பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / பயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள் / எலிகளும் அவற்றை கட்டுப்படுத்தும் முறைகளும்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

எலிகளும் அவற்றை கட்டுப்படுத்தும் முறைகளும்

எலிகளும் அவற்றை கட்டுப்படுத்தும் முறைகளும் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

எலிகள் சுமார் மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பே பூமியில் தோன்றி இங்குள்ள சூழ் நிலைகளுக்கு நன்கு பழகிவிட்டன. எலிகள் பல்வேறு சூழ்நிலைகளையும் சாதகமாக்கிக் கொண்டு வாழும் தன்மை கொண்டவை. கிடைக்கும் எந்த உணவையும் உண்ணக் கூடியவை. இனப் பெருக்கத்தில் சிறப்புத்தன்மை பெற்றவை. வளரும் பற்களை குறைக்க வேண்டியிருப்பதால் எலிகள் எப்போதும் பொருட்களை கடித்துக் கொறித்துக் கொண்டேயிருக்கும். எலிகளுக்கு கண் பார்வையை விட தொடு, கேள் மற்றும் மோப்ப உணர்ச்சிகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. எலிகள் கூச்சம் நிறைந்தவை. எதையும் ஆராய்ந்து சோதிக்கும் தன்மை பெற்றவை.

எலிகளினால் உண்டாகும் சேதங்கள்

  • நெல், கோதுமை, மக்காச்சோளம், சிறு தானியங்கள், கரும்பு, நிலக்கடலை, எள், சூரியகாந்தி, தென்னை, பயறு வகைகள், பருத்தி, காய்கறிகள், பழமரங்கள், கிழங்கு வகைப் பயிர்கள் ஆகிய பல பயிர்களையும் தின்று சேதப்படுத்துகிறது
  • தானிய சேமிப்புகளில் சிறுநீர், எச்சம் மற்றும் முடிகள் போன்றவற்றை விட்டுச் செல்வதால் மனிதர்களுக்கு சுகாதார கேடு விளைவிக்கின்றன
  • சேமிப்பு தானியங்களை தின்று அழிக்கின்றன
  • கோழிப்பண்ணைகளில் கோழிகளையும், முட்டைகளையும், மாமிசக் கூடங்களில் மாமிசத்தையும் உண்டு சேதப்படுத்துகின்றன.
  • வசிப்பிடங்களில் தண்ணீர் குழாய்கள், மின்சாரக் கம்பிகள் போன்றவற்றைக் கடித்து சேதப்படுத்துகின்றன
  • தானியங்கள், உணவு தின்பண்டங்கள், காய்கறிகள் போன்றவைகளை தின்று அழிக்கின்றன
  • அரசு அலுவலகங்களிலும், பாடசாலைகளிலும் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை அழித்து சேதப்படுத்துகின்றன

எலிகளின் வகைகள்

நமது நாட்டில் ஐம்பதுக்கும் மேற்பட்ட எலி வகைகள் இருக்கின்றன. தமிழகத்தில் விளைநிலங்கள், வீடுகள் மற்றும் தானிய சேமிப்பு கிடங்குகளில் கரம்பெலி அல்லது வயலெலி, புல்லெலி, வெள்ளெலி, வயல் சுண்டெலி, கல்லெலி, குன்னெலி, பெருச்சாளி, வீட்டெலி, வீட்டு சுண்டெலி, தென்னை எலி போன்ற சுமார் பத்து வகைகள் உள்ளன. இவற்றுள் வயலெலி அல்லது கரம்பெலி, புல்லெலி, வயல் சுண்டெலி ஆகிய மூவகை எலிகள் தான் நெற் பயிரைத் தாக்கி சேதம் விளைவிக்கின்றன.

வயலெலி அல்லது கரம்பெலி

வயலெலி 'பேண்டிகோட்டா' என்ற இனத்தை சேர்ந்தவை. நெல் வயல்களில் வரப்புகளிலேயே அதிகம் வாழும் தன்மை உடையது. அதனால் இதை வரப்பெலி அல்லது வயலெலி என்றும் சொல்வதுண்டு. வயலெலியின் உடம்பு திரண்டு பருமனாக இருக்கும். தலை சிறியது. முகம் பன்றி போன்றது. காதுகள் பெரியவை. வட்ட வடிவமானவை. கண்கள் சிறியன. வாலின் நீளம் உடலின் நீளத்திற்கு ஒப்பாகவோ அல்லது சற்று குறைவாகவோ இருக்கும். முழு வளர்ச்சியடைந்த கரம்பெலி சுமாராக 325 கிராம் எடை இருக்கும். கரம்பெலியின் ஆயுட்காலம் சுமாராக ஓராண்டு இருக்கும்.

