பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

நீர் நிர்வாகம்

நீர் நிர்வாகம் (Water Management) பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

நீர்ப் பாசனம்

தாவரங்கள் தங்களது வளர்ச்சிக்கும், உற்பத்திக்கும் தேவையான நீரினை மழையின் மூலமாகப் பெறுகின்றன. மழையினால் பெறப்படும் நீர் மட்டுமே தாவர வளர்ச்சிக்குப் போதுமானதாக இருப்பதில்லை. பயிருக்கு நீர் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில், செயற்கை முறையில் நீரினைப் பாய்ச்சுவதற்கு நீர்ப்பாசனம் என்று பெயர்.

நீரின் முக்கியத்துவம்

 1. தாவரங்களில் நடைபெறும் பல்வேறு உடற்செயலியல் நிகழ்ச்சிகளுக்கு நீர் தேவைப்படுகிறது.
 2. தாவரத்தின் ஒரு பாகத்திலுள்ள சத்துப்பொருட்களையும், மற்றும் வேதிப்பொருட்களையும், தாவரத்தின் பிற பாகங்களுக்கு எடுத்துச் செல்ல நீர் தேவைப்படுகிறது.
 3. தாவரத்தில் நடைபெறும் ஒளிச் சேர்க்கைக்கு நீர் தேவைப்படுகிறது.
 4. திட நிலையில் மண்ணிலுள்ள சத்துப் பொருட்களை நீரானது திரவ நிலைக்கு மாற்றி தாவரங்களுக்குக் கொடுக்கிறது.
 5. தாவரத்தில் 90 சதத்திற்கு மேல்நீர் காணப்படுகிறது.
 6. மண்ணின் வெப்பநிலையைக் குறைக்கவும், நீராவிப் போக்கின் மூலம் தாவரங்களின் உடல் வெப்பநிலையைக் குறைக்கவும் நீர் தேவைப்படுகிறது.

நீர் ஆதாரங்கள் (Water Sources)

நீர் கிடைக்கும் இடத்தினைப் பொறுத்து அவற்றை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

நிலத்தின் மேற்பரப்பில் தேக்கி வைக்கப்படும் நீர் (Surface Water)

இதில் மழை மற்றும் பணித்துளிகள் மூலம் பெறப்படும் நீர் அடங்கும். மேலும் ஆறுகள், ஏரிகள், குளங்கள், அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீரும் இவ்வகையில் பெறப்படும் நீராகும்.

நிலத்தின் அடியில் தேக்கி வைக்கப்படும் நீர் (Subsurface Water)

இதில் மழை மூலம் பெறப்படும் நீர்நிலத்தின் உள்ளே சென்று நிலத்தடி நீராக சேமிக்கப்படுகிறது. இதனை திறந்த வெளிக் கிணறுகள் (Open Wels) மற்றும் ஆழ்குழாய் கிணறுகள் ஆகியவற்றிலிருந்து எடுத்து நீர்ப்பாசனத்திற்குப் பயன்படுத்தலாம்.

தமிழ்நாட்டின் நீர் ஆதாரங்கள்

ஆறுகள், ஏரிகள், குளங்கள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் போன்றவற்றில் இருந்து பயிருக்கு தேவையான பாசன நீர் பெறப்படுவதால் இவற்றை நீர்ப்பாசன மூலங்கள் எனலாம்.

தமிழ்நாட்டின் மொத்த நிகர பாசனப்பரப்பு சுமார் 29 லட்சம் எக்டர் ஆகும்.

நீர் ஆதாரங்கள் பாசனப்பரப்பு (சதம்)

