பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / பயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள் / கரும்பு சாகுபடியில் ஆட்செலவைக் குறைக்கும் வழி முறைகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

கரும்பு சாகுபடியில் ஆட்செலவைக் குறைக்கும் வழி முறைகள்

கரும்பு சாகுபடியில் ஆட்செலவைக் குறைக்கும் வழி முறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

கரும்பு பயிர் வயலில் உற்பத்தியாகி, ஆலையில், மக்கள் உபயோகப்படுத்தும் சர்க்கரையாக செய்யப்படுகின்றது. மக்களுக்கு அதிக வேலை வாய்ப்பை நல்கும் பயிர் கரும்பெனில் மிகையாகாது. இந்தியாவில் 400 இலட்சம் விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் கரும்பு, ஆலைகளில் 3.5 இலட்சம் தொழிலாளர்களால் சர்க்கரையாக மாற்றப்படுகின்றது. வர்த்தகம் உலகமயமாக்கல் திட்டத்தில் வந்த பிறகு உலக நாடுகளிடையே பொருளின் தரம் மற்றும் விலையில் போட்டி ஏற்பட்டுள்ளது. விவசாய விளைபொருட்களுக்கு அதிக போட்டி நிலவிவரும் சூழலில் உலக நாடுகளுடன் நாமும் சேர்ந்து வர்த்தகம் ஆகும்படியான நிலையில் விளை பொருள்களைத் தயாரிக்க வேண்டியுள்ளது. அந்த அடிப்படையில் வளரும் தொழில் நுட்பத்தைக் கொண்டு குறைந்த சாகுபடி செலவில் அதிக இலாபம் ஈட்ட வேண்டிய வழிகளைக் கண்டறிதல் அவசியமாகிறது.

சர்க்கரையின் உற்பத்தி செலவு, கரும்பாலையில் ஏற்படும் செலவு மற்றும் வயலில் கரும்பு உற்பத்தி செய்யப்படும் செலவையும் சேர்த்துக் கணக்கிடப்படுவது. இது சர்க்கரை உற்பத்தி செலவு அதிகரித்ததும், ஆலைகள் நஷ்டத்தில் தள்ளப்பட்டதால் உண்டான கரும்பு விலை நிர்ணயமாகும். ஆனால் கரும்பு சாகுபடி செலவு மாதத்திற்கு மாதம் ஏறுமுகமாகத் தான் இருக்கிறது. இந்த கால கட்டம் கரும்பு விவசாயிகளின் சோதனை காலமெனில் மறுக்க இயலாது. இப்படிப்பட்ட, தொல்லையை பல வழிகளில் அனுபவித்து கரும்பு உற்பத்தி செய்யும் நிலையில் நம்மால் எந்த அளவு இந்தத் தொல்லையைக் குறைக்க முடியும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஆட்செலவைக் குறைக்க அவசியங்கள்

மக்கள் தொகை அதிகரித்து வந்தாலும், உழவுத் தொழிலுக்கு வரும் ஆட்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு தான் வருகிறது. நகரத்தைச் சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து நகரத்திற்குச் செல்லும் டவுன் பஸ் வசதி, பல அடுக்கு மாடி குடியிருப்பு, தொகுப்பு வீடுகள், கட்டுமானப் பணிக்கு செல்லும் ஆட்கள் மற்றும் ஜவுளித் துறையில் டெக்ஸ்டைல் கம்பெனிகளுக்கு செல்லும் ஆட்கள் அதிகரிக்க விவசாய வேலைக்கு வரும் ஆட்கள் குறைந்து விட்டனர். இதையெல்லாம் மீறி நெல் நாற்று நட, நெல் அறுவடை செய்ய மற்றும் கரும்பு வெட்ட வரும் ஆட்களைப் பார்த்தால் 45 வயதிற்கு மேல் உள்ளவர்கள் தான் இருப்பார்கள். இதிலிருந்து இளைஞர்கள் வெளிநாட்டு வேலை மோகத்திலும் மற்ற பல வழிகளிலும் கவரப்பட்டு சென்று விடுகிறார்கள். வெயிலில் வயலில் நின்று வேலை செய்ய யார்தான் முன் வருவார்கள்? கிடைத்த ஆட்களும் வேளாண் தொழிலை சரியாக வயலில் செய்கிறார்களா என்றால், அதுவும் கேள்விக் குறியே. அதனால் தொழிலாளர்கள் கிராக்கியால் ஆட்களின் கூலி உயர மற்ற இடு பொருட்களின் செலவும் சேரும் போது கரும்பு சாகுபடி செலவு உயருகின்றது. அதற்கேற்ப கரும்பு விலை உயருகின்றதா எனில் அதுவும் கேள்விக்குறிதான். அதனால் செலவைக் குறைத்து கிடைக்கும் வருமானத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