புல்லெலி

புல்லெலி கரம்பெலியை விட சிறியது. உடலின் மேல் பகுதி கரும்பழுப்பும் அடிப்பாகம் வெளிர் பழுப்பு நிறமாகவும் இருக்கும். உடலின் மீது முடிகள் அடர்த்தியாக இருக்காது. ஆனால் சிறியதாகவும் மென்மையாகவும் இருக்கும். காதுகள் வட்ட வடிவம் கொண்டவை. வாலின் நீளம் முழு உடலின் நீளத்திற்கு ஒப்பாகவோ அல்லது சற்றுக் குறைவாகவோ இருக்கும். நன்கு வளர்ந்த புல்லெலி 100 கிராம் எடை இருக்கும்.

வயல் சுண்டெலி

வயல் சுண்டெலி பழுப்பு நிறமுடையது. வயிற்றின் அடிப்பகுதி வெள்ளை நிறமாக இருக்கும். இதன் வால் முழு உடம்பின் நீளத்தைக் காட்டிலும் குறைவு. வயல் சுண்டெலியின் எடை பத்து கிராம் இருக்கும். வயல் எலிகளிலேயே இது மிகச் சிறியது. இது நன்றாக நீந்தக் கூடியது. இதன் வளை முப்பது சென்டி மீட்டர் நீளம் இருக்கும்.

வெள் ளெலி

வெள்ளெலியின் உடலின் மேல் பகுதி சற்றே பழுப்பு அல்லது மான் நிறத்திலிருக்கும். வயிற்றின் அடிப்பகுதி வெண்மையாக இருக்கும். முழு உடலின் நீளத்தைவிட வாலின் நீளம் அதிகம். வாலின் நுனியில் சிறு குஞ்சம் போன்ற மயிர் கற்றை இருக்கும். வெள்ளெலியின் கண்கள் மற்ற எலிகளின் கண்களைவிட மிகப் பெரியவை, உருண்டையானவை. கால்கள் வெண்மையாக இருக்கும். நன்கு வளர்ந்த வெள்ளெலி 150 கிராம் எடை இருக்கும். கிராமப்புறங்களில் சிலர் வெள்ளெலியை சாப்பிடுவதும் உண்டு. வெள்ளெலி ஆண்டு முழுவதும் குட்டிபோடும். சினை பருவம் ஒரு மாதம். ஒவ்வொரு முறையும் ஒன்பது குட்டிகள் வரை போடும்

வீட்டெலி

வீட்டெலி கூரைகளில் காணப்படுவதால் கூரை எலி எனவும் சொல்வதுண்டு. இது சாம்பல் அல்லது கருப்பு நிறமாக இருக்கும். முகம் கூர்மையானது. இதன் கண்கள் சிறியவை. காதுகள் பெரியவை. காதுகளின் மீது ஒரு சில முடிகள் இருக்கும். அடி வயிற்றின் மீதுள்ள முடிகள் கருநிறத்திலும், முரடாகவும் இருக்கும். வால் கருப்பாகவும், முழு உடலின் நீளத்திற்கு ஒப்பாகவும் இருக்கும். முழு வளர்ச்சி பெற்ற வீட் டெலி 200 கிராம் எடையுள்ளது. வீட் டெலியின் ஆயுட்காலம் இரண்டு ஆண்டுகள். இதன் வளை சாதாரணமாக சுவர்களில் உள்ள பொந்துகளிலும், சில நேரங்களில் தரையிலும் இருக்கும்.

வீட்டுச் சுண்டெலி

இது பழுப்பு நிறமுடையது. உடலின் மேல் சிறிய மிருதுவான முடிகள் நிறைந்திருக்கும். அடிப்பகுதி வெள்ளை அல்லது சாம்பல் நிறமுடையது. காதுகள் வட்ட வடிவம் கொண்டவை. முழு உடலின் நீளத்தைக் காட்டிலும் வால் அதிக நீளமானது. முழு வளர்ச்சி பெற்ற சுண்டெலி 35 கிராம் எடை இருக்கும்.

