பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கூட்டின மீன்வளர்ப்பு

கூட்டின மீன்வளர்ப்பு பற்றிய குறிப்புகள்

கூட்டின மீன்வளர்ப்பு

குளங்களில் மாறுபட்ட உணவு, இடம், உயிரிவளி ஆகியவற்றைப் போட்டியில்லாமல் பயன்படுத்தும் பல்வேறு இன மீன் குஞ்சுகளை ஒரே குளத்தினில் இருப்பு செய்து வளர்த்தெடுப்பது கூட்டின மீன் வளர்ப்பு முறையாகும். இதன்படி நான்கு முதல் ஆறு வகையான மீன் இனக்குஞ்சுகளையும், நன்னீர் இறாலையும் தேர்வு செய்து குளங்களில் இருப்பு செய்து வளர்ப்பதன் மூலம் மொத்த உற்பத்தியினை பெருக்கலாம்.

கூட்டின மீன்வளர்ப்பில் குளத்தில் உள்ள மூன்று நீர்மட்டங்களான மேல், நடு மற்றும் அடி மட்டத்தில் உள்ள உணவு வீணாகாமல் உபயோகப்படுத்துவதன் மூலம் குளத்தின் உற்பத்தித்திறன் பெருகுகின்றது. இந்த முறையில் இந்தியப் பெருங்கெண்டைகளான கட்லா, ரோகு, மிரிகால், மற்றும் அயல்நாட்டுக் கெண்டைகளான சாதாக்கெண்டை, புல்கெண்டை,  மற்றும் வெள்ளிக்கெண்டை ஆகியவை ஒருங்கிணைத்து வளர்க்கப்படுகின்றன. இவைகளுடன் சில சமயங்களில் நன்னீர் இறாலும் சேர்த்து வளர்க்கப்படுகிறது. இவற்றுள் கட்லாவும், வெள்ளிக்கெண்டையும் முறையே நீரின் மேல்மட்டத்தில் உள்ள விலங்கின மற்றும் தாவர மிதவை நுண்ணுயிரிகளை உண்டு வாழ்கின்றன. ரோகு, நீரின் நடுமட்டத்தில் உள்ள தாவர, விலங்கின நுண்ணுயிரிகளை உண்கிறது. குளத்தின் அடிமட்டத்தில் அல்லது மண்ணில் புதைந்துள்ள உணவுகளை மிரிகாலும் சாதாக்கெண்டையும் உண்டு வளரும். புல்கெண்டை, குளக்கரையோரங்களில் காணப்படும் புற்களையும், இலைகளையும் உண்டு வளர்கிறது.

மீன்குஞ்சுகளை இருப்பு செய்தல்

பொதுவாக ஒரு குளத்தில் / நீர் நிலையில் மீன் வளர்த்தலின் பொருட்டு மீன்குஞ்சுகளை இருப்பு செய்வதற்கு முன்பாக மேற்கொள்ளப்படவேண்டிய அனைத்து நீர் மற்றும் மேலாண்மை நடவடிக்கைகளையும் சரிவர மேற்கொள்ள வேண்டும். அதன்பின்னர் குளத்து நீரின் மேல்மட்டம், நடுமட்டம் மற்றும் அடிமட்டத்திலுள்ள உணவுகளை உண்ணும் கெண்டை ரகக் குஞ்சுகளை முறையே 40:20:40 என்ற விகித்தில் இருப்பு செய்ய வேண்டும்.

சாதாக்கெண்டை மற்றும் மிரிகால் இன மீன்குஞ்சுகளின் இருப்பினைக் குறைத்துக் கொண்டு போதுமான அளவு நன்னீர் இறால் குஞ்சுகளை இருப்பு செய்து வளர்க்கும் பட்சத்தில் மேலும் இலாபம் ஈட்டிட வழிவகை உள்ளது.

உணவிடுதல்

மேல் உணவாக அரிசித் தவிடும், கடலைப் புண்ணாக்குத்து¡ள், மீன்து¡ள் முதலியவற்றை சரிசமமாகக் கலந்து 5% மீன்து¡ளுடன் 10% மரவள்ளிக்கிழங்கு மாவு (10 கிராம் மாவினை ஒரு லிட்டர் நீரில் கொதிக்கவைத்து கூழ் போலாக்கி) கலந்து ஆறாவைத்து, பின்னர் கவளம் போல் உருண்டையாக்கி தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் அன்றாடம் மீனின் உத்தேச எடைக்கு 2 – 3% என அளிக்க வேண்டும். (குச்சித்திவனம் உணவாக அளிக்கலாம்) அளவிற்கு அதிகமாக உணவிடக்கூடாது. புல்கெண்டை மீனுக்கு வேலம்பாசி, ஹைடிரில்லா மற்றும் இளம்புற்களையும், தீவனப் புற்களான குதிலை மசால், கினியாப்புல், நேப்பியர்புல் என்பவைகளையும் சிறிது சிறிதாக வெட்டி மூங்கில் பரணில் வைத்து மிதக்கச்செய்து சிறப்பு உணவாக அளிக்க வேண்டும்.