கரும்பு சாகுபடியில் ஆட்களைக் குறைக்கும் வழிகள்

 • பொதுவாக கரும்பு செய்முறை செலவுகளைக் கண்ணுற்றால் வயல் தயாரிப்பு, நடவு, இளம் பயிர், வளரும் பயிர் மற்றும் அறுவடை செய்முறை செலவுகள் என வகைப்படுத்தலாம்.
 • வயல் தயாரிப்பில் ஏர் மாடுகள் போய், டிராக்டர் கொண்டு உழும் சட்டிக் கலப்பை, கொக்கிக் கலப்பை மற்றும் ரோட்டோவேட்டர் ஆகியன கொண்டு தயாரிப்பதால் செலவில் சிக்கனம் அவ்வளவாக இல்லையெனினும் கால விரயம் தவிர்க்கப்படுகிறது. உழவு மாடுகள் இல்லாத சூழலில் டிராக்டர் கொண்டே வயல் தயாரிக்கப்படுகின்றது.
 • பார் பிடிக்க ஆட்களைக் கொண்டும், டிராக்டர் கொண்டும் செய்முறைப் படுத்தப்படுகின்றது. ஆட்களும் ஒப்பந்த அடிப்படையில் ஒரு ஏக்கருக்கு ரூ. 1,500 முதல் ரூ.2000 வரை வாங்குகிறார்கள். டிராக்டர் கொண்டு மணி கணக்கில் பார் எடுக்க, ரூ.600 முதல் ரூ.700 வரை செலவாகும்.
 • ஒரு ஏக்கருக்குத் தேவைப்படும் 30,000 இரு பரு கரணைகள் தயார்படுத்த ஆயிரம் கரணைக்கு 25 ரூபாய் வீதம் 750 ரூபாய் செலவு ஆகும். கரணைகளை எடுத்துச் சென்று பாரில் விளம்பி விட்டு சூப்பர் பாஸ்பேட்டை அடியுரமாக இட்டு கரணை நடுவதற்கு 15 ஆட்கள் தேவைப்படுகிறார்கள். அதிலும் கரணை எடுத்துச் செல்லும் தூரத்திற்கேற்ப ஆட்கள் தேவைப்படுவர். இதற்கு 1200 ரூபாய் வரை செலவு ஆகும். எனவே, பார் பிடித்து நடவு செய்யும் வரை 3950 ரூபாய் செலவாகும். இந்த வேலையை பார் எடுத்து கரணை வெட்டி, சூப்பர் பாஸ்பேட்டை சாலிலிட்டு, டிராக்டரால் இயங்கும் கரணையை நட்டு மண் தள்ளும் இயந்திரம் மூலம் செய்யலாம். இது ஒரு நாளைக்கு 22 ஏக்கர் நடும் திறன் கொண்டது. ஏக்கருக்கு 5 ஆட்கள் டிராக்டர் ஓட்டுநர் உட்பட போதும். இதற்கு ஆட்களுக்கு 400 ரூபாயும், இயந்திர வாடகையாக ஏக்கருக்கு 800 ரூபாய் என்றாலும் மொத்தம் 1200 ரூபாய் செலவாகும். இதனால் 2750 ரூபாய் மிச்சமாகும். மேலும் கரணை வெட்டியவுடன் நடுவதால், முளைப்புத் திறன் அதிக அளவில் இருக்கும். பொக்கிடம் குறைவாகத் தோன்றி நிரப்ப ஆகும் செலவு குறையும்.