பெருச்சாளி

நம் நாட்டில் வாழும் எலிகளிலேயே மிகப்பெரியது பெருச்சாளி. மிகவும் முரட்டுத்தன்மை கொண்டது. இதன் தலை பெரியது. முகம் கூர்மையானது. நீண்ட மீசை கொண்டது. காதுகள் சிறியவை. வட்டமானவை. வெள்ளைப் புருவங்கள் கொண்டது. கண்கள் சிறியவை. உடலின் மீது தடித்த முரடான தோலும், முடிகளும் கொண்டது. இதன் எடை ஒரு கிலோவுக்கும் மேல் இருக்கும். பின்னங்கால்களைவிட முன்னங்கால்கள் சிறியவை.

சாக்கடை எலி

இதற்கு கப்பல் எலி, நார்வே எலி, பழுப்பு எலி என்ற மற்ற பெயர்களும் உண்டு. பெரும்பாலும் துறைமுக நகரங்களில் இவை காணப்படும். இதன் உடல் மிருதுவானது. மேல்புறம் பழுப்பு நிறம் கொண்டது. அகன்ற தட்டையான முகம் கொண்டது. முழு உடலின் நீளத்தைவிட வாலின் நீளம் குறைவானது. காதுகள் சிறியவை. அடர்ந்த முடிகள் கொண்டவை. வளர்ந்த எலி 330 கிராம் எடை இருக்கும். ஆயுள் காலம் ஓராண்டு நீடிக்கும்.

தென்னை மர எலி

இந்த எலியின் உடல் மேற்பகுதி செந்நிறமாகவோ பழுப்பு கலந்த மஞ்சள் நிறமாகவோ இருக்கும். அடி வயிற்றுப்பகுதி வெள்ளையாக இருக்கும். இந்த எலி மர உச்சியில் பறவைகள் போன்று கூடு கட்டி வாழும். தென்னைமரங்களில் குறும்பைகளைக் கடித்து உதிரச் செய்யும். இளநீர் பருவத்தில் கடித்து நீரைக் குடித்து காய்களைப் பாழ்படுத்தி, உதிரச்செய்யும்.

உணர்வுகளும் செயல்பாடுகளும்

மோப்ப உணர்வு

எலிகள் தான் செல்லும் வழியில் உள்ள அனைத்துப் பொருட்கள் மற்றும் அதன் வகையைச் சேர்ந்த மற்ற எலிகளையும், இனவிருத்திக்கு உகந்த எலிகளையும் தன்மோப்ப உணர்வினால் மிக எளிதில் அறிந்து கொள்ளும் தன்மையுடையது. பலவித சுரப்பிகளின் மூலம் சுரக்கப்படும் வேதிப் பொருட்களினால் எளிதில் மற்ற பொருட்களை அறிந்து கொள்கிறது. இந்த வாசனை பொருட்களை இனக் கவர்ச்சி வேதிப் பொருட்கள் அல்லது பிரமோன் (Pheromone) என்று கூறுவர்.

ஒலி உணர்வு

எலிகளும், எலிக் குட்டிகளும் கேட்கக் கூடிய ஒலியையும் மற்றும் அலட்ராசோனிக் ஒலியையும் எழுப்பக் கூடியவையாக உள்ளன. எலிகளினுடைய வெளிப்புறத் தோலினுடைய வெப்ப நிலை வழக்கத்திற்கு மாறாக குறையும் பொழுதும் அல்லது பசியாக இருக்கும் பொழுதும் அவைகளால் ஒலி எழுப்ப முடிவதில்லை . நன்கு வளர்ந்த எலி கேட்கக் கூடிய ஒலி உணர்வுகளுடன் பல விதமான தோற்றங்களையும், சைகைகளையும் வெளிப்படுத்துகின்றன.

வளை தோண்டுதல்

எல்லா வகை வயல் எலிகளும் வளை தோண்டி அதில் வாழும் தன்மையை இயற்கையாக பெற்று இருக்கின்றன. வளை தோண்டும் இடம், விதம் மற்றும் அமைப்பு போன்றவை ஒவ்வொரு வகை எலிக்கும் குறிப்பிடத்தக்கவையாக அமைந்திருக்கும்.

