பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / பயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள் / இயற்கை வழி வேளாண்மைப் பொருட்களை சந்தைபடுத்துதல்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இயற்கை வழி வேளாண்மைப் பொருட்களை சந்தைபடுத்துதல்

இயற்கை வழி வேளாண்மைப் பொருட்களை சந்தைபடுத்துதல் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

இந்தியாவில் இயற்கை வழி வேளாண்மை பற்றிய தகவல்கள் மற்றும் புள்ளி விபரங்களை சேகரிப்பது கடினமாக இருப்பதால், உண்மையான விபரங்கள் துள்ளியமாக தெரிவதில்லை. இந்தியாவில் தேயிலை, காய்கறி மற்றும் பழங்கள், அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், பருத்தி மற்றும் வாசனைப் பொருட்கள் (spices) போன்றவை இயற்கை வழி வேளாண்மையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களாகும்.

உள்நாட்டு சந்தையில் காய்கறி மற்றும் பழங்கள், அரிசி, கோதுமை போன்ற பொருட்களுக்கு வெகுவான சந்தை வாய்ப்புகள் உள்ளன. தேயிலை, அரிசி, பருத்தி, மசாலா பொருட்கள், கோதுமை, காய்கறி மற்றும் பழங்கள் போன்ற பொருட்களுக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன. உலகளவில் இயற்கை வழி வேளாண்மை பொருட்களின் சந்தையானது 10-15 சதவீதத்திலிருந்து 25-30 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் இயற்கை வழி வேளாண்மை விவசாயிகளுக்கு பல்வேறு வகையான வணிக வழிமுறைகளை வகுத்து அதிக இலாபம் ஈட்டுவதாக அமையும். ஆனால் இவ்வகையான வேளாண்மையின் சந்தை மற்றும் சந்தைபடுத்துதல் விபரங்கள் பெரும்பாலான விவசாயிகளுக்குத் தெரிவதில்லை.

இயற்கை வழி வேளாண்மை பற்றிய தொழில்நுட்பம், கடனுதவி, சந்தை பற்றியத் தகவல்கள் குறித்த விழிப்புணர்ச்சி மக்களிடையே இல்லாமல் இருப்பதே இதற்கு முக்கிய காரணங்களாகும். ஆகையால் வளர்ச்சி அடையும் நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் இயற்கை வழி வேளாண்மையைப் பின்பற்றி பின்னர் அதனை மேம்படுத்துவதற்கும் சந்தை பற்றிய விபரங்கள் இன்றியமையாதது ஆகிறது. இந்தியாவில், சிறு விவசாயிகள் பல பேர் இன்றும் பண்டைக்கால உழவு முறையையே பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு பின்பற்றும் விவசாயிகளை தொண்டு நிறுவனங்கள் மூலமாக இயற்கை வழி வேளாண்மையை பல நிலைகளில் (உற்பத்தியாளர்கள்/ பயிற்சியாளர்கள்/ சான்றிதழ் வழங்கும் நிறுவனங்கள்/ பதப்படுத்தும் தொழிற்சாலைகள் / ஏற்றுமதியாளர்கள் (அ) வியாபாரிகள்/ வணிகர்கள்) முன்னேற்றுவதற்காக இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் இயற்கை வழி வேளாண்மைப் பொருட்கள் ஹாலந்து, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் மற்றும் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இயற்கை வழி வேளாண்மையின் முக்கியத்துவம்

இந்திய விவசாயிகளுக்கு இயற்கை வழி வேளாண்மை இரண்டு விதத்தில் முக்கியமானவையாகக் கருதப்படுகிறது : உற்பத்தித் திறனை நிலைநிறுத்தவும் அதிகப்படுத்துவதற்கும் உதவுதல். இயற்கை வழி வேளாண்மை மூலம் உற்பத்தி விலை குறைவதற்கான வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படுகிறது. ஏனெனில் வேளாண் இடுபொருட்களின் விலை மனித உழைப்பை (labour) விட அதிகமானதாகும். இதனால் இந்திய விவசாயிகள் பெரும் கடன் சுமைக்கு ஆளாக்கப்பட்டனர். விவசாயத்தில் அதிகளவில் பூச்சி கொல்லி மற்றும் உரங்கள் இடுவதன் மூலம் இந்தியாவில் சிறு மற்றும் குறு விவசாயிகளின் நிலங்கள் அதன் பசுமை திறனிலும், உற்பத்தித் திறனிலும் பேரழிவைச் சந்தித்தது.

