பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / பயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள் / ஊரையே பசுமையாக்கிய அமெரிக்கத் தமிழர்
பகிருங்கள்

ஊரையே பசுமையாக்கிய அமெரிக்கத் தமிழர்

வீட்டுக்கு வீடு காய்கறித் தோட்டம்; ஊரைச் சுற்றி பழத்தோட்டம்! - ஊரையே பசுமையாக்கிய அமெரிக்கத் தமிழர்

கரூர் மாவட்டம் வேப்பங்குடியில் பிறந்தவர் இளைஞர் நரேந்திரன். இப்போது அமெரிக்காவில் வேலை பார்க்கிறார். 'வெளிநாடுகளில் பார்த்த இயற்கைவளம், நம் ஊரில் இல்லையே' என்கிற ஏக்கத்தில், கடந்த மூன்று வருடங்களாக, `வேப்பங்குடி'யை, 'பசுமைக் குடி'யாக மாற்றும் தீவிர முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

வீடுதோறும் நாட்டுக் காய்கறி விதைகளைக் கொடுத்து எல்லோர் வீட்டிலும் தோட்டம் அமைக்க ஊக்கப்படுத்துவது, ஊரைச் சுற்றி மரங்கள் நட்டு வளர்ப்பது என்று தொடங்கிய இவரது முயற்சி... இன்று ஊருக்குப் பொதுவாக சமூக காய்கறித் தோட்டம் அமைத்தல், ஊரைச்சுற்றி பழ மரங்களை நடுதல் என்று வளர்ச்சி கண்டுள்ளது. இதற்காக யாரிடமும் நிதி பெறாமல், சொந்த பணத்தை லட்சக்கணக்கில் செலவு செய்து, தனது கிராமத்தைப் பசுமை பூமியாக மாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் நரேந்திரன்.

"எங்க ஊரான வேப்பங்குடி, கரூர் மாவட்டம், கடவூர் வட்டத்தில் இருக்கு. வானம் பார்த்த பூமி. எங்கு பார்த்தாலும் வறட்சிதான். பேருந்து நிறுத்தம் இல்லாத எங்க ஊரில், பேருந்து ஏறும் வரையில் நிழலுக்கு ஒதுங்க மரம்கூட இல்லாமல் இருந்துச்சு. சின்ன வயதிலிருந்தே இந்தக் கொடுமையைப் பார்த்துப் பார்த்து வளர்ந்த எனக்கு, 'நம்ம ஊர் பசுமையா இல்லையே' என்ற ஏக்கம் மனசுல வடுவா தங்கிடுச்சு.

வீட்டுலயும் கஷ்டமான சூழல். ரொம்ப கஷ்டப்பட்டு எம்.எஸ்ஸி எலெக்ட்ரானிக்ஸ் படிச்சு முடிச்சேன். மேற்கொண்டு ஹார்டுவேர் நெட்வொர்க்கிங் படிச்சேன். கடந்த நாலு வருஷமா ஸ்விட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனினு வேலைபார்த்த நான், இப்போ அமெரிக்காவில் கணினி தொழில்நுட்ப ஆலோசகரா இருக்கேன். 2 வருஷம் ஸ்விட்சர்லாந்துல வேலை பார்த்தேன். அங்கே இருந்த இயற்கைதான், 'நம்ம ஊரையும் பசுமையாக்கணும்'ங்கிற ஊக்கத்தை எனக்குள் விதைச்சுச்சு.

இந்தியாவிலிருந்து ஐரோப்பாவில் இறக்குமதியாகும் காய்கறிகளை செக் பண்ணி பார்த்த அங்குள்ள அமைப்புகள், 'இது இயற்கை கிடையாது. இதுல பூச்சிக்கொல்லி மருந்துகள் படிஞ்சுருக்கு'னு ஒதுக்கிட்டாங்க. அவங்க 100 சதவிகிதம் இயற்கையான, மரபணு மாற்றப்படாத காய்கறி ரகங்களை மட்டுமே பயன்படுத்துறாங்க. அதைப் பார்த்ததும், 'வேப்பங்குடி மக்களை இயற்கைக்குத் திருப்பணும்'னு மூணு வருஷத்துக்கு முன்னாடி முடிவு பண்ணினேன். நமது பாரம்பர்ய காய்கறி விதைகளை வாங்கி, அதை எங்க ஊர்ல உள்ள 200 குடும்பங்களுக்கும் கொடுத்தேன்.

தவிர, வெள்ளியணை பக்கமுள்ள ஜல்லிப்பட்டி, எங்க ஊருக்கு பக்கத்துல உள்ள பாளையம் உள்ளிட்ட கிராம மக்களுக்கும் கொடுத்தேன். அவங்க வீடுகள்ல அதைப் பதியம்போட்டு, இயற்கை காய்கறிகளை உற்பத்தி பண்ணினாங்க. ஆரம்பத்துல ஒத்துழைப்பு தராத மக்கள்கூட, அந்தக் காய்கறிகளை சாப்பிட்டுப் பார்த்துட்டு, 'அவ்வளவு டேஸ்டா இருக்கு. உடம்புக்கும் நல்லா இருக்கு'னு பாராட்டினாங்க. அந்த உற்சாகத்துலேயே, ஊரைச் சுற்றி மரங்கள் வளர்த்து, பசுமையாக்க நினைச்சேன்.

தமிழகத்தில் முதல் முயற்சியாக, அதுவும் தனிநபரின் முயற்சியாக, ஊருக்குப் பொதுவாக 2 ஏக்கர் நிலத்தில் ஒரு சமூக காய்கறித் தோட்டம் அமைச்சு, அங்கே இயற்கை முறையில் விளைவிக்கும் காய்கறிகளை மக்களுக்கு இலவசமாக அளிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறோம். அதன்மூலம், 365 நாள்களும் இயற்கை காய்கறிகள் இலவசமாகக் கிடைக்கும் ஊராக வேப்பங்குடி மாறும்.