 • கிணற்றுப்பாசனம் 55
 • கால்வாய் 26
 • ஏரிப்பாசனம் 18
 • இதர நீர் ஆதாரங்கள் 1

தமிழகத்தின் வங்கக் கடலோர நீர்ப்பிடிப்பு பகுதிகள் வடகிழக்குப் பருவ மழையினால் பயன்பெறுகின்றன. மழைநீர் பெரும்பாலும் ஏரிகள் மூலம் சேமிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இருந்தபோதிலும் தமிழகத்தின் பெரும்பாலான கால்வாய்கள் அண்டை மாநிலங்களாகிய கேரளா மற்றும் கர்நாடகாவையே நீர் பிடிப்பிற்குப் பெரிதும் நம்பியுள்ளன. இந்திய ஒருமைப்பாடு என்பது நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தில் தான் உறுதிப்படுத்தப்படுகிறது. விவசாயம் செய்வதற்கும், குடிநீருக்கும், அண்டை மாநில நீர்வளங்களை நம்பியிருப்பதும், அண்டை மாநிலங்கள் உணவுத் தேவைகளுக்காகவும், தொழில்களுக்கான மூலப்பொருட்கள், சந்தைப்படுத்துதல், விவசாயம் சார்ந்த பிற தேவைகளுக்காகவும் ஒன்றோடொன்று சார்ந்திருக்கும். இனம், மொழி, கலாச்சாரம் தாண்டி இந்திய ஒருமைப்பாடு செவ்வனே விளங்கச்செய்வது விவசாயமே.

தமிழகத்தின் முக்கிய பாசனத் திட்டங்கள்

 • மேட்டூர் அணை
 • பவானி சாகர் அணை
 • அமராவதி அணை
 • பெரியார் வைகை அணை
 • பாபநாசம் தாமிரபரணி அணை
 • மணிமுத்தாறு பிரதான கால்வாய்
 • பேச்சிப் பாறை மற்றும்
 • பெரும்பாணி அணை
 • கிருஷ்ணகிரி அணை
 • சாத்தனூர் அணை
 • பரம்பிக்குளம் ஆழியார் திட்டம் மற்றும்
 • திருமூர்த்தி அணை

ஆகியவை தமிழகத்தின் முக்கிய கால்வாய் பாசனத் திட்டங்களாகும்.

இந்த பாசனத் திட்டங்களின் மூலம் சுமார் 8 இலட்சம் எக்டர் நிலத்தில் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் அதிகபட்சமாக சுமார் 80 சதம் அளவு நெற்பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் மேட்டூர் அணைப் பிடிப்பால் தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மட்டும் சுமார் 52 சதம் வரை பாசன வசதி பெறுகிறது. மற்ற அணைத்திட்டங்களால் தமிழகம் சுமார் 10 சதத்திற்கும் குறைவாகவே பாசன வசதி பெறுகின்றது.

கிணற்றுப்பாசனத்தில் மின் இறைப்பான்கள் மூலமாக நிலத்தடிநீர் பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் கோயமுத்துார் மாவட்டம், இந்தியாவிற்கு தேவையான 60 சதம் மின் இறைப்பான்களை உற்பத்தி செய்து தனித்தன்மை வகிக்கிறது.

பாசன நீரின் தன்மை

பாசனத்திற்கு பயன்படுத்தப்படும் நீரின் தன்மையானது அதில் கரைந்துள்ள உப்புக்களின் அளவைப் பொறுத்து அமைகிறது. இவை நீரில் கரையக்கூடிய உப்புகள் மற்றும் நீரில் தேங்கி நிற்கும் பொருட்கள் என இரண்டு வகைப்படும். இவற்றின் அளவு கூடும்போது அல்லது குறையும்பொழுது விதை முளைத்தல் முதல் அறுவடை வரை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. பாசன நீரின் தன்மை கீழ்கண்ட காரணிகளை பொறுத்து அமைகிறது.

 1. நீரில் கரைந்துள்ள உப்புகளின் மின் கடத்து திறன்
 2. மொத்த உப்பு அளவில் கரையும் சோடியம்
 3. உப்பின் வீதம்
 4. சல்பேட்,
 5. குளோரைடு,
 6. கார்பனேட் மற்றும் பைகார்பனேட்
 7. எதிர் அயனிகள்
 8. போரான் அளவு
 9. சுற்றுப்புறச் சூழல்
 10. கால்சியம், மக்னீசியம், சோடியம் மற்றும் பொட்டாசியம்
 11. நேர் அயனிகள்
 12. கார அமிலத்தன்மை மற்றும் நுண்ணுயிரிகளின் மாசு

பாசன நீர் நிவர்த்தி

 1. நடுநிலைக்கும் அதிகமாக கார அமிலத்தன்மை உள்ள நீரை நடுநிலையாக்க கந்தக அமிலம் சேர்க்க வேண்டும்.
 2. சோடியம் அயனிகள் அதிகம் உள்ள நீரில் ஜிப்சம் சேர்த்து நிவர்த்தி செய்யலாம்.
 3. எளிதில் கரையும் உப்புக்கள் மண்ணின் அடி அடுக்குகளுக்கு வடிந்து செல்ல தொழு உரம் இடுதல் வேண்டும்.

