பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

இராகி இரங்கங்களும் வளர்ப்பும்

அதிக விளைச்சல் தரும் இராகி இரங்கங்களும், வளர்ப்பும் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

கேழ்வரகில் 5 சத்துகள் கிடைக்கிறது. இது பல மதிப்பூட்டப்பட்ட ஆரோக்கிய உணவு தயார் செய்ய உதவுகிறது. கேழ்வரகில் அதிக கால்சியம், கரையும் நார்ச்சத்து, பாஸ்பரஸ், குறைந்த பூர்த்தியான கொழுப்பு உள்ளது. நம் உணவில் சிறுதானியங்களின் பங்கு மிக முக்கியமானது. மாறிவரும் பழக்க வழக்கங்களாலும், இயந்திர வாழ்வில் சிறுதானியங்களின் பங்களிப்பை நாமே குறைத்துவிட்ட காரணத்தாலும் சிறுதானிய வகைகளான இராகி, சாமை, கம்பு, வரகு போன்றவை உணவில் முக்கியத்துவம் இழந்துவிட்டன.

கேழ்வரகும் செரிமானத்திற்கு உதவும் நார்ச்சத்தும்

கேழ்வரகில் செரிமானத்திற்கு உதவும் நார்ச்சத்து 18.6 கிராம் என்ற அளவில் காணப்படுகிறது. இந்த அளவு இரத்தத்தில் உள்ள குளுகோஸ் உறிஞ்சும் மற்றும் பரவும் தன்மையை குறைப்பதன் மூலம் இரத்தத்தின் குளுகோஸ் அளவை குறைக்கிறது. அரிசி போன்ற உணவுகளை உட்கொள்ளும் போது இரத்தத்தின் குளுகோஸ் அளவு உடனே உயர்கிறது. இதன் காரணமாக சர்க்கரை நோயின் பாதிப்பு அதிகமாகிறது. ஆனால், கேழ்வரகு போன்ற உணவினை உட்கொள்ளும்போது இரத்தத்தின் குளுகோஸ் அளவு குறைகிறது. முடிவில் சர்க்கரை நோய் கட்டுக்குள் வருகிறது.

இந்தியாவில், கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம், ஒரிசா, மஹாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம், பீகார், குஜராத் மற்றும் மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பயிர் செய்யப்படுகிறது. தமிழகத்தில் 82, 335 எக்டர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டு 1.61 லட்சம் டன் கேழ்வரகு உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒரு எக்டருக்கு சராசரியாக 1955 கிலோ தானிய விளைச்சல் தருகின்றது. உற்பத்தி திறனில் கர்நாடகம் முதலிடம் வகிக்கிறது. தமிழ்நாட்டில் ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், கோவை மாவட்டங்களில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இதை தவிர காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் தென் மாவட்டங்களில் சிறிய அளவில் பயிரிடப்படுகிறது.

பருவம்

இறவையாக சித்திரை, ஆடி, மார்கழிப் பட்டங்களிலும், மானாவாரியாக புரட்டாசிப் பட்டங்களிலும் கேழ்வரகைப் பயிரிடலாம்.

தமிழகத்தில் மிக அதிகளவு விளைச்சலைத் தரக்கூடிய பல இரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் பருவ மழைகளுக்கு ஏற்ப களர் உவர் நிலங்களுக்கு ஏற்ற வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய இரகங்களும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பையூர் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து இராகியில் பையூர் 1 மற்றும் பையூர் 2 ஆகிய இரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மண்டல இரகங்கள்

கிருஷ்ணகிரி வட்டாரங்களில் இராகி அதிக அளவில் பயிரிடப்படுகிறது. எனவே இப்பகுதிகளுக்கு ஏற்ற, குலை வறட்சியை தாங்கக்கூடிய, நோய்க்கு எதிர்ப்புத் தன்மை கொண்ட இரகங்களை உருவாக்கும் ஆராய்ச்சி 2011 ஆம் ஆண்டு முதல் நடைப்பெற்று வருகிறது. இதன் விளைவாக பிஒய்ஆர் 009-04 என்ற இரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இராகி - பிஒய்ஆர் 009-04

 • பெற்றோர் கோ12 X டிஎன்ஏயூ946
 • வயது 105 நாட்கள்
 • பருவம் சித்திரை, ஆடி, மார்கழி (இறவை) / ஆடி, புரட்டாசி (மானாவாரி)
 • சிறப்பியல்புகள் குறைந்த வயது, வறட்சியை தாங்கும் தன்மை கொண்டது, நுனி வளைந்த கதிர்களை கொண்டது. மொத்த குளோரோபில் அளவு 1.57 மி.கி./ கிராம், புரோலின் அளவு 1.18 மிலி கிராம், பசுங்கணிகங்களின் நிலையான அளவு (CSI) 85.2 சதவிகிதம், RWC 77.2 சதவிகிதம்
 • விளைச்சல் சராசரி விளைச்சலாக 3660 கிலோ / எக்டர் அளித்து பையூர் 2 இரகத்தைவிட 10.7 சதவிகிதம் அதிக விளைச்சலாகவும், ஜிபியூ 28 விட 21.6 சதவிகிதம் அதிக விளைச்சலும் அளித்தது.

பையூர் மண்டல இராகி இரகங்கள்

 • பெற்றோர் பி.ஆர் 722 என்ற ஆந்திரா இரகத்திலிருந்து தனிவழி தேர்வு வயது (நாட்கள்) 115 - 120 (நீண்ட வயது)
 • கதிர் வடிவம் விரிந்த நீண்ட விரல்களை உடைய கதிர்கள்
 • விளைச்சல் தானியம் - 1800 கிலோ / எக்டர்) தட்டை - 4250

சிறப்பியல்புகள்

 • அதிக விளைச்சல்
 • மானாவாரிக்கு ஏற்றது
 • நீண்ட வயது
 • சுவையான தீவன தட்டை தரவல்லது
 • முக்கிய பூச்சி மற்றும் நோய்க்கு எதிர்ப்பு தன்மை கொண்டது
 • களி மற்றும் கூழ் தயாரிக்க ஏற்றது

பையூர் 2-

 • பெற்றோர் விஎல் 145 X செலக்சன் 10
 • வயது (நாட்கள்) 110-115
 • கதிர் வடிவம் நெருக்கிய உள்வளைந்த விரல்களை கொண்டது
 • விளைச்சல் (கிலோ / எக்டர்) தானியம் - 2500

சிறப்பியல்புகள்

 • மானாவாரி மற்றும் வளம் குறைந்த மண் வகைகளில் பயிரிடலாம்
 • நீண்ட வயது
 • குலை நோய்க்கு மிதமான எதிர்ப்புத் திறன்
 • ஒருமித்த முதிர்ச்சி
 • மிதமான உயரம் மற்றும் சாயா தன்மை கொண்டது
 • சத்து மிகுந்த சுவையான தட்டை

மேற்காணும் இரகங்களை விவசாயிகள் பயிரிட்டு அதிக விளைச்சலை பெற உண்மை நிலை விதைகள் இந்த ஆராய்ச்சி நிலையத்தில் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்படுகின்றது. மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் இராகி மாவு, களி, தோசை, ரொட்டி, பக்கோடா, நிப்பட், முறுக்கு, பிஸ்கட், சேமியா போன்ற பொருட்கள் தயாரித்து விற்பனை செய்வதன் மூலம் அதிக இலாபம் பெறலாம்.

ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை

Filed under: ,
2.95
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top