பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / வேளாண் சார்ந்த தொழில்கள் / கோழி வளர்ப்பு / கோடைக்காலத்தில் முட்டைக் கோழிகளைப் பராமரிக்கும் வழிமுறைகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

கோடைக்காலத்தில் முட்டைக் கோழிகளைப் பராமரிக்கும் வழிமுறைகள்

கோடைக்காலத்தில் முட்டைக் கோழிகளைப் பராமரிக்கும் வழிமுறைகள் பற்றிய குறிப்புகள்

பொதுவாகத் தமிழ்நாட்டில் மார்ச் முதல் ஜூன் மாதம் வரை கோடைக் காலத்தில் வெப்பத்தின் தாக்கம் 35 டிகிரி வெப்ப நிலையிலிருந்து 43.5 டிகிரி வரை உயர்ந்து காணப்படுவதால் முட்டைக் கோழிப் பண்ணைகளின் உற்பத்தித் திறன் குறைந்து, அயர்ச்சியால் பாதிக்கப்பட்டு, நோய்க் கிருமிகளால் பாதிப்புக்கும் உள்ளாகும்.

வெப்பத்தின் தாக்கம்

கோழிகளின் உடலில் சராசரி உடல் வெப்பநிலை 41.1 டிகிரி முதல் 41.7 டிகிரி வரை இருக்கும்.  சுற்றுப்புற சூழ்நிலையில் வெப்பத்தின் அளவு உடல் வெப்ப நிலையைக் காட்டிலும் அதிகரித்துக் காணப்பட்டால் வெப்பத் தாக்கல் ஏற்பட்டு அயர்ச்சி நோய்க்கு உள்ளாகிக் கோழிகள் உடனடியாக இறக்க நேரிடும்.

இந்த நிலையில் கோழிகளின் நாக்கு உலர்ந்து இரத்தத்தின் அளவு குறைந்து, இதய துடிப்பு அதிகரித்து, இரத்த நாளங்கள் விரிவடைந்து, இரத்த அழுத்தம் குறைந்து, மூச்சு திணறல் ஏற்பட்டு நரம்புமண்டலம், சுவாசமண்டலம்.  இரத்த ஓட்டமண்டலம் முற்றிலும் செயல் இழந்து கோழிகள் உடனடியாக இறந்துவிடும்.

கோழிகளின் உடலில் வியர்வைச் சுரப்பிகள் இல்லை.  ஆனால் சுற்றுப்புற வெப்பநிலைக்கு ஏற்ப உடல் வெப்பநிலையை மாற்றியமைக்க கூடிய பண்புகளைப் பெற்றிருக்கும். இந்தப் பண்புகள் சரிவரச் செயல்படுவதற்குச் சுவாச உறுப்புகள், இரத்த நாளங்களின் இயக்கம், நரம்புமண்டலத்தோடு இணைந்து செயல்பட்டால் கோழிகளை இறப்பிலிருந்து தவிர்க்கலாம்.  இதில் மாறுபாடுகள் ஏற்பட்டால் கோழிகள் இறந்துவிடும்.

