பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

விரால் மீன் வளர்ப்பு

விரால் மீன் வளர்ப்பு பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

வளர்ப்போடு இணைந்த சிறுநுட்பங்களையும் தவறாமல் பின்பற்றினால், ஒரு ஹெக்டேரில் ஆண்டுக்கு 4 டன் முதல் 5 டன் வரை விரால் மீன் உற்பத்தி செய்ய முடியும். நன்னீர் மீன் வளர்ப்பில் பொதுவாக நம் நாட்டின் வேக வளர்ச்சிக் கெண்டைகள் மூன்றையும், வெளிநாடு வேக வளர்ச்சிக் கெண்டைகள் மூன்றையுமே நம்பி உள்ளோம். அவற்றை மிக தீவிர முறையில் வளர்த்து ஹெக்டேருக்கு 10 டன்கள் வரை எளிதில் உற்பத்தி செய்ய முடியும் என்றாலும், இத்தகைய கெண்டை மீன்களின் விற்பனை விலை குறைவு. ஆனால், வளர்ப்புக்கு வாய்ப்பான விரால் மீன் இனங்களை நாம் மறந்து விடுகிறோம்.

விரால் மீன் இனங்கள்

விரால் மீன்களின் தலை, பாம்பின் தலையைப்போல் தோற்றமுடையது. அதனால், அவை பாம்புத் தலை மீன் என அழைக்கப்படுகிறது. இவை, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், நேபாளம், பர்மா, தாய்லாந்து, சீனா, வியத்நாம், கம்பூசியா போன்ற நாடுகளில் பரவி உள்ளன.

விரால் மீன் இனங்களில் நமது நாட்டில் மட்டும் உள்ளினங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் வளர்ப்புக்கு இரண்டு உள்ளினங்கள் மிகவும் முக்கியமானவை. அவை, சன்னா மரூலியஸ் (ராட்சத விரால்), சன்னா ஸ்ட்ரையேட்டஸ்.

விரால் மீன்களின் சிறப்பு

விரால் மீன்கள், நன்னீர் மீன்களுள் சுவையில் சிறந்தவை. மாமிசம், மிகவும் மிருதுவானது. வட்டத் துண்டுகளாக வெட்டிச் சீராக சமைக்கக் கூடிய விரால் மீனில், முள்கள் மிகக் குறைவு. விரால்கள் வெளிக்காற்றையும், சுவாசிக்கும். அதனால், மீன் சந்தைகளில் அவற்றை உயிருடன் பெறமுடியும். நோயினால் உடல் நலிவுற்று ஊட்டச்சத்துள்ள உணவு பெற விரால் மீன்களை எளிதில் வளர்த்திடலாம்.

வளர்ப்புக்கேற்ற குணங்கள்

 • விரால் மீன்கள் புலால் உண்ணிகள், ஓரளவு வேகமாக வளர்பவை, விரால்களுக்கான உயிருணவுகளை உற்பத்தி செய்து, அவற்றின் உணவுத் தேவையை நிறைவு செய்ய முடியும். பொதுவாக, சூழல் கூறுகளைத் தாங்கும் திறன், விரால்களுக்கு அதிகம். எனவே, அவற்றை அதிக அடர்த்தியில் வளர்க்கலாம்.
 • தரம் குன்றிய நீர் நிலைகளிலும் விரால்களை வளர்க்கலாம். தற்போது, இயற்கையாக சேகரிக்கப்படும் குஞ்சுகளை விரால் வளர்ப்புக்கு பயன்படுத்தலாம்.
 • விரால்கள் தேங்கிய குளங்களிலும், ஆண்டு முழுவதும் இனப்பெருக்கம் செய்கின்றன. அதனால் திட்டமிட்டுச் செயல்பட்டு அவற்றின் குஞ்சுகளை சேகரித்து பயன்படுத்த முடியும். விரால்கள் வளர்க்க நீர் அதிகம் தேவையில்லை. தரமேம்பாடு செய்தால், கழிவு நீரிலும் வளர்க்கலாம்.
 • தனி இனமாக வளர்ப்பது மட்டுமின்றி, கெண்டை மீன்கள், ஓரளவு வளர்ந்த பின், அவற்றோடு சேர்த்தும் விரால்களை வளர்க்கலாம். பகை மற்றும் தீனி மீன் வளர்ப்பு என்ற முறையில், திலேப்பியா மீன்களோடும் சேர்த்து வளர்க்கலாம். மீன்னோஸ் எனப்படும் கேம்புசியா, ஓரிசியாஸ், அப்ளோகீலஸ் ஆகிய கொசு ஒழிப்பு மீன்களுடனும் சேர்த்து வளர்க்கலாம்.