நீர்ப்பாசன முறைகள்

நீர்ப் பாசன மூலங்களிலிருந்து பலவிதமான முறைகளில் பாசனத்திற்கு நீர் கொண்டு வரப்படுகிறது. இவற்றில் நாம் தேர்ந்தெடுக்கும் முறையைப் பொறுத்து பாசன நீர் வீணாதல் தடுக்கப்படுகிறது. அவை,

 1. மண்ணால் அமைக்கப்படும் வாய்க்கால்
 2. சிமெண்ட் வாய்க்கால்
 3. கான்கிரீட் குழாய்கள்
 4. வடிவமைக்கப்பட்ட திறந்த கான்கிரீட் வாய்க்கால்
 5. பி.வி.சி. குழாய்கள்

மேற்கூறிய ஒவ்வொரு முறையிலும் செலவு, பாசனத்திறன், நீர் வீணாகும் அளவு போன்றவை மாறுபடுகின்றன.

வாய்க்கால்கள் மூலமாக கொண்டு வரப்படும் நீரானது, சாகுபடி வயல்களுக்கு கீழ்வரும் மூன்று முக்கிய முறைகளில் பாசனம் செய்யப்படுகின்றது.

பரப்புப் பாசனம்

இதை ஆறு வகைகளாகப் பிரிக்கலாம்

 1. பரவல் பாசனம்
 2. பண்ணைப் பாசனம்
 3. பாத்திப்பாசனம்
 4. சொட்டுநீர்ப்பாசனம்
 5. சால் பாசனம்
 6. தெளிப்பு பாசனம்
 7. அகழிப் பாசனம்
 8. கழிவு நீர்ப்பாசனம்
பரவல் பாசனம் (Flood irrigation)

நிலத்தைச் சுற்றிலும் வரப்புகள் அமைத்து நிலப் பரப்பினைச் சமப்படுத்தி வாய்க்காலின் மூலம் வரும் நீரை ஒரு வாய்மடையின் வழியாக நிலத்திற்குள் பாய்ச்சி நிலம் முழுவதும் பரவச் செய்யும் முறைக்கு பரவல் பாசனம் என்று பெயர்.

பரவல் பாசன முறையில் பாய்ச்சப்படும் நீர், நிலம் முழுவதும் பரவி நிலத்தில் தேங்கி நிற்கின்றது. தமிழகத்தில் நெல், கரும்பு, மஞ்சள் போன்ற பயிர்களுக்கு பரவல் பாசன முறையில் நீர் பாய்ச்சப்படுகிறது. நிலத்தின் சரிவைப் பொறுத்து வயலின் பரப்பு மாறுபடும்.

நிறைகள்

 1. பரவல் பாசனத்தைப் பின்பற்றும்போது வாய்க்கால் மற்றும் கரைகள் அமைப்பதன் மூலம் நிலம் வீணாவது தடுக்கப்படுகின்றது. இதனால் நிலத்தில் பயிரிடப்படும் பயிரின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது.
 2. ஒருநாளில் ஒரு வேலையாளை பயன்படுத்தி 15 ஏக்கர் பரப்பளவு உள்ள நிலத்திற்கு பரவல் பாசன முறையில் நீர் பாய்ச்சலாம்.
பாத்திப் பாசனம் (Bed irrigation)

நிலத்தை சுமார் 5 மீட்டர் நீள, அகலமுள்ள இரு வரிசை பாத்திகளாக அமைத்து நடுவே வாய்க்கால் அமைத்து, வாய்க்காலில் வரும் நீரை நிலத்திற்குப் பாய்ச்சுவதற்கு பாத்திப் பாசனம் என்று பெயர். சோளம், கம்பு, ராகி, மிளகாய், கத்தரி போன்ற பயிர்களுக்கும், தோட்டக்கால் நிலங்களில் பயிரிடப்படும் பயிர்களுக்கும் பாத்திப்பாசன முறையில் நீர் பாய்ச்சப்படுகின்றது.

