பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வானிலை ஆராய்ச்சிக் கருவிகள்

வானிலை ஆராய்ச்சிக் கருவிகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

சைமன்ஸ் மழைமானி (Symon's Rain Gauge)

அமைப்பு

ஓரிடத்தில் பெய்கின்ற அப்போதைய மழையின் அளவினை அளப்பதற்கு சைமன்ஸ் மழைமானி பயன்படுகின்றது. திறந்த வெளியில் நிலமட்டத்திற்கு மேலே 30 செ.மீ., உயரத்தில், நீளம், அகலம், உயரம் முதலியவை 60 செ.மீ. இருக்குமாறு கான்கிரிட் தளம் அமைக்கப்பட்டிருக்கும். கான்கிரீட் தளத்தின் மையத்தில் கண்ணாடி ஜாடியும் அதனுள் ஒரு புனலும் ஒரு சிலிண்டர் அமைப்பினுள் வைக்கப்பட்டிருக்கும். புனலின் அகன்ற பகுதி சிலிண்டரின் மேல் பகுதியில் இருக்குமாறு அமைக்கப்பட்டிருக்கும். இந்த புனலின் அகன்ற வாய்ப்பகுதியின் பரப்பளவு 200 ச.செ.மீ ஆகும்.

செயல்படும் விதம்

மழை பெய்யும் பொழுது புனலில் விழுகின்ற நீர் மழைமானியில் உள்ள ஜாடியில் சேமிக்கப்படுகின்றது. அதாவது 200 ச.செ.மீ பரப்பளவில் விழுகின்ற மழைநீர் ஜாடியில் சேமித்து வைக்கப்படுகின்றது. அளவு ஜாடியைப் பயன்படுத்தி இதன் கன அளவு கணக்கிடப்படுகின்றது. இதிலிருந்து மழையின் மூலம் நிலம் பெற்ற நீரின் அளவையும் கண்டறியலாம்.

சைபன் மழைமானி (Syphon Rain Gauge)

அமைப்பு

ஓரிடத்தில் ஒரு நாளில் பெய்த மழையின் அளவினைத் தொடர்ச்சியான வரைபடமாகக் குறிப்பதற்குப் பயன்படுகின்ற வானிலை ஆராய்ச்சிக் கருவி சைபன் மழைமானி ஆகும். இதை பதிவுத்திறன் உள்ள மழைமானி என்றும் கூறுவர்.

சைபன் மழைமானியில் 203 மி.மீ. விட்டமுள்ள புனல் ஒன்று உள்ளது. அந்தப் புனலின் குறுகிய முனைப்பகுதி ஒரு கண்ணாடி ஜாடியினுள் இருக்கும். அந்தக் கண்ணாடி ஜாடியில் மிதக்கும் தன்மையுள்ள சைபன் குழாயின் மறுமுனையில் பேனா முனை ஒன்றிருக்கும். பேனா முனை கடிகார உருளையின் முன் சுற்றப்பட்டுள்ள வரைபடத்தாளைத் தொட்டுக்கொண்டிருக்கும்.

கடிகார உருளை ஒரே சீரான வேகத்தில் சுழன்று கொண்டு இருக்கும். அந்தக் கடிகார உருளை ஒரு முழுச் சுற்று சுற்றுவதற்கு 24 மணிநேரம் ஆகும்.

செயல்படும் விதம்

மழை பெய்கின்ற பொழுது சைபன் மழைமானியில் விழுகின்ற மழைநீர் கண்ணாடி ஜாடியில் வந்து சேருகின்றது. கண்ணாடி ஜாடியில் நீர்மட்டத்தின் அளவு அதிகரிக்கும் பொழுது அதிலுள்ள மிதக்கும் தன்மையுடைய சைபன் குழாய் மேல் நோக்கி உயருகின்றது.

சைபன் குழாயில் ஏற்படும் அசைவுகள் இதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் பேனாவின் உதவியால் வரைப்படத் தாளின் மீது குறிக்கப்படும். ஒரு நாளில் பெய்த மழையின் அளவு வரைபடத்தாளின் மீது தொடர்ச்சியான வரைபடமாக குறிக்கப்படும். தினமும் காலை 8.30 மணிக்கு கடிகார உருளையின் மீதுள்ள வரைபடத்தாள் நீக்கப்பட்டு புதிய வரைப்படத்தாள் பொருத்தப்படும்.

ஸ்டீவன்சன் திரை அமைப்பு (Stevenson's Screen)

ஓரிடத்தில் காற்றின் வெப்பநிலையை துல்லியமாக கணக்கிடுவதற்கு ஸ்டீவன்சன் திரை அமைப்பு பயன்படுகிறது. ஸ்டீவன்சன் திரை அமைப்பு நல்ல காற்றோட்டமுடைய மரத்தினாலான பெட்டியாகும். இது நிலமட்டத்திலிருந்து 120 செ.மீ. உயரத்தில் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.

