பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

நெற் பயிரில் உயிராற்றல் வேளாண்மை

உயிராற்றல் வேளாண் வழிமுறைகளைக் கடைப்பிடித்த நெல் பயிரிடும் முறை பற்றிய குறிப்புகள்

நெல் பயிரிடும் முறை

விவசாயிகள் அவரவர் வசதிக்கு ஏற்ற வகையில் பருவம், நீரின் அளவு இவற்றை அனுசரித்து பாரம்பரிய இரகங்கள் மற்றும் உயர் விளைச்சல் இரகங்களைத் தேர்வு செய்து கொள்ளவும்.

ஏனெனில் அருகில் உள்ள வயல்களில் ஒரு இரகம், நாம் ஒரு இரகம் தேர்வு செய்யும் போது குறிப்பிட்ட இரகம் 10 நாட்கள் கால அளவில் முன்னும் பின்னுமாக விளைந்து அறுவடைக்கு தயாரானால் பரவாயில்லை.

ஒரு இரகம் 110 நாட்களிலும் அடுத்த இரகம் 150 நாட்கள் கால அவகாசத்தில் விளைந்தால் எலிகள், பூச்சிகள், பறவைகள் தொல்லை தாமதமாக விளைச்சல் தரும் நெல்லை பாதிக்கும்.

கால்வாய் பாசனமாக இருப்பின் நீர் அதிகமாகவோ அல்லது பற்றாக் குறையோ ஏற்படக் காரணமாகக் கூடும். அனைத்து வயல்களும் ஒரே சமயத்தில் அறுவடைக்கு தயாராக உள்ள போது இயந்திர அறுவடை சாத்தியமாகும். விதைநெல் தேர்வு செய்தவுடன் ஒரு ஏக்கருக்கு செம்மை நெல்  சாகுபடி முறைகள் கடைப்பிடிப்பதாக இருப்பின் 3 கி.கி. வரையும் அடர் நடவு முறையாக இருப்பின் 15 கி.கி. வரையும் ஏற்பாடு செய்து கொள்ளவும்

நாற்றங்கால் தயாரிப்பு

நாற்றங்கால் வயலை-1 புழுதி நாற்றங்கால் 2-சேறு கலக்கிய நாற்றங்கால் என இரண்டு வகைகளாகவும் நாற்று உற்பத்தி செய்ய ஏற்பாடுகளை செய்யவும்.

புழுதி நாற்றங்கால்

ஒரு ஏக்கருக்கு நாற்று உற்பத்தி செய்ய சுமார் 1 சென்ட் முதல் 11/2 சென்ட் பரப்பு நிலத்தை உழவு செய்த பின்பு அதில் சுமார் 3 டன்கள் அளவு நன்றாக மட்கிய தொழுஉரத்தை இட்டு மீண்டும் உழவு செய்யவும்.

நன்றாக உழவு செய்து கட்டிகள் சறுகுகள் போன்றவை இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.

அந்த வயலைச் சுற்றிலும் உள்பக்கம் ஒரு கால்வாய் அமைக்கவும். கால் வாயின் அகலம் 1 அடியாகவும் ஆழம் 6 முதல் 9 அங்குலம் இருக்குமாறும் மண்ணை எடுத்து உள்பக்கமாக இடவும்.

பின்பு இடையில் நான்கு அடி அகலம் மேடையாக விட்டு மீண்டும் 1 அடி அகல கால்வாய்களை அமைக்கவும். இவ்வாறு கால்வாய் அமைப்பை ஏற்படுத்தும் போது எடுக்கும் மண்ணை கால்வாயின் இரு பக்கங்களிலும் இடும்போது மேடையின் உயரம் சுமார் 1 அடி இருக்குமாறு அமையும்.

