பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / பயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள் / இந்தியாவில் வேளாண் வணிகத்தில் உள்ள பிரச்சனைகளும் தீர்வுகளும்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இந்தியாவில் வேளாண் வணிகத்தில் உள்ள பிரச்சனைகளும் தீர்வுகளும்

இந்தியாவில் வேளாண் வணிகத்தில் உள்ள பிரச்சனைகளும் தீர்வுகளும் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

நோக்கம்

இந்தியாவில் அதிகமானோர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உழவுத் தொழிலை சார்ந்து உள்ளனர். குறிப்பாக கிராமப்புறங்களில் இதுவே பிரதான தொழிலாகும். இதன் மூலம் அனைத்து மக்களுக்கும் நிரந்தர உணவு வழங்குவதில் மிக முக்கிய பங்களிக்கிறது. எனவே வேளாண் சார்ந்த வணிகத்தை மேம்படுத்துவது இன்றைய சூழலில் மிகவும் அவசியமாகிறது. ஏனெனில் மக்களின் தேவைகளும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டு செல்வது ஒரு முக்கியக் காரணமாகும். மற்றுமொரு காரணமான வருமான வளர்ச்சியின் தாக்கமும் அவர்களை பல்வேறு மதிப்புக் கூடுதல் விளை பொருள்களை வாங்கத் தூண்டுகிறது. எனவே நமது நாட்டில் வேளாண் சார்ந்த தொழிலை முனைவதற்கு ஒரு புரட்சி இன்றைய 21-ஆம் நூற்றாண்டில் மிகவும் அத்தியாவசியமாகிறது. அதே சமயம் இவ்வேளாண் சார்ந்த தொழில்களில் ஏற்படும் பிரச்சனைகளைக் கண்டறிந்து அதற்கான தீர்வுகளை ஆராய்ந்து அறிவது இன்றியமையாத ஒன்றாகும்.

இந்தியாவில் வேளாண் வணிகத்தில் ஏற்படும் பிரச்சனைகள் ஏராளம். அவ்வாறு வேளாண் சார்ந்த தொழிலில் ஏற்படும் பிரச்சனைகளையும் அவற்றை தீர்க்கும் வழிமுறைகளைப் பற்றியும் இக்கட்டுரையில் காணலாம்.

வேளாண்மை சார்ந்த பிரச்சனைகள்

பொதுவாக வேளாண் விளைபொருட்களின் உற்பத்தியில் பருவமழை தவறுதல், நீர்வள ஆதாரங்கள் குறைதல், மிக அதிக விலையிலான இடுபொருள்கள் மற்றும் குறைந்த தரம் போன்றவை முக்கியப் பிரச்சனைகளாகும். வேளாண் விளைபொருட்களின் விற்பனையிலும் சில பிரச்சனைகள் ஏற்படுகிறது. அவை, விளைபொருள்களில் குறைவான அளவே சந்தைக்கு வருதல், இடைத்தரகர்களின் ஆதிக்கம், போக்குவரத்துக்கான வசதிகள் இல்லாமை, சேமிப்புக் கிடங்கு இல்லாமை மற்றும் பல. மேலும் நவீன தொழில் நுட்ப வசதிகள் குறு மற்றும் சிறு விவசாயிகளை சென்றடையாமை போன்றவைகளாகும்.

விற்பனைக்கு உள்ள விளை பொருட்களுக்கும் விற்பனை செய்யப்படும் விளை பொருட்களுக்கும் இடையேயான வேறுபாடு மிக அதிகமாக உள்ளது. ஏனெனில் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்ததில் பெரும்பாலான பகுதி தங்களின் தேவைக்கு (விதை மற்றும் குடும்ப தேவைகளுக்கு) பயன்படுத்திக் கொண்டு எஞ்சியவைகளையே விற்பனைக்கு எடுத்துச் செல்கின்றனர்.

நமது நாட்டில் குறு மற்றும் சிறு விவசாயிகளே அதிகமாக உள்ளனர். உற்பத்திக்கான செலவு மிக அதிகமாக உள்ளதால் இவர்களால் இடு பொருள்களின் தேவையை ஈடு செய்ய முடிவதில்லை.