அகழிப்பாசன முறையில் நீர்பாய்ச்சப்படும் நிலங்களில் சுமார் 4 மீட்டர் இடைவெளிக்கு ஒரு அகழி வெட்டப்படுகிறது. நிலத்தில் இரண்டு திசைகளுக்கு இணையாக இந்த அகழிகள் வெட்டப்படுகின்றன. இந்த அகழிகள் 30 செ.மீ அகலமும், 60 செ.மீ ஆழமும் உடையதாக இருக்கும். இதற்கு இடையேயுள்ள இடைவெளியில் அமைந்துள்ள நிலப்பகுதியில் பயிரிடப்படுகின்றது. நீர்ப்பாசன மூலங்களில் இருந்து வருகின்ற பாசன நீர் வாய்க்கால்களின் மூலம் அகழிகளுக்கு கொண்டு வரப்பட்டு அகழிகளில் தேங்கி நிற்கின்றது. அதிகமான மழை பெய்யும் காலங்களில் நிலத்திற்கு வருகின்ற அதிக அளவு மழை நீர் இந்த அகழிகளின் மூலம் நிலத்திலிருந்து வெளியேற்றப் பயன்படுவதால் இவை வடிகால்களாகவும் பயன்படுகின்றன.

பண்ணைப் பாசனம்
 1. அகழிப்பாசன முறையில் நீர் பாய்ச்சுவதற்கு குறைந்த அளவு ஆட்கள் போதுமானது.
 2. அதிக மழை பெய்யும் காலங்களில் இந்த அகழிகள் வடிகால்களாகச் செயல்பட்டு அதிக நீரினால் பயிர் பாதிக்கப்படாமல் தடுக்கப்படுகின்றது.
 3. பண்ணைப் பாசனம் அல்லது வட்டப்பாத்திப் பாசனம் (Basin rrigation) : பழத்தோட்டங்களிலும் பண்ணைகளிலும் உள்ள பெரிய மரங்களைச் சுற்றி ஒரு மீட்டர் சுற்றளவில் வட்ட வடிவில் பாத்திகள் அமைக்கப்பட்டு நீர்ப் பாசனம் செய்யும் முறைக்கு பண்ணைப் பாசனம் என்று பெயர்.

நிறைகள்

 1. நிலம் முழுவதற்கும் நீர் பாய்ச்சாமல் மரத்தினைச் சுற்றியுள்ள சிறிய பாத்திகளில் மட்டும் நீர் பாய்ச்சப்படுவதால் பாசன நீர் சிக்கனமாகப் பயன்படுத்தப்படுகின்றது.
 2. ஆவியாதலின் மூலமும், நீர்க்கசிவின் மூலமும் அதிக அளவில் நீர் வீணாவது குறைக்கப்படுகின்றது.
 3. மரத்தின் வேர்ப்பகுதி பரவியுள்ள நிலப்பரப்பு மட்டும் பாசனம் செய்யப்படுகின்றது.
சொட்டு நீர்ப்பாசனம்(Driprrigation)

பாசன நீரினைத் தாவரத்தின் வேர்மண்டலத்தில் படும்படி சொட்டுச் சொட்டாக நீர்ப் பாய்ச்சும் முறைக்கு சொட்டு நீர்ப்பாசனம் என்று பெயர்.

 • கிடைக்கின்ற குறைந்த அளவு நீர் சிக்கனமான முறையில் பயன்படுத்தப்படுகின்றது.
 • ஆவியாதல் மற்றும் நீர்க்கசிவின் மூலம் நீர் வீணாவது முழுமையாகத் தடுக்கப்படுகிறது.
 • வாய்க்கால் மற்றும் வரப்புகள் அமைக்காமல் இந்த முறையில் நீர்ப்பாய்ச்சுவதால் நிலம் வீணாவது தவிர்க்கப்படுகின்றது.
 • நீரில் கரையும் உரங்களை இம்முறையின் மூலம் பயிர்களுக்குக் கொடுக்கலாம். களைகள் தோன்றுவது வெகுவாகக் குறைகிறது.
தெளிப்புப்பாசனம் (Splashirrigation)

நீர்ப்பாசன மூலங்களிலிருந்து வருகின்ற பாசன நீரினை வாய்க்கால்களில் தேக்கி வைத்து கைகளால் தெளிக்கும் முறைக்கு தெளிப்புப் பாசனம் என்று பெயர்.

