பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

இறால் வளர்ப்பில் சுற்றுச்சூழல் பிரச்சனைகள்

இறால் வளர்ப்பில் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

இறால் வளர்ப்பை ஊக்குவிப்பதன் மூலம் ஏற்றுமதி வருவாயை கணிசமாக அதிகரிப்பதுடன் மக்களுக்கு சத்தான உணவையும் அளிக்கமுடியும். இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் விளைவுகளை முழுமையாக ஒதுக்கி விட முடியாது. இறால் வளர்ப்பை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்பதும் பொருளாதார ரீதியாக சரியான நடவடிக்கையாக இருக்காது. இந்நடவடிக்கைகளின் காரணமாக சுற்றுச்சூழல் விளைவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இறால் பண்ணையாளர்களின் வருவாயிலிருந்து சரியான முறையில் நஷ்ட ஈடாக, வழங்குவதே நடு நிலையாக சுற்றுச்சூழல் பிரச்சினையை அணுகும் வழியாகும்.

கடந்த பத்தாண்டுகளாகவே சுற்றுச்சூழல் குறித்து அதிகம் கவலை கொள்வதுடன், ஆராய்ச்சி கள், கட்டுரைகள் என பல விஷயங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. வெளிவிளைவுகள் ஏதும் இல்லாத பொருளாதார நடவடிக்கைகளே இல்லை எனலாம். 1960-களில்தான், சுற்றுச்சூழல் பொருளாதாரத்தின் முறைப்படியான ஓர் அங்கமாக கருதப்பட்டு ஆய்வுகள் உருவாகின. பூஜ்யம் அளவுதான் மாசு இருக்க வேண்டுமெனில், உற்பத்தி நடவடிக்கைகளும் பூஜ்யமாக இருந்தால் தான் முடியும். பாதகமான வெளி விளைவுகள் உற்பத்தியாளர்களால் எப்போதும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. எனவே, இவற்றால் சமுதாயத்திற்கு ஏற்படும் செலவுகளையும், நஷ்டத்தையும், தயாரிப்பாளர் ஏற்பதில்லை. மாறாக அரசின் மீதே இச்சுமை விழுகிறது. மாசு ஏற்படுத்தும் காரணிகளை கண்டறிந்து, அளந்து, கண்காணிப்பதுடன் அவற்றின் பொருளாதார, இயற்கை சமச்சீர், மற்றும் சமூக விளைவுகளை நன்கு ஆய்ந்து பாதுகாப்பான அளவிற்கு கட்டுக்குள் வைக்கும் நடவடிக்கைகளே அவசியத் தேவையாகும். சுற்றுச்சூழல் மீது மட்டுமே அளவுக்கு அதிகமாக கவனம் செலுத்துவது பொருளாதார முன்னேற்றத்தை பாதிக்கும். இதன் மறுபக்கமும் அவ்விதமே.

தமிழ் நாட்டில் கடற்கரை மாவட்டமான நாகப்பட்டினத்தில் இறால் பண்ணைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து இக்கட்டுரை ஆராய்கிறது. பொருளாதார நடவடிடக்கைகளினால், பாதகமான வெளி விளைவுகள் ஏற்படும் என்பதற்காகவும், அவற்றை உற்பத்தியாளர்களே உள்வாங்கிக் கொள்ளும் முறைகள் போதுமானவை அல்ல என்பதுடன் சிக்கலானவை என்பதாலும், மேலும் அவற்றை செயல்படுத்துவது கடினமான ஒன்று என்பதாலும் மட்டுமே, உற்பத்தியை நிறுத்தி விடக்கூடாது என்பதை தெளிவுபடுத்துவதே கட்டுரையின் நோக்கம்.

இறால் வளர்ப்பு மூலம் கிடைக்கும் பொருளாதாரப் பயன்கள் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்து நடுநிலையுடன் ஆய்வதும் இதன் நோக்கமாகும். இறால் பண்ணைகளால் ஏற்படும் பாதகமான விளைவுகளை உள்வாங்கிக்கொள்ளும் சாத்தியமான நடவடிக்கைகள் தேவை. இதன் மூலம் பொருளாதார சமநிலையுடன் தேசிய வருவாயில் நிகர லாபத்தையும் காண முடியும்.