பேண்டிக்கோட்டா வகையினுடைய எலி வளைகள் 44 முதல் 520 செ.மீ. நீளமும் 23 முதல் 115 செ.மீ. ஆழமும், 8 முதல் 15 செ.மீ. வரை விட்டமும் கொண்டிருக்கும். ஒவ்வொரு வளைக்கும் 1 முதல் 4 வரையிலான தரைமட்ட திறவு வாசல்கள் இருக் கும். வளைகள் பெரும் பாலும் 2 முதல் 15 பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு பகுதிக்கும் உள்ள இடைவெளி சராசரியாக 100 செ.மீ. இருக்கும். பெரும்பாலும் இந்த எலிகளின் வளைகள் வீடுகள் மற்றும் தானிய சேமிப்புக் கிடங்குகளின் பின்புறமும், தடுப்புச் சுவர் அருகாமையிலும், வயல்களின் வரப்புகளிலும் காணமுடிகிறது.

தானியப் பதுக்கல்

உணவுப் பொருட்கள் வருடம் முழுவதும் கிடைக்காத சூழ்நிலை பகுதிகளில் பெரும்பாலான எலி வகைகள் தானிய உணவு வகைகளை தான் தோண்டும் வளைகளினுள் பதுக்கி வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி பின்பற்றி வருகின்றன. இந்தியாவில் காணப்படும் எலி வகைகளில் பேண்டிக்கோட்டா எலி வகைகள் தானியங்களை அதிகமாகப் பதுக்கி வைக்கிறது.

எலி கொல்லிகள்

சிங்க் பாஸ்பைடு

சிங்க் பாஸ்பைடு பல ஆண்டுகளாக 47:2:1 (அரிசிபொறி சிங்க் பாஸ்பைடு : 1% தேங்காய் எண்ணெய்) எலி கொல்லியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கருமை நிறதூளாக பூண்டு வாசனையுடன் இருக்கும். வயல் எலிகளைக் கொல்வதற்கு இரண்டு சதவீத விஷ உணவாக உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. விஷ உணவோடு சென்று இரைப்பையை அடைந்த சிங்க் பாஸ்பைடு அங்குள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலத்தோடு வினைபுரிந்து பாஸ்பின் என்ற வாயுவை வெளியிடுகிறது. இந்த வாயு நரம்புகளைத் தாக்கி மரணத்தை உண்டாக்குகிறது. அதனால் எலிகள் இந்த மருந்தை உட்கொண்டவுடன் இறந்து விடுகின்றன.

நச்சுணவுக் கூச்சம்

இயற்கையாகவே எலிகள் நச்சுணவிற்கு கூச்சத்தன்மை கொண்டுள்ளது. விஷ உணவை ஒரே ஒரு தடவை உண்ட அனுபவம், அந்தவகை உணவுகளை மீண்டும் ஒதுக்கிவிடும். இந்த உணர்வு மிகவும் சக்தி வாய்ந்தது மற்றும் பல மாதங்களுக்கு அழியாது. இந்த நச்சு கூச்சத் தன்மை ஒவ்வொரு வகை உணவிற்கும் குறிப்பிட்ட ஒன்றாகும். நம் நாட்டில் பெரும்பாலான எலி வகைகள் அனைத்தும் நாம் அதிமாக பயன்படுத்தும் சிங்க் பாஸ்பைட் மருந்திற்கு நச்சுக் கூச்சத் தன்மையை ஏற்படுத்திக் கொண்டுள்ளன.

நச்சுக் கூச்சத் தன்மையை போக்குவதற்கு 'ப்ரிபைட்டிங்' (Pre-biting) முறையை பின்பற்ற வேண்டும். அதாவது 2, 3 நாட்களுக்கு மருந்தில்லாத உணவை வைத்து எலியை கவர்ந்த பிறகு விஷ மருந்து உணவை வைக்க வேண்டும். இதுவே 'பரிபைட்டிங்' எனப்படும். சில நேரங்களில் விஷ உணவில் பலவகையான தானியங்களை சேர்ப்பதனாலும் நச்சுக் கூச்சத்தைப் போக்க முடியும் அல்லது புதிய உணவில் புதிய விஷ மருந்தை சேர்த்து ப்ரிபைட்டிங் செய்து எலிகளுக்கு இட வேண்டும்.

