பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / வேளாண் சார்ந்த தொழில்கள் / வேளாண்மை சார்ந்த தொழில்கள் - ஒரு பார்வை
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

வேளாண்மை சார்ந்த தொழில்கள் - ஒரு பார்வை

வேளாண்மை சார்ந்த தொழில்கள் குறித்த தகவல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

வேளாண்மை என்பது தொன்றுதொட்டு நம் நாட்டில் நடப்பில் இருக்கும் தொழில். உழவின்றி உலகம் இல்லை என்பது உண்மையான கூற்று. வேளாண்மையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் அனைத்தும் நம் வயிற்றுக்கு உணவாக செல்வதில்லை. எல்லா இடத்திலும் எல்லா பொருளும் விளைவதில்லை. உணவை பதப்படுத்துவது இந்த குறைக்கு ஒரு சிறந்த நிவாரணமாக இருக்கிறது.

வேளாண்மை பொருட்களை மூலதனமாக வைத்து இயங்கும் தொழில்கள் வேளாண் சார்ந்த தொழில்கள் எனப்படும். இவை வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள், வேளாண் இடுபொருட்கள் (விதைகள், உரங்கள்) தயாரிக்கும் நிறுவனங்கள் ஆகும்.

வேளாண் விதைத் தொழில்

விளை பொருட்களை உற்பத்தி செய்வதில் பெரும் பங்கு வகிப்பது விதைகள் மற்றும் உரங்கள். நல்ல விதையின்றி விளைச்சல் இல்லை. தரமான விதைகள் தான் விளை பொருட்களின் உற்பத்திக்கு முன்னோடியாகத் திகழ்கிறது. விதைகள் உற்பத்தி செய்யும் தொழிலின் வயது சுமார் நாற்பது வருட காலம். விதைத்தொழிலில் முக்கிய பங்கு வகிப்பது பொதுத்துறை. பொதுத்துறையில் தேசிய விதைக் கழகம், இந்திய மாநில பண்ணை கூட்டவை, மாநில விதைக் கழகங்கள் மற்றும் மாநில பண்ணைக் கழகம் ஆகியவை அடங்கும். இவை மாநில வேளாண் பல்கலைக் கழகங்கள் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் முதலியவை கண்டுபிடிக்கும் விதைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்கின்றன. இந்தியாவில் சுமார் இருநூறு முதல் ஐநூறு தனியார் விதை நிறுவனங்கள் உள்ளன. இந்தியாவின் ஐந்து மில்லியன் மதிப்புள்ள விதைத் தொழில் மக்களின் உணவுப் பழக்கவழக்க மாறுதலினால் வியக்கத்தக்க மாற்றத்தை அடைந்து கொண்டு இருக்கிறது.

தமிழகம், மேற்கு மஹாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், தெற்கு இராஜஸ்தான் மற்றும் ஆந்திராவில் விவசாயிகள் வியாபார குறியிட்ட விதைகளை அதிகம் பயிரிடுகின்றனர். சின்ஜென்டா, இண்டோ - அமெரிக்கன் விதைகள், மான்சான்டோ இந்தியா, பயனியர் விதைகள் முதலிய பன்னாட்டு நிறுவனங்கள் இந்த முன்னேற்றத்தைப் பயன்படுத்துவதில் முன்னோடியாக இருக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில் இந்திய நிறுவனங்கள் தங்களுடைய ஆராய்ச்சித்திறன், வியாபார யுக்தி முதலியவற்றில் அதிக கவனம் செலுத்தி முன்னேற வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றன. இனிவரும் காலங்களில் மரபுவழி மாற்றப்பட்ட விதைகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என்பது ஆராய்ச்சியாளர்களின் கூற்றாக இருக்கிறது.

உரங்கள்

வேளாண் இடுபொருட்களில் உரங்கள், உணவு உற்பத்தியில் பிரதான பங்கு வகிக்கிறது. ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு உணவு, காற்று, நீர் எப்படி தேவையாக இருக்கிறதோ அதே போல் பயிர் வளர்ச்சிக்கு நிலம், நீர், உரம் மூன்றும் முக்கியமாகத் திகழ்கின்றன. உரங்கள் இரண்டு வகைப்படும். அவை, உயிர்பொருள் உரம் மற்றும் உயிர்பொருள் சார்பில்லாத உரம்.