 • களை எடுக்க ஒருங்கிணைந்த களை நிர்வாகம் சிறந்தது. ஆட்கள் கொண்டு களை எடுத்தால் ஏக்கருக்கு 20 ஆட்கள் வீதம் இரண்டு முறை களை எடுக்க 40 ஆட்களுக்கும் 3200 ரூபாய் செலவாகும். ஆட்கள் கொண்டு களை எடுக்கும் நாட்கள் வரை களைகள் வயல் மண்ணில் இருந்து தண்ணீர் மற்றும் சத்துக்களை உறிஞ்சிக் கொண்டிருக்கும். இவைகள் இளம் கரும்புப் பயிருக்குக் கிட்டாமல் வளர்ச்சியைப் பாதிக்கும். இந்த நிலை, களை முளைப்பதற்கு முன் தெளிக்கப்படும் அட்ரசின் களை கொல்லியால் புல் மற்றும் பிற களைகள் முளைக்கா வண்ணம் செய்து அவைகளால் ஏற்படும் தண்ணீர் மற்றும் சத்துக்கள் இழப்பைத் தவிர்க்கிறது.
 • இதன் மூலம் களைகொல்லிக்கு 240 ரூபாயும், தெளிக்க 200 ரூபாயும் மொத்தம் 440 ரூபாய் தான் செலவு. இதனால் முதல் களை எடுப்பில் 1160 ரூபாய் மிச்சப்படும். உளுந்து அல்லது சணப்பு அல்லது தக்கைப் பூண்டு ஊடு பயிர் செய்வதால் லாசோ எனும் களைக் கொல்லியை ஏக்கருக்கு 1250 மில்லி, அட்ரசின் போல், தெளிக்கலாம்.
 • இதனால் பயறு வகைப் பயிர்களுக்கு எந்தவொரு பாதிப்புமில்லை. கரணை நட்ட 30-ஆம் நாள் களைக் கொத்து கொண்டு ஒரு களை எடுக்க வேண்டும். இதனால் மண் கிளறப்பட்டு காற்றோட்டம் ஏற்படுவதால் வேர் வளர்ச்சி அதிகரிக்கும். இடுகின்ற மேலுரத்தை எடுத்துக் கொண்டு பயிர் அதிக வளர்ச்சி பெறும்.
 • களை கொல்லி தெளிப்பதால் மண் மாசுபடுகின்றது என எண்ணுவது உண்மை. ஆனால் மண்ணில் உள்ள மக்குசத்து மற்றும் நுண்ணுயிரிகளாலும், சூரிய ஒளியாலும் அதிக பாதிப்பின்றி மருந்து, களைகள் மீது செயல்படும். சுமார் 20 இலட்சம் கிலோ மண்ணுள்ள ஒரு ஏக்கரில் நாம் தெளிப்பது ஒரு கிலோ மருந்து என்பது எவ்வளவு பாதிப்பு ஏற்படுத்தும் என எண்ணிப் பாருங்கள்.
 • பார் அணைக்க ஏக்கருக்கு 12லிருந்து 15 ஆண் தொழிலாளர்கள் தேவை. இவர்களுக்கு 1200 ரூபாய் செலவாகும். களை எடுக்க பார் அணைக்க பவர் டில்லரால் இயக்கப்படும் களை எடுத்து பார் அணைப்பான் இயந்திரம் உள்ளது. இது ஒரு நாளைக்கு 22 ஏக்கர் அளவில் களை எடுத்து பார் அணைக்கும். இதற்கு ஆகும் செலவு ஏக்கருக்கு 900 ரூபாய்.
 • வளரும் பயிரில் அதாவது பயிரின் 5 மற்றும் 7வது மாதங்களில் இருமுறை சோகை உரிக்க வேண்டும். இதற்கு தொழிலாளர்கள் ஒப்பந்த முறையில், ஒரு தடவை உரிக்க 1600 ரூபாய் கேட்கிறார்கள். இருமுறை உரிக்க 3000 ரூபாய் செலவாகும். இதற்கு 'சோகை கழிப்பான்' எனும் கைக்கருவி உபயோகித்தால் ஏக்கருக்கு 5 ஆட்கள் போதுமானது. இதனால் 400 ரூபாய் வீதம் இருமுறை உரிக்க 800 ரூபாய் தான் செலவாகும்.