கோடைக் காலத்தில் பராமரிப்புமுறைகள்

 • கோழிப் பண்ணை நீளவாக்கில் கிழக்கு மேற்காகக் கட்டவேண்டும்
 • உயர் வெப்பநிலையைத் தாங்கக் கூடிய உறுதியான பாதுகாப்பான பொருள்களை மேற்கூரையாகப் பயன்படுத்த வேண்டும்.  இதில் குறைந்த காலத்திற்கு உழைக்கக்கூடிய வைக்கோல், தென்னங்கீற்று போன்ற பொருள்களையும், அலுமினியம் உலோகக் கலவையினாலான (நிக்கல் சேர்ந்தகலாய்) தகடுகளையும் நிரந்தர கான்கீரிட் மேற்கூரைகளையும் பயன்படுத்தலாம்.
 • ஆஸ்பெட்டாஸ் மற்றும் ஒட்டுக் கூரைகளின் மேற்பகுதியில் தென்னங்கீற்று, வைக்கோல், தென்னைநார் போன்ற பொருள்களை நெருக்கமாக மேற்கூரையின் மீதுஅடுக்கி, தினமும் காலை முதல் நண்பகல் வரை தானியங்கி தண்ணீர்க் குழாய்கள் மூலம் தண்ணீர் தெளிப்பதால் வெப்பம் கூரை வழியாக ஊடுருவுவதைத் தவிர்க்கலாம்.
 • வெப்பக்காற்று கம்பி வலைகளின் வழியே ஊடுருவுவதைத் தவிர்க்கத் தண்ணீரில் நனைக்கப்பட்ட கோணிப்பைகளைக் கட்டித் தொங்கவிடுவதால் வெப்பக் காற்று கோணிப்பைகளால் உறிஞ்சப்பட்டுக் குளிர்ச்சியான காற்றாக மாற்றப்படுகிறது.
 • பண்ணையின் சுற்றுப்புறங்களில் நெருக்கமான புல்தரைகளை வளர்த்தல், அடர்ந்த இலைகள் கொண்ட நடுத்தர, உயர்ந்த மரங்களையும் கூரையின் மீது ஏறிப் படரக்கூடிய தொற்றுக்கொடி மற்றும் செடிகளையும் வளர்ப்பதன் மூலம் ஓரளவுக்கு வெப்பத் தாக்குதலைக் குறைக்கலாம்.
 • தீவனம், நண்பகல் வேளையில் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொடுப்பதால் தீவன விரையம் குறைக்கப்பட்டு உடல் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும். இதற்கு ஈரமாக்கிய தீவனமுறை என்று பெயர்.
 • முட்டைப் பருவக் கோழிகளுக்குக் கோடைக் காலத்தில் இட வசதியை 2 அடியிலிருந்து 2.5 அடிவரை அதிகரித்துக் கொடுக்க வேண்டும்.
 • முட்டைப் பருவக் கோழிகளுக்குக் கோடைக் காலத்தில் 5 முதல் 6 முறை குளிர்ச்சியான தண்ணீரைச் சுகாதார முறையில் கொடுக்க வேண்டும்.
 • பசுந்தீவன வகைக் கீரைகளை அதிகளவு நண்பகல் வேளையில் சிறிது சிறிதாக நறுக்கி உணவாகக் கொடுக்கவேண்டும்.
 • அதிகாலை, இரவு நேரங்களில் தடுப்பூசி போடுதல், அலகு வெட்டுதல், குடற்புழுநீக்கம் செய்தல் மற்றும் இதர சிகிச்சை முறைகளை மேற்கொள்ள வேண்டும்.
 • கோழித்தீவனத்தில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி காம்பளக்ஸ் கலந்து கொடுப்பதால் வெப்பத் தாக்குதலை ஓரளவு குறைக்க இயலும்.
 • தீவனத்தட்டு, தண்ணீர்த்தட்டு ஆகியவற்றை அதிக எண்ணிக்கையில் கோழிகளுக்கு எவ்வித இடையூறும் இன்றி எளிதாக நடமாடும் வகையில் கொடுக்க வேண்டும்.
 • முட்டைக் கோழிகளுக்கு அதிக வெப்பத்தின் காரணமாக முட்டையின் மேல் ஒட்டினதடிமன் மெலிந்து, தோல் முட்டையாகக் காணப்பட்டால் தீவனத்தில் வைட்டமின் - டி, கிளிஞ்சல் போன்றவற்றைச் சேர்த்துக் கொடுக்கவேண்டும்.
 • சிறந்த காற்றோட்ட வசதி ஏற்படுவதற்குச் சுற்றுப்புறப் பகுதி தூய்மையானதாகவும், நிழல் தரும் மரங்கள் நிறைந்த நிலையில் பசுமையானதாகவும் இருக்கவேண்டும்.

எனவே மேற்கூறிய வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் முட்டைக்கோழிகளுக்கு ஏற்படும் கோடைக்கால வெப்ப அயர்ச்சியை தவிர்க்கலாம். மேலும் இதன்மூலம் கோழிகளின் இறப்பைத் தவிர்த்து அதிக இலாபம் ஈட்டலாம்.

ஆதாரம் : கால்நடைக்கதிர்

2.86458333333
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top