விரால் குஞ்சுகள்

 • வளர்ப்புக்கான விரால் குஞ்சுகளை, இயற்கை நீர் பரப்புகளில் இருந்து சேகரிக்க வேண்டும்.
 • விரல் குஞ்சுகளை சேகரித்து தரும் நுட்பம் நிறைந்தோர் பரவலாக உள்ளனர். அவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
 • இனப்பெருக்கத்துக்கு என தரமாக, இயற்சை சூழலுடன் குளம் அமைத்து அங்கே உற்பத்தியாகும் குஞ்சுகளை அவ்வப்போது சேகரித்து வளர்க்கலாம்.

வளர்ப்புக் குளம்

வளர்ப்புக் குளம் குறைந்தது 500 ச.மீ. பரப்பளவாக இருக்கலாம். அதிகபட்சமாக 5,000 ச.மீ. குளத்தின் நீரின் ஆழம் 50-70 செ.மீ. இருந்தால் போதும். நிழல் தரும் தென்னை, வாழை போன்ற பொருளாதாரப் பயன்தரும் மரங்களை குளக்கரையின் ஓரங்களில் வளர்ப்பது நல்லது.

வளர்ப்புக் குளம் தயாரிப்பு

 • விரால் மீன் வளர்ப்புக் குளத்தில் 40 செ.மீ. உயரம் நீர் பாய்ச்சி, தொழு உரங்களையும், ரசாயன உரங்களையும் இட்டு, நுண்ணுயிர் மிதவைத் தாவர மற்றும் விலங்கினங்களின் உற்பத்தியை தொடங்க வேண்டும்.
 • உரமிட்ட 10-15 நாள்களில் நுண்ணுயிர் மிதவைகளின் உற்பத்தி சிறந்ததும் மீண்டும் நீர் பாய்ச்சி குளத்து நீரின் ஆழத்தை 70 செ.மீ. உயர்த்தலாம். விரால்களுக்கு ஏற்ற உயிருணவுகளாக உதவக்கூடிய சிறிய மீன் இனங்களான கொசு ஒழிப்பு மீன்களை, விரால் வளர்ப்புக் குளங்களில் இருப்பு வைக்க வேண்டும்.

உணவிடல்

 • கொசு ஒழிப்பு மீன்கள், திலேப்பியாக் குஞ்சுகள், சிறுங்கெண்டைகள், தவளையின் தலைப்பிரட்டைகள், மண்புழுக்கள், ரத்தப் புழுக்கள், தேவதை இறால்கள், நெத்திலிக் கருவாடு, துண்டுகளாக வெட்டப்பட்ட கழிவு மீன்கள், கோழிக் குடல்கள் மற்றும் மாட்டிறைச்சி போன்றவற்றை உணவாக தரலாம்.
 • விரால் வளர்ப்பில் உணவும், உணவிடலும் மிக மிக முக்கியம். அவற்றின் உணவுத் தேவையை தினமும் நிறைவு செய்ய வேண்டும். காலை 7 மணி, மாலை 5 மணி என்ற அளவில் உணவிடலாம்.
 • மீன் வளர்ப்பின் போது மாதம் ஒரு முறை மாதிரி மீன் பிடிப்பு நடத்தி, மீன்கள் பெற்றிருக்கும் சராசரி வளர்ச்சியை அறிய வேண்டும். ஒவ்வொரு மாதமும் குளத்தில் அதிகரிக்கும் மின்களின் மொத்த எடைக்கு ஏற்ப, உணவின் அளவை அதிகரித்து கொடுக்க வேண்டும்.
 • வளர்ப்போடு இணைந்த சிறு நுட்பங்களையும் தவறாமல் கவனமுடன் பின்பற்றி விரால் வளர்த்தால், ஹெக்டேருக்கு ஆண்டுக்கு 4 முதல் 5 டன் வரை உற்பத்தியை பெறலாம்.

ஆதாரம் : தினமணி

Filed under:
3.10256410256
கார்த்திகேயன் May 23, 2020 12:28 PM

நன்றி

ம. பாலசுப்ரமணியன் May 01, 2020 03:15 PM

எத்தனை மாதத்தில் அறுவடை செய்யலாம்.

பாண்டி Feb 15, 2020 07:35 PM

மீன்குஞ்சு கிடைக்கும் இடம்.அட்ரஸ் ,போன் நம்பர்
வேணும்

ரமேஷ் Nov 21, 2019 04:12 PM

விழுப்புரம் மாவட்டம் (செஞ்சி,திண்டிவனம், திருவண்ணாமலை) அருகே விரால் கொறவை கெண்டை மீன் குஞ்சு விற்பனை செய்யும் இடம் மற்றும் முகவரி தேவை

Hajji Oct 30, 2019 01:43 PM

பயனுல்ல தகவல்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top