பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / பயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள் / பயிர் நூற்புழுக்களும் பொருளாதார சேத நிலையும்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பயிர் நூற்புழுக்களும் பொருளாதார சேத நிலையும்

பயிர் நூற்புழுக்களும் பொருளாதார சேத நிலையும் குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

தாவரங்களில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களுக்கு அடுத்தபடியாக பொருளாதார சேதத்தை ஏற்படுத்த வல்லவை பயிர் நூற்புழுக்களாகும். நூல் போன்ற மெல்லிய உடலமைப்பைக் கொண்டதால் இவை இப்பெயர் பெற்றன. இவை கண்ணுக்குப் புலப்படாதவாறு உருவத்தில் மிகச் சிறியவை. இவை மண்ணிடைப் பகுதிகளில் உள்ள மெல்லிய நீர்ப்படலத்தில் இருந்து கொண்டு வேரினைத் தம் கூறிய அலகினால் துளைத்து பயிரின்சாற்றை உண்டு வாழும். இதன் காரணமாக வேரினுள் பல வேதியியல் மாற்றங்கள் நிகழ்ந்து வேர்ப்பாகங்கள் அழுகியும், வேரில் சிறுதும் பெரிதுமான எண்ணற்ற வேர் முடிச்சுக்கள் தோன்றியும் பயிரின் வளர்ச்சி குன்றி மகசூல் இழப்பு ஏற்படுகின்றது.

நூற்புழுக்களினால் ஏற்படும் பாதிப்பினை உழவர்கள் நேரடியாக அறிந்து கொள்ள முடிவதில்லை. பெருவாரியான உழவர்கள், பயிரின் அழுகிய பகுதிகளில் தோன்றும் கண்ணுக்குப் புலப்படும் புழுக்களை நூற்புழுக்கள் எனத் தவறாக எண்ணி விடுகின்றனர். எனவே நூற்புழுக்களின் வகை பற்றியும் அவை ஏற்படுத்தும் அறிகுறிகள் பற்றியும் அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.

நூற்புழுக்களில் பல வகைகள் உண்டு என்றாலும் வேர்முடிச்சு நூற்புழு, மொச்சை வடிவ நூற்புழு, முட்டைகாப்புக் கூடு நூற்புழு, வேர்துளைப்பான் நூற்புழு மற்றும் எலுமிச்சை நூற்புழு போன்றவை பயிரில் அதிக மகசூல் இழப்பினை ஏற்படுத்துகின்றன.

நூற்புழுக்களின் தாக்கத்தை அறியும் முறைகள்

நூற்புழுக்கள் பயிர்களில் ஏற்படுத்தும் அறிகுறிகளில் ஓரிரண்டைத்தவிர மற்றவை, ஊட்டச்சத்தின் குறைபாட்டினால் ஏற்படும் அறிகுறிகளைப் போன்று பொதுவான அறிகுறிகளுடன் காணப்படும். இவற்றை மண் பரிசோதனைகள் மூலம் மட்டுமே அறிய இயலும்.

வளர்ச்சி குன்றுதல்

வயலில் வளர்ச்சி குன்றிய பரவலான திட்டுக்கள் ஆங்காங்கே காணப்படும்.

பகல் வாட்டம்

இது வேர்முடிச்சு தோன்றும் ஒரு முக்கியமான அறிகுறியாகும். மண்ணில் போதுமான ஈரப்பதம் இருந்த போதிலும் அதிக வெப்பமுள்ள பகல் நேரங்களில் இலைகள் வாட்டத்துடன் காணப்படும். பின்னர் மாலையில் பழைய நிலையில் வாட்டம் நீங்கிக் காணப்படும். வேரில் ஏற்படும் முடிச்சுக்களால் சாற்றுக் குழாய்கள் அடைபட்டு நீர் கடத்து திறன் குறைவதாலும், வேரிலிருந்து உறிஞ்சப்படும் நீரின் அளவை விட இலையில் இருந்து ஆவியாகும் நீரின் அளவு அதிகரிப்பதாலும் இது ஏற்படுகின்றது.

மற்ற அறிகுறிகள்

தாக்கப்பட்ட செடியின் இலைகள் வெளிர் மஞ்சள் நிறமாகி, இடைக்கணுப்பகுதி சிறுத்து இலைகள் கொத்து போன்ற தோற்றத்துடன் காணப்படும். பூக்களின் எண்ணிக்கை குறைந்தும், உருவாகும் பூக்கள் கொட்டி விடுவதாலும் மகசூல் இழப்பு ஏற்படுகிறது.

