படுத்தலாம். அரைத்தவற்றை வடிகட்டி இதனுடன் நீர் மற்றும் சர்க்கரையை சுவைக்காக சேர்க்க வேண்டும்.

மற்றொரு செய்முறை

முருங்கை இலையின் பொடியினை ஒரு லிட்டர் தண்ணீரில் தேவையான அளவு சேர்த்து, இதனுடன் சர்க்கரை சேர்த்து தயாரித்து, குளிர் சாதனப்பெட்டியில் வைத்து சேமிக்கலாம்.

இ. முருங்கை இலை சாஸ்

இரண்டு பங்கு இலையுடன், ஒரு பங்கு நீர் சேர்த்து வேக வைக்க வேண்டும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், உப்பு மற்றும் வெண்ணையினை தேவைக்கு ஏற்றார் போல் சேர்த்துக் கொள்ளலாம்.

பூவில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள்

கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் பூவில் நிறைந்து காணப்படுகின்றன. முருங்கை பூவுடன், காளான் சேர்த்து சாப்பிடலாம். பூவினை வேக வைத்து சாலட் போன்று செய்து சாப்பிடலாம்.

காய்களில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள்

காய்களை, குழம்பு வகைகளில் சேர்த்து சாப்பிடலாம். 5 செ.மீ நீளத்திற்கு காய்களை நறுக்கி கொதிக்கும் நீரில் இட்டு பிறகு காயின் சதைப்பகுதியை உண்ணலாம். காய்களை உடைத்து சதை மற்றும் முற்றாத இளம் விதைகளை எடுத்து இதனை நன்கு நீரில் கழுவ வேண்டும் (கசப்புத் தன்மை போகும் வரை). இதனை எண்ணெயில் வேக வைத்து சாப்பிடும் போது வேர்க்கடலையின் சுவையைத் தரும். சதைப்பகுதியினை வேக வைத்து சூப் மற்றும் சாஸ் போன்றவற்றில் சேர்த்தும் உண்ணலாம்.

சாலட் செய்முறை

காயில் இருந்து சாலட் தயாரிக்கலாம். 1 செ.மீ தடிமன் உள்ள இளம் காயினை 3 செ.மீ நீளத்திற்கு நறுக்கி இதனை 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். இதனுடன் தேவைக்கு ஏற்ப வினிகர், உப்பு, மிளகு, பூண்டு மற்றும் பார்லி ஆகியவற்றை சேர்த்து சாப்பிடலாம்.

விதையில் மதிப்பூட்டுதல்

விதையினை சில நிமிடங்களுக்கு வேக வைக்க வேண்டும். பிறகு நீரினை வடித்து விட வேண்டும். உலர்ந்த விதையினை பொடியாக அரைத்து சாலட்டில் சேர்த்து உண்ணலாம்.

வேரில் மதிப்பூட்டுதல்

முருங்கை மரத்திற்கு மாற்று பெயராக Horse radish-Tree என்று கூறுவர். ஏனெனில் இதன் வேர்கள் காரமான சுவையூட்டும் பொருளாகப் பயன்படுகிறது.

 • 60 செ.மீ நீளமுள்ள மரத்தினை பிடுங்கி வேரினை அறுவடை செய்ய வேண்டும்.
 • உலர்ந்த வேரினை பொடி செய்து, உணவில் சுவையூட்டியாகப் பயன்படுத்தலாம்.
 • வேரில் தயாரிக்கப்பட்ட சாஸ்-ல் சமைக்கும் பொழுது வினிகர் சேர்த்து பிறகு பயன்படுத்தலாம்.
 • வேரின் மேல் பகுதியினை எடுத்து உட்புறம் உள்ள சதைப்பகுதியுடன் உப்பு மற்றும் வினிகர் சேர்த்து உண்ணலாம்.
 • வேரின் மேல் உறையில் நச்சுத்தன்மை உள்ளதால், மேல் உறையினை நீக்க வேண்டும்.

முருங்கை எண்ணெய்

விதையினை நசுக்குவதன் மூலம் எண்ணெய் தயாரிக்கலாம். இதனை முருங்கை எண்ணெய் அல்லது பெண் எண்ணெய் (Ben oil) எனலாம். தோல் உரிக்காத விதையில் தோராயமாக 42 சதவீதம் எண்ணெய் உள்ளது. இந்த எண்ணெய் கடிகாரத்தில் உராய்வு நீக்கியாக செயல்படுகிறது. இவை சமையல் எண்ணெயாகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த எண்ணெயில் கொழுப்பு இல்லா அமிலத்தின் சதவீதம் 0.5 முதல் 3 வரை உள்ளது. இந்திய மருத்துவத்தில் முருங்கை எண்ணெய் கட்டி, வயிற்றுப்புண், இரத்தக்கொதிப்பு, கொழுப்பு ஆகியவற்றைக் குணப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது. பாக்டிரியா மற்றும் பூஞ்சாண நுண்ணுயிரிகளை எதிர்க்கும் திறன் பெற்றுள்ளது.