நிலத்தில் 4 மீட்டர் இடைவெளியில் நிலத்தின் குறுக்காக வாய்க்கால்கள் அமைத்து அதில் பாசன நீரைத் தேக்க வைத்து இந்நீரினைப் பயிர்களின் மீது படும்படி தெளிக்கப்படுகின்றது. கேழ்வரகு, எள் மற்றும் காய்கறிகள் போன்ற பயிர்களுக்கும் தெளித்தல் பாசன முறையில் நீர்ப் பாய்ச்சப்படுகின்றது. கிடைக்கின்ற குறைந்த அளவு நீர் முழுவதும் நிலத்திலுள்ள பயிர்களுக்குப் பயன்படும் வகையில், பயிர்களின் மீது முழுமையாகத் தெளிக்கப்படுகின்றது.

கழிவுநீர்ப்பாசனம் (Sewage and Sullage irrigation)

பெரியநகரங்களில் வீடுகள் மற்றும் தெருக்களிலிருந்து வெளியேறும் கழிவுநீரை திறந்த வாய்க்கால்கள் மூலம் கொண்டு வந்து நீர்ப் பாசனத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. இதற்கு கழிவுநீர்ப்பாசனம் (Sulage irrigation) என்று பெயர்.

சில நகரங்களில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரில் மனித கழிவுகளும் சேர்ந்து வெளியேற்றப்பட்டு அதை பாதாள சாக்கடைக் கால்வாய்கள் மூலம் கொண்டு வந்து பாசனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இதற்கு சாக்கடை நீர்ப்பாசனம் (Sewage irrigation) என்று பெயர்.

இந்த இரண்டு கழிவு நீரிலும் கால்நடையின் கழிவுப் பொருட்களும் மற்ற குப்பைப் பொருட்களும் கலந்து கூழ்ம நிலையில் இருக்கும். இந்நீரானது நேரடியாக பாசனத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றது. கழிவு நீர்ப்பாசன முறை மதுரை நகரத்தில் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகின்றது. கழிவுநீரை நிலத்திற்குப் பாய்ச்சும்போது கழிவுப் பொருட்களும் கழிவு நீருடன் சேர்ந்து வருவதால் மண் மிருதுவாக இருக்கும். அளவிற்கு அதிகமான நீர் நிலத்தின் மேற்பரப்பிலிருந்து ஆவியாதலால் வெப்பம் தணிக்கப்படுகிறது.

கழிவுநீர் தாவரங்களுக்கு சிறந்த உரமாகப் பயன்டுகிறது. கால்நடைகளுக்கான தீவனப் பயிர்களைப் பயிர் செய்ய கழிவு நீர்ப்பாசனம் பயன்படுத்தப்படுவதால் தீவனப் பற்றாக்குறை ஏற்படுவதும் தவிர்க்கப்படுகின்றது. இப்பாசன நீரைப் பயன்படுத்தி காய்கறிப் பயிர்களும் பயிரிடப்படுகின்றன.

கழிவு நீரின் மூலம் சில நோய்க் கிருமிகள் கால்நடைகளுக்குத் தீவனப்பயிரின் மூலம் பரவுவதால் கால்நடைகள் சில சமயங்களில் பாதிக்கப்படுகின்றன.

அடிமண் பாசனம் அல்லது நிலத்தடி நீர்ப்பாசனம் (Sub Soil irrigation)

நீர்ப்பாசன மூலங்களிலிருந்து வருகின்ற பாசன நீரினை நேரடியாக மண்ணின் கீழ் அடுக்குகளுக்குக் கொண்டு சென்று நிலத்தினை ஈரப்படுத்தும் முறைக்கு அடிமண் பாசனம் அல்லது நிலத்தடி நீர்ப்பாசனம் என்று பெயர்.

நீர்ப்பாசன மூலம் மேடான பகுதியிலும், பயிர்செய்யும் வயல் தாழ்வான பகுதியிலும் அமைந்திருக்கும் இடங்களில் அடிமண் பாசன முறையில் நீர் பாய்ச்சப்படுகிறது. நீர்பாசன மூலங்களிலிருந்து வருகின்ற பாசன நீர் சிமெண்ட் குழாய்களின் மூலம் நிலத்திற்கு கொண்டு வரப்பட்டு குழாய்களில் உள்ள சிறிய துளைகளின் வழியாக நிலத்திற்கு வந்து நிலத்தின் அடிமண்ணை ஈரப்படுத்துகின்றது.

