வேளாண் உற்பத்திகளில் தமிழ்நாட்டில் நெல் உற்பத்தி முதன்மையாக விளங்குகிறது. பல்வேறு வகையான நெல் ரகங்களை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
நெல் ரகம் (டி.கே.எம்.13): டி.கே.எம். 13 ரகம் மத்திய வயது (135 நாள்கள்) நெல் பயிராகும். மத்திய சன்ன வெள்ளை அரிசி, இலைச் சுருட்டுப் புழு, குறுத்துப் பூச்சி, பச்சை தத்துப் பூச்சிக்கு நடுத்தர எதிர்ப்புத் திறன் கொண்டது.
குலை நோய், துங்குரோ நோய், செம்புள்ளி நோய்க்கு நடுத்தரத் தாங்கும் திறன் கொண்டது. அதிக அரைவை திறன், முழு அரிசி காணும் திறன், சமைத்த சாதம் நீளும் தன்மை அதிகம். சிறந்த சமையல் பண்பு, அதிக மகசூல் (ஒரு ஹெக்டேருக்கு 5.5 முதல் 6.5 டன்கள்). இந்த நெல் ரகத்தை திருந்திய நெல் சாகுபடி முறையில் பயிரிட்டால் கூடுதல் மகசூல் பெற முடியும்.
திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள்: தமிழக வேளாண்மையில் நெல் சாகுபடி ஒரு முக்கிய அங்கமாகும். கடந்த சில ஆண்டுகளாக மொத்த ஆண்டு நெல் உற்பத்தியில் ஒரு தேக்க நிலையில் இருந்து வருகிறது. மக்கள்தொகை தொடர்ந்து பெருகி வருவதால், நெல் உற்பத்தித் திறனை மேலும் அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
நெல் சாகுபடியில் மற்றொரு கவலைக்குரிய நிலை சாகுபடிக்குத் தேவையான நீரின் அளவு குறைந்து பற்றாக்குறை இருப்பதுதான். ஆகையால், நெல் சாகுபடியில் தற்போதைய தேவை, குறைந்த நீரில் அதிக உற்பத்தித் திறன் கொடுக்கக் கூடிய திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்ப முறை.
திருந்திய நெல் சாகுபடி என்பது சிக்கன நீர்ப்பாசனத்தில் இளநாற்றை அதிக இடைவெளியில், சதுரமுறையில் நடவுசெய்து களைக்கருவியை உபயோகித்து விளைச்சலை அதிகரிக்கும் மாற்று நெல் பயிர் சாகுபடி முறையாகும். இந்த தொழில்நுட்ப நடைமுறை சாகுபடி சிபாரிசுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும். ஆனால், இந்தச் சாகுபடி முறையால் மகசூல் அதிகரிப்பது மட்டுமல்லாமல் வேறு பல நன்மைகளும் விவசாயிகளுக்கு கிடைக்கிறது.
சிக்கன நீர்ப்பாசனம் மூலம் பாசன நீர் தட்டுப்பாட்டைக் குறைக்கும் உத்தியாக மண்ணில் காற்றோட்டத்தையும், நுண்ணுயிர் செயல்பாட்டை மேம்படுத்துவதற்காகவும், தழைச்சத்து தேவையைக் குறைப்பதற்காகவும், நெல்லுடன் வளரும் களைகளை இயற்கை உரமாக மாற்றுவதற்காகவும் விதை நெல்லின் அளவை வெகுவாக குறைப்பதற்காகவும், அதிக தூர்கள், அதிக வேர் வளர்ச்சி கூட்டுப் பயனால் விளைச்சல் அதிகமாகி அதிக லாபம் பெறலாம்.
14 நாள்கள் வயதுடைய வாளிப்பான நாற்றுகளை நடுதல், ஒரு குத்துக்கு ஒரு நாற்றை சதுர முறையில் நடுதல், அதிக இடைவெளி விட்டு சதுர நடவு (25-க்கு 25 செ.மீ.), கோனோவீடர் மூலம் களைகளை அமுக்கி சேற்றை கலக்குதல். நீர் மறைய நீர் கட்டி பாசன நீரின் அளவைக் குறைத்தல். பச்சை வண்ண இலை நிற அட்டை மூலம் தழைச்சத்தை நிர்வகித்தல்.
நெல்லைப் பொறுத்தவரை தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, துத்தநாகம் ஆகியவை முக்கிய ஊட்டச்சத்துக்கள் ஆகும். திருந்திய நெல் சாகுபடியில் தழைச்சத்து மேலாண்மை மாற்றியமைக்கப்பட்டு பயிருக்குத் தேவையாக இருந்தால் மட்டுமே மேலுரமாக தழைச்சத்து அளிக்கும். இந்தத் தொழில்நுட்பம் இலை நிற அட்டையை உபயோகப்படுத்தி செய்யப்படும்.
ஒரு குத்தில் அதிகபட்ச அளவு மொத்த தூர்கள் (40 முதல் 45) உண்டாக வாய்ப்புண்டு. ஒவ்வொரு கதிரிலும் மணிகள் அதிக எண்ணிக்கை இருக்கும். சரியான ஊட்டச்சத்து நிர்வாகத்தினால் ஏக்கருக்கு 4.0 - 4.5 டன் வரை மகசூல் கிடைக்கின்றன.
குறைந்த விதையளவு, நாற்று பறிக்கும் செலவு குறைவு. களைக் கொல்லி தேவையற்றது. உருளும் களைக்கருவி உபயோகிப்பதால் கூட்டுப் பயன்கள், 50 சதம் வரை நீர் சேமிப்பு, கதிர்கள், தானியங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, நெல், வைக்கோல் விளைச்சல் அதிகரிப்பு, அதிக வருமானம் ஈட்டமுடியும்.
ஆதாரம் : காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலையம்