பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / பயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள் / மாடித்தோட்ட பூச்சித் தாக்குதலை சமாளிப்பது எப்படி?
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மாடித்தோட்ட பூச்சித் தாக்குதலை சமாளிப்பது எப்படி?

மாடித்தோட்ட பூச்சித் தாக்குதலை சமாளிப்பதற்கான குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

மாடித் தோட்டத்தில் செடிகளின் வளர்ச்சி மற்றும் பருவநிலைக்கு ஏற்றவாறு, பூச்சி மற்றும் நோய்களின் தாக்கம் வேறுபடும்.

பூச்சிகளைக் கட்டுப்படுத்துதல்

 • சாறு உறிஞ்சும் பூச்சிகளான அசுவினி, மாவுப்பூச்சி, தத்துப்பூச்சி, இலைப்பேன் போன்றவை செடிகளின் ஆரம்ப நிலை வளர்ச்சியை அதிகமாகப் பாதிக்கின்றன.
 • இதைக் கட்டுப்படுத்த பூண்டு, இஞ்சி மற்றும் பச்சைமிளகாய் கரைசலைச் செடிகளின் மீது வாரத்துக்கு ஒருமுறை தெளித்து விடலாம்.

பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய் கரைசல் தயாரிக்கும் முறை

 • பூண்டை (18 கிராம்) தோல் நீக்கிய பிறகு நன்கு பசைபோல் அரைத்துக்கொள்ள வேண்டும். இதேபோன்று மிளகாய் ஒன்பது கிராம் மற்றும் இஞ்சி ஒன்பது கிராம் ஆகியவற்றை அரைத்துக்கொண்டு, இவை மூன்றையும் ஒரு லிட்டர் தண்ணீரில் கரைக்க வேண்டும்.
 • இந்தக் கரைசலை இரண்டு தேக்கரண்டி காதிசோப் கரைசலுடன் சேர்த்து நன்கு கலக்கி வடிகட்டிய பிறகு, செடிகளின் மேல் தெளிக்க வேண்டும்.
 • காய் மற்றும் தண்டு துளைப்பான் பூச்சிகளின் தாக்குதலால் காய் மற்றும் பழங்கள் உண்பதற்கான தன்மையை இழந்துவிடுகின்றன.
 • இதைத் தவிர்க்க நான்கு மில்லி வேப்பெண்ணெயுடன் ஒரு லிட்டர் தண்ணீர் மற்றும் காதிசோப் கரைசலைச் சேர்த்துச் செடிகள் மீது தெளிக்க வேண்டும். இந்தக் கரைசல், இலை தின்னும் புழுக்களைக் கட்டுப்படுத்தும்.
 • 100 கிராம் சாணத்துடன் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்துக் கலக்கிக் கோணிப்பை மூலம் வடிகட்டிய பிறகு, மீண்டும் இக்கரைசலுடன் 500 மி.லி. தண்ணீர் சேர்த்து மீண்டும் வடிகட்ட வேண்டும். பிறகு கிடைக்கும் தெளிவான கரைசலைச் செடிகளின் மேல் தெளிக்கவும். இதுவும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும்.

நோய்களுக்கு மருந்து

 • மழைக்காலத்தில், பூஞ்சான் நோய்களான வேர் அழுகல், செடி கருகுதல் மற்றும் வைரஸ் நோய்களின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும். இதைத் தவிர்க்க, பயிர் செய்வதற்கான கலவையைத் தயார் செய்யும்போதே டிரைகோடெர்மா விரிடி, சூடோமோனாஸ் போன்ற நுண்ணுயிர்க் கொல்லிகளைச் சேர்த்துக் கலக்க வேண்டும். அப்படிச் செய்தால் பூஞ்சிண நோய்களிலிருந்து தாவரங்களைப் பாதுகாக்கலாம்.
 • ஒரு பைக்கு 100 கிராம் வேப்பம்புண்ணாக்கு, 10 சதவீதம் மாட்டுக் கோமயம் என்ற விகிதத்தில் கலந்து செடிகளின் மீதும் தெளிப்பது இயற்கை முறையில் நோய்களைக் கட்டுப்படுத்தும் இன்னொரு வழிமுறை.
 • வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட செடிகளின் இலைகளில் மஞ்சள் நிறத் திட்டுகள் காணப்படும். அவற்றை உடனடியாக வேருடன் நீக்கிவிட வேண்டும்.
 • இந்த வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் மாடித்தோட்டச் செடிகள் பூச்சி, நோய் தாக்குதலில் சிக்குவதிலிருந்து இயற்கை முறையிலேயே அதிகச் செலவில்லாமல் தாவரங்களைப் பாதுகாக்கலாம்.


மாடித்தோட்ட பூச்சித் தாக்குதலை சமாளிப்பது எப்படி?

ஆதாரம் : தமிழக அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை

3.09375
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top