பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

அஸ்வகந்தா - ஒரு மருந்து பயிர்

அஸ்வகந்தா எனும் மருந்து பயிர் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

அஸ்வகந்தா மிகவும் குறுகிய காலத்தில் வளரும் மருந்து செடி. வறண்ட நிலங்களில் நன்றாக வளரும். மேலும் வறண்ட தரிசு நிலங்களிலும் வளரும். ஆனால் களிமண்ணில் நன்றாக வளராது. இதற்கு ஒரு வாரத்திற்கு ஒருமுறை நீர்பாய்ச்சினாலே போதும். அஸ்வகந்தாவின் வேர்கள் மருத்துவ குணம் கொண்டது.

இவை தோல் நோய்கள், வயிற்றுப்புண் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும். ஆண்களுக்கு வீரியத்தன்மையை அதிகரிக்கவும், பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்யவும் மருந்தாகப் பயன்படுகிறது. நடவு செய்த 5 முதல் 6 மாதத்திற்குள் இதன் வேர்கள் அறுவடை செய்யப்படுகிறது.

இது இந்தியாவில் பயிர் செய்யப்படும் ஒரு முக்கியமான மருந்து பயிர். அஸ்வகந்தி என்று கன்னடத்திலும், அஸ்வகந்த் என்று ஹிந்தியிலும், வின்டர் செர்ரி என ஆங்கிலத்திலும் இதனை அழைக்கிறார்கள். வேதகாலத்திலேயே இதன் முக்கியத்துவம் பற்றி கூறப்பட்டுள்ளது. வித்தானின் மற்றும் சோமினிபெரின் என்ற இரண்டு வேதிப்பொருட்களே இதன் மருத்துவ தன்மைக்கு காரணம்.

இவை அதிகமாக வேர்ப்பகுதிகளில் இருந்து பெறப்படுகின்றன. மேலும் இதன் இலைகள் 5 வகையான வேதிப்பொருட்களை கொண்டுள்ளது. மேலும் இதன் தண்டு பகுதியில் டேனின் மற்றும் பிளேவனாய்ட்ஸ் அதிகம் உள்ளது.

இதன் மருத்துவ குணத்திற்கு, பல்வேறு வேதிக்கூட்டுப்பொருட்களே காரணம். இந்தியாவில் விளையும் இரகம் 0.13 முதல் 0.31 சதவீதம் வரை வேதிக்கூட்டுப் பொருட்களை கொண்டுள்ளது. ஆனால், ஆப்பிரிக்கா இரகத்தின் வேர்களில் சிறிதளவு இளம் பழுப்புநிற, எளிதில் ஆவியாகக் கூடிய நறுமண எண்ணெய் இருக்கிறது. பழங்களில் அதிக புரத சத்து உள்ளது.

வித்தானின் - ஏ என்பது நோய் எதிர்ப்பு காரணியாகவும் மற்றும் கட்டிகளைக் குணப்படுத்தவும் பயன் படுகிறது. இலையினால் செய்யப்பட்ட பசையானது கட்டிகளையும், சருமநோய்களையும் குணப்படுத்த பயன்படுகிறது. ராஜஸ்தானில், முடக்குவாதத்திற்கு மருந்தாக இதனை பயன்படுத்துகிறார்கள். பஞ்சாபில், குடல் புண்ணை குணமாக்க பயன்படுத்துகிறார்கள்.

இலையில் இருந்து பெறப்படும் கசாயம், குழந்தைகளுக்கு ஜீரணத்தை போக்வும், உடல் வீக்கத்தைப் போக்கவும் குடிப்பவர்களை குழப்பழக்கத்தில் இருந்து விடுவிக்கவும் பயன்படுகிறது. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல், மாதவிடாய் கோளாறு, மலட்டுத்தன்மை கருப்பைப்புண் ஆகியவைகளை குணப்படுத்த பயன்படுகிறது. இதன் வேர்களில் இருந்து பெறப்படும் பவுடர், பாம்பின் விசத்தை முறிக்கக்கூடிய வல்லமை கொண்டது. இதன் வேர் கசாயம், கருப்பை புண்ணை போக்கக்கூடியது.

இதன் வேர் கசாயத்துடன், மிளகு, திப்பிலி, வெண்ணெய் மற்றும் தேன் (25 - 50கி.) அல்லது இதன் வேர் பவுடர் உடன் பால் சேர்த்து பருகினால் ஆண்களுக்கு வீரியத்தன்மை அதிகரிக்கும்.

இதன் இலைதழைகளில் இருந்து தயாரிக்கப்படும் பசையானது குதிரைகளில் ஏற்படும் புண்களையும், கட்டிகளையும் குணப்படுத்த உதவுகின்றது.