வேதியியல் பொருள் கலந்த உரங்களை அதிகம் பயன்படுத்தியதால் கலப்படமற்ற மாட்டுப்பாலிலும், உன்னதமான தாய்ப்பாலிலும் வேதியியல் பொருள் கலந்திருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இத்தகைய சூழ்நிலையில் உயிர் உரங்களின் பங்கு முக்கியமாகக் கருதப்படுகிறது.

உணவு பதனிடும் தொழில்

உணவு பதனிடுவது தொன்றுதொட்டு நம் நாட்டில் நடைமுறையில் இருந்து வருகிறது. நம் வீட்டு பாட்டியின் கைப்பக்குவம், இன்று வளர்ந்து வரும் ஒரு தொழில். இன்றைய கணினி யுகத்தில் அவசரகதியில் மக்கள் ஓடிக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில் உடனடி உணவு வகைகளும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளும் அவசர நேரத்தில் கைகொடுக்கின்றன. உணவு பதனிடும் தொழில்களானவை பழங்கள் மற்றும் காய்கள் பதனிடும் தொழில், மீன் பதனிடும் தொழில், பால் பதனிடும் தொழில் எனப் பல்வகைப்படும். இந்தியர்களிடம் செலவிடக்கூடிய வருமானம் அதிகம் இருப்பதால் உணவு பழக்க வழக்கங்கள் மாறி வருகின்றன. இதனால் தானியங்கள், பருப்பு வகைகள், உப்பு சர்க்கரை, நறுமணப்பொருட்கள் இவைகளில் செலவிடும் தொகை குறைந்து பால் பொருட்கள், மாமிசம், முட்டை, மீன், பழங்கள், பானங்கள் முதலியவற்றில் செலவிடும் தொகை அதிகரித்துவிட்டது.

உணவு மற்றும் வேளாண் பொருட்களுக்கான மதிப்பு மக்களிடையே உயர்ந்து கொண்டு வருகிறது. ஏனென்றால் விற்பனையில் உணவு பதனிடும் தொழில் 150 சதவீதத்திற்கு மேல் வளர்ந்து வருகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் பல இத் தொழிலில் நுழைந்துள்ளன. வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் உணவுப் பொருட்கள் இந்திய தயாரிப்பு என்ற முத்திரையோடு அனுப்பப்படுகின்றன. பாலிலிருந்து, பால்பவுடர், வெண்ணெய், நெய், பன்னீர், ஐஸ்கிரீம் முதலியவை தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவில் தொன்று தொட்டு இந்தத் தொழில் குடிசைத் தொழிலாக இருந்து வந்திருக்கிறது. இந்தியாவில் வரும் 2020ல் பால் உற்பத்தி 220-250 மில்லி லிட்டரை எட்டும் என்று கருத்துக் கணிப்பு கூறுகிறது.

வேளாண் சார்ந்த தொழிலில் வாய்ப்புகள்

இந்தியாவின் மாறுபட்ட தட்பவெப்பநிலை, பலவகை உணவுப் பொருட்கள் உற்பத்திக்கு வழிவகுக்கிறது. 900 மில்லியன் மக்கள் தொகையும் அதில் 250 மில்லியன் மத்திய வர்க்கத்தினரும் இந்தியாவின் வளர்ந்து வரும் சந்தைத் திறனுக்கு எடுத்துக்காட்டு. ஒரு சராசரி இந்தியன் வீட்டு செலவில் சுமார் ஐம்பது சதவீதம் உணவுப்பொருட்களுக்கு செலவிடுகிறான். இந்தியாவின் மக்கள் தொகை தொழிலுக்குத் தேவையான ஆட்கள் பற்றாக்குறையைக் குறைக்கிறது. பழங்கள் மற்றும் காய்கறிகள் பதனிடும் வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு ஒரு சதவீதத்தை விட குறைவானது. பழங்களில் மாம்பழம், திராட்சை, வாழைப்பழம், சப்போட்டா, இலந்தைப்பழம், மாதுளை, சீதாப்பழம் முதலியவற்றிற்கு அதிக ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளன. காய்கறிகளில் வெண்டை, பாகற்காய், பச்சை மிளகாய் முதலியவைகளுக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