இந்த மேடைப்பாத்திகளை நன்றாக சமன் செய்து நீள வாக்கில் மேடையின் நடுப்பகுதி உயரமாகவும் பக்கவாட்டில் இறக்கமாக (தாழ்வாக) இருக்குமாறும் அமைக்கவும். இவ்வாறு அமைக்கும் போது நீர் பாய்ச்சும் போது. நீர் கால்வாய்களில் முதலில் சென்று பின்பு மேடைகளின் மீது மெதுவாக பரவும். இதன் மூலம் நெல் மணிகள் அடித்துச் செல்லப்படுவது தவிர்க்கப்படும். நாற்றங்கால் வயல் தயாரான உடன் விதை நெல்லை நீரில் மாலைநேரத்தில் ஊறவைக்கவும். மாலையில் விதைநெல் முழுவதும் மூழ்கி இருக்கும் அளவு நீரில் CPP-1கி.கி. உடன் கொம்பு சாண உரம் 50 கிராம் அளவு எடுத்து நன்றாகக் கரைக்கவும். பின்பு நெல்லை அந்த நீரில் ஊறவைக்கவும், இரவு முழுதும் ஊறிய நெல்லை தனியாக வடித்து எடுக்கவும். எடுத்த நெல்லை சணல் சாக்குப்பையில் கட்டி இருட்டான இடத்தில் வைத்து மேலும் ஒரு சணல் சாக்குப்பை கொண்டு போர்த்தி வைக்கவும்.

வடித்த நீரை நாற்றங்கால் வயலில் தெளித்து விடவும். நெல் மூட்டையை மறு நாள் காலை நாற்றங்கால் மேடைகளின் மீது ஒரு அங்குல இடைவெளியில் நெல் மணிகள் விழுமாறு தூவி விடவும். அதன் பிறகு மேடைகளின் மீது விரல்களால் அல்லது கிளைகளுடன் கூடிய குச்சிகளைக் கொண்டு கிளறி விடவும். அதிகமாக நெல்மணிகள் வெளியில் தெரியும் இடத்தில் கால்வாய் பகுதியில் இருந்து கட்டிகள் இல்லாத மண்ணை கைகளால் தூவி மூடவும். பின்பு நீர் பாய்ச்சவும்.

முதல் முறை நீர் பாய்ச்சும் போது நீர் மிக வேகமாக பாய்ந்து செல்லாமல் குறைவான அளவில் மிதமான வேகத்தில் நீர் பாய்ச்சவும். இந்த நாற்றங்கால் வயல் சேறு கலந்த பின்பு நெல் விதைப்பதாக இருப்பின் முதலிலேயே தொழுஉரம் இட்டு பின்பு நீர் பாய்ச்சி உழவு செய்யவும். நன்றாக உழவு செய்து சமன் செய்த பின்பு நீர் அதிகமாக இல்லாமல் அளவான நீரை வயலில் நிறுத்தவும். மறுநாள் சிறிதளவு நீர் கறைந்த பின்பு புழுதி நாற்றங்கால் தயாரித்ததைப் போன்றே கால்வாய்களை அமைத்து மேடைப்பாத்திகளை அமைக்கவும்.

மேடைகளை சமன் செய்யும்  போது நீள வாக்கில் மேடைகளின் மையப்பகுதிகளைச்  சற்றே உயரமாக  வரும்படி மண்ணை சிறு பலகை கொண்டு தள்ளி சமன் செய்து கால்வாய்களையும் பலகையால் ஒதுக்கி விடவும். இந்த மேடைகளின் மீது முன்பு போலவே ஊறவைக்கப்பட்ட நெல் மணிகளை தூவிவிடவும், நெல் மணிகளை தூவுவதற்கு முன்பாக நீர் மேடைகளின் மீதும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். நெல்லைத் தூவிய பின்பு நீரை மெதுவாக வெளியேறு மாறு செய்து வடித்து விடவும்.

