பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / பயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள் / காய்கறி பயிர்களில் நுண்ணூட்ட மேலாண்மை
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

காய்கறி பயிர்களில் நுண்ணூட்ட மேலாண்மை

காய்கறி பயிர்களில் நுண்ணூட்ட மேலாண்மை பற்றி இங்கே காண்போம்.

நோக்கம்

தாவரங்களில் வினையியல் பணிகள் சரிவர நடைபெறுவதற்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் ஊட்டச்சத்துகள், அத்தியாவசியமான ஊட்டச்சத்துகள் என்று அழைக்கப்படுகின்றன. அவை சரிவரக் கிடைக்காவிட்டால், தாவரங்களின் வாழ்க்கைச் சுழற்சி (தாவர வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கம்) தடைபடுகிறது. அந்த வகையில், 17 ஊட்டச்சத்துகள் அத்தியாவசியமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன. அவை கரிமம், நீரியம், உயிரியம், தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, சுண்ணாம்பு, மெக்னீசியம், கந்தகம், இரும்பு, மாங்கனீஸ், துத்தநாகம், தாமிரம், வெண்காரம், குளோரின், மாலிப்டினம் மற்றும் நிக்கல் ஆகியவைகளாகும்.

பயிர்களின் ஊட்டச்சத்து தேவை முழுமையாக நிறைவடையாத நேரங்களில் ஊட்டச்சத்து குறைபாடுகள் தோன்றுகின்றன. இதனால், பயிர் வளர்ச்சி குறைவு, பச்சை சோகை நிறம் மாற்றம், இலை காய்தல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படுகின்றன. தாவரங்களில் ஊட்டச்சத்துக்கள் நகர்ந்து செல்லும் திறனைப் பொறுத்து, தாவரத்தின் இளம் பாகங்கள் அல்லது முதிர்ந்த பாகங்களில் அறிகுறிகள் தென்படுகின்றன.

தோட்டக்கலைப் பயிர்களில் உற்பத்தித் திறனை அதிகப்படுத்தி, அவற்றின் தரத்தை மேம்படுத்த முறையான ஊட்டச்சத்து மேலாண்மை அவசியமாகிறது. ஊட்டச்சத்துக்களை பேரூட்டச் சத்துக்கள், நுண்ணூட்டச் சத்துக்கள் என இரு பிரிவுகளாக வகைப்படுத்தலாம். இதில், பேரூட்டச் சத்துக்களான தழை, மணி, சாம்பல் சத்துக்களை ரசாயன உரங்களான யூரியா, டி.ஏ.பி. சூப்பர் பாஸ்பேட், மியூரியேட் ஆப் பொட்டாஷ் மற்றும் கலப்பு உரங்கள் அளிப்பதன் மூலமாக பயிருக்கு சத்துக்கள் கிடைக்கின்றன. அப்படியிருந்தும் கூட, நம் நாட்டின் பெரும்பாலான சாகுபடி நிலங்கள் இதில் ஏதேனும் ஒன்று அல்லது அனைத்து சத்துக்களின் பற்றாக்குறையுடனே காணப்படுகின்றன. நுண்ணூட்டச் சத்துகளான துத்தநாகம், இரும்பு, போரான் சத்துக்களும் பெரும்பாலான நிலங்களில் பற்றாக்குறையாகவே உள்ளது. இம்மாதிரியான நிலங்களில், 50 சதவீதத்திற்கும் அதிகமாக மகசூல் இழப்பு ஏற்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, காய்கறிப் பயிர் சாகுபடியில் இதன் தாக்கம் அதிகமாகவே உணரப்படுகிறது. மேலும், அதிகப்படியான பேரூட்ட உரங்களின் பயன்பாடு, பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு ஆகியவற்றால் உற்பத்தி செலவும் அதிகமாகி விடுகிறது. முறையான உர மேலாண்மையைக் கையாள்வதன் மூலமாக, குறிப்பாக நுண்ணூட்டச் சத்துக்களை சரியான தருணத்தில் சரியான அளவில் அளிப்பதன் மூலமாக காய்கறிப் பயிர்களில் விளைச்சல் மற்றும் தரம் அதிகரிப்பதோடு மட்டுமின்றி செடிகளில் பூச்சி நோய்களுக்கு எதிர்ப்புத்திறனும் அதிகரித்து விடுகிறது.

நுண் சத்துக்களின் செயல்பாடு - முக்கியத்துவம்

இந்திய விளைநிலங்களில் விளையக்கூடிய பயிர்களில் சுமார் 40 முதல் 60 சதவீதம் வரையிலான பயிர்கள் ஒன்று அல்லது மேற்பட்ட நுண்சத்து பற்றாக்குறையினால் பாதிப்புக்குள்ளாகின்றன. எனவே, காய்கறி பயிர்களில் நுண்சத்து மேலாண்மை என்பது அதன் மகசூல் மற்றும் தரத்தை அதிகப்படுத்த அவசியமான ஒன்றாகிறது. பொதுவாக, காய்கறிப் பயிர்களுக்கு துத்தநாகம், இரும்பு மற்றும் பேரான் நுண்ணூட்டங்களின் தேவை அத்தியாவசியமாகிறது. காய்கறிப் பயிருக்குத் தேவையான பேரூட்டச் சத்துக்களை அதன் பரிந்துரைப்படி அளிக்கும் விவசாயிகள் நுண்ணூட்டச் சத்துக்களை முறையாக அளிப்பதில்லை. இதற்கு போதிய விழிப்புணர்வின்மையே காரணம். சில வகையான நுண்ணூட்டங்களையும், அவற்றின் முக்கியத்துவங்கள் பற்றியும் தெரிந்து கொள்வது அவசியம்.