இந்தியாவில் காணப்படும் நிலை

1993-ஆம் ஆண்டு உலக இறால் உற்பத்தி 6,09,000 டன் என மதிப்பிடப்பட்டது. பண்ணையின் அளவு ஒரு மில்லியன் ஹெக்டர். உலக உற்பத்தியில் 85% இறால்கள் ஆசிய நாடுகளிலிருந்து பெறப்பட்டவை. (MPEDA - 1997). உலகின் பல பகுதிகளில், இறால் வளர்ப்பில் மேற்கொள்ளப்பட்ட நவீன உற்பத்தி முறை உத்திகள் காரணமாக நம் நாட்டிலும் இறால் மீன் உற்பத்தி அதிகரித்தது. பண்ணை உற்பத்திக்கு சாதகமாக உள்ள பகுதிகளில், விரிவான, ஓரளவுக்கு ஆழமான இறால் வளர்ப்பு முறைகளை கையாண்டதால் இது சாத்தியமாயிற்று.

அண்மை காலங்களில் இறால் வளர்ப்பு இந்தியாவில் ஒரு புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது. கடல் வாழ் உயிரின உற்பத்தியில் இறால் முக்கியமான பொருள். இறால் வளர்ப்பில் ஆராய்ச்சி செய்து உற்பத்தியைப் பெருக்க, இந்திய அரசு, பல்கலைக் கழகங்கள், மீன் வளர்ப்பவர்கள் மற்றும் ஊக்குவிப்பு நிறுவனங்கள் (கடல் வாழ் பொருட்கள் ஏற்றுமதி அபிவிருத்திக் கழகம்) போன்றவற்றை முடுக்கி விட்டுள்ளது. நபார்டு, ICICI போன்ற வங்கிகள் உட்பட பல நிதி நிறுவனங்கள் தங்கள் மூலதனத்தை இறால் வளர்ப்புத் தொழிலில் முதலீடு செய்வது லாபகரமானது என்று கருதின. வளரும் நாடுகளில், இறால் பண்ணைகளில் முதலீடு செய்வதில் பல பன்னாட்டு நிறுவனங்களும் ஆர்வம் காட்டுகின்றன.

இந்திய கடற்கரைப் பகுதி உவர் தன்மை கொண்ட கடல் நீர் முகத்துவாரங்களுடன் இறால் வளர்ப்புக்கு உகந்ததாக உள்ளது. உவர் தன்மை கொண்ட நீர்ப் பரப்பு 1.2 மில்லியன் ஹெக்டர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 1,19,000 ஹெக்டர்கள் மட்டுமே இறால் வளர்ப்பிற்கு பயன்படுத்தப்படுகின்றது.

தமிழ் நாடு

தமிழ்நாட்டில் உவர் தன்மை கொண்ட நீரின் பரப்பு 56000 ஹெக்டர். இதில் 1995ஆம் ஆண்டு வாக்கில் 2879 ஹெக்டர் பரப்பே இறால் வளர்ப்பில் பயன்பட்டது. இது மொத்தப் பரப்பில் 5.14%க்கும் குறைவு. மாநிலத்தில் இன்னமும், மிகப் பெரிய பரப்பளவிலான உவர் தன்மை கொண்ட நீர் பயன்படுத்தப் படாமல் உள்ளதையே இது குறிக்கிறது. இறால் வளர்ப்பில் மற்ற மாநிலங்களைவிட தமிழகம் மிகவும் பின்தங்கி உள்ளது. உதாரணமாக மேற்கு வங்காளத்தில் 34660 ஹெக்டர் நீர்ப்பரப்பில் இறால் வளர்ப்பு நடைபெறுகிறது. ஆனால் மேற்கூறிய படி தமிழ்நாட்டில் 2879 ஹெக்டர் பரப்பே பயன்படுத்தப்படுகின்றது (MPEDA - 1997). இறால் உற்பத்தியைப் பொறுத்த வரை நாட்டின் மொத்த உற்பத்தியான 70573 டன் அளவில், தமிழ்நாட்டில் 1092 டன் அளவே கிடைக்கிறது. எனவே தமிழ் நாட்டின் கடலோரப் பகுதிகள் இறால் பண்ணைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டு சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறுவது மிகவும் பெரிதுபடுத்திக் கூறும் வாதம் எனலாம். மொத்தமுள்ள 56000 ஹெக்டர் நீர்ப் பரப்பில் 2879 ஹெக்டர்களே பயன்படுத்தப்படுகின்றன என்பதைக் காணும்போது, வருங்காலத்திலும், சுற்றுச்சூழல் பாதிப்பு பிரச்சினைகள் பெரிதாக இருக்காது என்றே தெளிவாகத் தெரிகின்றது. ஒன்றுமில்லாத விஷயத்தை பெரிது படுத்துவதாகவே இது தோன்றுகிறது.