வேளாண் சார்ந்த தொழில்களில் இந்தியாவில் வாய்ப்புகள் அதிகரிப்பதற்கான முக்கியக் காரணங்கள் பின் வருமாறு :

 • திடமான விவசாயம்
 • நிறைய வேளாண் விளை பொருட்களை விளைவிப்பதற்கான சூழ்நிலை
 • வருடம் முழுவதும் எளிதில் கிடைக்கக் கூடிய பொருட்கள்
 • நிலப்பகுதிக்கு கட்டுப்பாடில்லை
 • அதிகமான மனிதவளம்
 • தேவைக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யக் கூடிய பொருட்கள்
 • மாநில அரசின் உதவி
 • துடிப்புள்ள பொருளாதாரம்
 • திடமான உள்நாட்டு சந்தை
 • உலக சந்தைக்குள்ள பொருட்கள்
 • இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்களின் இருப்பு
 • பதப்படுத்துவதற்கு உள்ள திறமை

வேளாண் சார்ந்த தொழில்களை ஊக்குவிக்கும் நிறுவனங்கள்

விளை பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் வளர்ச்சி மற்றும் ஏற்றுமதி முதலியவற்றை மேம்படுத்துவதற்காக 1986-ஆம் ஆண்டு வேளாண் உணவுப் பொருட்களை பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி நிறுவனம் (APEDA) உருவாக்கப்பட்டது. வேளாண் ஏற்றுமதியை அதிகப்படுத்துவதற்கும், அந்நிய செலாவணியை அதிகப்படுத்துவதற்கும், வேளாண் பெருமக்களுக்கும் அதிக வருவாய் ஈட்டுவதற்கும் விளை பொருள்களின் ஏற்றுமதியை ஊக்கப்படுத்துவது மிகவும் அவசியம்.

தேங்காய் உற்பத்தி மற்றும் அதனைச் சார்ந்த தொழில் களை முன்னேற்றுவதற்காக 1981-ஆம் ஆண்டு கொச்சினை தலைமையகமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது தேங்காய் வளர்ச்சி மன்றம்.

தேங்காய் வளர்ச்சி மன்றத்தின் குறிக்கோள்கள்

 • தரமான தென்னங்கன்றுகளை உற்பத்தி செய்தல்
 • தேங்காய் சாகுபடி செய்யும் நிலங்களை அதிகரித்தல்
 • தேங்காய் உற்பத்தியை அதிகரித்தல்
 • ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு
 • தேங்காய் சார்ந்த தொழில்களை வளப்படுத்துவது

இத்துடன் வங்கிகள் பல வேளாண் தொழில்களுக்கு பிரத்யேக கடனுதவி அளிக்கின்றன. விஞ்ஞானம் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் இக்காலத்தில் வேளாண்மையை மட்டும் சார்ந்து விவசாயிகள் இருக்கக் கூடாது. அதனுடன் வேளாண் சார்ந்த தொழில்களை செய்ய முன் வரவேண்டும். வரும் காலங்களில் வேளாண்மைத் தொழில் செய்ய யாருமே இல்லை என்ற நிலை உருவாகக்கூடாது. படித்த இளைஞர்கள் தங்களுக்குக் கல்வி அளித்த தந்தையின் விவசாயத் தொழிலை மறவாமல் வேளாண்மையில் புதுமையை புகுத்தி வேளாண் சார்ந்த தொழில்களை செய்ய முன்வர வேண்டும். பல நிறுவனங்கள் வேளாண் தொழிலுக்கு பல்வேறு உதவி திட்டங்களை அளிப்பதை அறிந்து அவற்றை நல்ல முறையில் பயன்படுத்தி வேளாண்மை சிறக்கப் பாடுபட வேண்டும்.

ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்- 641 003

Filed under:
2.89534883721
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top