மீண்டும் மாலை நீர் பாய்ச்சவும். மறு நாள் காலை 10 மணி அளவில் வெயில் உஷ்ணம் அதிகரிக்கும் போது நீரை வடிக்கவும். மீண்டும் மாலை நீர் பாய்ச்சவும் 5 நாட்கள் முதல் 7 நாட்கள் இவ்வாறு செய்தால் நெல் மணிகள் முளைத்து இரண்டு இலைகளுடன் சுமார் 1 முதல் 11/2 அங்குலம் உயரம் வரை வளர்ந்திருக்கும். பின்பு நீரை வடிக்க வேண்டிய அவசியம் இல்லை. புழுதி நாற்றங்காலில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் லேசாக நீர் பாய்ச்சுவதன் மூலம் இதே அளவில் நாற்றுகளை உற்பத்தி செய்ய முடியும். பின்பு விதைத்த ஏழு நாட்களில் B.D.501 எனப்படும் கொம்பு சிலிக்கா உரத்தை தெளிக்கவும். இவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட நாற்றுகளை SRI (செம்மை நெல் சாகுபடி) முறையில் நடவு செய்வதாக  இருந்தால் 10வது நாள் முதல் 15 நாட்களுக்குள் நடவு செய்வது மிகவும் நல்லது.

பழைய முறையில் நடவு செய்வதாக இருப்பின் இரகத்தை பொறுத்து நாட்களை அதிகரித்துக் கொள்ளலாம். SRI முறையில் நடவு செய்வதாக இருப்பின் நெல் விதைத்த உடனேயே நடவு வயலையும் தயார் செய்தல் மிகவும் நல்லது. ஏனெனில் முன்னர் கூறியுள்ளபடி உற்பத்தி செய்த நாற்றுகள் குறைந்தது நான்கு இலைகளுடன் 4 முதல் 6 அங்குல உயரம் கூட இருக்கும். நடவு வயல்: நீரின் வசதிகளைப் பொறுத்து (மழை, கால்வாய், இறைப்பு நீர் பாசனம்) பசுந்தழை உரப்பயிர்கள் அல்லது அனைத்து வகையான விதைகளையும் கலந்து விதைத்து மடக்கி உழுது உரத்தேவையை குறைக்கலாம். இதற்கு 30 முதல் 40 கி.கி. விதைகள் விதைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த விதைகளையும் உயிராற்றல் வேளாண் முறை தயாரிப்புகளான CP-BD 500 எனப்படும் கொம்பு சாண உரம் இவற்றுடன் விதை நேர்த்தி செய்து விதைக்கும் போது மண் விதையில் நுண்ணுயிர் பெருக்கம் ஏற்பட்டு வளர்க்கப்படுகிறது. அல்லது அதற்குண்டான நீர் வசதிகள் அமையாவிட்டால் மட்கிய தொழு உரம் குறைந்தது 20 டன்கள் வரை இட்டு உழவு செய்யவும். இரண்டு மூன்று முறை உழவு செய்தவுடன் சமன் செய்யவும்/அல்லது நீரை ஓரளவு வயலில் நிற்குமாறு செய்து  பின்பு நீர் வற்றும் போது மேடான பகுதிகளை கண்டறியலாம்.

மேடாகத் தோன்றும் பகுதிகளை தாழ்வான பகுதிகளில் தள்ளி விட்டு 4 முதல் 5 நாட்களில் மீண்டும் உழவு செய்து சமன் செய்யவும். மீண்டும் இரண்டு நாட்களில் சிறு சிறு மேடுகள் தெரிந்தால் அவற்றையும் நீர் தேங்கி உள்ள பகுதிக்கு முழுவதுமாக வெளியேற்றிட வேண்டும். இவ்வாறு முறையாக தயாரிக்கப்பட்ட நடவு வயலில் நடவுக்கு முதல் நாள் CPP 1 கி.கி. கொம்பு சாணம் உரம் (B.D .500)-100 கிராம், 15 லிட்டர் நீரில் நன்றாக கரைத்து தெளிக்கவும்.

பின்பு நாற்றுகளை மறு நாள் காலை நடவு செய்யவும்.