இந்தப் பெட்டிக்கு வெள்ளை நிற வர்ணம் பூசப்பட்டு இருப்பதால் வெப்பக்கதிர் வீசலின் மூலம் வெப்பம் வெளியேறுவது தடுக்கப்படுகின்றது. இதனால் காற்றில் உள்ள வெப்பத்தின் அளவினைத் துல்லியமாகக் கணக்கிடலாம்.

ஸ்டீவன்சன் திரை அமைப்பில் உலர்குமிழ் வெப்பமானி, ஈரக்குமிழ் வெப்பமானி, உச்சநிலை வெப்பமானி, நீசநிலை வெப்பமானி முதலிய நான்கு வெப்பமானிகள் வைக்கப்பட்டிருக்கும். நேரடியாக வெப்பமும், மழை நீரும் பாதிக்காத வகையில் இப்பெட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.

உச்சநிலை வெப்பமானி (Maximum Thermometer)

ஓரிடத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் நிலவிய அதிக அளவு வெப்பநிலையை அறிவதற்கு உச்சநிலை வெப்பமானி பயன்படுகிறது.

அமைப்பு

தடிமனான கண்ணாடிச் சுவர்களையுடைய ஒரு கண்ணாடிக் குழாயின் ஒரு முனை மூடப்பட்டும், மற்றொரு முனையில் ஒரு கண்ணாடிக் குமிழும் காணப்படும். கண்ணாடிக்குமிழ் முழுவதும் பாதரசம் நிரப்பப்பட்டிருக்கும். சுற்றுப்புறத்தில் வெப்ப நிலைகளுக்குத் தக்கவாறு கண்ணாடிக் குமிழில் உள்ள பாதரசத்தின் கன அளவில் மாறுபாடு ஏற்படுவதால் கண்ணாடிக் குழாயில் உள்ள பாதரசத்தின் அளவில் மாறுபாடு ஏற்படும்.

செயல்படும் முறை

ஓர் இடத்தில் உச்சநிலை வெப்பத்தினை அறிய காலை 7 மணிக்கு உச்சநிலை வெப்பமானியை தயார் நிலையில் வைப்பார்கள். வெப்பநிலை அதிகரிக்கும் பொழுது கண்ணாடிக்குமிழில் உள்ள பாதரசம் விரிவடைந்து கண்ணாடிக் குழாயிலுள்ள பாதரச மட்டத்தை அதிகரிக்கும். வெப்பநிலை குறையும் பொழுது குமிழிலுள்ள பாதரசம் சுருங்கும். ஆனால் கண்ணாடிக் குழாயிலுள்ள பாதரசம் சுருங்கி கண்ணாடிக் குமிழுக்குள் வராதவாறு குறுக்கம் தடுத்து விடும். இதனால் ஒரு தினத்தில் நிலவிய அதிக அளவு வெப்பநிலையை உச்சநிலை வெப்பமானி குறிக்கும். அன்றைய தினத்தின் மாலை 6 மணி அளவில் உச்சநிலை வெப்பமானி காட்டும் வெப்ப அளவே அன்றைய அதிக அளவு வெப்பநிலை ஆகும்.

நீசநிலை வெப்பமானி (Minimum Thermometer)

அமைப்பு

ஓரிடத்தில் ஒரு நாளில் நிலவிய குறைந்த அளவு வெப்பநிலையைக் கணக்கிடுவதற்கு நீசநிலை வெப்பமானி பயன்படுகிறது. இதில் கண்ணாடிக் குழாயில் ஆல்கஹால் பயன்படுத்தப்படுகிறது. நீசநிலை வெப்பமானியில் மெல்லிய துவாரமும் தடிமனான கண்ணாடிச் சுவர் உடைய கண்ணாடிக் குழாயின் ஒரு முனை மூடப்பட்டும் மறுமுனையில் ஆல்கஹால் நிரம்பிய குமிழும் காணப்படும். கண்ணாடிக் குழாயில் எஃகு இரும்பினால் ஆன ஒரு குறிகாட்டி வைக்கப்பட்டிருக்கும்.