குளங்களின் பராமரிப்பு

இருப்பு செய்யப்பட்ட மீன் குஞ்சுகள் வேகமாக வளர, வளர்ப்புக் குளங்கள் சிறப்பாகப் பராமரிக்கப்பட வேண்டும். வளர்ப்புகுளத்தின் நீர் மட்டம் எப்போதும் ஒரு மீட்டர் ஆழத்திற்கும் குறையாமல் இருக்க வேண்டும்.

இயற்கை உரம் ஒருமுறை, ரசாயன உரம் மறுமுறை என 15 நாள் இடைவெளியில் மாதம் இருமுறை உரமிடவேண்டும்,

உரமிட்டத்தின் பயன், நுண்ணுயிர் மிதவைகளின் பெருக்கத்தின் மூலம் தெரிகின்றதா என்பதை செச்சித் தட்டை (Secchi disc) பயன்படுத்தியும், நுண்ணுயிர் தாவர மிதவைகளை சேகரித்தும் அறிய வேண்டும்.

சில நேரங்களில் பாசி மற்றும் நுண்ணுயிர் தாவர மிதவைகளின் உற்பத்தி அதிகரிக்கும்போது குளத்து நீர் அடர்பச்சை நிறமாக மாறும். இதனைச் சரி செய்ய, மீன்களுக்கு உணவிடுவதை தற்காலிகமாக நிறுத்தவேண்டும். இல்லையெனில், நீர்வாழ் உயிரினங்கள் யாவும் இரவில் சுவாசிப்பதால் உயிர்வளி குறைவு ஏற்பட்டு இதனால் மீன்கள் ஒட்டுமொத்தமாக இறக்க நேரிடும். நீரின் நிறம் பழைய நிலைக்குத் திரும்பியபின் வழக்கம்போல் உணவிடலாம்; உரமும் இடலாம்.

பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை குளத்திலுள்ள நாள்பட்ட பழைய நீரை 10% அளவிற்கு வெளியேற்றி, புதுநீரைப்பாய்ச்ச வேண்டும். இரவில் நீரில் சுழல் சக்கரங்களைப் பயன்டுத்தும் வசதிகளைக் கொண்ட குளங்களில் இத்தகைய நடவடிக்கைகள் பொதுவாக தேவையில்லை.

தவிடு, புண்ணாக்குடன் மீன்து¡ளையோ அல்லது சோயாமாவையோ ஒரு பங்காகச் சேர்த்துப் பயன்படுத்தினால் மீன்களின் வளர்ச்சித்தறன் மேலும் அதிகரிக்கும்.

மாதந்தோறும் நடத்தும் சோதனை மீன்பிடிப்பின்போது, இயன்றவரை மீன்களை அதிகமாகக் கையாளாமல் அவற்றின் எடையை அறியவேண்டும்.

பிடித்த மீன்களின் எடையைக் கணித்தபின் அவற்றை குளத்தில் மீண்டும் விடுவதற்கு முன்னர், தவறாமல் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசலில் (1 மி.கி. / லிட்டர்) 2 – 3 நிமிடங்கள் குளியல் சிகிச்சை அளிக்க வேண்டும்.

மீன் பிடித்தல்

மீன்கள் ஆறு அல்லது ஏழாவது மாத இறுதியில் 750 முதல் 1250 கிராம் எடை வரை வளர்ந்து இருக்கும். அச்சமயம் நன்கு வளர்ந்த மீன்களை பிடித்து விற்பனை செய்திட வேண்டும். மீன்களின் தேவை அதிகமாக இருந்தால் எல்லா மீன்களையும் பிடித்து விற்பனை செய்துவிடலாம். நல்ல விலை கிடைக்கவில்லையெனில் அவ்வப்போது சிறிதளவில் பிடித்து, விற்பனை செய்ய வேண்டும். மிதத் தீவிர மீன்வளர்ப்பு முறையில் வளர்க்கப்படும் மீன்கள் உள்ள குளத்தில் 5 – 7 டன் மீன்களை அறுவடை செய்ய வாய்ப்பு உள்ளது.

ஆதாரம் : மீன்துறை ஆணையர் அலுவலகம், சென்னை – 600 006

3.07692307692
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top