விளைபொருட்களின் விலையை அதிகப்படுத்துதல்

  • தற்போது வேளாண் விளை பொருட்களின் விலை குறைந்து வரும் நிலை உருவாகியுள்ளது.
  • இயற்கை வழி வேளாண்மை மூலம் விவசாயிகள் தங்களுடைய பொருட்களுக்கு அதிக விலையை நிர்ணயம் செய்ய முடியும்.
  • இதனால் அவர்களின் வருவாய் மற்றும் வாழ்க்கைத் திறன் முன்னேறும் வாய்ப்புள்ளது.

இயற்கை வழி வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகள்

இயற்கை வழி வேளாண் பொருட்களின் சந்தை திறனைப் பற்றிய விழிப்புணர்வு பெரும் விவசாயிகளிடம் அதிகம் காணப்படுவதால் அவர்கள் இயற்கை விவசாயத்தைப் பின்பற்றி பயன் அடைகின்றனர். ஒரு சில சிறு விவசாயிகளும் இயற்கை வழி வேளாண்மையில் ஈடுபட்டுள்ளனர்.

இயற்கை வழி வேளாண் விளை பொருள்கள்

இந்தியாவில் பண்ணைகளுக்கு இயற்கை வழி வேளாண் பண்ணை என சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள வேளாண் நிலங்களில் இயற்கை வழி வேளாண்மையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் 0.0015 சதவீதமே ஆகும். தேயிலை மற்றும் வாசனைப் பொருட்கள் (spices) மட்டுமே பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இயற்கைவழி வேளாண் பொருட்களுக்கு பெரும்பாலும் மேல் தட்டு வர்க்கத்தினரும், நடுத்தர மக்களுமே நுகர்வோர்களாகத் திகழ்கின்றனர். இவ்விரு வகுப்பினரும் தங்களின் உடல் நலத்திற்கு முன்னுரிமை அளிப்பதால் நச்சுப் பொருள் கலக்காத இயற்கை வழி வேளாண் பொருட்களையே உட்கொள்ள விரும்புகின்றனர். இவ்வகையான இயற்கை முறையில் விளையும் பொருட்களில் காய்கறி, பழங்கள், வாசனைப் பொருட்கள் மற்றும் அரிசி வகைகளையே அதிகம் விரும்பி வாங்குகின்றனர்.

இயற்கை வழி வேளாண் பொருட்களின் வளர்ச்சி விகிதம்

இயற்கை வழி வேளாண் பொருட்களின் தேவை உள்நாட்டு சந்தையில் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அவற்றுள் தேயிலைக்கு 13 சதவீதமும், வாசனைப் பொருட்களுக்கு 14 சதவீதமும், வாழைப் பழத்திற்கு 15 சதவீதமும், அரிசி வகைகளுக்கு 10 சதவீதமும் வணிக வளர்ச்சி விகிதம் இருக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

உள்நாட்டு சந்தையில் இயற்கைவழி வேளாண் பொருட்களுக்கு வணிக வளர்ச்சி ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்கள்

  • உடல் நலப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்ச்சி
  • இயற்கை வழி வேளாண் பொருட்கள் உற்பத்தி பற்றிய விழிப்புணர்ச்சி
  • சந்தைபடுத்துதல் முறைகளைப் பின்பற்றுதல்
  • ஆண்டு முழுவதும் இப்பொருட்களை கிடைக்கப் பெறுதல்

இயற்கை வழி வேளாண் பொருட்களின் தேவைகள்

உள்நாட்டில் இயற்கை வழி வேளாண் பொருட்களின் சந்தை வளர்ச்சி ஏற்றுமதி சந்தையை விட குறைவாகவே உள்ளது. இயற்கை வழி வேளாண் பொருட்களை விநியோகம் செய்வதில் மொத்த வியாபாரிகள், ஏற்றுமதி/ இறக்குமதியாளர்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட் ஆகியவை முக்கிய பங்காற்றுகின்றன.

