பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / பயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள் / வேளாண் பொருட்களின் ஏற்றுமதி வாய்ப்புகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வேளாண் பொருட்களின் ஏற்றுமதி வாய்ப்புகள்

வேளாண் பொருட்களின் ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

இந்தியாவில் காய்கறிகள், பழங்கள், முந்திரி, தேயிலை, வாசனை பொருட்கள் ஆகியவற்றின் உற்பத்தி அதிகம் இருந்தாலும், உலக வேளாண் வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு ஒரு சதவீத அளவிலேயே இருந்து வருகிறது.

இந்தியாவின் ஏற்றுமதி வாய்ப்புகள்

இந்திய ஏற்றுமதி கொள்கையும் வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை கணிசமான அளவு உயர்த்தும் வகையில் ஏற்றுமதியாளர்களுக்குப் பல சலுகைகளை அறிவித்துள்ளது. பதனிடப்பட்ட உணவு வகைகளின் ஏற்றுமதியும் மிக பெரும் அளவில் ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. மேலும், விதேஷ் க்ரிஷி கிராம் உத்யோக் யோஜனா (VKGUY) திட்டத்தின் கீழ் மதிப்பூட்டப்பட்ட வேளாண் மற்றும் வன பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் கீழ் தேங்காய் எண்ணெய், உருளைக்கிழங்கு சிப்ஸ், ஏலக்காய், சூப், சாஸ், பாஸ்தா மற்றும் பேக்கரி பொருட்கள், தாவர மருத்துவ மூலிகை பொருட்கள் மற்றும் காடுகளிலிருந்து கிடைக்கும் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியை அதிகரிக்க முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

அமெரிக்காவும், சீனாவும் மிக அதிக அளவில் இந்தியாவிலிருந்து புதினா பொருட்களை இறக்குமதி செய்கின்றன. முக்கியமாக மருந்துகள் தயாரிப்பிலும், பல்பொடி, மெல்லும் மிட்டாய் மற்றும் பான் மசாலா தயாரிப்புகளிலும் பயன்படுகின்றன.

தோட்டக்கலைப் பயிர்களில் குறிப்பாக முந்திரி, நறுமணப் பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதி வாய்ப்புகள் மதிப்பு அடிப்படையில் அதிகரித்துக் கொண்டு வருகின்றன. பருவ காலங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகள் மற்றும் அதிக மதிப்புள்ள காய்கறிகளான பீன்ஸ், பட்டாணி, பச்சை மிளகாய், புரகோலி, அஸ்பிரகஷ், காளான், குடை மிளகாய் போன்றவற்றின் ஏற்றுமதிக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. குறைந்த காரத்தன்மையுள்ள வெள்ளை, மஞ்சள் நிற வெங்காயத்திற்கு ஐரோப்பிய நாடுகளில் அதிக அளவு தேவை உள்ளது.

தமிழ்நாட்டில் ஏற்றுமதி வாய்ப்புகள்

தமிழ்நாடு வாழைப்பழ உற்பத்தியில் (மகாராஷ்ரா முதலிடம்) இரண்டாம் இடத்தை வகிக்கின்றது. தற்போது சர்வதேச சந்தையில் ரொபஸ்டா வகை வாழைப்பழங்கள் அதிகம் விரும்பப்படுகின்றன. இவ்வகை வாழை தமிழ்நாட்டில் சாகுபடிக்கு உகந்ததாக உள்ளது. பிற வகை வாழைகளான கேவண்டிஸ், செவ்வாழை, நேந்திரன் ஆகியவற்றிற்கும் அதிக சந்தை வாய்ப்புகள் உள்ளன.

மாம்பழ சாகுபடி பரப்பில் தமிழ்நாடு ஆறாவது இடத்தையும், உற்பத்தியில் ஐந்தாம் இடத்தையும் வகிக்கின்றது. சேலம், தருமபுரி மாவட்டங்களில் சுமார் 50 மாம்பழ இரகங்கள் பயிரிடப்படுகின்றன. மேலும் இது ஒரு முக்கியமான மாம்பழ சந்தையாகும்.

திராட்சை சாகுபடி கோவை மற்றும் மதுரை மாவட்டங்கள், கம்பம் பள்ளத்தாக்கு மற்றும் தென்காசி ஆகிய இடங்களில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. திராட்சை ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. எனவே, மாநிலத்தில் ஏற்றுமதிக்கு உகந்த இரகங்களைப் பயிரிட ஊக்கப்படுத்த வேண்டும். இதன்மூலம் மத்திய கிழக்கு நாடுகளின் சந்தைகளின் விலையில் நாம் போட்டியிட முடியும். இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் திராட்சை அறுவடை காலமானது (ஜனவரி, பிப்ரவரி), பிற ஏற்றுமதி நாடுகளான சிலி, இத்தாலி மற்றும் கிரேக்க நாடுகளின் அறுவடைக் காலத்திலிருந்து முழுவதும் மாறுபடுவதால் ஏற்றுமதிக்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.

