பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / வேளாண்மை பயிர்கள் / தானியங்கள் / நெல் சாகுபடி / பாரம்பரிய அரிசி ரகங்களில் கலப்பினங்கள் அறிமுகம்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பாரம்பரிய அரிசி ரகங்களில் கலப்பினங்கள் அறிமுகம்

பாரம்பரிய அரிசி ரகங்களில் கலப்பினங்கள் அறிமுகம் செய்தல் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

பாரம்பரிய அரிசி ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியாக கலப்பின ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.  இந்த நெல் ரகங்களை சாகுபடி செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும்.  இதன் மூலம் பல்வேறு மனித நோய்களுக்கு உணவே மருந்தாகும் நிலை உருவாகும்

பாரம்பரிய அரிசியானது மறக்கப்பட்ட அரிசி, தீட்டப்படாத அரிசி, முழுமையான அரிசி எனவும் அழைக்கப்படுகிறது.   சீனாவில் 3,000 ஆண்டுகளுக்கு முன்னரே பாரம்பரிய அரிசியின் பயனை அறிந்து பயிரிட்டு வந்துள்ளனர்.

தற்போது ஜப்பான், கொரியா, பிலிப்பின்ஸ்,  இந்தோனேசியா, ஆப்ரிக்கா போன்ற நாடுகளிலும் பயிரிடத் துவங்கியுள்ளனர். தற்போதும் மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் இத்தகைய ரகங்களைப் பயிரிட்டு வருகின்றனர். இவ்வகை அரிசியானது அரசப் பரம்பரையினர், செல்வந்தர்கள் மட்டுமே பயன்படுத்திய காரணத்தினால், சாதாரண நடைமுறையில் பயன்படுத்தாததால் நாளடைவில், மறக்கப்பட்ட அரிசியாக மாறிப்போய் விட்டது.  இப்போது சில ஆண்டுகளாக பரவலாக இவ் வகை அரிசியை விவசாயிகள் அந்தந்தப் பகுதிகளில் தேர்வு செய்து சாகுபடி செய்து வருகின்றனர்.

பாரம்பரிய அரிசியின் பராமரிப்பு

 • 1,000 ஆண்டுகளுக்கு முன்பே நெல் புல் வகையைச் சார்ந்தது என்று அறிஞர்கள் கூறியுள்ளனர். புல்லுக்குத் தண்ணீர் தேவையில்லை. இதுபோல் காய்ச்சலும், பாய்ச்சலும் இட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இந்தியாவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களும், தமிழ்நாட்டில் 10,000 -க்கும் மேற்பட்ட நெல் ரகங்களும் சேகரிக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. இந்தியாவில் விளைவிக்கப்படும் பழைமையான அரிசிகள் குறிப்பாக லச்சா அரிசி சத்தீஸ்கர், நவாரா கேரளம், பார்மைசால் மேற்கு வங்கம், கபிராஜ்சால் ஒடிஸா ஆகிய இடங்களில் பயிரிடப்படுகின்றன.
 • தமிழ்நாட்டில் தூயமல்லி, சேலம் சன்னா, தங்க சம்பா, ஆத்தூர் கிச்சலிச் சம்பா, ஆர்க்காடு கிச்சிலி சம்பா, மாப்பிள்ளை சம்பா, கருப்புக் கவுனி, பூங்கார், காட்டுயானம் போன்ற பாரம்பரிய ரகங்கள் பிரபலமானவை.

பசுமைப் புரட்சியால் வீழ்ந்த பாரம்பரிய ரகங்கள்

பெருகிவரும் மக்கள்தொகைக்கு உணவளிக்க வேண்டிய முயற்சியில் உருவாக்கப்பட்ட பசுமைப் புரட்சியின் தொடக்கமான 1966-ஆம் ஆண்டில் அதிக வைக்கோலும்,  குறைந்த மகசூலும் தரக்கூடிய நெல் ரகங்களே பயிரிடப்பட்டன. பின்பு இப் புரட்சியின் விளைவால் அதிக விளைச்சலும்,  குறைந்த வைக்கோலும் குட்டைத் தன்மையும் கொண்ட புதிய கலப்பின நெல் ரகங்களும், அதிக நீர்ப் பாசனமும், அதிக உரத் தேவையும் கொண்ட நெல் ரகங்கள் பிலிப்பின்ஸ் பகுதியில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டன. இதன் காரணமாக கால்நடைகளுக்கான வைக்கோல் அளவு மிகவும் குறைந்து விட்டது.