வார்ஃபரின்

வார்.ஃ.பரின் மருந்து 19:1(அரிசிப்பொறி:வார்ஃ.பரின்) என்ற சதவீத வீரியத்துடன் கலக்கப்பட்டு விஷ உணவாக தயார் செய்து அளித்து எலிகளைக் கொல்ல பயன்படுத்தப்பட்டு வருகிறது. வார்ஃபரின் மருந்து இரத்தத்தை உறைய செய்யாத தன்மை கொண்டிருப்பதால், இரத்த நாளங்களிலிருந்து இரத்த உள்கசிவு ஏற்பட்டு எலிகள் இறக்கின்றன. எலிகளை முற்றிலும் அழிப்பதற்கு, சில நாட்களில் குறைந்த பட்சம் நான்கைந்து தடவையாவது அரிசிப் பொறியில் வார்ஃபரின் மருந்து அளிக்க வேண்டும்.

புரோமோடையலோன்

ஒரு முறை சாப்பிட்டாலே எலிகளை மட்டும் கொல்லும் இரத்தம் உறையாத் தன்மை கொண்ட (ஆண் டிகோயாகுலண்டு ) புதிய வகை எலி மருந்து புரோமோடையலோன் ஆகும். இந்த மருந்து மற்ற உயிரினங்களுக்கு எந்த பாதிப்பும் எலி கொல்லிகள் சிங்க் பாஸ்பைடு

முதுகு ஒடிக்கும் பொறி

இந்தப் பொறியில் உணவை உண்ணவரும் எலி, ஒரு சிறிய கொக்கியை அசைப்பதால், விசையிலிருந்து விடுபடும் விசை மிக்க கம்பி எலியின் கழுத்துப் பகுதியிலோ அல்லது முதுகிலோ வேகமாகத் தாக்கி கொன்று விடும்.

விந்தைப் பொறி

விந்தைப் பொறி மூலமும் எலிகளை வயல்களிலும் வீடுகளிலும் உயிருடன் பிடித்து அழிக்கலாம். இந்தப் பொறி கூண்டில் கவர்ச்சியான உணவை வைத்து இரவில் வயல்களில் வைத்தால் எலிகள் உள்ளே சென்றவுடன் முன் கதவு கீழே அழுந்தப்படுவதால் அகப்பட்டுக் கொள்ளும். வெளியில் வர கதவு திறக்காது. இதன் மூலம் ஒரு நாளில் 5-10 எலிகளை எளிதில் பிடித்து அழித்துவிட முடியும்.

சிறு வரப்புகள் அமைத்தல்

எலிகளைக் கட்டுப்படுத்த வயல்களில் சிறு வரப்புக்களை அதாவது 3/4 அடி அகலமும் 1/2 அடி உயரமும் உள்ள பரப்புகள் அமைக்க வேண்டும். இதனால் எலிகள் வளை தோண்டி பரப்புகளில் வாழ்வதும், பயிர்களை அழிப்பதும் பெரிதும் தடுக்கப்படுகிறது.

எலி வளைகள் வயல்வரப்புகளில் அதிகம் காணப்படும். பொதுவாக நெல் அறுவடை சமயத்தில் எலிகள் குட்டி போட்டுப் பெருகும். இச்சமயம் வரப்புகளை வெட்டினால் எலிகளையும் அவற்றின் குட்டிகளையும் பிடிக்கலாம்.

எலியைக் கொல்லும் விலங்கினங்கள்

மாமிசப்பட்சிகளான ஆந்தை, கழுகு, கோட்டான், பாம்பு, காட்டுப் பூனை, நாய், கீரிப்பிள்ளை, பருந்து முதலியன எலிகளை கொன்று உண்கின்றன. காட்டுப் பூனைகளும், சிறுகாது ஆந்தைகளும் எலிகளை அழிப்பதில் சில சூழல்களில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. ஏனெனில் இவை இரண்டுமே எலிகள் நடமாடும் இரவு நேரங்களில் தான் அதிகமாக நடமாடுகின்றன. புள்ளிக் கோட்டான் வகை, சுண்டெலிகள் சிறியதாக இருப்பதால் மிக அதிகமாக பிடித்து உண்கின்றன.

ஆதாரம் : வேளாண் பூச்சியியல் துறை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் கோயம்புத்தூர் - 641 003

2.78571428571
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top