தமிழ்நாட்டில் சீமை வெள்ளரி (கெர்கின்) தருமபுரி, திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி மற்றும் கோவை மாவட்டங்களில் பயிர் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பயிர், பாசன வசதியுள்ள இடங்களில் பயிரிடப்பட்டாலும், இப்பயிருக்கு அதிக கூலியாட்கள் தேவைப்படுகிறார்கள். தற்பொழுது பல்வேறு நிறுவனங்கள் விவசாயிகளிடம் ஒப்பந்த முறையில் கொள் முதல் மற்றும் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ளன. சீமை வெள்ளரியின் முக்கியமான தரக்குறியீடானது காயின் விட்ட அளவு ஆகும். தமிழ்நாட்டில் ஒப்பந்த பண்ணை மூலம் சீமை வெள்ளரி சாகுபடி செய்து, ஏற்றுமதி செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளது.

சர்வதேச சந்தையில் அதிக 'குர்குமின்' கொண்ட மஞ்சள் வரவேற்கப்படுகிறது. தற்பொழுது இயற்கை சாயங்களுக்கு வளர்ந்த நாடுகளில் தேவை அதிகரித்து வருகிறது. இயற்கை சாயத்தை மஞ்சளிலிருந்து பிரித்தெடுத்து ஏற்றுமதி செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளது.

தமிழ்நாட்டில் திருச்சி, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் மிளகாய் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டிலிருந்து பங்களாதேஷ், சிங்கப்பூர், மலேசியா, இத்தாலி, இங்கிலாந்து அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு மிளகாய் ஏற்றுமதி செய்ய வாய்ப்புகள் உள்ளது.

மூலிகைப் பயிர்கள் ஏற்றுமதிக்கு இந்தியா முக்கிய இடம் வகிக்கிறது. அவுரி, நித்யகல்யாணி ஆகிய மூலிகைப் பயிர்கள் வர்த்தக ரீதியாக திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் பயிர் செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஜெர்மனி மற்றும் பிரான்சு ஆகிய நாடுகள் நித்யகல்யாணி மூலிகையை பெருமளவில் இறக்குமதி செய்கின்றன. இங்கிலாந்து, அமெரிக்கா, இத்தாலி மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும் நித்யகல்யாணி மூலிகையை இறக்குமதி செய்கின்றன.

கடல் சார் பொருட்களின் ஏற்றுமதில் ஆண்டு ஒன்றுக்கு 1.8 மில்லியன் டாலர் அளவிற்கு ஏற்றுமதி செய்துள்ளோம். இதில் 55 சதம் குளிரூட்டப்பட்ட செம்மீன் மற்றும் டியுனா மீன் ஆகும். மற்றவை மதிப்பூட்டப்பட்ட கடல்சார் பொருட்கள் ஆகும். இதில் சீனாவும், ஜப்பானும் அதிகளவு இறக்குமதி செய்கின்றனர்.

ஏற்றுமதி வருவாய் அதிகரிக்க வேண்டுமெனில், தரமான சிறந்த வேளாண் தொழில் நுட்பங்கள், சிறந்த சுகாதார முறைகள் மற்றும் சிறந்த தயாரிப்பு முறைகளை பொருட்கள் தயாரிப்பிலும், பதனிடுதலின் போதும் மற்றும் சந்தை படுத்தும் போது கையாளுதல் அவசியம். 'ஏற்றுமதி செய் அல்லது அழிவுறு' என்ற தத்துவத்தை முதலில் நமது முதல் பிரதமர் நேரு அவர்கள் நமக்கு தந்திருக்கிறார்கள்.

தற்போது புகையிலை ஏற்றுமதிக்கு சிறந்த வாய்ப்பு அமைந்துள்ளது. ஏனெனில், புகையிலை உற்பத்தியாகும் நாடுகளான ஜிம்பாவே, அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் அதன் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் புகையிலை உற்பத்தி மானியம் குறைக்கப்பட்டுள்ளது. சீனாவின் புகையிலை ஏற்றுமதி விலை அதிகரித்துள்ளது. பிரேசில் புகையிலை ஏற்றுமதியாளர்களுக்கும் அந்நிய செலாவணி ஏற்ற இறக்கத்தினாலும், அரசின் வரிச்சலுகை திரும்பப் பெறப்பட்டதாலும் இலாபம் குறைந்துள்ளது.

