பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / விவசாய கடன் / வேளாண் தொழில்களுக்கு வங்கி கடன்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வேளாண் தொழில்களுக்கு வங்கி கடன்கள்

வேளாண் தொழில்களுக்கான வங்கி கடன்கள் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

பழங்காலங்களில் விவசாயிகள் அவர்களது தொழில் மூலதனத்திற்கு கிராமங்களிலுள்ள கந்துவட்டிகாரர்களையே பெரிதும் நம்பி வந்தனர். பிறகு கூட்டுறவு சங்கங்கள் கிராமப்புற கடன் திட்டங்களில் பெரும் பங்கு வகிக்கத் துவங்கின. வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட காலங்களிலிருந்து பொதுத்துறை வங்கிகளும் இத்தொழில்களுக்கு கடன் வழங்கத் தொடங்கின. பின்னர் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆணைப்படி அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளும் (வெளிநாட்டு வங்கிகள் உட்பட) அந்தந்த வங்கிகளின் மொத்த கடன் தொகையில் 40 சதவீதம் முன்னுரிமைக் கடன்களாக வழங்க வேண்டும்.

  1. மொத்த கடன் தொகை - 100 சதவீதம்
  2. வேளாண்மைக் கடன்கள் - 18 சதவீதம் (நேரடி மற்றும் மறைமுகக் கடன்கள்)
  3. நலிந்த பிரிவினர் - 10 சதவீதம் மீதமுள்ள தொகையை (40 - (18+10)) வங்கிகள் சிறு தொழில்களுக்கு வழங்கலாம்.

வேளாண்மைக்கு வழங்கப்படும் வங்கி கடன்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

  1. நேரடிக்கடன்கள்
  2. மறைமுகக் கடன்கள்

நேரடிக்கடன்கள்

இவை விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கப்படும் கடன்களாகும். இவற்றுள் பயிர்கடன்கள், வேளாண் விளை பொருட்களின் பேரில் வழங்கப்படும் கடன்கள் (குறுகிய கால கடன்கள்), வேளாண் இயந்திரங்கள் வாங்குவதற்குக் கொடுக்கப்படும் கடன்கள், மாட்டுப் பண்ணை மற்றும் கோழிப் பண்ணைகள் துவங்குவதற்கென கொடுக்கப்படும் கடன்கள் (மத்திய மற்றும் நீண்ட கால கடன்கள்) ஆகியன அடங்கும்.

மறைமுகக் கடன்கள்

வேளாண்மை சார்ந்த தொழில்களுக்கு வழங்கப்படும் கடன்கள் மறைமுகக் கடன்களாகக் கருதப்படுகின்றன. இவ்வகையான தொழில்களுக்குக் கடன் வழங்கும் பொழுது அத்தொழில்கள் மேலும் வளர்ச்சி பெறுகிறது. மறைமுகமாக இவ்வளர்ச்சி இது சார்ந்திருக்கும் வேளாண்மைக்குப் பேருதவியாக அமைவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பொதுவாக, வேளாண் தொழிலுக்கு வழங்கப்படும் கடன்களை அதன் காலத்தைப் பொருத்து இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

  • மத்திய மற்றும் நீண்ட கால கடன்கள் - 2 முதல் 5 வருட காலம் வரையிலான கடன்கள்
  • குறுகிய கால கடன்கள் - 12 மாதங்களுக்குள் செலுத்தப்பட வேண்டியவை

மத்திய மற்றும் நீண்ட கால கடன்கள்

ஒரு தொழிலைத் துவங்குவதற்கு வழங்கப்படும் கடன் பெரும்பாலும் நீண்ட கால கடனாகவே அமைகிறது. அந்தந்த தொழில்களின் தன்மைக்கேற்ப அதன் நீண்ட கால முதலீடு மாறுபடுகிறது. எடுத்துக்காட்டு : நுண்ணுயிர் உரங்கள் தயாரிக்கும் ஒரு நிறுவனத்திற்கு அதிகப்படியான முதலீடு என்பது ஆய்வுக் கூடங்களுக்கும், இயந்திரங்களுக்கும் தேவைப்படுவதாக அமையும். விதை தயாரிக்கும் ஒரு நிறுவனம் நீண்ட கால கடனாக நிலம் வாங்குவதற்கும், ஆய்வுக்கூடம் கட்டுவதற்கும் பெறலாம்.

வங்கிகள் இத்தகைய மத்திய மற்றும் நீண்ட கால கடன்களின் திருப்பிச் செலுத்தும் காலத்தையும், தொகையையும் அந்தத் தொழில்களிலிருந்து வரக்கூடிய வருமானத்தைப் பொருத்தே நிர்ணயிக்கின்றன. பெரும்பாலும் இவ்வகைக் கடன்கள் மாதாந்திர தவணைகளிலேயே செலுத்தும் படியாக அமைகின்றன. ஒரு சில தொழில்களில் மாதாந்திர தவணைகளில் வருமானம் ஈட்ட முடிவதில்லை. அத்தகைய ஒரு சூழலில் மட்டும் காலாண்டு தவணைகளாகவோ, அரையாண்டு தவணைகளாகவோ செலுத்தும் வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே, எந்தத் தொழில் ஆனாலும் அதன் வருமானத்தைப் பொருத்தே நாம் கடனை திருப்பி செலுத்தும் முறையை தேர்வு செய்யலாம்.