பாரம்பரிய நெல் ரகங்கள் குறைந்தது முதல், நீண்ட (60-200 நாள்கள்) வாழ்நாள்கள், குறைந்த அளவு விளைச்சலும் தரக்கூடியவை.  குறிப்பாக 60 நாள்கள் அருங்குறுவை, 70 நாள்கள் பூங்கார், 90 நாள்கள் குள்ளக்குறுவை, 110 நாள்கள் காட்டுப்பொன்னி, 160 நாள்கள் கருப்புக்கவுனி, 180 நாள்கள் காட்டுயானம், 200 நாள்கள் ஒட்டானம் போன்றவை பழைமையான அரிசி ரகங்களாகும்.  இத்தகைய பழைமையான நெல் ரகங்கள் அதிக நாள்கள் முதிர்ச்சியும், அதிக நேரம் வேகும் தன்மையும் (கடினத்தன்மை) கொண்டுள்ளதாலும், பல்வேறுபட்ட (கருப்பு, சிவப்பு) நிறங்களில் காணப்படுவதாலும், மக்களால் பெரிதும் விரும்பப்படுவதில்லை.

எனினும், பாரம்பரிய நெல் ரகங்கள் பூச்சி நோய் தாக்குதல் குறைவாகவும்,  வறட்சி, வெள்ளம் மற்றும் அதிகப் பனிப் பொழிவு போன்ற அசாதாரண சூழ்நிலையைத் தாங்கி வளரக் கூடியன.  இவற்றில் உள்ள சத்துகள், மருத்துவத் தன்மை காரணமாக மீண்டும் புத்துயிர் பெற்று, மீண்டும் அதிக அளவில் பயிரிட்டு பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்.

மருத்துவப் பண்புகளை கொண்ட அரிசியின் தன்மைகள்

 • அரிசியானது தவிடு உமி, கரு, மாவுப் பொருள் என்ற நான்கு பகுதிகளைக் கொண்டது. அதில் உமி,  தவிட்டினை நீக்கி நன்கு பாலிஷ் செய்யும் போது அதில் உள்ள அனைத்து விதமான சத்துகளும் நீக்கப்படுகின்றன. மீதமுள்ள மாவுப் பகுதியான கார்போஹைட்ரேட்டை மட்டுமே உணவாக உண்ணுகிறோம்.  ஆனால் பாரம்பரிய நெல் ரகங்களில் ஊட்டச் சத்துகள் மாவுப் பகுதிவரை பரவி காணப்படுகின்றன.
 • இந்த பாரம்பரிய அரிசிகளில் எந்தோசைனின்,  புரோ எந்தோசைனின்  என்னும் நிறமி இருப்பதன் காரணமாக சிவப்பு, கருப்பு, அடர்ந்த கருப்பு நிறத்தினைப் பெறுகின்றன. ஆனால் நாம் மிகவும் விரும்பும் வெண்மையான, சன்னமான அரிசிகளில் அந் நிறமி அற்றுக் காணப்படுகிறது. இவ்வகை நிறமியானது அரிசியின் பல்வேறு ஊட்டச்சத்துகளுக்கும், மருத்துவப் பண்புகளுக்கும் அடிப்படைக் காரணமாக உள்ளது.
 • இதற்கான குரோமோசோம் ஜீன் எனப்படும் மரபியல் கூறு காலா 1,  காலா 2,  காலா 4,  காலா 6 என உயிரியல் தொழில்நுட்பத்தில் இன்றைய நவீன ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ குணங்களைக் கொண்ட அரிசியின் பண்புகள்:

 • வெண்மை அரிசிகளில் முதன்மையாக நார்ச்சத்து குறைவாக இருப்பதால், கிளைசிமிக் இன்டெக்ஸ் எனப்படும் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவினை அதிகரிக்கிறது.  இதன் காரணமாக உணவு எளிதாக ஜீரணிக்கப்படுவதால், சர்க்கரை (நீரிழிவு) நோய் ஏற்படுகிறது. ஆனால், பாரம்பரிய அரிசியில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், எளிதில் ஜீரணம் அடையாததால், ரத்தத்தில் குளுக்கோஸ் அளவினை சீராக வைக்கிறது. இதனால் ஆக்ஸிகரணம் குறைந்து, ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து சர்க்கரை நோய் ஏற்படுவதை முழுமையாகத் தடுக்கிறது.
 • வெண்மை அரிசியில் அதிக அளவு மாவுச்சத்து இருப்பதாலும் உடல் எடை அதிகரிக்கிறது.  பாரம்பரிய அரிசியில் குறைந்த அளவு மாவுச்சத்து இருப்பதால் உடல் எடை குறையவும், உணவு உண்ட திருப்தியையும்  அளிக்கிறது.
 • வைட்டமின், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, செலினியம் போன்ற கனிமங்கள் நடைமுறையில் உள்ள ரகங்களை விட, இரண்டு, மூன்று மடங்கு அதிகமாக உள்ளன.
 • பாரம்பரிய நெல் ரகங்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட் காரணி இருப்பதால், புற்றுநோய் செல்களை தடுக்கும் தன்மையும்,  இருதய நோயை குணமாக்கும் ஓர் அற்புதமான மருந்தாகும்.
 • அந்தோசையனின்,  பாலிபினால் நிறைந்துள்ளதால், தோல் சுருக்கம்,  சர்க்கரை அளவினைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது. பெண்களுக்கு மாதவிடாய் போக்கினை துரிதப்படுத்தவும், உடல், பல் மற்றும் எலும்பு உறுதிக்கும், கூந்தல் வளர்ச்சிக்கும், வாய் ஓரப்புண்கள் ஆறவும் உதவுகிறது.

