பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / வேளாண்மை பயிர்கள் / நார் பயிர்கள் / பருத்தி / பருத்தியில் மும்முனை ஒப்பந்த பண்ணையம்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பருத்தியில் மும்முனை ஒப்பந்த பண்ணையம்

பருத்தியில் மும்முனை ஒப்பந்த பண்ணையம் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

தமிழ்நாட்டில் தற்சமயம் ஆண்டொன்றுக்கு பருத்தி பயிர் 2 லட்சம் எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டின் பருத்தி உற்பத்தி 4 முதல் 5 இலட்சம் பேல் என கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 60 சதவீதத்திற்கும் அதிக அளவில் பஞ்சாலைகள் உள்ளது. இந்த ஆலைகளுக்கு 50 இலட்சம் பேல் பருத்தி ஆண்டொன்றுக்கு தேவைப்படுகிறது. இந்த ஆலைகளுக்குத் தேவையான பருத்தி 10 சதவீதம் மட்டுமே தமிழ்நாட்டிலிருந்து உற்பத்தியாகிறது. இந்த உற்பத்தி பற்றாக்குறையினால் தேவை மற்றும் வழங்குதலில் பெரிய இடைவெளியை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக அண்டை மாநிலங்களை நாடவேண்டியுள்ளது. சாகுபடிக்கு ஆகும் செலவு அதிகரித்தலும் மற்றும் சீரில்லாத சந்தை விலையினாலும் பருத்தி உற்பத்தித்திறன் மிகவும் குறைந்து கொண்டே போகிறது. எனவே தமிழ்நாட்டில் பருத்தி உற்பத்தியை நிலை நிறுத்துவது மிகவும் அவசியமாகிறது. ஒப்பந்த பண்ணை சாகுபடி மூலம் பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகளையும் சீரான சந்தையையும் இணைப்பதன் மூலம், விவசாயிகளையும், பருத்தி தொழிற்சாலைகளையும் பாதுகாக்கலாம் என மாநில அரசாங்கம், விவசாய துறையின் மூலம் ஒப்பந்த பண்ணை சாகுபடி திட்டத்தை செயல்படுத்துகிறது.

ஒப்பந்த பண்ணைய முறை

இம்முறையின் மூலம் பருத்தி உற்பத்தி பன்மடங்கு அதிகரிக்கப்படுகிறது. பல்வேறு நிறுவனங்களின் மூலம் ஆய்வு மேற்கொண்ட போது கீழ்க்கண்டவாறு கண்டறியப்பட்டுள்ளது. முறையே பஞ்சாலைகள், தேசிய வேளாண் மற்றும் விற்பனை குழுமம், காப்பீடு குழுமங்கள், வங்கிகள் போன்ற நிறுவனங்கள் இந்தத் திட்டத்தில் பங்குபெற்றுள்ளன.

ஒப்பந்த பண்ணை முறையின் முக்கிய நோக்கங்கள்

 1. கிராமங்களை ஒருங்கிணைத்து முன்னிலைப்படுத்துவது
 2. விவசாயிகளின் சுமைகளைக் களைதல்
 3. பொருளின் தரத்திற்கேற்ற விலை
 4. விவசாயிகளை பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொண்டு வருவது
 5. கடன் வசதிகளோடு இடுபொருள் வழங்குதல்
 6. பஞ்சாலைகளின் தேவைக்கேற்ப தரம் உறுதி செய்யப்படுதல்
 7. வேளாண் துறை விரிவாக்க உதவிகளை வழங்குதல்

இம்முறையின் மூலம் முதன்மை ஒருங்கிணைப்பாளராக வேளாண் துறை செயல்படும். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகமானது ஆராய்ச்சி மற்றும் முன்னேற்ற உதவிகளை வழங்கும். இதில் ஏதேனும் பிரச்சனைகள் இருப்பின் மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் தீர்த்து வைக்கப்படும்.