 • விட்டம் கட்ட ஆட்கள் கொண்டு 7வது மாதம் செயல்படுத்தும் போது ஏக்கருக்கு 2000 ரூபாய் செலவு ஆகும். இதற்கு இயந்திரமோ, கருவியோ இதுவரை இல்லை. கரும்பு வெட்டுவதற்கு நமது வயல் பரப்பு மற்றும் சாகுபடிக்கு ஏற்ப இயந்திரம் இதுவரை இல்லை. ஆனால் ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட அஸ்டாப் இயந்திரம் உள்ளது.
 • தற்பொழுதுள்ள நிலவரத்தில் சாதாரணமாக ஒரு ஏக்கர் சாகுபடி செய்ய 31400 ரூபாய் செலவாகிறது. இது இடத்திற்கு இடம் சற்று மாறுபடும். குடும்ப அங்கத்தினர்கள் செய்முறை வேலையை செய்தால் செலவு மேலும் குறையும். கருவிகள் உதவியால் சாகுபடி மேற்கொள்ளப்படும் போது சுமார் 22600 ரூபாய் செலவாகும். அதாவது ஏக்கருக்கு 8800 ரூபாய் சேமிக்கப்படும். சொந்தமாக கருவி வாங்கி தன் வயலுக்கு உபயோகித்து வாடகைக்கும் விட்டு வந்தால் இன்னும் குறைய வாய்ப்பு உண்டு.
 • சரியான முறையில் சரியான காலத்தில் செயல்முறை செய்தால் பயிர் சூழல் அதாவது சுற்றுச் சூழல் (environment) நன்றாக இருக்கும்பட்சத்தில் ஏக்கருக்கு 60 டன்கள் எடுக்கலாம். இதிலிருந்து ஒரு ரூபாய் செலவிற்கு, கருவிகள் இல்லாமல் செய்த செயலுக்கு ஒரு ரூபாய் 92 காசும், கருவிகள் மூலம் சாகுபடி மேற்கொண்டதற்கு 2 ரூபாய் 65 காசும் பலனாகக் கிடைக்கும். கருவிகள் மூலம் காலத்தே சரியாக செய்த செயல்முறையால் கூடுதல் மகசூல் கிடைக்க வழி ஏற்படும். இதன் பலனாக ரூபாய்க்கு இரண்டு ரூபாய் 65 காசுகளுக்கு மேல் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
 • கரும்பு அறுவடையைத் தவிர்த்து மற்ற செலவுகளுக்கு ஏக்கருக்கு சுமார் 14000 ரூபாய் கருவிகளின்றி செய்யும் சாகுபடிக்கும், கருவிகள் கொண்டு செய்யப்படும் செயல்முறைக்கு 7000 ரூபாயும் செலவாகும். ஊடு பயிராக உளுந்து, சோயா மொச்சை போன்ற பயறு வகைப் பயிர்களைப் பயிரிட்டால் குறைந்தபட்சம் ஏக்கருக்கு 150 கிலோ விளைச்சல் கிடைக்கும். இதன் மதிப்பு 40 ரூபாய் / கிலோ என்றாலும் மொத்தம் 6000 ரூபாய் கிடைக்கும். மேலும் பயிர் கடனாக கரும்பு அலுவலகம் மூலமும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமும் கரும்பு பயிர் கடன் பெற்று செய்முறை செய்யலாம்.

ஆதாரம் : வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்

2.92857142857
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top