வேரில் அறிகுறிகள்

வேரில் வேர்முடிச்சு நூற்புழுக்களால் சிறிதும் பெரிதுமான ஒழுங்கற்ற முடிச்சுக்கள் தோன்றும். அவரை இனப் பயிர்களில் தோன்றும் பாக்டீரியா வேர் முண்டுகளை நூற்புழு வேர்முடிச்சுக்கள் எனத் தவறாகப் பலர் எண்ணி விடுகின்றனர். நன்மை பயக்கும் பாக்டீரியா முண்டுகள் ஒரே சீரான, கடினமான உருண்டை வடிவில் வேரில் ஒட்டிக் கொண்டது போலிருக்கும். ஆனால் நூற்புழு முடிச்சுக்கள் வேருடன் சேர்ந்தே ஒழுங்கற்ற முடிச்சுக்களாகக் காணப்படும்.

அழுக்கு வேர் அறிகுறி

எலுமிச்சை நூற்புழு வேரில் கூட்டம் கூட்டமாக ஒரே இடத்தில் இருந்து சாற்றினை உண்டு வாழும். இவை உள்ள இடங்களில் வேரில் மண்துகள்கள் ஒட்டிக் கொண்டு இருக்கும் . இவ்வறிகுறி அழுக்கு வேர் அறிகுறி எனப்படும்.

முட்டைகாப்புக் கூடு நூற்புழுக்கள்

உருளைக் கிழங்கிலும் பயறு வகைப் பயிர்களிலும் முட்டைகாப்புக்கூடு நூற்புழுக்கள் உருண்டை அல்லது எலுமிச்சை வடிவத்தில் கண்ணுக்குப் புலப்படும் வகையில் வெள்ளை, தங்கநிறம் மற்றும் பழுப்பு நிறமாக வேரில் ஒட்டிக் கொண்டிருக்கும்.

வேரழுகல்

வேரில் மொச்சை வடிவ, வேர்துளைப்பான் மற்றும் வேரழுகல் நூற்புழுக்கள் வேரில் நீள்வடிவ அழுகலை ஏற்படுத்த வல்லவை. வாழையில் தோன்றும் வேர்துளைப்பான் நூற்புழுவின் தாக்கத்தால் வேரின் புறணிப் பகுதி கருஞ்சிவப்பு நிறமாகக் காணப்படும்.

நூற்புழு கூட்டு நோய்கள்

நூற்புழுக்கள் தனித்து நின்று தாக்கி சேதம் விளைவிப்பதுடன் மட்டுமன்றி, இவை வேரில் உண்டாக்கும் காயங்களின் வழியே பூசண பாக்டீரியக் கிருமிகள் நுழைந்தால் இதன் தாக்கம் பல மடங்கு பெருகி முழுமையான சேதம் ஏற்படும். வாழை, பருத்தி, கனகாம்பரம் உள்ளிட்ட எல்லாப் பயிர்களிலும் கூட்டு நோய்கள் காணப்படுகின்றது.

பொருளாதார சேத அளவு

தமிழகத்தைப் பொருத்த வரையில் நூற்புழுக்களால் ஏற்படும், தவிர்க்கக்கூடிய வாய்ப்புள்ள சேத நிலை சுமார் 10 முதல் 40 சதவீதம் ஆகும். பொருளாதாரக் கண்ணோட்டத்தில் இந்த சேத அளவு தமிழகத்தில் மட்டும் ஆண்டுக்கு ரூ.400 கோடி ஆகும்.

நூற்புழு பரிசோதனைகள்

மண்ணில் நூற்புழுதாக்கம் உள்ளதா என்பதனை அறிந்து கொள்வது மிகவும் அவசியம். இதற்கு மண்மாதிரிகள் எடுப்பது, ஊட்டச்சத்துக்கு மண் மாதிரி எடுப்பது போன்றதுதான் எனப்பலரும் தவறாகக் கருதிக் கொண்டு மண் மாதிரிகளை உலர்த்தி அனுப்பி விடுகின்றனர். நூற்புழுக்களுக்கான மண்மாதிரிகளை வேரினை ஒட்டியுள்ள மண்ணை வேர்தண்டுகளுடன் சேர்த்து எடுத்து ஒரு பாலித்தீன் பையில் சுமார் 250 கிராம் என்ற அளவில் ஈரம் காயாமல் பரிசோதனைக்கு அனுப்புதல் சிறந்தது.

ஆதாரம் : நூற்புழுவியல் துறை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் - 641 003

3.05555555556
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top