பொருளாதார நிலையில் மருத்துவ அரிசி

இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் மருத்துவ அரிசி பயிரிட்டாலும், கேரளம் முதலிடம் வகிக்கிறது. மற்ற மாநிலங்களிலும் பரவலாக இவற்றை பயிரிடுதல் அதிகரித்துள்ளது. நடைமுறையில் உள்ள நெல் ரகங்களை ஒப்பிடுகையில், பாரம்பரிய நெல் ரகங்கள் அதிக விலையில் விற்கப்படுகின்றன.

ஆனால்,  இப்போது இத்தகைய மருத்துவத் தன்மை கொண்ட பழங்கால அரிசி ரகங்களை நடைமுறை வேளாண்மையில் பயிரிடப்படும் அரிசி ரகங்களுடன் கலப்பினம் செய்யும்போது அதிக மருத்துவத் தன்மையும், உயிர்ச் சத்துகளும் தக்க வைக்கப்படுகின்றன. தற்போது பயிர் இனப் பெருக்கத் துறை மற்றும் உயிரியல் தொழில் நுட்பத்துறை இரண்டும் இணைந்து புதிய உத்திகளைக் கையாண்டு,  அதிக ஊட்டச் சத்துகளையும் மற்றும் மருத்துவத் தன்மையும் கொண்ட பாரம்பரிய அரிசி ரகங்களை ஆண் இனங்களாகவும், நடைமுறையில் உள்ள ரகங்களை பெண் இனங்களாகவும் பயன்படுத்த புதியப் பண்புகளைக் கொண்ட கலப்பினங்களைக் கண்டறிவதில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது.

ஆராய்ச்சிகளின் மூலம் நவாரா மருத்துவ அரிசி இனமானது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நோய் நீக்கியாகப் பயன்படுகிறது. நவாரா இனத்தில் இரும்பு,  துத்தநாகம் மற்றும் கால்சியமும், கவுனி அரிசியில் அதிக அளவு புரதச்சத்து மற்றும் கால்சியமும்,  காத்த நெல்லில் அதிக அளவு மெக்னீசியமும் மற்றும் ஆண்டிஆக்ஸிடன்ட் செயல்பாடும், வீரதங்கன் நெல்லில் அதிக அளவு இரும்பு, துத்தநாகம் உள்ளன என ஆராய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்டது. குறிப்பாக, ஆன்டிஆக்ஸிடன்ட் பண்பானது பலவிதமான மனித நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

பாரம்பரிய அரிசியின் இன்றைய நிலை:  அதிக விளைச்சலைத் தரும் குட்டை ரகங்கள்,  குறைந்த விளைச்சலைத் தரும் நெட்டை ரகங்களான பாரம்பரிய நெல் ரகங்களை மாற்றிடம் செய்ததால், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அழிந்துவிடும் தறுவாயில் உள்ளன.

எனவே, இத்தகைய மருத்துவத் தன்மை கொண்ட பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து,  அதிக மருத்துவத் தன்மை கொண்ட புதிய கலப்பின அரிசி ரகங்களை உற்பத்தி செய்து, விளைச்சலைப் பெருக்கி நோயற்ற ஆரோக்கியமான வாழ்வை வாழ வேண்டும்.

ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை

Filed under:
3.0
சே.ஆனந்தராஜ் Oct 22, 2019 09:32 PM

பூங்கார் விதை நெல் யாரிடமாவது இருக்கிறதா

அகிலேஷ் குமார் Sep 23, 2019 11:41 PM

தங்கள் கருத்திற்கு நன்றி...
இவ்வாறு பயன் உள்ள விஷயங்களை மக்களிடம் சேர்ப்பது மிகவும் கடினமாக உள்ளது...

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top