சூப்பர் மார்க்கெட் மற்றும் உணவு விடுதி போன்றவை இயற்கை வழி வேளாண் பொருட்களுக்கு முக்கிய சந்தை வழித்தடமாக அமைகின்றன. இயற்கை வழி வேளாண் பொருட்களின் வருடாந்திர தேவையைக் கணக்கிடும் பொழுது, வாழைப்பழம் முதலிடத்தையும் கோதுமை இரண்டாம் இடத்திலும் மாம்பழம் மூன்றாம் இடத்திலும் உள்ளது. இவை இலங்கை, சைனா, தாய்லாந்து, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்தியாவிலிருந்து பாசுமதி அரிசி, வாசனைப் பொருட்கள், தேயிலை, காப்பிக் கொட்டை, மாம்பழம், வாழைப்பழம், முந்திரி, ஆகியவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ஏற்றுமதி சந்தை

மேலை நாடுகளில் இயற்கை வழி வேளாண்மைப் பொருட்கள் தேவையை இந்திய உற்பத்தியாளர்களும், ஏற்றுமதியாளர்களும் நன்கு அறிந்துள்ளார்கள். பெரும்பாலும் ஏற்றுமதி நிறுவனங்கள் மூலமே பொருட்கள் (தேயிலை தவிர) மேலை நாடுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. முறையே அமைக்கப்பெற்ற தேயிலைத் தோட்டங்கள் மூலம் தேயிலை நேரடியாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. சிறு விவசாயிகள் அதிக அளவில் இயற்கை வழி வேளாண்மையைப் பின்பற்றி வருகின்றனர். இவற்றில் உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருட்களைத் தொண்டு நிறுவனங்கள் (அல்லது) உழவர் குழுக்கள் மூலமாக ஏற்றுமதி நிறுவனங்களின் உதவியுடன் ஐரோப்பா, (இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ்), அமெரிக்கா (கனடா, அமெரிக்கா) மத்திய கிழக்கு (சவுதி அரேபியா), ஆசியா, (ஜப்பான், சிங்கப்பூர்), ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்கா (தென் ஆப்பிரிக்கா) போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்

இயற்கை வழி வேளாண்மைப் பொருட்கள் சந்தைபடுத்துதலில் உள்ள இடையூறுகள் மற்றும் தீர்வுகள்

விவசாயிகள் தங்களுடையப் பொருட்களின் தரத்திற்கேற்ற விலையை விட அதிகம் எதிர்நோக்குகின்றனர். இதனைத் தவிர்க்க ஏற்றுமதியாளர்கள் உண்மை விலையை நிர்ணயம் செய்து அதனைப் பின்பற்ற வேண்டும். இயற்கை வழி வேளாண் பொருட்களின் இருப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் முறைகளைப் பற்றி அறிய இணையதளத்தில் இயற்கை வழி வேளாண்மைக்கான தனிப்பக்கத்தை உருவாக்கி, அதன் சார்ந்த அனைத்து தகவல்களையும் இடம் பெறச் செய்தல் வேண்டும். இதன் மூலம் விவசாயிகள், உற்பத்தியாளர்கள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்களுக்கும் இயற்கை வழி வேளாண்மை பற்றிய விழிப்புணர்வை விரிவுபடுத்தலாம்.


இயற்கை விவசாயிகள்

ஆதாரம் : வேளாண் மற்றும் ஊரக மேலாண்மைத் துறை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்-641 003.

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top