SRI (செம்மை நெல் சாகுபடி) முறையில் நடவு செய்வதாக இருந்தால் கயிறு உபயோகித்து சரியான இடைவெளியில் நடவு செய்யலாம் அல்லது மார்க்கர் எனப்படும் சிறு உபகரணத்தை உபயோகித்து அடையாளம் செய்து அதன் மூலம் நடவு செய்யலாம். நடவின் போது வயலில் நீர் முழுவதுமாக வெளியேற்றி கூழ் போன்ற சேறு இருக்குமாறு வைத்துக் கொள்ளவும். நாற்றுகளை நாற்றங்காலில் இருந்து எடுக்கும் போது ஒவ்வொரு செடியாக அதனுடன் சேர்ந்து வரும் மண்ணுடன் எடுத்து வேர்கள் அறுபடாமல் தட்டுகளில் வைத்து எடுத்து நடவு வயலுக்கு கொண்டு செல்லவும்.  (பழைய முறையாக இருப்பின் வளர்ந்த நாற்றுகளை கட்டுகளாக எடுத்துச் செல்வது வழக்கம்.)

இவ்வாறு எடுத்து வந்த நாற்றுகளை சரியான இடைவெளியில் ஒவ்வொரு நாற்றாக எடுத்து அடையாளம் உள்ள இடத்தில் நடவு செய்யவும். நாற்றுகளை நடும்போது நாற்றின் தண்டு முடிந்து வேர்கள் துவங்கும் இடத்தில் இருந்து ஐந்து விரல்களாலும் கீழ் நோக்கியப்படி வேர் பகுதியை பிடித்து மண்ணுக்குள் விரல்களை அழுத்தி வேர்கள் மடங்காமல் நடவு செய்யவும்/அல்லது நாற்றை அடையாளம் உள்ள இடத்தில் கிடையாக வைத்து வேர்ப் பகுதியை மட்டும் நான்கு விரல்களைக் கொண்டு அகலமாக வேர்ப்பகுதி முழுதும் நீள வாக்கில் கிடையாக மண்ணுக்குள் செல்லுமாறு அழுத்தி விடவும். இவ்வாறு நடவு செய்யும்  போது நாற்றின் மேல் பகுதி சாய்ந்தாற் போல் தெரியும் அதனால் தவறில்லை. இதில் முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டியது வேர்கள் மண்ணுக்குள் ப வடிவத்தில் மடங்கி வேர்கள் நுனிப்பகுதி மேல் நோக்கி வராமல் விரிந்து மண்ணுக்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்வது மட்டுமே. நடவு செய்த முதல் மூன்று தினங்கள் நீர் தேவை ஏற்படுவதில்லை. மண்ணில் மயிரிழை போன்ற வெடிப்புகள் தோன்றும் போது மட்டும் நீர் பாய்ச்சினால் போதுமானது. இவ்வாறு ஒவ்வொரு முறையும் நீர் பாய்ச்சும் போது கவனித்து நீர் பாய்சினால் நீர்த் தேவை மிகவும் குறையும்.

மேலும் வெயில் உஷ்ணம் அதிகரிக்கும் போது நீரின் உஷ்ணம் அதிகரித்து நடவு செய்த நாற்றுகள் வெளுப்பாகி அழுகிப் போகாமல் இருக்கும். நடவு முடிந்து 7 முதல் 10 நாட்களுக்கு அடுத்து வரும் முதல் நோக்கு நாள் அல்லது பெளர்ணமி அல்லது சந்திரன் எதிர்சனி நாளில் B.D.501 எனப்படும் கொம்பு சிலிக்கா ஒரு ஏக்கருக்கு 4 கிராம் அளவில் ஸ்பிரே செய்யவும். நாற்றுகள் நடவு முடிந்த உடனேயே பஞ்சகவ்யம் தேவையான அளவு தயாரித்து தினமும் கலந்து வைத்துக் கொள்ளவும்.

பூச்சி விரட்டி தயாரிக்கும் முறைகளை அறிந்திருப்பின் அதனையும் தயார் நிலையில்  வைத்துக் கொள்ளவும். நடவு முடிந்த 12 முதல் 15 நாட்களில் முதல் முறையாக கோனா வீடர் எனும் கருவியை உபயோகப்படுத்தி  நடவு செய்வதன் மூலம் களைகளை கட்டுப்படுத்தவும். சாதாரண நடவு முறைகளை பின்பற்றி இருந்தால் கூட பெண்களைக் கொண்டு கொத்துகள் மூலம் கொத்தி சேறுபோல கலக்கி விட்டு நெல் பயிர்களின் வேர்களுக்கு சுற்றிலும் சேறு கலப்பது போல செய்து விடவும்.

