பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

நிலம் தயாரித்தல்

நிலம் தயாரித்தல் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

மேட்டு நாற்றங்கால்

 • நடவு வயலுக்கு அருகில் உள்ள பகுதியில் பாசன நீர் மூலத்திற்கு ஏற்ப பாத்தியின் நீளம் நிர்ணயிக்கப்படுகிறது. ஊடு சாகுபடி வேலைகளுக்காக அகலம் 1.5 மீ. உள்ளவாறும், மண் சரிமானத்திற்கு ஏற்ப நீளமும் கொண்ட பாத்திகள் அமைக்க வேண்டும்.
 • பாத்தியின் நான்கு புறங்களிலும் 15 செ.மீ. அகலம், ஆழமும் உள்ளவாறு மண்ணை தோண்டி எடுத்து நாற்றங்காலின் மேடைப்பகுதியில் இட்டு சமப்படுத்த வேண்டும்.
 • நீர் வெளியேறாதவாறு மேடையின் உயரத்தைவிட சற்று கூடுதலாக கரையின் உயரம் அமைக்கப்பட வேண்டும். வாய்க்காலில் இருந்து வரும் பாசன நீர் மேடைப்பாத்தியை அரிக்காதவாறு ஓரத்தில் உள்ள 15 செ.மீ. பள்ளப்பகுதியில் நீர்ப்பாசனம் மேற்கொள்ள வேண்டும்.

நன்மைகள்

 • காய்கறிப் பயிர்களுக்கு ஏற்றது அதிகப்படியான நீர் பள்ளப்பகுதிக்கு வடிந்து விடுவதால் அழுகல் நோய் தவிர்க்கப்படுகின்றன. தொடர்ந்து நாற்றுக்கு தேவையான ஈரப்பதம் வழங்கப்படுவதால் வாடல் நோய் தவிர்க்கப்படுகிறது. விதையளவு சிறியதாக உள்ள பயிர்களுக்கு நாற்றுக்கள் வீணாதலை குறைக்க இம்முறை பின்பற்றப்படுகிறது.

பார்சால்

 • மண்ணின் சரிமானம் மற்றும் நீர் மூலத்தின் தன்மைக்கு ஏற்ப பாத்தியின் நீள அகலம் நிர்ணயிக்கப்பட்டு வரிசை நடவு பயிர்களுக்கு இம்முறை பின்பற்றப்படுகிறது. நடவு மேற்கொள்ள வேண்டிய பயிர்களுக்கு சிபாரிசு செய்யப்படும் இடைவெளியில் பார்கள் மனித சக்தி கொண்டோ அல்லது இயந்திரபார்கலப்பை கொண்டோ அமைக்கப்படுகின்றன. 15செ.மீ. ஆழத்தில் மண் தோண்டப்பட்டு இருபுறமும் அணைக்கப்படுகின்றது. மேடான பகுதி 'பார்' என்றும், பள்ளப்பகுதி 'சால்' என்றும் அழைக்கப்படுகின்றது. 'பார்' பயிர் விதைகள் அல்லது நாற்றுக்களை நடவு செய்வதற்கும், சால் பகுதி பாசனம் மேற்கொள்ளவும் பயன்படுத்தப்படுகிறது.

நன்மைகள்

விதை மற்றும் நாற்றுக்கள் பார்களின் மேல் நடவு செய்யப்படுவதால், அதிகபடியான ஈரப்பதத்திலிருந்து பயிர்கள் பாதுகாக்கப்படுகின்றன. பாசனம் மேற்கொள்வதும், அதிகப்படியான நீர் வெளியேற்றப்படுவதும் எளிது. ஊடுசாகுபடி வேலைகளான களையெடுத்தல், உரமிடுதல் மற்றும் நீர்ப்பாசனம் ஆகியவற்றை மேற்கொள்வது எளிது. அனைத்து பயிர்களுக்கும் ஏற்றது.

பாத்தி

விதை மற்றும் நாற்றுக்களை நடவு செய்ய, நடவு வயலில் அமைக்கப்படும் சமப்படுத்தப்பட்ட பிரிவுகளுக்கு பாத்தி என்று பெயர். இது நடவு மேற்கொள்ளப்படும் பயிர் மற்றும் பாசன மூலத்திற்கு ஏற்ப 4 முதல் 5 மீ நீளத்திலும், 1.5 முதல் 2மீ அகலத்திலும் அமைக்கப்படுகின்றன. பாத்தியமைப்பு ராகி, நிலக்கடலை, கீரை வகைகள் மற்றும் தீவனப்பயிர் சாகுபடிக்கு ஏற்றது. பரவல் பாசன முறை பின்பற்றப்படுவதால் நீர் தேவை அதிகம் ஆகும்.

நாற்றங்கால் வளர்ப்பு ஊடகம் தயாரித்தல்

நோக்கம் : வளமான நாற்றங்கால் வளர்ப்பு ஊடகம் தயார் செய்தல்

தேவையான பொருட்கள் : - தொழு உரம் - மணல் - செம்மண்

செய்முறை : தொழுஉரம், மணல், செம்மண் ஆகிய மூன்றையும் கலந்து நாற்றங்கால் வளர்ப்பு ஊடகமாக பயன்படுத்தப்படுகிறது.