வேளாண் சார்ந்த வணிகத்தில் மிக முக்கிய பிரச்சனைகள்

  1. பண்ணை இடுபொருட்களின் தேவை உரிய நேரத்தில் கிடைக்கப் பெறாதது
  2. தரம் குறைந்த வேளாண் விளைபொருள்கள்
  3. அதிக எண்ணிக்கையிலான இடைத் தரகர்களின் ஆதிக்கம்
  4. அறுவடைக்குப் பின் சார் பிரச்சனைகள்
  5. உற்பத்தியில் பெரும்பகுதி வீட்டு உபயோகத்திற்குப் பயன்படுத்தப்படுவது

உணவு விநியோகம் மற்றும் சில்லரை விற்பனையில் ஏற்படும் பிரச்சனைகள்

வேளாண் இடுபொருட்களின் (விதை, உரம், பூச்சி கொல்லி மற்றும் வேளாண் கூலி) விலை மிக அதிகமாக உள்ளதால் வேளாண் சார்ந்த தொழிலில் குறைந்த அளவே போட்டி நிலவுகிறது. எனவே அதிக விலை கொடுத்து வேளாண் இடுபொருட்களை வாங்கி உற்பத்தி செய்வதென்பது கடினமாகிறது.  இது இந்திய வேளாண் சார்ந்த தொழிலில் பெரும் சவாலாகிறது.

நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் விளை பொருள்கள் ஒரே சீரான தரத்தில் இருப்பதில்லை. மேலும் பெரும்பாலான சமயங்களில் விளை பொருள்கள் பதப்படுத்துதலுக்கு ஏதுவாக இல்லாமல் போய்விடுகிறது. விளைபொருட்களை குவிக்கும் இடம், வாங்குமிடம், சேமிக்கும் இடம் மற்றும் சில்லறை விற்பனை இடங்களில் மிக அதிக அளவிலான இடைத்தரகர்கள் உள்ளனர். இவர்களால் விளைபொருட்களின் விலை பெரும்பகுதி உயர்த்தப்பட்டு நுகர்வோரை சென்றடைகிறது. இதனால் பண்ணை விலைக்கும் சில்லறை விற்பனை நிலையங்களில் விற்கப்படும் விலைக்கும் ஒரு பெரிய இடைவெளி ஏற்படுகிறது.

அறுவடை நுட்பங்கள், சேமிப்பு வசதிகள், பற்றாக்குறையான போக்குவரத்து, தகவல் பரிமாற்றம், பதனிடும் தொழில் நுட்பம் இல்லாமை மற்றும் விளைபொருட்களை கையாளுவதில் குறைவான மற்றும் இயலாமையால் விளைபொருட்களில் மூன்றில் ஒரு பங்கு வீணாகிறது. போதிய தொழில் நுட்பம் இல்லாமையால் விளைநிலத்திலிருந்து நுகர்வோரை சென்றடைவதற்குள் உணவு தானிய உற்பத்தியில் 10 சதவீதமும், பழங்கள் மற்றும் காய்கறி பயிர்களில் 37 சதவீதமும் வீணாவதாக இந்திய அரசால் கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் உணவு தானியம் மற்றும் வணிகப்பயிர்களின் உற்பத்தி பன்மடங்கு அதிகரித்த போதிலும் உற்பத்தியாகும் விளைபொருட்களில் பெரும்பாலானவைகள் வீட்டுத் தேவைக்கே பயன்படுத்தப்படுகிறது.

எஞ்சிய சிறு பகுதி மட்டுமே சந்தைக்குக் கொண்டுவரப்படுகிறது. பழங்கள், காய்கறிகள் மற்றும் மற்ற பயிர்களை அதிக அளவில் உற்பத்தி செய்வதன் மூலமும், நடுத்தர இந்திய குடும்பங்களில் வளர்ந்து வரும் வருமான நிலைகள் அவர்களின் வாங்கும் தேவையை இந்த உற்பத்தி பன் மடங்கு அதிகரித்திருப்பதன் மூலமும் வேளாண் தொழில்களில் ஏற்பட்டுள்ள நல்ல முன்னேற்றத்தைக் காண முடிகிறது. நமது நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் உணவு விநியோகம் மற்றும் சில்லரை விற்பனை நிலையங்கள் முன்னேற்றம் அடையாமல் உள்ளது. மாறாக விவசாயிகள் சீரான விற்பனை வழி முறைகளை கடைபிடிக்காமல், விவசாயிகளிடையே இருந்து பெறப்படும் அதிக அளவிலான ஒரு பகுதி விளை பொருள்கள் அந்தப் பகுதி மக்களாளே பகிர்ந்து கொள்ளப்படுகிறது. ஏனெனில் போக்குவரத்து பற்றாக்குறை காரணத்தினால் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு விளைபொருட்களை எடுத்து சென்று விற்பது மிகவும் கடினம். மேலும் வேளாண் விளைபொருட்கள் பண்ணையிலிருந்து நம் சாப்பாட்டுத் தட்டிற்கு வருவதற்குள் பல்வேறு தடைகள் ஏற்படுகிறது.

எனவே, நவீன விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட விற்பனை வழிமுறைகளை செயல்படுத்துவதன் மூலம் உணவு விநியோகம் மற்றும் சில்லறை விற்பனைகளில் ஏற்படும் வீண் செலவுகள், தடைகள் மற்றும் பிரச்சனைகளைக் கலையலாம்.

ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்- 641 003

3.25
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top