துத்தநாகம்

துத்தநாகம் பயிரின் வளர்ச்சியுடன் நேரடித் தொடர்புடையதாதலால், இது அத்தியாவசியமான நுண்சத்தாகிறது. துத்தநாகச் சத்து பற்றாக்குறை ஏற்பட்டால் பயிர் வளர்ச்சி குன்றி காணப்படும். மேலும், இலைகளில் இலை நரம்புகளுக்கு இடையேயான பகுதி வெளிர் நிறத்தில் தோற்றமளிக்கும். இதை நிவர்த்தி செய்ய துத்தநாகம் அடங்கிய நுண்ணூட்ட உரத்தை நிலத்திலோ, இலை வழியாகவோ அளிக்கலாம். மணிச்சத்து தரவல்ல சூப்பர் பாஸ்பேட், டி.ஏ.பி உரங்களை அதிக அளவில் நிலத்தில் இடுவதனால், அவை மண்ணில் உள்ள துத்தநாகத்துடன் வினைபுரிந்து அதை பயிருக்கு கிடைக்காமல் செய்துவிடும். எனவே, இந்த உரங்களை இடும்போது பரிந்துரைக்கப்படும் அளவில் மட்டும் இட வேண்டும்.

காய்கறி நுண்ணூட்டக் கலவை

காய்கறிப் பயிர்களுக்கு ஏற்படும் நுண்ணூட்டக் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய, காய்கறிக்களுக்கென்று பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் காய்கறி நுண்ணூட்டக் கலவையை பயன்படுத்தலாம். இது துத்தநாகம், இரும்பு, போரான், மாங்கனீசு மற்றும் தாமிரம் ஆகிய நுண்சத்துக்களை உள்ளடக்கிய கலவையாகும். நுண்ணூட்டக் கலவையை நிலத்தில் இடுவதை விட, இலைவழியாகத் தெளிப்பதன் மூலம் நுண்சத்துக்கள் பயிருக்கு உடனடியாக கிடைக்க வழிவகை செய்யலாம். நிலத்தில் இடும்போது, அதிக அளவில் நுண்ணூட்ட உரம் தேவைப்படும். இதற்கு மாறாக இலைவழியாக தெளிக்கும்போது குறைந்த அளவே போதுமானது.

மேலும், நிலத்தில் இடும்போது பயிர் எடுத்துக் கொள்ளக்கூடிய நுண்சத்தின் அளவு மிகக் குறைவாகவே இருக்கும். பெரும்பாலான சத்துக்கள் நீரில் கரைந்து பூமிக்குள்ளாகவும் மண் அரிமானம் மூலமாகவும் விரயமாகிவிடும். ஆனால், இலை வழியாகத் தெளிக்கும்போது குறைந்த அளவு நுண்ணூட்டமே பயன்படுத்தினாலும், அதன் பெரும்பகுதி பயிருக்கு கிடைத்துவிடும்.

தெளிக்கும் தருணம்

காய்கறிப் பயிரின் வயதைப் பொருத்து தெளிக்கும் தருணம் மாறுபடும். 50 நாள்களுக்கு குறைவான ஆயுள் உள்ள பயிர்களுக்கு விதைத்த 10 - 15 நாள்களுக்குள் ஒருமுறை மட்டும் தெளித்தால் போதுமானது. 50 நாள்களுக்கு மேல் ஆயுள் உள்ள பயிர்களுக்கு மாதம் ஒருமுறை வீதம் அறுவடை வரை தெளிக்கலாம்.

பரிந்துரைக்கப்படும் அளவு

தக்காளி, வெங்காயம், மரவள்ளி 1 லிட்டர் நீருக்கு 5 கிராம், கத்தரி, மிளகாய் 3 கிராம், வெண்டை, அவரை, தட்டைப்பயறு 3 கிராம், பாகல், புடல், பீர்க்கு, சுரை, பரங்கி, பூசணி 1 கிராம் தெளிக்க வேண்டும்.

தெளி திரவம் தயாரிப்பு

1 ஏக்கருக்குத் தேவையான தெளி திரவம் தயார் செய்ய 200 லிட்டர் நீருடன், பரிந்துரைக்கப்பட்ட அளவு காய்கறி நுண்ணூட்டக் கலவையை கரைத்து, அதில் 20 எலுமிச்சம் பழங்களைப் பிழிந்துவிட வேண்டும். பின்னர், இக்கரைசலில் தலை குளிப்பதற்கு பயன்படுத்தும் ஷாம்பூ 30 மில்லி ஊற்றி நன்கு கலந்து பிறகு தெளிக்கலாம். பயிருக்கு தெளிக்கும்போது காலை அல்லது மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும். தெளிப்பு செய்து 24 மணி நேரத்திற்கு மழைப்பொழிவு இல்லாமல் இருப்பது நல்லது. காய்கறி நுண்ணூட்டக் கலவையின் சிறந்த செயல்திறனுக்கு, இதனுடன் எவ்விதமான பூச்சிக்கொல்லியோ, பூஞ்சாணக்கொல்லியோ கலக்காமல் தனியே பயன்படுத்த வேண்டும்.

ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை

3.31578947368
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top