நன்மைகள்

 • நீரைத் தக்க வைத்துக் கொள்ளும் திறன் அதிகம் அதிகப்படியான நீர் வடிந்து விடும்
 • தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்கும்.
 • பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறைவு.

சாகுபடிக் கருவிகளை அடையாளம் காணுதல்

நாட்டுக்கலப்பை (Country Plough)

 • இதில் மரத்தால் ஆன வளைவுத் துண்டும், அத்துடன் இணைக்கத்தக்க கைப்பிடித்துண்டும் கொண்டது.
 • வளைவுத் துண்டின் மையத்தில் துளையிடப்பட்டு நீளமான மரச்சட்டம் இணைக்கப்பட்டிருக்கும்.
 • இதில் எருதுகள் பூட்டுவதற்கு நுகத்தடி மற்றும் குறுக்குச் சட்டமும் இருக்கும்.
 • வளைவுத் துண்டின் கீழ்த்தண்டில், இரும்பாலான 'கொழு' பொருத்தப்பட்டிருக்கும்.
 • இது உழவின் போது மண்ணைக் கிழித்து 'V' வடிவ பள்ளத்தை (சால்) ஏற்படுத்தும்.
 • நுகத்தடியை முன்னும் பின்னும் நகர்த்தி, ஆழமான அல்லது மேம்போக்கான உழவைப்பெறலாம்.

பயன்கள்

 • ஆரம்ப சாகுபடிப் பணிகள் செய்ய பயன்படுகிறது நிலத்திலிடப்பட்ட எரு, உரங்கள் மண்ணுடன் கலக்க உதவுகிறது.
 • விதைகளை நிலத்தில் விதைத்து மூடிவிட பயன்படுகிறது.
 • வரிசை விதைப்பு செய்யப்பட்ட பயிர்களிடையே ஊடு சாகுபடிப் பணிகள் செய்வதற்கும், களைகளை அகற்றுவதற்கும் உதவுகிறது.
 • சால் விதைப்பு செய்வதற்கும், சால்கள், பார்கள் அமைப்பதற்கும் பயன்படுகிறது.
 • நிலக்கடலை மற்றும் கிழங்குவகைப் பயிர்களை அறுவடை செய்வதற்கு பயன்படுகிறது.
 • ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்வது எளிது.
 • பலதரப்பட்ட நிலங்களுக்கும், பல்வேறு ஈரப்பதம் உள்ள மண் வகைகளிலும் நாட்டுக் கலப்பையைப் பயன்படுத்தலாம்.

இரும்பு இறக்கைக் கலப்பை (Mould Board Plough)

 • இக்கலப்பையின் பெரும்பாலான பாகங்கள் வார்ப்பு இரும்பினால் ஆனவை. இரும்பு இறக்கைக் கலப்பையில் நீளமான சட்டத்துடன் அனைத்து பாகங்களும் இணைக்கப்பட்டிருக்கும்.
 • சட்டத்தின் மேல் பகுதியில் கைப்பிடியும், கீழ்ப்பகுதியில் இரும்பு இறக்கையும் இணைக்கப்பட்டிருக்கும்.
 • அந்த இரும்பு இறக்கையின் முன்பகுதி குறுகியும், பின்பகுதி விரிவடைந்தும் வெளிப்புறமாக வளைந்தும் காணப்படும்.
 • இறக்கையின் முன்பகுதியுடன் நிலபாகமும், இரும்பு இறக்கையின் கீழ்ப்பகுதியுடன் 'கொழு'வும் இணைக்கப்பட்டிருக்கும்.
 • சட்டத்தின் மையப் பகுதியில் இரும்பினாலான கத்தி இணைக்கப்பட்டிருக்கும். சட்டத்தின் மறுமுனையின் கீழ்பகுதியில் இரும்பினாலான சக்கரமும், சட்டத்தின் முன் பகுதியுடன் மாற்றுத்தாள் இணைக்கப்பட்டிருக்கும்.
 • உழவின் ஆழத்தை மாற்றி அமைப்பதற்கு இது பயன்படுகிறது. இரும்பு இறக்கை கலப்பையிலுள்ள சட்டத்துடன் ஏர்க்கால் இணைக்கப்பட்டு ஏர்க்காலின் மறுமுனை நுகத்தடியுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
 • நுகத்தடியுடன் இரண்டு மாடுகள் இணைக்கப்பட்டு இரும்பு இறக்கைக் கலப்பை இயக்கப்படுகிறது.
 • சட்டத்துடன் உள்ள சக்கரம் கலப்பை எளிதில் முன்னோக்கிச் செல்ல உதவும். சட்டத்தின் மையப்பகுதியிலுள்ள கத்தி ஆழமாக உள்நோக்கிச் சென்று மண்ணிலுள்ள முன்பயிர்களின் வேர்களையும், களைச்செடிகளின் வேர்களையும் வெட்டிக்கொண்டே செல்கிறது. கொழு நிலத்தினுள் சென்று மண்ணைக் கீறிவிடுகிறது.
 • இம்மண்ணை நிலபாகம் இறக்கை பகுதியை நோக்கி தள்ளுகிறது. அவ்வாறு தள்ளப்பட்ட மண் புரட்டப்பட்டு இறக்கையின் ஒரு பக்கமாக தள்ளப்படுகிறது.
 • இக்கலப்பையால் நிலத்தை உழும்போது இதன் உழவு 'U' வடிவத்தில் அமையும்.