பயிர்களின் வேர்ப்பகுதியில் இந்த அளவு கலக்கி விடும் போது புதுவேர்கள் வேகமாக வந்து பயிர்களில் கிளைப் பயிர்கள் அதிகரிக்கும். இவ்வாறு கோனா வீடர் உபயோகிப்பது அடுத்து வரும் 10 முதல் 5 நாட்களுக்கு ஒரு முறை தொடர்ந்து 5 முறைகள் உபயோகிக்கவும். இரண்டாம்முறை உபயோகிக்கும் போது ஜீவாம்ருதம், அமுதக் கரைசல் போன்ற தயாரிப்புகளை உபயோகித்து பயிரின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும். இந்த அளவுகள் மண்ணின் தன்மை, மற்றும் பசுந்தழை உப்பயிர்களை நெற்பயிர் நடவுக்கு முன் மடக்கி உழுதல், நடவுக்கு முன்னால் தொழுஉரம் இட்டு உழவு செய்தல் போன்றவற்றின் மூலம் மாறுபடும். வளர்ச்சி அதிகம் தேவைப்படுமானால் சாணம், மூத்திரம், பழைய சாம்பல், புண்ணாக்கு வகைகள், கோழி உரக் கழிவுகள், மண்புழு உரம் போன்றவற்றை தேவைக்கு எற்றுவாறு நீரில் ஊறவைத்து இதனுடன் வயலில் பாய்ச்சுவதற்கு முதல் நாள் CPP  மற்றும்  B.D.500 சேர்த்து கலந்து பாய்ச்சலாம். அல்லது இந்த கரைசலை வடிகட்டி நீரில் கலந்து பயிர்களின் மேல் ஸ்பிரே செய்யலாம். நோய் தடுப்புக்கு நொச்சி, சவுக்கு, பப்பாளி, காட்டு மருக்கொழுந்து, மஞ்சள்தூள் சோற்றுக் கற்றாழை, வசம்பு, போன்வற்றை இடித்து நீரில் ஊறவைத்து வடிகட்டி ஸ்பிரே செய்யலாம். பஞ்சகவ்யம் தெளிப்பது நோய் வராமலே தடுக்கும். பூச்சிகளை கட்டுப்படுத்த ஆடாதொடா, ஆடுதீண்டாப்பாளை, ஊமத்தை, பான்னரளி, சுண்ணடக்காய், எருக்கு, சீமை அகத்தி, சங்கங்குப்பி, சிறயாநங்கை (நிலலேம்பு), குமட்டிக்காய் போன்றவற்றை உபயோகிக்கவும். அல்லது பவேரியா பேசியானா, பவேரிய ப்ராங்னியாரிடி போன்ற உயிரியல் கட்டுப்பாட்டு முறைகளையும் பயன்படுத்தலாம். நீர் பராமரிப்பில் முக்கிய கவனம் நல்லது. வயலில் லேசான வெடிப்புகள் தோன்றும் அளவுக்கு விட்டு மறுபடி நீர் பாய்ச்சவும். அறுவடை பக்குவத்தில் 20 நாட்களுக்கு முன்பாக B.D.501 (கொம்பு சிலிக்கா) தெளிப்பதன் மூலம் மணிகள் முழுமையாகவும், சுவை அதிகரிக்கவும், எடை அதிகரிக்கவும் உபகோமாக இருக்கும்.