நாம் செய்யவிருக்கும் தொழிலானது உடனடியாக வருமானம் கொடுக்கக் கூடியதாக அமைய வேண்டும் என்பதில்லை. எடுத்துக்காட்டாக ஒரு திசு வளர்ப்பு ஆய்வுக் கூடத்திலிருந்து நாம் தொழிலைத் தொடங்கிய மாதத்திலிருந்தே வருமானத்தை எதிர்பார்க்க முடியாது. எனவே இடைப்பட்ட காலத்தில் நாம் விடுமுறைக் காலமாக பெறவும் வாய்ப்புள்ளது. எனினும், அந்த விடுமுறை காலக்கட்டங்களிலும் இதர வருமானங்களைக் கொண்டு வட்டித் தொகையை செலுத்தி வருவது பின் வரும் காலகட்டங்களில் சுமையை குறைக்க உதவுகிறது.

பொதுவாக வங்கிகள் எந்தத் தொழிலுக்கும் மொத்த முதலீட்டில் 100 சதவீதத்தை கடனாகக் கொடுப்பதில்லை. 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை தொழில் முனைவோர் தங்களது பங்காக தொழிலில் முதலீடு செய்ய வேண்டும். மீதமுள்ள 85 சதவீதம் வரை மட்டுமே வங்கிகடனாக பெற முடியும்.

குறுகிய கால கடன்கள்

செய்யவிருக்கும் தொழிலின் அன்றாட நிதி தேவைகளைப் பூர்த்தி செய்ய குறுகிய கால கடன்களைப் பெறலாம். இவ்வகைக் கடன்களை தேவைப்படும் பொழுது உபயோகிக்கவும், நிதி அதிகமாக இருக்கும் நாட்களில் இதனை உபயோகிக்காமல் இருக்கவும் இவ்வகைக் கடன்களில் வாய்ப்புள்ளது. தேவைப்படும் காலங்களில் மட்டுமே உபயோகிப்பதால் செலுத்த வேண்டிய வட்டியின் அளவும் வெகுவாகக் குறைகிறது.

இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டவாறு அனைத்து கூட்டுறவு வங்கிகள் பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் வேளாண்மைக்கும், வேளாண்மை சார்ந்த தொழில்களுக்கும் கடன் வழங்குகின்றன. இப்பணியில் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியின் பணி குறிப்பிடத்தக்கது.

வேளாண் தொழில்களுக்கு மானியம்

வேளாண்மையையும், வேளாண் தொழில்களையும் மேம்படுத்துவதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு மானியத் திட்டங்களை அறிமுகப்படுத்துகின்றன.

தொழில் முதலீட்டு மானியம்

நாம் துவங்கவிருக்கும் தொழிலுக்கேற்ப அந்தந்த துறைகளை அனுகி மானியத் தொகையைப் பெறலாம். சில மானியத்திட்டங்கள், தொழில்களை துவங்கும் சமயத்திலேயே பெறலாம். இவை முன்கூட்டியே பெறக்கூடும் மானியங்கள் ஆகும். ஒரு சில மானியங்கள் வங்கி கடன் பெற்று, பின் அந்த கடனை திருப்பி செலுத்தும் கடைசி தருணங்களில் கடன் தொகைக்கு சரி செய்யப்படுகிறது.

வட்டித் தொகையில் மானியம்

பெற்ற கடனை சரியாக குறித்த நேரத்தில் திருப்பி செலுத்துபவர்களுக்கு அவர்கள் செலுத்தும் வட்டித்தொகையில் மானியம் அளிக்கும் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. வட்டித் தொகையில் 2 சதவீதம் வரை மானியமாக பெறலாம். இந்திய நாட்டின் முதகெலும்புகளாய்த் திகலும் விவசாயப் பெருமக்களின் வாழ்க்கைத் தரம் உயர, வேளாண் சார் தொழில்கள் பெரும் பங்காற்றுகின்றன. எனவே, உழவர்கள் அனைவரும் தாங்கள் சேமித்து வைத்திருக்கும் தொகையுடன் வங்கி கடன் பெற்று சிறு தொழில்களைத் துவங்கி அதன் மூலம் நிலையான வருமானத்தை ஈட்டுவதுடன் மற்றவர்களுக்கும் வேலை கொடுக்கக் கூடிய மகத்தான வாய்ப்பையும் பெறுகின்றனர்.

இன்றைய காலகட்டத்தில், மத்திய மாநில அரசுகள் மட்டுமல்லாமல், பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளும் வேளாண் மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்களுக்குக் கடன் வழங்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன. இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு, விவசாயிகள் தங்களது வேளாண் முறைகளுக்கேற்றவாறு வங்கிக்கடன் பெற்று வேளாண் சார் தொழில்களைத் துவங்கலாம். மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகளால் வழங்கப்படும் மானியங்களைப் பெற்றும் பயனடையலாம்.


அரசு வங்கியில் கடன் வாங்க எளிய முறைகள்

ஆதாரம் : வேளாண் மற்றும் ஊரக மேலாண்மைத் துறை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்-641 003

3.33333333333
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top