பயன்கள்

 • இக்கலப்பையின் பாகங்கள் இரும்பினால் தயாரிக்கப்பட்டிருப்பதால் இதன் பாகங்கள் எளிதில் தேயாது.
 • உழவுத்தரிசு ஏற்படுவது தடுக்கப்படுகின்றது.
 • ஆழமாக உழவு செய்யப் பயன்படுகிறது. அதிகமான களைகள் உள்ள நிலத்தை உழுவதற்குப் பயன்படுகிறது.
 • நாட்டுக்கலப்பையால் உழமுடியாத காய்ந்த கெட்டியான நிலங்களை உழுதவற்கு உதவுகிறது.

பார்க்கலப்பை (Ridge plough)

 • பார்க் கலப்பையில் இரும்பினாலான இரு இறக்கைகள் உள்ளன. இந்த இரும்பு இறக்கைகள் மற்றும் கைப்பிடி ஏர்க்காலுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
 • இரும்பு இறக்கையின் முன்பகுதி குறுகியும், பின்பகுதி விரிவடைந்தும் இருக்கும்.
 • ஏர்க்காலை நுகத்தடியுடன் இணைத்து மாடுகளின் உதவியால் பார்க் கலப்பை இயக்கப்படுகிறது.
 • உழுது பண்படுத்தப்பட்ட நிலத்தினைச் சுற்றி வரப்புகள் அமைத்த பின்பு நிலத்தில் பார் அமைக்க பார்க் கலப்பை பயன்படுகின்றது.
 • இவற்றை இயக்கும் போது இதிலுள்ள 'கொழு' மண்ணைக் கீறிக்கொண்டு செல்லும் இறக்கைகள் கலப்பையின் இரு பக்கங்களிலும் மண்ணை தள்ளிக் கொண்டே செல்லும்.
 • அதனால் கொழு சென்ற பக்கங்களில் சால் அமையும். இறக்கையால் தள்ளப்பட்ட மண் பார்களாக அமையும்.

பயன்கள்

 1. பார்க் கலப்பையைப் பயன்படுத்தி ஒரு வேலையாள் ஒரு நாளில் ஒரு எக்டர் பரப்பளவுள்ள நிலத்தில் பார்கள் அமைக்கலாம். கரும்பு, பருத்தி, மக்காச்சோளம், உருளைக்கிழங்கு போன்ற வரிசையாக நடப்படும்.
 2. பயிர்களை சால்பாசன முறையில் பயிரிடுவதற்கு தேவையான பார் அமைப்பதற்குப் பார்க்கலப்பை பயன்படுகிறது.

வரப்புக்கட்டி (Bund former)

 • வரப்புக் கட்டியில் இரும்பினாலான இரண்டு இறக்கைகள் எதிரெதிராக அமைந்திருக்கும்.
 • இறக்கைகளுக்கு இடையிலுள்ள இடைவெளி முன்பகுதியில் அதிகமாகவும், பின் பகுதியில் குறைவாகவும் இருக்கும். இந்த இறக்கைகள் ஏர்க்காலுடன் இணைக்கப்பட்டிருக்கும். ஏர்க்காலுடன் கைப்பிடி இணைந்திருக்கும்.
 • ஏர்க்காலினை நுகத்தடியுடன் இணைத்து இரண்டு மாடுகளின் உதவியால் வரப்புக்கட்டி இயக்கப்படுகிறது.
 • வரப்புக்கட்டி செல்லும் பாதையில் நிலத்திலுள்ள மிருதுவான மண்ணை, அகன்ற முன் இறக்கைகள் ஒன்றாகக் குவித்துச் செல்லும்.
 • இவ்வாறு குவிக்கப்பட்ட மண்ணை குறுகிய பின் இறக்கைகள் நன்றாக அழுத்திக் கொண்டே செல்வதால், நேரான கெட்டியான வரப்புகள் அமைகின்றன.
 • இக்கருவியில் உள்ள திருகு அமைப்புகள் இறக்கைகளுக்கு இடையிலுள்ள இடைவெளியினை மாற்றியமைக்க உதவுகின்றன.
 • இதனால் தேவையான அளவுகளில் அகலமான வரப்புகளை அமைக்கலாம். இரண்டு வரப்புகளை அடுத்தடுத்து அமைப்பதன் மூலம் சிறிய வாய்க்கால்களை அமைக்கலாம்.

ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை

Filed under:
2.84615384615
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top