 1. குழாய்களின் மூலம் வருகின்ற பாசன நீர் நேரடியாக நிலத்தின் அடிமண் பகுதிக்கு வருவதால் ஆவியாதல், நீராவிப் போக்கு மற்றும் நீர்க்கசிவு போன்றவை மூலம் நீர் வீணாகாமல் முழுமையாகப் பயன்படுத்தப்படுகிறது.
 2. நிலத்தின் அடிப்பகுதியில் குழாய்கள் வரிசையாக அமைக்கப்பட்டிருப்பதால் இந்த நிலங்களில் சாகுபடி வேலைகளை மேற்கொள்வது எளிது.
 3. களைச்செடிகளின் விதைகள் பரவாமல் பாதுகாக்கப்படுகிறது.

தூவல் பாசனம் (Over Head irrigation)

பாசன நீரினைப் பயிர்கள் மீது ஒரு குறிப்பிட்ட உயரத்தில் இருந்து தூவும் முறைக்கு தூவல் பாசனம் என்று பெயர். உலோகக் குழாய்களுடன் சுழலும் தெளிப்புக் குழாய்கள் ஒரு குறிப்பிட்ட உயரத்தில் அமைக்கப்பட்டு, நீரை மிகுந்த அழுத்தத்துடன் செலுத்தும்போது தெளிப்பான்கள் சுழன்று நீரை பணிபோலவோ அல்லது மழைத்துளி போலவோ ஒரே சீராக தூவி நிலத்தை நனைக்கிறது. இப்பாசனமுறை காப்பி, தேயிலைத் தோட்டங்கள் மற்றும் புல் தரைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தூவல் பாசனத்தின் முக்கியத்துவம்

 • தேயிலை, புல்தரை மற்றும் வறண்ட பகுதிகளில் பிரதான பாசனமாக பயன்படுகிறது.
 • காப்பி பூக்கும் பருவத்தில் கூடுதல் பாசனமாக பயன்படுகிறது.
 • நிலச்சரிவு, வெப்பம், உறைபனி உள்ள பகுதிகளில் இம்முறை ஏற்றது.

நீர் அதிகம் தேவைப்படும் வெப்பமண்டல மற்றும் வறண்ட பகுதிகளில் இத்தூவல் பாசனம் பிரதான பாசனமாகவும், எந்த பயிர்கள் அடிக்கடி மழையை விரும்புகிறதோ அப்பயிர்களுக்கு திடீரென ஏற்படும் வறட்சியிலிருந்து காப்பாற்றவும் இம்முறை உதவுகிறது. எனவே இதனை கூடுதல் பாசனம் (Supplemental irrigation) என்றும் அழைப்பர். மேலும், அதிக வெப்பம் மற்றும் கடும் உறைபனியில் இருந்து பயிர்களைப் பாதுகாக்க தூவல் பாசனம் பயன்படுகிறது.

தூவல் பாசனத்தின் நிறைகள்

பரவல் பாசன முறைகளை ஒப்பிடும்போது தூவல் பாசன முறையில் சில சிறப்புகள் உள்ளன.

 1. பரவல் பாசனத்தை செய்யமுடியாத மேடு, பள்ளம், மண்அரிப்பு ஏற்படும் பகுதிகளில் தூவல் பாசனம் மிகவும் பொருத்தமானதாகும்.
 2. மிகக் குறைவான நீர்பிடிப்புத் தன்மையுள்ள மணற்பாங்கான நிலங்கள்,
 3. மண் கண்டம் மிகவும் குறைந்த சரளைக்கல் நிலங்கள், அதிகமாக நீரை வடிய விடும் நிலங்கள் ஆகியவற்றிற்கு இப்பாசனம் மிகவும் ஏற்றது.
 4. நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்தலாம்.
 5. நாற்றங்கால்களுக்கு இது மிகச்சிறந்த பாசனமுறை. பாத்திகள் அமைத்தல், மடை திருப்புதல் போன்ற பணி இல்லை.
 6. எவ்வித நிலச்சரிவான பகுதிக்கும் ஏற்றது.
 7. உறைபனி, கடும் வெப்பம் போன்றவற்றிலிருந்து பயிரைக் காக்க உதவுகின்றது.

