நெல் பயிரில் இலை உறைக் கருகல் நோய் பரவலாக ஆங்காங்கே காணப்படுகிறது. இந்நோயை விவசாயிகள் கட்டுப்படுத்த கீழ்கண்ட முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
வயல் வெளிகளிலும், சுற்றுப்புறங்களிலும் நிரந்தரமாகக் காணப்படும் புல் மற்றும் களைச் செடிகளில் இருந்து இந்த நோய் எளிதில் நெல் பயிருக்கு பரவுகிறது. மேலும் இந்நோய் மண் மூலமாகவும், அதிகமான ஈரப்பதம் காரணமாகவும், மிதமான வெப்பம் இருக்கும் சூழல் மற்றும் பாசன நீர் மூலம் அடுத்த வயல்களுக்கும் பரவும் தன்மை கொண்டது.
வயல்வெளிகள், சுற்றுப்புறங்களில் புல் மற்றும் களைச் செடிகள் இல்லாதவாறு சுத்தமாக பார்த்துக் கொள்ள வேண்டும். சதுர நடவு (திருந்திய நெல் சாகுபடி) மேற்கொள்வதன் மூலம் இந்நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
தழைச்சத்து உரங்களை சமமாகப் பிரித்து இட வேண்டும். நோய் தாக்கிய வயலில் இருந்து அடுத்த வயலுக்கு நீர் பாய்ச்சக் கூடாது. டிரைக்கோடெர்மா விரிடி என்ற இயற்கை ஒட்டுண்ணிகளின் வளர்ச்சியையும் இனப்பெருக்கத்தையும், ஊக்குவிக்கும் வகையில் நிலத்திற்கு அதிக அளவில் இயற்கை தழைச் சத்து உரங்களை இட வேண்டும்.
இந்த நோயை நன்கு கட்டுப்படுத்தக் கூடிய கார்பன்டாசிம் (50 டபுள்பி) என்ற பூசணக் கொல்லி மருந்தை ஏக்கருக்கு 200 கிராம் என்ற அளவில் நடவு செய்த 45 முதல் 50 நாள்களுக்குப் பிறகு, அல்லது நோய் பாதிப்பு தென்பட்ட உடனும் மீண்டும் 15 முதல் நாள்கள் இடைவெளியில் 200 லிட்டர் நீரில் கலந்து பயிரின் அடிப்பாகத்தில் உள்ள இலை உறைகள் மற்றும் தண்டுப்பகுதி நன்கு நனையும் வகையில் 2 முதல் 3 முறை தெளிக்க வேண்டும்.
அல்லது ஏக்கருக்கு ஹெக்சோகோனசோல் 5 சதவிகிதம் இசி 500 மில்லி அல்லது புரோப்பிகோனசோல் 25 சதவிகிதம் இசி 200 மில்லி என்ற அளவில் நோய் தோன்றிய உடன் தெளிக்க வேண்டும். அல்லது அசோசிஸ்டிரோபின் என்ற பூசணக் கொல்லி மருந்தை 200 மிலி என்ற அளவில் தெளித்தும் கட்டுப்படுத்தலாம்.
ஆதாரம் : தினமணி