வெறும் மரக்கன்றுகளை வைச்சுட்டு, அதன்பிறகு அதை நீரூற்றி வளர்க்கிற முறைக்கு பதிலா, புதுமுறை பின்பற்ற முடிவெடுத்தோம். அதனால், போத்து வெட்டி வளர்க்கும் முறைப்படி, ஆலம், அரசு, பூவரசம் என்று நாட்டு மரக்கிளைகளை வெட்டி, 10 அடி மரமாக ஒரு இடத்தில் வளர்த்து, அதை நட்டு பாதுகாத்து ஊர்முழுக்க நடவு செய்தோம். இதுவரை ஊர் முழுக்க 500 மரப்போத்துகளை அப்படி நட்டு, அனைத்தையும் உயிராக்கிவிட்டோம். நான் அமெரிக்காவில் இருப்பதால், பாளையத்தைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வன், எங்க ஊரைச் சேர்ந்த வேல்முருகன், மணிகண்டன் ஆகிய இளைஞர்கள் மூலமா இந்த முயற்சியைச் செய்தேன்.

எனது ஊரில் மட்டுமல்லாம, ஜல்லிபட்டி கிராமத்திலும் மரம் நட்டு இருக்கிறேன். தற்சமயம், அதே மரங்களை வேறு சில ஊர்களுக்கும் கொடுத்து வருகிறோம். அதேபோல், கடந்த அக்டோபர் 1-ம் தேதி, எங்க ஊர் மக்களைத் திரட்டி, ஊரில் மரம் நடும் விழாவை நடத்த வைத்தேன். 500 மரக்கன்றுகளை ஊர் முழுக்க நட்டோம். அந்த விழாவில் கலந்துகிட்ட கரூர் சார்பு நீதிபதி மோகன்ராம் சார், எங்கள் முயற்சியைப் பெரிதும் பாராட்டினார்.

இப்போது, பக்கத்தில் உள்ள 5 கிராமங்களில் மரம் நட கேட்கிறார்கள். நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கு. இதை இப்படியே விட்டுவிடாமல், இன்னும் அதிகமாக மரம் நட்டு நன்றாக வளர்த்து, வறட்சியின் பிடியில் இருக்கும் கடவூர் ஒன்றியத்தையே பசுமையாக்கிவிட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

எங்க கிராம மக்கள், நாங்கள் கொடுத்த பாரம்பர்ய காய்கறி விதைகளை வைத்து, தோட்டம் போட்டு, பயனாளிகளா மட்டும் ஆயிட்டாங்க. அதன்மூலம், விதைபெருக்கம் நடக்கலை. அதனால், தமிழகத்தில் முதல் முயற்சியாக, அதுவும் தனிநபரின் முயற்சியாக, ஊருக்குப் பொதுவாக 2 ஏக்கர் நிலத்தில் ஒரு சமூக காய்கறித் தோட்டம் அமைச்சு, அங்கே இயற்கை முறையில் விளைவிக்கும் காய்கறிகளையும் விதைகளையும் மக்களுக்கு இலவசமாக அளிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறோம். அதன்மூலம், 365 நாள்களும் இயற்கை காய்கறிகள் மற்றும் விதைகள் இலவசமாகக் கிடைக்கும் ஊராக வேப்பங்குடி மாறும். அதைப்பார்த்து மற்ற கிராமங்களிலும் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு எற்படும். அதேபோல, மரபு விதைகள் காப்பதற்கும் இந்த முயற்சி உதவும்.

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் சொன்னபடி, கிராமத்தைச் சுற்றி 10 வகையான, 200-க்கும் மேற்பட்ட பழ மரங்களை வளர்க்க இருக்கிறோம். பழ மரங்கள் இருந்தால், பசியின்றி மக்கள் உறங்கலாம், அடுத்தவர்களுக்கு கொடுக்கும் மனப்பான்மையும் அவர்களுக்கு வளரும் என்பதால், எனது ஊரைச் சுற்றி நாட்டு ரக பழ மரங்களை நடவும் இருக்கிறோம். சமூக காய்கறித் தோட்டம் மூலமாகவும், ஊரில் உள்ள வீடுகளில் காய்கறித் தோட்டம் போடுவதன் மூலமும், இயற்கையாக விளையும் காய்களைக் கொண்டு ஒரு விதை வங்கியை உருவாக்கி, அதை மற்ற ஊர்களுக்கு பரப்பும் முயற்சியிலும் இறங்க இருக்கிறோம்.

சமீபத்தில் இளைஞர்களைக் களமிறக்கி, முள்காடா கிடந்த ஊர் சுடுகாட்டைச் செப்பனிட்டு, சுற்றி மரக்கன்றுகள் வைத்து, பூங்காபோல மாற்றினோம்.

இவற்றைத் தாண்டி, அடர்வனம் உருவாக்குதல், பசுமை சார்ந்த தொழில் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், இயற்கை உரத்தயாரிப்பு என்று இயற்கை சார்ந்து பல வேலைகளையும் அடுத்தடுத்து செய்யும் திட்டங்களும் இருக்கின்றன. என் கிராமத்தை 2022-க்குள் பசுமையான கிராமமாக மாற்றிக் காட்டுவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது" என்று தம்ஸ்அப் காட்டுகிறார் நரேந்திரன்.

நல்ல கனவுகள் நனவாகும்!

ஆதாரம் : https://www.vikatan.com/news/environment/this-american-tamil-created-a-green-environment

2.84615384615
ravi Dec 02, 2019 11:53 AM

உங்கள் முயற்சிக்கு
நன்றி .

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top