இந்தியாவிலிருந்து ஏற்றுமதியான கடல் பொருட்களின் அளவு 1996-97-ல் 378, 199 டன்களாக இருந்தது. இதன் மதிப்பு 412136 லட்சம் ரூபாயாக கணக்கிடப்பட்டது. இதில் ஏற்றுமதி செய்யப்பட்ட இறால்களின் அளவு 105429 டன்கள். இதன் மதிப்பு 270,189 லட்சம் ரூபாய். இதே காலகட்டத்தில், தமிழ்நாட்டிலிருந்து கடல்வாழ் பொருட்களின் ஏற்றுமதி 40878 டன்கள். இதன் மதிப்பு 107567 லட்சம் ரூபாய். இதில் ஏற்றுமதி செய்யப்பட்ட இறால்களின் அளவு, 13049 டன்கள். அதன் மதிப்பு 44988 லட்சம் ரூபாய்.

சுற்றுச்சூழல் பற்றிய அச்சங்கள்

இறால் வளர்ப்பில் கீழ்கண்ட நான்கு முக்கிய சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து அச்சம் கொள்ளப்படுகின்றது.

 • இறால் வளர்ப்பு நடவடிக்கைகளின் தன்மை, அளவு ஆகியவை பொறுத்து இறால் பண்ணைகளுக்கு அருகில் வாழ்பவர்களின் வாழ்க்கைச் சூழலிலும், சமூக பொருளாதார நிலைகளிலும் பல்வேறு விளைவுகள் ஏற்படுகின்றன. இறால் வளர்ப்பில், உரங்கள் மற்றும் ரசாயனப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து நீர் மாசு அமைந்து விடுவதாக சுற்றுச்சூழல் இயலாளர்கள் எச்சரிக்கை விடுகின்றனர். மாசுபட்ட நீர் கழிமுகங்களிலும், கடல் வாய்கால்களிலும் வெளியேற்றப்படும் போது கடலில் சென்று சேர்ந்துவிடும். இதனால் கடலில் இறால் வளர்வது கடுமையாக பாதிக்கப்படுவதுடன் மீன்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதால் மீன் உற்பத்தி மிகப்பெரிய அளவில் குறைந்துவிடும். இதனால் மீனவர் சமுதாய வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.
 • தொழில் ரீதியாக இறால் வளர்ப்பு தொடர்ந்து நீடிக்காது. எங்கெல்லாம் வர்த்தக ரீதியாக இறால் வளர்ப்பு மேற்கொள்ளப்படுகின்றதோ, அங்கே, பல்வேறு காரணங்களுக்காக அதைத் தொடர்ந்து நீட்டிக்க முடியாமல் போய் விடுகின்றது. சுற்றுச்சூழல் சீரழிவு, மாசுபடுதல் மற்றும் நோய்கள் அவற்றுள் சில காரணங்கள். சீரழிந்த குட்டைகளை வேறு உபயோகத்திற்கு பயன்படுத்த முடியாது.
 • இறால் பண்ணைகளுக்கு அருகில் உள்ள விவசாய நிலங்களில் மண்ணும், நீரும் உவர் தன்மை பெற்று விடுவதால் உற்பத்தி பாதிக்கப்பட்டு குறைந்து விடுகிறது என்று விவசாய நிலச் சொந்தக்காரர்கள் கூறுகின்றனர். கடற்கரை ஓரம் மண்ணுக்கு கீழே உள்ள நீரை பம்ப் செய்வதால், உள் நிலப்பரப்பில் கடல் நீர் புகுந்து விடுவதால், உவர்தன்மை அதிகரிக்கின்றது. 20 ஆண்டுகளுக்கு முன்னர் வரை, விவசாயத்திற்கு பயன்பட்டு வந்த நிலங்கள் தற்போது அதற்கு லாயக்கற்றவையாகிவிட்டன. போதிய நீர்ப்பாசன வசதி இன்மையால், விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு வேறு ஏதாவது உபயோகம் கிட்டுமா என்று தேடி வருகின்றனர்.
 • பரம்பரையாக மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்களை இறால் வளர்ப்பு வெளியே தள்ளி விடுகின்றது. ஏனெனில், அதிகளவு மூலதனமும், நடைமுறைச் செலவும் பிடிக்கும், இறால் வளர்ப்புத் தொழிலில், பரம்பரை அல்லாத, வர்த்தக கம்பெனிகளும், தனி நபர்களும் தான் ஈடுபட முடியும். இதன் விளைவாக அப்பகுதியில் சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கின்றன. வர்த்தக ரீதியில் இறால் வளர்ப்பது பெரும்பாலும் பண்ணை சொந்தக்காரர்களுக்கும், வியாபாரிகளுக்குமே லாபம் ஈட்டித் தந்தது. கடல் ஓரம் வாழும் சாதாரண மக்களுக்கு பணம், அல்லது உணவுப் பொருள் நீதியாக எந்த லாபமும், நன்மையும் கிட்டவில்லை என்று கூறிகின்றனர்