மும்முனை ஒப்பந்த பண்ணைய முறை

மும் முனை ஒப்பந்த பண்ணைய முறை என்பது மூன்று வெவ்வேறு நிறுவனங்களாகிய பஞ்சாலை, உரம் மற்றும் பூச்சி கொல்லி இடுபொருள் உற்பத்தி நிறுவனம் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி போன்றவற்றிற்கு இடையே ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு, இம்மூன்று நிறுவனங்களும் விவசாயிகளுக்குப் பல்வேறு வகையில் பயனை ஏற்படுத்தித் தருவதாகும்.

மும்முனை ஒப்பந்த பண்ணைய முறையின் முக்கிய அம்சங்கள்

 1. இவ்வொப்பந்தத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் எளிதாகக் கடன் வழங்கப்படுகிறது.
 2. கடனுக்கான வட்டி விகிதம் 6 சதவீதமாக உள்ளது. இது மற்ற விவசாயிகளுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை விட 0.5 சதவீதம் குறைவு.
 3. வங்கிகள் மூலம் கொடுக்கப்படும் கடன் தொகை ஏக்கருக்கு ஒரு விவசாயிக்கு ரூ.7,000 ஆகவும், அதிகபட்சமாக 20,000 ரூபாயும் வழங்கப்படுகிறது.
 4. இந்தக் கடன் தொகை 3500 ரூபாய் பணமாகவும், 3500 ரூபாய் இடுபொருளாகவும், இடுபொருள்கள் உற்பத்தி நிறுவனங்கள் மூலம் வழங்கப்படுகிறது.
 5. பயிர் பாதுகாப்பு தொழில் நுட்பங்கள் மற்றும் பரிந்துரை, வாரம் ஒருமுறை வழங்கப்பட்டு இடுபொருள் நிறுவனங்களின் விரிவாக்கப் பணியாளர்களால் மேற்பார்வை செய்யப்படுகிறது.
 6. அதிகபட்ச சில்லரை விற்பனை விலையைவிட குறைவான விலையில் பூச்சி கொல்லிகள் வழங்கப்படுகிறது.
 7. இவ்வொப்பந்தத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மாதம் ஒருமுறை பருத்தி சாகுபடி பற்றிய தொழில் நுட்ப பயிற்சி அளிக்கப்படுகிறது.
 8. பரிந்துரை செய்த தொழில் நுட்பங்களை உழவர்கள் கடைபிடிக்கின்றனரா எனவும் இடுபொருள் நிறுவனம் மூலமாகக் கண்காணிக்கப்படுகின்றனர்.
 9. அறுவடை செய்யப்பட்ட பருத்தியை, இடுபொருள் நிறுவனத்தினரால் வழங்கப்பட்ட துணிப்பைகளில் அடைக்க வேண்டுமென அறிவுறுத்தப்படுகின்றனர்.
 10. உற்பத்திக்கான கொள்முதல் விலையில் கடன் தொகையைப் பிடித்து கொண்டு மீதத் தொகை விவசாயிகளுக்கு அளிக்கப்படுகிறது.
 11. ஒழுங்கு முறை விற்பனை நிலையத்தின் விலையை அடிப்படையாகக் கொண்டு பருத்தி விலை நிர்ணயிக்கப்படுகிறது.
 12. மேலும் குறைந்தபட்ச ஊக்க விலையாக ஒரு குவிண்டால் பருத்திக்கு ரூ.2065 வழங்கப்படுகிறது.

மும்முனை ஒப்பந்த பண்ணைய முறையில் பருத்தி சாகுபடி செய்வதால் அடையும் பயன்கள்

இம்மும்முனை அமைப்பு முறையினால் விவசாயிகள், இடுபொருள் உற்பத்தி நிறுவனம், பஞ்சாலை மற்றும் வங்கிகள் கீழ்க்கண்ட பல்வேறு பலன்களை அடைகின்றன.