தாவரவியல் பண்புகள்

அஸ்வகந்தா - சொலானேசியே குடும்ப வகையைச் சேர்ந்தது. தக்காளியை போன்று, இதுவும் இலையுதிரா தாவரம். இது 13 - 150 செ.மீ. உயரமும் வளரக்கூடியது. இதன் தண்டு பகுதி அதிக மயிர் உரோமங்கள் மற்றும் அதிக கிளைகள் உடையதாகவும் இருக்கும். இலைகள் நீள்வட்ட வடிவிலும், இலையின் நுனி கூர்மையாகவும், மலர்கள் இருமய தன்மை கொண்டதாகவும் இலையின் அடிப்பகுதியில் இருந்து தோன்றும். மேலும் மலர்கள் கொத்தாகத் தோன்றும் (எண்ணிக்கை 25). மலர்கள் வெளிரிய மஞ்சள் நிறத்தில் இருக்கும். காய்கள் சிறிய உருண்டை வடிவிலும், சிகப்பு நிறத்திலும் இருக்கும். மேலும் இதன் காய்கள் நிலையான புள்ளிவட்டம் கொண்டது. இதன் மலர்கள் ஜூன் முதல் செப்டம்பர் வரை தோன்றும். மேலும் இதன் பழுத்த கனிகள் டிசம்பர் முதல் அறுவடைக்கு வரும். உலர்த்தப்பட்ட வேர்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. வேர்கள் 10 முதல் 17.5 செ.மீ. நீளமும் 6.12 மி.மீ. சுற்றளவு கொண்டதாக இருந்தால் மட்டுமே அவைகள் அறுவடை செய்ய தகுந்தவை.

இரகங்கள்

ஜவகர் அஸந்தா

  1. அடர்ந்த பச்சை இலைகள், இளம் வெளிரிய மலர்கள், காய்கள் முதிர்ந்தவுடன் மஞ்சள் நிறத்துடன் காணப்படும்.
  2. ஒரு எக்டருக்கு 7 குவிண்டால் உலர்ந்த வேர்கள் மகசூலாகக் கிடைக்கும்.

இதன் வேர்களில் உள்ள வேதிப்பொருளின் அளவு 0.1 முதல் 0.5 சதம் வரை காணப்படும்.

டபிள்யூ எஸ் 22 (ws22)

இது ஜம் முவில் உள்ள மண்டல ஆராய்ச்சி நிலையத்திலிருந்து உருவாக்கப்பட்டது. பரிந்துரை செய்யப்படும் உர அளவை ஏற்று வளரக்கூடியது.

ஒரு எக்டருக்கு 1000 முதல் 1200 கிலோ வரை மகசூல் கிடைக்கும். சிமாப் டபிள்யூ எஸ் 10 – ரக்சிதா ஒரு எக்டருக்கு 8 முதல் 10 குவிண்டால் வரை மகசூல் தரக்கூடியது. இதில் வேதிப்பொருளின் அளவு 0.5 சதவீதம் இருக்கும்.

மண்

அஸ்வகந்தா அதிகமாக கரிசல் அல்லது சிவப்புமண் வகைகளில் நன்றாக வளரும். மேலும் நன்கு வடிகால் வசதி கொண்ட மண்களே சாகுபடிக்கு ஏற்றதாக இருக்கும். அமிலகார அளவு 7.5 முதல் 8 வரை இருத்தல் வேண்டும்.

தட்பவெப்பநிலை

அஸ்வகந்தா அதிகமாக மிதவெப்பமண்டல பகுதிகளில் நன்றாக வளரும். இது அதிகமாக பின் மழைபருவத்தில் பயிரிடப்படுகிறது. மேலும் நல்ல வளர்ச்சிக்கு மிதமான வறண்ட வானிலை தேவைப்படுகிறது. இதன் வேர் வளர்ச்சிக்கு ஒன்று அல்லது இரண்டு மழை மட்டுமே போதும். மழையின் அளவு 660 முதல் 750 மி.மீ. ஆக இருந்தால் அஸ்வகந்தாவை பயிர் செய்யலாம்.

பயிரிடும் முறை பயிர்பெருக்கம் செய்யும் முறை

விதைகளை நேரடியாக நிலத்தில் விதைத்தல் மூலமாகவும் அல்லது தனியாக நாற்றங்கால் அமைத்து நாற்றுகளை உற்பத்தி செய்தும் பயிர் செய்யலாம்.

நேரடி விதைப்பு

இவ்வகையில் விதைகள் நேரடியாக விளைநிலங்களில் தூவப்படுகிறது. இது பொதுவாக மானாவாரிப்பயிராக விதைக்கப்படுகிறது. அதனால் ஜூலை மாதத்திற்கு முன் விளைநிலங்களை நன்கு தயார் செய்து பாத்திகள் அமைக்க வேண்டும். ஜூலை மாதத்தின் இறுதியில் 10 -12 கிலோ விதைகளை ஒரு எக்டருக்கு பயன்படுத்த வேண்டும்.