மலர் ஏற்றுமதியிலும் நல்ல இலாபம் காணவும் ஏற்றுமதியாளர்களை ஊக்கப்படுத்தவும் தமிழ்நாடு அரசு புது கொள்கையினை வடிவமைத்துள்ளது. இதன் படி மலர் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு மின்சார இணைப்பு உடனடியாக வழங்குவதும், இந்நிறுவன ஸ்திர சொத்துகளுக்கு 20 சதம் மானியம் இரண்டு மில்லியன்களுக்கு மிகாமல் வழங்கவும், பசுமை குடில், பாசன மற்றும் உரமிடும் கருவிகள், குளிரூட்டும் அறைகள், குளிரூட்டப்பட்ட டிரக் வண்டிகள் ஆகியவை ஸ்திர சொத்தின் கீழ் அனுமதிக் கப்பட்டுள்ளன.

கிராமத் தயாரிப்புகளுக்கு ஒரு முத்திரையை (Brand name) உருவாக்க வேண்டும். பாக்கு மட்டையால் செய்யப்பட்ட தட்டு, குடுவை, ஆலிலை மற்றும் தென்னையால் செய்யப்பட்ட பொருட்களுக்கு வெளிநாடுகளில் நல்ல விலை கிடைக்கிறது. தகுந்த விற்பனை உத்தி, தனி முத்திரை என்று நாம் செயல்பட்டால் பல மடங்கு இலாபம் ஈட்ட முடியும். ஏற்றுமதி வணிகத்தில் கைவினைப் பொருட்கள் இன்றியமையாத பங்கு வகிக்கின்றது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் உற்பத்திப் பொருட்களில் கைவினைப் பொருட்கள் எப்பொழுதும் சீரான ஏற்றுமதி இயல் திறன் கொண்டதாகவே உள்ளது. இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் வரலாற்றுத் தனிச்சிறப்பு காரணமாக இந்திய கைவினைப் பொருட்கள் சீனா, தைவான், கொரியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற மிகப் பெரிய போட்டியாளர்களுடன் போட்டியிட முடிகிறது.

ஏற்றுமதி இடர்பாடுகள்

வளர்ந்த நாடுகளால் விதிக்கப்படும் அதிகப்படியான கட்டுப்பாடுகள் மற்றும் தர நிர்ணயம், அதிகமான விமானக் கட்டணம் மற்றும் தேவைப்படும் அளவு விமானங்களில் இடமின்மை, உள்நாட்டிலும் துறைமுகங்களிலும் போதுமான விஞ்ஞான முறை சேமிப்பு வசதிகள் இல்லாதது மற்றும் போக்குவரத்திற்கான அதிக செலவு போன்றவையே முக்கிய ஏற்றுமதி தடைகளாகும். மேலும் உள்நாட்டு சந்தையில் உள்ள வேளாண் பொருட்களைப் பற்றிய விதிமுறைகள் ஏற்றுமதி சந்தையில் முற்றிலுமாக மாறுபடுகின்றன. அறுவடைக்குப் பிந்தைய தொழில் நுட்பத்தை கடைபிடிக்காமை, குறைந்த உற்பத்தித் திறன், போதிய சேமிப்பு வசதியின்மை, சுகாதார மற்றும் தாவர சுகாதார முறைகளை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் மற்றும் ஏற்றுமதிக்கு ஏற்ற கட்டமைப்பு வசதிகள் இல்லாமை போன்றவைகள் ஏற்றுமதி வாய்ப்புகளை குறைத்து விடுகின்றன.

ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான அறிவுரைகள்

இவற்றையெல்லாம் களைந்து, துறைமுகங்கள், சாலைகள், விமானப் போக்குவரத்து, குளிர்பதன சேமிப்புக் கிடங்குகள், உள் நாட்டு கொள்கலன் கிடங்குகளை அதிகப்படுத்துதல், தர மேலாண்மை (TQM) மற்றும் தர நிர்ணய தொழில் நுட்பங்களை (HACCP) கையாளுவதன் மூலம் ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு அதிக விலை பெற முடியும். ஏற்றுமதி வாய்ப்புகளை மேலும் உயர்த்த ஒப்பந்த பண்ணையம் முறையில் (Contract Farming) சாகுபடி செய்தல் வேண்டும்.

ஆதாரம் : வேளாண் மற்றும் ஊரக மேலாண்மைத் துறை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்-641 003.

3.22222222222
ஆர்த்தி Nov 01, 2019 07:54 PM

மலர் சாகுபடி மற்றும் ஏற்றுமதிக்கான பயிற்சி மையங்கள் பற்றிய ஆலோசனை வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

க.நாகராஜன் Jul 26, 2019 11:35 PM

மஞ்சள் மிளகு மற்றும் நெசவுதுண்டுகள் பற்றிய விவரங்கள்தேவை

பி.சங்கரன். Jan 20, 2019 06:53 PM

காளன்களை ஏற்றுமதி செய்யவும், மற்றும் காளான் தொழில் பயிற்சி மையங்கள் பற்றி தங்கள் ஆலோசனைகள் கூறும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top