நீர்ப் பராமரிப்பு (Water Management)

கீழ்க்கண்ட காரணிகளைக் கருத்தில் கொண்டு பாசன நீரை சிக்கனமாகவும், வீணாகாமலும் பயன்படுத்தலாம்.

 • பயிரிடப்பட்டுள்ள பயிர்
 • மண் வளம்
 • நிலவும் தட்பவெப்பநிலை
 • நீர்ப்பாசனத்தேவை
 • நீர்ப்பாசனத் திறன்

பயிரிடப்பட்டுள்ள பயிர்

ஒரு பயிரின் நீர்த்தேவை பயிரின் இரகம், இலையமைப்பு, வறட்சியை தாங்கும் திறன், பயிரின் வயது, பயிரின் வளர்ச்சி நிலை ஆகியவற்றை பொருத்து மாறுபடுகிறது. குறைந்த வயது உடைய இரகங்களுக்கு குறைவான நீர்த் தேவையும், அதிக இலைப்பரப்பு உடைய இரகங்கள் அதிக நீர்த் தேவை உடையதாகவும் இருக்கும்.

மண்வளம்

 1. மண்ணின் தன்மை, மண் வளம்,நிலத்தின் அமைப்பு, மண்ணின் நீர் பிடிப்புத் திறன் ஆகியவற்றை பொருத்து நீர்ப்பாசன முறை, பாசன நீரின் அளவு, நீர்ப்பாசனம் செய்ய வேண்டிய காலம் முதலியவற்றை நிர்ணயிக்கலாம்.
 2. அதாவது, வண்டல் மண் அதிக நீர் தேக்கும் திறன் உடையதாகவும், மணல் குறைந்த நீர்தேக்கும் திறன் உடையதாகவும் இருக்கும். அதேபோல், சமமான நிலத்தில் நீர்த்தேவை குறைவாகவும், சரிவான நிலத்தில் நீர்த் தேவை அதிகமாகவும் இருக்கும்.
 3. அதிக ஊட்டத்திறன் உள்ள மண்ணிற்கு குறைந்த அளவு பாசன நீரும், குறைவான ஊட்டத்திறன் உள்ள மண்ணிற்கு அதிக அளவு பாசன நீரும் தேவைப்படுகிறது.

தட்பவெப்பநிலை

மழையளவு, மழை நாட்கள், காற்றின் வேகம், காற்றின் ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை போன்றவற்றை பொருத்தே பயிர்களின் நீர்த்தேவை அமைகின்றது.

நீர்ப் பாசனத்தேவை

நீர் பாசன மூலம், நீர்ப்பாசன முறை, பாசன நீரின் வேகம் ஆகியவற்றைப் பொருத்து பாசன நீரின் தேவை நீர்ணயிக்கப்படுகிறது.

நீர்பாசனத் திறன்

தாவரங்கள் பயன்படுத்திய நீரின் அளவிற்கும், பயிருக்கு பாய்ச்சிய நீரின் அளவிற்கும் உள்ள விகிதமே நீர்பாசனத் திறன் எனப்படும். அதிக அளவு நீர் வீணாகும்பொழுது நீர்பாசனத்திறன் குறைகிறது. நீர்பாசன திறன் அதிகமுள்ள போது நீர்த்தேவை குறைகிறது. விதையிலிருந்து முளைக்கும் பயிர் உயிர் வாழநீர் அத்தியாவசியமாகும். மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்களை நீர் கரைப்பானாக செயல்பட்டு கரைத்து பயிரின் வளர்ச்சிக்காகக் கொடுக்கிறது. பருவகாலம் மற்றும் வானிலையில் ஏற்படும் மாறுதல்களின் விளைவால் நிலையான பயிர் உற்பத்திக்கு நீரை சேமிப்பது மிகவும் அவசியம். நீர் வளம் உண்டானால், நிலவளம் உண்டாகும்’ என்ற பழமொழிக்கேற்ப பயிர் வளர்ச்சிக்கு நீர் ஆதாரங்களே மிகவும் முக்கியமானவையாகும்

ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை

Filed under:
2.7
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top