 1. வங்கிகள் மூலம் கடனுதவி கிடைக்கப்பெறுவது பருத்தி சாகுபடிக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது.
 2. பருத்தியில் பூச்சி நிர்வாகம் செய்ய போதுமான அளவு வழிகாட்டுதலை பெறுகின்றனர்
 3. நல்ல தரம் வாய்ந்த இடுபொருட்களை உரிய நேரத்தில் கிடைக்கப் பெறுகின்றனர்
 4. இம்முறை மூலம் தரமான மற்றும் அதிக அளவிலான பருத்தியை அறுவடை செய்ய முடியும் என நம்பிக்கை பெறுகின்றனர்
 5. விளை பொருளுக்கான விலையை வங்கிகள் மூலம் தாமதமின்றி பெறுகின்றனர்
 6. பருத்தி சாகுபடியில் வேலிப்பயிர்களை வளர்ப்பதன் பலனையும் புரிந்து கொள்ளுகின்றனர்
 7. பஞ்சாலைகளுக்கு வயல்களிலிருந்து நேரடியாக ஏற்றுமதி தரம் உள்ள பருத்தியை பெறுதல்
 8. வங்கிகளுக்கு வழங்கப்பட்ட கடன்தொகை மற்றும் வட்டி விகிதத்திற்கு உரிய தொகை உரித்த நேரத்தில் உழவர்களால் திருப்பி செலுத்தப்படுகிறது.
 9. இடுபொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கு விவசாயிகளிடையே விதை, உரம் மற்றம் பூச்சிகொல்லி போன்ற இடு பொருட்களின் மீதான நம்பிக்கையை ஊட்ட முடிகிறது.

மும்முனை அமைப்பு முறையின் பலம் (Tripatriate Arrangement Strength)

 1. உரிய நேரத்தில் குறைந்த வட்டியில் வங்கிகள் மூலம் கடன் உதவி எளிய முறையில் வழங்கப்படுகிறது.
 2. இடுபொருள் உற்பத்தி நிறுவனத்தினால் அனுப்பப்படும் வேளாண் விரிவாக்க களப்பணியாளர்களால் உரிய நேரத்தில் பயிர் மேற்பார்வை மற்றும் பூச்சி நிர்வாகம் செய்யப்படுகிறது.
 3. கம்பெனி மூலம் மிகவும் தரமான இடுபொருள்களான விதைகள், உரங்கள் மற்றும் பூச்சி கொல்லிகளை பருத்தி விவசாயிகளுக்கு வழங்குவதன் மூலம் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறன் அதிகரிக்கப்படுதல்
 4. இந்த ஒப்பந்த முறையில் பருத்தி சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் பருத்தியில் எவ்வாறு பூச்சி நிர்வாகம் செய்யலாம் என்பதைப் பற்றி நன்கு தெரிந்து கொள்கின்றனர்.

இந்த ஒப்பந்த முறையில் விவசாயிகள் ஒப்பந்தமான பின் ஐந்து முக்கியக் கோணங்களில் ஆய்வு செய்யப்பட்டு, இவ்வாய்வு முடிவுகளின் முக்கிய அம்சங்களாக கீழ்க்கண்டவைகள் உணரப்படுகின்றன.

 • ஒப்பந்த முறை அல்லாத விவசாயிகளோடு ஒப்பிடுகையில் முன்பு பருத்தி பயிர் செய்ததைவிட தற்சமயம் பூச்சிகளை மிகவும் சிறந்த முறையில் கட்டுப்படுத்தத் தெரிந்துள்ளனர்
 • ஒப்பந்த முறை அல்லாத விவசாயிகளோடு ஒப்பிடுகையில் ஒப்பந்த முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகள் அதிக அளவிலான உற்பத்தியைப் பெறுகின்றனர்
 • பூச்சி கொல்லிகளின் மீதான முதலீட்டை முன்பைவிட மிகக் குறைவான அளவே செலவிடுகின்றனர்

ஆய்வின் முக்கிய முடிவுகள்

இம்மும்முறை ஒப்பந்த முறையில் சாகுபடி செய்யப்பட்ட பருத்தியின் உற்பத்தி ஏக்கருக்கு 8.75 குவிண்டாலாக உள்ளது. எனவே இவ்வாராய்ச்சி முடிவுகளின் மூலம், பருத்தியில் மும்முனை ஒப்பந்த பண்ணைய முறைப்படி சாகுபடி செய்தால் அதிக உற்பத்தி, உற்பத்தித்திறன் மற்றும் அதிக நிகர இலாபம் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை .

ஆதாரம் : வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்

2.98901098901
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top