அழகு சாதனப்பொருட்கள்

உடம்பு மற்றும் முடியை மேம்படுத்தும் அழகு சாதனப்பொருட்கள் தயாரிக்க முருங்கை எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. பால்மிடோலிக், ஒலிக் மற்றும் லினோலியிக் அமிலம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளதால் முருங்கை எண்ணெய் தேகத்தைப் பிடித்தல் (Massage) போன்ற செயல்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த எண்ணெய் எளிதில் கெடாமல் இருப்பதால் வாசனை திரவியம் தயாரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

வணிக மயமாக்கப்பட்ட மதிப்பூட்டும் பொருட்கள்

முருங்கை ஊறுகாய்

தேவையான பொருட்கள்

 • முருங்கைக்காய் - 1 கிலோ
 • உப்பு - 150 கிராம்
 • மிளகாய்தூள் - 200 கிராம்
 • எண்ணெய் - 300 மி.லி
 • கடுகு - 10 கிராம்
 • மஞ்சள் தூள் - 15 கிராம்
 • வெந்தயத்தூள் - 5 கிராம்
 • பெருங்காயத்தூள் - 5 கிராம்
 • வினிகர் - 20 மில்லி

செய்முறை

முருங்கை காய்களை நன்கு நீரில் கழுவி, உலர்ந்த பிறகு 2 செ.மீ நீளமுள்ள துண்டுகளாக வெட்ட வேண்டும். 2 நிமிடம் நீரில் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் மற்றும் கடுகு சேர்த்து முருங்கை காய் துண்டுகளைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி பிறகு அனைத்து வாசனைப் பொருட்களான மிளகாய்த்தூள், வெந்தயத்தூள் மற்றும் பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும். இதனுடன் வினிகர் சேர்த்து பாட்டிலில் அடைத்து சேமிக்கலாம்.

உலர்முருங்கை

முருங்கை காயினை நன்கு நீரில் கழுவி 2 செ.மீ நீளமுள்ள சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும். 2 நிமிடம் வேக வைத்து நிழலில் உலர்த்த வேண்டும். உலர்ந்த காயினை மற்றொரு முறை உலர்த்தியில் 55 டிகிரி செல்சியஸ் இருக்குமாறு 1 மணி நேரத்திற்கு உலர்த்த வேண்டும்.

முருங்கை கூழ் பொடி

முருங்கை காயினை கழுவி 3 செ.மீ நீளமுள்ள துண்டுகளாக நறுக்க வேண்டும். 3 நிமிடம் கொதிக்க வைத்து பிறகு குளிர செய்து, கூழினை மட்டும் சுரண்டி எடுக்க வேண்டும். கூழுடன் ௦.5 சதவீத பொட்டாசியம் மெட்டாபைசல்பேட் சேர்த்து 10 நிமிடத்திற்கு ஊற வைக்க வேண்டும். பிறகு ஊற வைத்த கூழினை உலர்த்தியில் 55 டிகிரி செல்சியஸில் 6 மணி நேரம் உலர்த்த வேண்டும். உலர்ந்த கூழினை பொடி செய்து 200 குவாஜ் தடிமன் கொண்ட பாலித்தின் பையில் பொட்டலமிட்டு சேமிக்கலாம்.

முருங்கை ஆகோ

தேவையான பொருட்கள்

 • 1/3 பங்கு முருங்கை இலை
 • 1/4 பங்கு பொடித்த வேர்க்கடலை
 • 3 கருவாடு
 • 3 வெங்காயம் (நறுக்கியது)
 • 2 தக்காளி (நறுக்கியது)
 • 2 ஏலக்காய்
 • 2 பூண்டு
 • மிளகுதூள்
 • மிளகாய் தூள்
 • காளான் (தேவைப்பட்டால்)
 • உப்பு (தேவையான அளவு)

செய்முறை

இலைகளை 10 நிமிடம் வேக வைத்து பிறகு இலைகளை நீக்க வேண்டும். மீதமுள்ள நீரினை மறுபடியும் 15 நிமிடம் வேக வைத்து நீரில் மீதமுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

ஆதாரம் : தோட்டக்கலைக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்

3.02631578947
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top