பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / வேளாண் சார்ந்த தொழில்கள் / கோழி வளர்ப்பு / கோடைக்காலத்தில் இறைச்சிக் கோழிப் பராமரிப்பு
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

கோடைக்காலத்தில் இறைச்சிக் கோழிப் பராமரிப்பு

கோடைக்காலத்தில் இறைச்சிக் கோழிப் பராமரிப்பு முறைகள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

நோக்கம்

தமிழ்நாட்டில் பெரும்பாலான இறைச்சிக் கோழி வளர்ப்பு முறை, ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையில் கோழிகளை வளர்ப்பதாக அமைந்துள்ளது. இவை ஆழ்கூள முறையில் கொட்டபையின் பக்கங்களில் அமைந்துள்ள சுவர்கள் திறந்த நிலையில் வளர்க்கப்படுகின்றன. இவ்வாறான கொட்டகைகளில் காற்றோட்டம் சிறப்பாக இருக்கும். இவை தமிழ்நாட்டில் காணப்படும் தட்பவெட்பச் சூழலுக்கு மிகவும் ஏதுவானதாகும். தமிழ்நாட்டில் கோடையில் மிக அதிகபட்சமாக 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும். 40 டிகிரி செல்சியஸ்சிற்கு அதிகமாக வெப்பம் பதிவாகுவது வழக்கமாகிவிட்டது.

அதிக அளவு சுற்றுப்புற வெப்பமானது இறைச்சிக் கோழிகளின் உற்பத்தி திறனை மிகவும் பாதிக்கின்றது. கோழிகளின் உற்பத்தித்திறனானது 25 டிகிரி செல்சியஸ் முதல் 27 டிகிரி செல்சியஸ் வரை உள்ள தட்பவெப்பநிலையில்  சிறப்பாக  இருக்கும். இதற்கு மேல் தட்பவெப்பநிலை அதிகரிக்க ஆரம்பிக்கும் பொழுது அவற்றின் தீவனம் உட்கொள்ளும் திறனானது குறைவதுடன் மட்டுமல்லாமல் உடல் எடையும் பாதிக்கப்படுகின்றது.  இதனை வெப்ப அயர்ச்சி என்றழைக்கின்றனர்.  வெப்ப அயர்ச்சியானது கோழிகளின் உற்பத்தித்திறன் மற்றும் உடல் பாதிப்பு ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் இறப்பையும் ஏற்படுத்துகிறது.   இதனால் இறைச்சி கோழிப் பண்ணைகளில் வருமானம் குறைய வாய்ப்புள்ளது.

எனவே கோடையில் இறைச்சிக் கோழிகளைப் பராமரிக்கும் முறைகளை அறிந்து செய்வது இன்றியமையாததாகும்.

வெப்ப அயர்ச்சியால் பாதிக்கப்பட்ட கோழிகளைக் கண்டறிதல்.

 1. பிற கோழிகளிடமிருந்து தனித்துக் காணப்படும்.
 2. கொட்டகைளில் குளிர்ச்சியாக உள்ள பகுதிகளான தடுப்புச்சுவர் அருகே இருக்கும் அல்லது கொட்டகைகளில் காற்றோட்டம் உள்ள பகுதிக்குச் செல்லும்.
 3. பெருமூச்சு விடும்
 4. தீவனம் உட்கொள்வதைக் குறைத்துக் கொள்ளும்
 5. குடிநீர் அதிகமாகப் பருகும்.

வெப்ப அயர்ச்சியிலிருந்து பாதுகாக்கும் வழி

முதலாவதாகக் கொட்டகையின் வடிவமைப்பு இன்றியமையாததாகும்.

 • கொட்டகை அமைப்பதற்கு முன்பே பண்ணையில் நிழல் தரும் மரங்களை நட வேண்டும்.
 • கொட்டகை நீள அளவு கிழக்கு மேற்காக அமைக்க வேண்டும். இவ்வாறு அமைப்பதால் கொட்டகையின் உட்புறம் சூரியக்கதிர்கள் நேரடியாகத் தாக்குவதற்கான வாய்ப்புகள் குறைவு. கோடையில் கொட்டகையில் வெப்பம் குறைவாகக் காணப்படும்.
 • முன்பே கூறியது போல் பக்கவாட்டுச் சுவர்கள் திறந்த நிலையில் இருக்க வேண்டும். இவ்வாறு இருப்பதால் காற்றோட்டம் தடையில்லாமல் கிடைக்கும். கொட்டகை குளிர்ச்சியாக இருக்கும்.
 • மேற்கூரையில் சரிவு 35 டிகிரிக்கு மேல் இருக்க வேண்டும். இவ்வாறு அமைப்பதால் கொட்டகையில் உள்ளே உற்பத்தியாகும் வெப்பமானது வெளியேறுவதற்கு ஏதுவாக இருக்கும்.
 • கூரையின் மேற்புறத்தில் வெள்ளை நிற வர்ணம் அடிப்பதால் சூரிய ஒளியை சிதறடிக்கும். இதனால் கொட்டகையின் உள்ளே குளிர்ச்சியாக இருக்கும்.
 • கூரையின் மேற்புறம் வைக்கோல் குவியல்களைப் பரப்ப வேண்டும். இவற்றின்மேல் தண்ணீர் தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் கொட்டகையின் உட்புறம் குளிர்ச்சியாக இருக்கும்.