செயல்படும் முறை

காலை 7 மணிக்கு கண்ணாடிக் குழாயிலுள்ள குறிகாட்டி ஆல்கஹால் மேல் மட்டத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும்படி வைக்க வேண்டும். வெப்பநிலை உயரும் பொழுது குமிழில் உள்ள ஆல்கஹால் கன அளவில் சுருங்கி குறிகாட்டியைக் கீழ் நோக்கி இழுக்கும். இதனால் கண்ணாடிக் குழாயிலுள்ள ஆல்கஹாலின் மட்டம் கீழ் நோக்கி இறங்கும் பொழுது இழுவிசையின் காரணமாக குறிமுள்ளையும் கீழ்நோக்கி இழுத்துக் கொண்டு வரும்.

மீண்டும் வெப்ப நிலை உயரும் பொழுது குறிமுள்ளினை அதே இடத்தில் விட்டு விட்டு ஆல்கஹால் மட்டும் மேல் நோக்கி உயரும். குறிமுள்ளின் கீழ்ப்பகுதி காட்டுகின்ற வெப்ப அளவே அந்த இடத்தின் குறைந்த அளவு வெப்பநிலை ஆகும். காலை 7 மணிக்கு முதல் முறையாக வெப்பநிலை குறிக்கப்பட்டு பதிவேட்டில் பதிவு செய்யப்படும். மீண்டும் 14 மணிக்கு இரண்டாவது முறையாக வெப்பநிலை குறிக்கப்பட்டு மேற்குறிப்பிட்ட இரு அளவுகளில் எது குறைந்த அளவோ அதுவே அந்த இடத்தின் குறைந்த அளவு வெப்ப நிலையாகும்.

முதல் நாள் நிலவிய குறைந்த அளவு வெப்ப நிலையைக் குறிக்கும் எஃகு குறிகாட்டியை ஆல்கஹால் மேல்மட்டத்திற்கு மீண்டும் கொண்டு வருவதற்கு வெப்பமானியை நேராகப் பிடித்துக் குலுக்குதல் வேண்டும்.

ஹேர் ஹைக்ரோமீட்டர்

அமைப்பு

இக்கருவி காற்றின் ஒப்பு ஈரப்பதத்தினை கண்டறிய உபயோகப்படுத்தப்படுகிறது. இதில் குதிரையின் முடி பயன்படுத்தப்படுகிறது. உலர்காற்று வீசும்போது முடியில் உள்ள செல்கள் ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டிருக்கும். காற்றில் ஈரப்பதம் கூடுதலாக உள்ளபோது செல்களின் இடைவெளிகளில் நீராவி உறிஞ்சப்பட்டு முடி தடிமனாகவும், நீளமாகவும் மாற்றம் கொள்கிறது. காற்றில் உள்ள ஈரப்பதத்தின் அளவுக்கு ஏற்ப முடியில் ஏற்படும் நீட்சி மற்றும் மீட்சி தத்துவத்தின் அடிப்படையில் காற்றின் ஈரப்பதம் அளவிடப்படுகிறது.

செயல்படும் விதம்

காற்றில் உள்ள ஈரப்பதத்தின் அளவைப் பொருத்து முடி ஈரத்தினை உறிஞ்சுவதால் ஏற்படும் சிறிய மாறுபாட்டைக் கூட, உருப்பெருக்கம் செய்ய நுணுக்கமான நெம்புகோல் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. நெம்புகோல் அமைப்பில் உள்ள குறிகாட்டி சுழியம் முதல் 100 சதம் வரை குறிக்கப்பட்ட அளவுகோலில் நகரும் வகையில் உள்ளது. காற்றில் ஈரப்பதம் மாறுபடும்பொழுது, அதற்கேற்ப முடியின் நீளத்தில் மாறுபாடு ஏற்படுகிறது. அதனால் நெம்புகோல் அமைப்பின் உதவியால் குறிகாட்டி அளவுகோலில் நகர்கிறது. குறிகாட்டி காட்டும் அளவு நேரடியாக ஈரப்பதமாக கணக்கிடப்படுகிறது.

இராபின்சன் கப் அனிமோ மீட்டர் (Robinson Cup Anemometer)

ஓரிடத்தில் வீசுகின்ற அப்போதைய காற்றின் வேகத்தைக் கணக்கிட இராபின்சன் கப் அனிமோமீட்டர் பயன்படுகின்றது. கிடைமட்டத்தில் அமைந்த நிலையான தளத்தின் மீது செங்குத்தான தாங்கி ஒன்று அமைக்கப்பட்டிருக்கும்.