 • மேற்கூறியவைகளில் அறிவியல் உண்மைகளைத் தவிர, கடலோரங்களில் நிலங்கள் மாசுபடுவதை நடுநிலையாக அணுக வேண்டும். இறால் வளர்ப்பு தேவையா அல்லது இல்லையா, என்ற சரியான கண்ணோட்டம் அவசியம்.
 • இதற்கு பின்வரும் கூற்றுக்கள் சரியான வழிகாட்டலாம். கடலோர நிலங்களில் உவர் தன்மை ஏற்பட பூகோள, தட்பவெப்ப மற்றும் நீர்நிலைக் காரணங்கள் உள்ளன. இறால் பண்ணைகள் இல்லாவிட்டால் கூட, கடலோர நிலப்பகுதி முழுதும் நிலத்தடி நீர் உவர் தன்மை கொண்டதாகவே உள்ளது. (PWDss. LVO) எனவே இறால் வளர்ப்பு மூலம் ஏற்கெனவே உவர்தன்மை கொண்ட நிலத்தடி நீரை மேலும் மாசுபடுத்துவது என்பது மிகக் குறைந்த அளவே. இதை தேவையில்லாமல் பெரிது படுத்தவேண்டாம்.
 • இறால் பண்ணைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரின் மாசுகள், வீட்டு உபயோகம் முடித்த கழிவுநீர் மற்றும் தொழிற்சாலை கழிவுகளை விட மாசுத்தன்மை குறைந்ததாகவே காணப்படுவதாக தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சிக் கழகத்தின் அறிக்கை (NEERI - 1994) கூறுகின்றது. கடற்கரையோரம் காணப்படும் இதர மாசுகளை விட, இறால் பண்ணைக் கழிவு நீர் மாசு ஆபத்து குறைந்ததே.
 • மேலும் கடலோரம் இறால் பண்ணைகள் ஏற்பட்டால் அவை மாங்குரோவ் காடுகளை பாதிக்கும் (Alex Wilks 1995) என்பது ஒரு வேளை மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாக இருக்கலாம். ஏனெனில் மாங்குரோவ் காட்டுப் பகுதிகள் இறால் வளர்ப்புக்கு மிகவும் தகுதியற்றவை. இக்காடுகளை திருத்தி, சுத்தம் செய்து நிலங்களை மீட்பது என்பது நினைத்துப் பார்க்க முடியாதபடி மிகவும் செலவாகும்.
 • இறால் வளர்ப்பில் ஏற்படும் மாசு பிரச்சினையை விளக்கி, அளந்து, அளவிட்டு அதன் விளைவுகளைக் கூறி விட முடியாது. இது கடினமான பணி. இறால் பண்ணைகளில் நீண்ட காலத்தில் ஏற்படும் பாதகமான விளைவுகளுக்கு இறுதியான ஆதாரங்கள் ஏதும் இல்லை. இருப்பினும், சுற்றுச்சூழலுக்காக வரிந்துகட்டிக் கொண்டு வருவார்கள். தங்களது சுய லாபத்துக்காகவே, இறால் வளர்ப்பை ஒரு பெரிய பிரச்சினையாக்கி விட்டனர். இவ்வாறு அறிவியல் பூர்வமான நிருபணம் செய்ய முடியாத விவரங்களுடன் நிர்ப்பந்தம் அளிப்பவர்கள் தாங்களே மேற்கொண்ட அபிப்பிராயத்தின் பேரிலேயே பேசுகின்றனர்.
 • முழுவதுமாக மாசு இல்லாத சுற்றுச்சூழல்தான் வேண்டும் என்று கொள்கை ரீதியாக முடிவு எடுக்கும் நிலை வந்தால், நமது பொருளாதாரத்திற்கு இறால் வளர்ப்பின் நன்மைகள் கிட்டாது. இறால் ஏற்றுமதி மூலம் பெருமளவு - வெளிச் செலாவணி கிடைக்கின்றது.  கடல் ஓரப் பகுதிகளில் முற்றிலுமாக மாசற்ற சுற்றுச்சூழல் வேண்டுமெனில், இறால் பண்ணைகளின் மூலம் கிடைக்கும் பொருளாதார ஆதாயங்களை இழக்க வேண்டும். எனவே, இறால் வளர்ப்பு மற்றும் சுற்றுச் சூழல் பிரச்சினை இரண்டுக்குமிடையே விட்டுக்கொடுத்துப் போகும் சமாதான வழி தேவை. அப்போது சுற்றுச்சூழல் தரம் மற்றும் பொருளாதார ரீதியாக மலிவான இறால் வளர்ப்பு ஆகியவற்றுக்கிடையே ஒரு சமநிலை எய்தவேண்டும்.