நாற்றங்கால் முறை

இவ்வகையில் நன்கு உழுது உயர்மட்ட பாத்திகள் அமைத்தல் வேண்டும். நன்கு தேர்ந்து எடுக்கப்பட்ட விதைகளை ஒரு எக்டருக்கு 5 கிலோ என்ற அளவில் டைத்தேன் எம்-45 மருந்தை 3 கிராம்/கிலோ என்ற விகிதத்தில் நன்கு கலந்து உயர்மட்ட பாத்திகளில் வரிசையாக விதைக்க வேண்டும். இதனால் நாற்றங்காலில் தோன்றும் பெரும்பாலான நோய்கள் தடுக்கப்படுகின்றன. விதைகள் விதைத்தவுடன் நன்கு நீர் பாய்ச்ச வேண்டும். விதைத்த 5 நாட்களிலிருந்து, 7 நாட்களுக்குள் விதைகள் முளைக்கத் தொடங்கும். 42 நாட்கள் ஆன நாற்றுகளை நாற்றங்காலில் இருந்து, நடவு வயலுக்கு மாற்றி 2 அடி x 2 அடி என்ற இடைவெளியில் நடவு செய்யவேண்டும்.

உரமிடுதல்

அஸ்வகந்தாவிற்கு அதிகமாக உரமிடல் தேவையில்லை. மத்திய பிரதேசங்களில் விளையும் அஸ்வகந்தாவிற்கு எந்தவித உரமும் இடுவதில்லை .

களை எடுத்தல்

நடவு செய்த 30 நாட்களில் ஒரு முறையும் அடுத்த 30 நாட்கள் இடைவெளியில் ஒரு முறையும் களை எடுக்கவேண்டும். பொதுவாக ஒரு எக்டருக்கு 20000 - 25000 செடிகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.

பூச்சி மற்றும் நோய்கட்டுப்பாடு

அஸ்வகந்தாவில் பூச்சிகளின் தாக்குதல் குறைவு. நாற்று அழுகல் மற்றும் இலை அழுகல் நோய்களைத் தடுக்க கேட்டான் என்ற மருந்தை 3 கிராம் / கிலோ என்ற அளவில் விதைகளுடன் கலந்து நாற்றங்காலில் பயிர் செய்தால் இதன் தாக்கத்தைக் குறைக்க முடியும். மேலும் டைத்தேன் எம் - 45 மருந்தை 3 கிராம் / லிட்டர் தண்ணீரில் கலந்து 30 நாட்கள் வயதான பயிர்களுக்குத் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

அறுவடை

ஜனவரி மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரை (150லிருந்து - 170 நாட்கள்) பயிர்களை அறுவடை செய்ய வேண்டும். மண்ணில் இருந்து இதன் தண்டுப்பகுதியை நீக்கிவிட்டு வேர்பகுதிகளைத் தோண்டி எடுத்து உலர்த்த வேண்டும்.

தரம்பிரித்தல்

உலர்த்தப்பட்ட வேர்களில் உள்ள மண் மற்றும் சிறிய வேர்கள் ஆகியவற்றை கட்டையால் அடித்து நன்கு சுத்தம் செய்தல் வேண்டும். பின்பு பிரதான தண்டுப்பகுதியை சிறு துண்டுகளாக வெட்டி, வேரின் தடிமன் மற்றும் சீரான தன்மை ஆகியவற்றைப் பொருத்து தரம் பிரிக்க வேண்டும்.

முதல் தரம் (ஏ கிரேடு)

வேர்கள் 7 செ.மீ. நீளமுள்ளதாகவும் (1 -1.5 செ.மீ. பருமன் உடையதாகவும் இருக்க வேண்டும். மேலும் வேரின் உட்பகுதி வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும்.

இரண்டாம் தரம் (பி கிரேடு)

வேரின் நீளம் 5 செ.மீ. இருக்கவேண்டும். அதன் பருமன் குறைந்தது 1 செ.மீ. இருக்க வேண்டும். வேரின் உட்பகுதி வெள்ளை நிறமாக இருக்கவேண்டும்.

மூன்றாம் தரம் (சி கிரேடு)

நீளம் 3 -5 செ.மீ. இருக்கவேண்டும். வேரின் பருமன் குறைந்தது 1 செ.மீ. அல்லது அதை விட குறைந்ததாக இருக்கவேண்டும்.

கடைசி தரம்

பொதுவாக மஞ்சள் நிற உட்பகுதியுடன், சின்ன சின்ன உடைந்த வேர்களாக இருக்கும்.

மகசூல்

சராசரியாக 300 - 500 கிலோ/எக்டர் உலர்த்தப்பட்ட வேரும், 50 -75 கிலோ / எக்டர் விதையும் கிடைக்கும்.

ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை - பழவியல்துறை தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்

Filed under:
3.17857142857
ஆசைதம்பி May 26, 2020 01:43 PM

மலை பகுதியில் செய்யும் விவசாயம் மற்றும் பாதுகாப்பு முறைகள் பற்றிய பதிப்புகள் வேண்டும்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top