தாங்கியின் மேல் நுனியில் எளிதில் சுழலும் வகையில் ஓர் அமைப்பு காணப்படும். இதனுடன் சம அளவு நீளமுள்ள 3 கம்பிகள் 1200 இடைவெளியில் இணைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு கம்பியின் மறுமுனையிலும் அரை வட்ட வடிவில் அமைந்த கிண்ணம் ஒன்று இணைக்கப்பட்டிருக்கும். இந்த உள்ளீடற்ற கிண்ணத்தின் ஒரு பகுதி குவிந்தும், மற்றொரு பகுதி குழிந்தும் காணப்படும். இந்த அமைப்பு முழுவதும் ஒரு கம்பிக் கோர்வையின் மூலம் தாங்கியின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள சைக்ளோ மீட்டருடன் இணைக்கப்பட்டிருக்கும்.சைக்ளோ மீட்டரில் 0000.00 - 9999.99 அளவு வரை கணக்கிடலாம்.

செயல்படும் விதம்

காற்று வீசும் பொழுது இராபின்சன் கப் அனிமோ மீட்டரில் உள்ள அரை வட்டக் கிண்ணத்தின் குழிவான பகுதியில் மோதிச் செல்லும். இதனால் இதனுடன் இணைக்கப்பட்டுள்ள சுழலும் தன்மையுள்ள மேல் பகுதி முழுவதும் சுழலத் தொடங்கும். இந்த அமைப்பு சுழலும் பொழுது இதனுடன் இணைக்கப்பட்டுள்ள கம்பிக் கோர்வை சைக்ளோமீட்டரை சுழலச் செய்வதால் சைக்ளோ மீட்டரில் உள்ள அளவுகள் மாறும்.

கணக்கிடும் முறை

ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏற்படும் சைக்ளோமீட்டர் அளவின் மாறுபாட்டை கொண்டு காற்றின் திசைவேகம் அளவிடப்படுகிறது. ஆரம்ப அளவு

  • xகி.மீ முடிவு அளவு
  • y கி.மீ கால இடைவெளி
  • Tமணி நேரம் (y - x) /T கி.மீ/மணி

அழுத்தமானி (Barometer)

பாதரச அழுத்தமானியைப் பயன்படுத்தி காற்றின் அழுத்தத்தை மிகத் துல்லியமாகக் கணக்கிடலாம். மூடப்பட்ட கண்ணாடிக் குழாயில் உள்ள பாதரசத்தின் அளவு காற்றழுத்தத்தால் ஏற்படும் விசையால் மாறுபடுவதை அடிப்படையாகக் கொண்டு இக்கருவி செயல்படுகிறது. பொதுவாக கடல் மட்டத்தில் காற்றின் அழுத்தம் 760 மி.மீ. ஆக இருக்கும்.

அமைப்பு

இவ்வழுத்தமானியில் உள்ள 87.5 செ.மீ. உயரமுள்ள கண்ணாடியால் ஆன குழாயின் ஒரு முனை மூடப்பட்டும் மற்றொரு முனை திறந்தும் காணப்படும். மூடிய முனை மேல்நோக்கியும், திறந்த முனை கீழ் நோக்கியும் இருக்கும் வகையில் இந்தக் கண்ணாடிக் குழாய் தாங்கியின் உதவியால் நிறுத்தப்பட்டிருக்கும். இந்தக் கண்ணாடிக் குழாயில் அளவுகள் குறிக்கப்பட்டுள்ள ஒரு தாமிரக் குழாய் சுற்றப்பட்டிருக்கும். கண்ணாடிக் குழாய் முழுவதும் பாதரசத்தால் நிரப்பப்பட்டு திறந்த முனை கீழ்நோக்கி இருக்கும் வகையில் பாதரசக் கிண்ணத்தில் உள்ள பாதரசத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும்.

செயல்படும் விதம்

காற்றின் அழுத்தத்தின் காரணமாக குறிப்பிட்ட அளவு பாதரசம் மட்டுமே கண்ணாடிக் குழாயில் நிற்கும். மீதமுள்ள பாதரசம் கிண்ணத்திலுள்ள பாதரசத்துடன் கலந்துவிடும். இதனால் கண்ணாடிக் குழாயின் மூடிய மேல் முனையில் சிறிதளவு வெற்றிடம் ஏற்படும். தாமிரக் குழாயிலுள்ள 0 அளவில் கிண்ணத்தில் உள்ள பாதரச மட்டம் இருத்தல் வேண்டும். தாங்கியின் உதவியால் கண்ணாடிக் குழாயை மேலும் கீழும் நகர்த்துவதால் 0 அளவில் பாதரச் மட்டம் இருக்கும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும். பின்னர் கிண்ணத்திலுள்ள பாதரச மட்டத்திலிருந்து குழாயிலுள்ள பாதரச உயரம் கணக்கிடப்படுகிறது. இதுவே இந்த இடத்தின் அப்போதைய காற்றின் அழுத்தம் ஆகும்.

ஆதாரம்: உழவரின் வளரும் வேளாண்மை

2.9375
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top