லாபத்தன்மை

 • மற்ற வர்த்தக நடவடிக்கைகளைப் போலவே, இறால் வளர்ப்பிலும் திரும்பத் தோன்றும் மற்றும் திரும்பத் தோன்றாத தன்மை கொண்ட முதலீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இறால் வளர்ப்புக்காக தயார் செய்யப்பட்ட பண்ணை ஒன்றை குறைந்த பட்சம் இரண்டு முறை உற்பத்திச் செய்ய பயன்படுத்தலாம். 5 ஹெக்டர் உவர் நீர்ப் பரப்பில் விரிவாக இறால் பண்ணை தயார் செய்ய 12.5 லட்சம் ரூபாய் தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. (71/2 லட்சம் ரூபாய் மூலதனச் செலவு மற்றும் 5 லட்சம் 2 முறை உற்பத்தி செய்ய ஆகும் செலவு). முதலாண்டு முடிவில் 5 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் நிகர லாபம் கிட்டும். நடைமுறைச் செலவுகள் அனைத்தும் கழிந்த பிறகு இந்த லாபம் கிட்டலாம். (கடன் தவணை செலுத்தியது உட்பட) முதலாண்டு முடிவில் ஹெக்டர் ஒன்றுக்கு ஒரு லட்சத்து இரண்டாயிரம் ரூபாய் நிகர லாபமும், ஏழாவது ஆண்டு வாக்கில் ஆண்டொன்றுக்கு ஒரு லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் நிகர லாபம் கிட்டலாம். (பண்ணை ஆரம்பித்து 7 ஆண்டுகளில் லாபம் உச்ச அளவை எட்டிவரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.)
 • 7- வது ஆண்டுக்குப் பிறகு மொத்த லாபம் நிகர லாபத்துக்கு சமமாக இருக்கும் (MPEDA-1997). ஏற்கெனவே உவர்தன்மையுடனும் உற்பத்தி வளம் குறைந்தும் காணப்படும் கடலோர நிலங்களில், பயனுள்ள பயிர் வகைகள் ஏதும் பயிரிடுவது என்பது இயலாத ஒன்று. பொதுவாக கடற்கரை ஓர விவசாயிகள், மிகவும் குறைந்த நிலப்பரப்பில் நெல் பயிரிடுவார்கள். அது இறால் வளர்ப்பில் கிடைக்கும் வருவாய்க்கு ஏறத்தாழ இருக்கும்.
 • வேறு விதமாகச் சொல்வதானால், இறால் பண்ணைகளுக்கு பயன்படும் நிலங்களின் வேறு வருவாய் ஈட்டித்தரும் தன்மை, மிகவும் குறைவு. எனவே எந்த பொருளாதார நடவடிக்கைகளுக்கு இந்நிலங்கள் ஏற்றவையோ அவற்றுக்கு (நல்ல லாபம் அளிக்கும் தொழில்) பயன்படுத்துவதே சரியான அணுகுமுறை. ஆனால் அவ்வாறு பயன்படுத்தும் போது மிகக் குறைந்த அளவு சுற்றுச்சூழல் பாதிப்பு இருக்கும் வண்ணம் பார்த்துக் கொள்ளல் நலம்.
 • இந்தியக் கடற்கரைப் பகுதி மிக நீண்டது. இறால் வளர்ப்பிற்கான இயற்கை ஆதார வளங்கள் நிரம்பப் பெற்றது. எனவே சுமார் 1190,000 ஹெக்டர் உவர் நீர்ப்பரப்பில் இறால் வளர்ப்பு மேற்கொள்ளும் போது, 2 மில்லியன் (20 லட்சம்) பேர்களுக்கு இதில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. வெளிச்செலாவணியை ஈட்டித்தரும் சிறந்த தொழில் இது. இறால்களின் வர்த்தக மதிப்பு அதிகம். இது ஒரு குறுகியகாலப் பயிர் போன்றது. முதலீடு செய்த பணத்திற்கு விரைவில் வருமானம் கிட்டிவிடும் என்பதுடன் பெருகி வரும் உலக வர்த்தக மார்க்கெட்டில் இடம் உண்டு .