செம்மை  நெல் சாகுபடி முறையில் கவனிக்க வேண்டியவை

 • நாற்றுகளை இடை வெளிவிட்டு முளைக்குமாறு  நெல்லை 1 அங்குல இடைவெளியில் விதைத்தல்.
 • நெல் விதைத்த 10 முதல் 15 நாட்களுக்கு முன்பாக நடவு செய்தல்.
 • நடவு செய்யும் போது வேர்கள் நேராக கீழ் நோக்கியோ அல்லது பக்கவாட்டில் விரிந்து இருக்குமாறு நடவு செய்தல். அதாவது வேர்களின் நுனிகள் வளைந்து சேற்றில் மேல் நோக்கி இல்லாமல் நடவு செய்தல்.
 • நடவு வயல் முழுதும் நீரை வெளியேற்றும் போது வயலின் எந்தப்பகுதியிலும் நீர் தேங்கி நிற்காமல் முழுதும் வெளியேறும் அளவுக்கு சமன் செய்தல்.
 • பத்து நாட்களுக்கு ஒரு முறை பயிர்களைச் சுற்றிலும் கோனா வீடர் மூலம் கலக்கிவிட்டு மண்ணில் காற்றோட்டம் நன்றாக இருக்குமாறு செய்தல்.
 • இனி இந்த செயல் பாடுகளை வரிசைப்படுத்தி கொடுக்கப்படுகிறது
   1. விதை நெல் தேர்வு
   2. நாற்றங்கால் தயாரிப்பு
   3. விதை நேர்த்தி செய்தல்
   4. விதை நெல் விதைப்பு
   5. கொம்பு சிலிக்கா தெளிப்பு (விதைத்த 7 முதல் 10 நாட்களில்) 4 கிராம் ஒரு
   6. ஏக்கருக்கு
   7. இதனுடன் தொடர்ந்து நடவு வயல் தயாரிப்பு
   8. நாற்றுகளை நடவு செய்யும் முன்பாக உடன் கொம்பு சாண உரம் கலந்து தெளித்தல்
   9. நாற்றுகள் நடவு
   10. நடவு செய்த 7 முதல் 10 நாட்களில் கொம்பு சிலிக்கா தெளிப்பு
   11. 12 முதல் 15 நாட்களில் கோணா வீடர் உழவு
   12. மீண்டும் CPP+B.D.500 தெளிப்பு
   13. தேவைப்பட்டால் மேலுரமாக ஜீவாம்ருதம் அல்லது அமுதக்கரைசலும் CPP+B.D.500 சேர்த்து கலந்து நீர் பாய்ச்சுதல்.
   14. மறுபடியும் நடவு செய்த 25 நாட்களில் கோனா வீடர் உழவு
   15. குருத்துப் புழு, தண்டுப்புழு, புகையான பூச்சிகளுக்கான பூச்சி  விரட்டி தெளிப்பு
   16. 35 முதல் 40 நாளில் மீண்டும் கோனா வீடர் உழவு
   17. மீண்டும் தேவையெனில் பஞ்சகவ்யம் தெளிப்பு
   18. 50 முதல் 55 நாளில் மீண்டும் கோனா வீடர் உழவு
   19. தேவையெனில் ஜீவாம்ருதம் அல்லது அமுதக்கரைசலுடன் CPP கொம்பு  சாண உரம் சேர்த்து வடி கட்டி ஸ்பிரே செய்தல்
   20. முதல் 65 நாட்களில் மீண்டும் கோனா வீடர் உழவு இறுதியாக போதுமானது.
   21. தேவையெனில் தண்டுப்புழு, குறுத்துப்புழு, இலை சுருட்டுப்புழு கட்டுப்பாட்டிற்கு பூச்சி கொல்லி தெளித்தல்.
   22. 80 நாட்களில் மீண்டும் (கொம்பு சிலிக்கா) தெளிப்பு முன்னர் கூறியுள்ளபடி நெல் பயிரிட தேவையான உயிராற்றல் முறைகளை கடைபிடிக்க ஏதுவாக
   23. நவதான்ய விதைப்பு மற்றும் மடக்கி உழுதல்
   24. பஞ்சகவ்யம் தயாரிப்பு
   25. CPP+BD-500 (கொம்பு சாணம்) உரம் கரைசல் மண்ணில் தெளிக்க
   26. CPP+BD-500 உடன் திரவ உரங்கள் சேர்த்து பயிர்களின் மேல் தெளிக்க
   27. BD-501கொம்பு சிலிக்கா தெளிக்க

ஆதாரம் : தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்.

3.0472972973
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top