பண்ணைக் கருவிகள் மூலம்

 • கொட்டகையில் உள்ளே, கோழிகளின் மேற்புறம் செங்குத்தான 36 அங்குல மின் விசிறிகளை ஒவ்வொரு 40 அடி முதல் 50 அடி இடைவெளியில் அமைக்க வேண்டும். காற்று ஒரே திசையில் வீசுமாறு இருக்க வேண்டும். இவை கோழிகளைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.
 • கோழிகளுக்குக் குடிநீர் வழங்கும் தானியங்கி நீர்க் கலன்கள் சரியாகச் செயல்படுகின்றனவா என்று பரிசோதிக்க வேண்டும்.
 • குடிநீர்க் குழாய்களை உட்புறமாக ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை தண்ணீரைப் பீய்ச்சிக் கழுவுவதால் குடிநீரின் வெப்பம் தணியும். கோழிகள் பருகுவதற்கு ஏதுவாக இருக்கும்.
 • கொட்டகையில் உள்ள கோழிகளின் மேற்புறம் தண்ணீரைப் பனிபோல் சிறு துளிகளாகத் தெளிக்கும் கருவியை ஒவ்வொரு 10 அடி இடைவெளியில் அமைப்பதால் இவை கோழிகளைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.
 • கூரையின் இரு பக்கங்களிலும் 20 அடி இடைவெளியில் வெப்பக் காற்று வெளியேற ஏதுவாகக் வெப்பக் காற்று போக்கிகள் அமைக்கலாம். இவை கொட்டகையின் உள்ளே உற்பத்தியாகும் சூடான காற்றை வெளியேற்றி உள்ளே குளிர்ச்சியான காற்று வர வழிவகை செய்யும்.

கொட்டகை வெப்ப அயர்ச்சியைப் போக்க

 • கொட்டகைகளில் இறைச்சிக் கோழிகளுக்கு அளிக்கப்படும் இட வசதியைக் கூடுதலாக்க வேண்டும். கோடையில் சராசரியாக 1.2 சதுர அடி இட வசதி ஒவ்வொரு கோழிக்கும் தர வேண்டும். இவ்வாறு அளிப்பதால் கொட்டகையில் உள்ளே இடநெருக்கடி குறைந்து காணப்படும். கோழிகளின் கோடை வெப்ப அயர்ச்சியைப் போக்க உதவும்.

தீவன மேலாண்மை

 • இறைச்சிக் கோழிகளுக்கு தீவனத்தை வெப்பம் குறைவாக இருக்கும் தருணங்களில் அளித்தல் வேண்டும். கோழிகளுக்குத் தீவனம் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அளிக்கக் கூடாது.
 • தீவனத்தில் எரிசக்தியின் அளவை அதிகப்படுத்த வேண்டும். இதைக் கொழுப்புச் சத்து நிறைந்த தீவன மூலப் பொருள்களின் மூலம் அளிக்க வேண்டும்.
 • புரதச்சத்து சற்றே குறைவாக உள்ள தீவனத்தை அளிக்கவேண்டும். மேலும் இத்தீவனத்தில் அமினோ அமிலங்கள் சரியான அளவில் இருத்தல் அவசியம்.  (குறிப்பாக லைசின் மற்றும் மித்யோனின்).
 • அமோனியம் குளோரைட் (0.3 – 1.0 மூ) மற்றும் சோடியம் பைகார்பனேட் (0.5 மூ)  கொடுப்பதால் கோழிகளின் தீவனம் மற்றும் குடிநீர் எடுத்துக் கொள்ளும் திறன் அதிகரிக்கும்.
 • தீவனத்தில் சோடியம் பொட்டாசியம் மற்றும் குளோரின் மின் பகுதிகளின் சமநிலை பராமரிக்கப்பட வேண்டும்
 • வைட்டமின் ‘சி’ அளித்தல் வெப்ப அயர்ச்சியைக் குறைக்கும். 1 கிராம் அஸ்கார்பிக் அமிலம் ஃ 1 லிட்டர் தண்ணீரில் அளிக்க வேண்டும்.
 • கூடுதலாக வைட்டமின் ‘எ’, ‘பி’ மற்றும் ‘இ’ யைத்தருவதால் வெப்ப அயர்ச்சியைக் குறைக்கலாம்.
 • மேற்கூறிய ஆலோசனைகளைக் கடைப்பிடித்து பண்ணையாளர்கள் வெப்ப அயர்ச்சியிலிருந்து இறைச்சிக் கோழிகளைக் காப்பாற்றி நல்ல முறையில் இலாபம் சம்பாதிக்கலாம்.

ஆதாரம் : கால்நடைக்கதிர்

3.02173913043
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top