 • இறால் வளர்ப்பின் மூலம் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. நெற் பயிர் வருடத்திற்கு ஒரு முறைதான் கிடைக்கும். ஆனால் இறால் வளர்ப்பில் ஆண்டுக்கு இரு முறை இறால் வளர்க்கலாம்.
 • இறால் பண்ணை உரிமையாளரிடமிருந்து மாசு நீக்கும் செலவுக்காக வரி ஏதாவது ஒன்றை அரசு வசூல் செய்யலாம். அல்லது பாதிப்புச் செலவை ஈடு செய்யலாம். அவ்வாறு வசூல் செய்த பணத்தை இறால் பண்ணைகளுக்கு அருகில் வாழும் கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பயன்படுத்திக் கொள்ளலாம். தூய்மையான குடிநீர் அளிக்கலாம். விவசாயம் சாராத துறைகளில் கிராம் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க பயன்படுத்தலாம். இந்நடவடிக்கை கிராம மக்களின் பொருளாதார ரீதியாக நிச்சயம் நல்ல ஆதாயங்களைத் தரும். இவ்வாறு வருமானத்தை இறால் பண்ணையாளர்களிடமிருந்து அண்டை கிராம மக்களுக்கு மாற்றிக் கொடுக்கும் போது பாதிக்கப்பட்ட கிராமத்தினரின் வாழ்க்கைத் தரம் நன்கு உயர பண்ணை விவசாயிகள் உதவுகின்றனர்.
 • மேற்கூறிய காரணங்களைக் கருத்தில் கொண்டு பார்க்கையில், இறால் வளர்ப்பு நடவடிக்கைகளை அனுமதிப்பதுடன், அவற்றை ஊக்குவிக்கவும் செய்தல் அறிவுசார்ந்த முடிவாகவே இருக்கும். இதன் மூலம் ஏற்றுமதி வருவாய் பெருகுவதுடன், மக்களுக்கு சிறந்த சத்துள்ள உணவையும் அளிக்க முடியும். சுற்றுச்சூழல் பாதிப்பு விளைவுகளை ஒரே வீச்சில் ஒதுக்கித் தள்ளி விட முடியாது என்பதும் இறால் வளர்ப்பை முழுவதுமாக தடை செய்வது என்பதும் பொருளாதார அடிப்படையில் மேற்கொள்ளும் சரியான முடிவாக இருக்காது. சுற்றுச்சூழலுக்காக வரிந்து கட்டிக்கொண்டு சட்டரீதியாகவும் மற்றும் நிர்பந்தங்கள் அளிப்பது மூலமும்  செய்து விடுவது புத்திசாலித்தனமல்ல.
 • சுற்றச்சூழல் பிரச்சினையை நடுநிலைக் கண்ணோட்டத்துடன், பொருளாதார முன்னேற்றத்தின் அடிப்படையில் நோக்கினால், இறால் பண்ணை உரிமையாளர்களிடம் இருந்து வரும் மானத்தை, 'சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈடு முறையில் அளிப்பதே சரியான முடிவாக இருக்கும். இறால் வளர்ப்பின் பாதகமான வெளிப்புற விளைவுகளை உள் வாங்கிக் கொள்ளும் அறிவுபூர்வமான அணுகுமுறையே இது.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

3.05
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top