பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

நில எழிலூட்டுதல்

தோட்டக்கலை துறையின் செயல்பாடுகளில் ஒரு அங்கமான நில எழிலூட்டுதல் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

பூந்தோட்டத்தின் அங்கங்கள்

பூந்தோட்டத்தின் மலர்பாத்திகள், பாதையோர வேலிச் செடிகள், வண்ண மலர்க் கொடிகள் படர்ந்த அலங்கார வளைவுகள், நீண்ட தொடர் வளைவு, நீர் நிலைத்தோட்டம் போன்ற அனைத்து அம்சங்களும் நிறைந்தால் தான் அழகு ஏற்படும். ஒவ்வொரு பாகமும் வரையறுக்கப்பட்டிருப்பதோடு எளிய முறையில் அமைக்கப்பட்ட ஏனைய பாகங்களோடு இணைந்திருக்க  வேண்டும்.

மலர் பாத்திகள்

பருவத்தில் பூக்கும் மலர்ச்செடிகளையும் பல்லாண்டு காலம் வரை பூக்கும் குத்துச் செடிகளையும் நட்டு மலர் பாத்திகள் அமைக்கலாம். மலர்ப் பாத்திகளை வேண்டிய வடிவில் அமைக்கலாம். பூந்தோட்டத்தின் பரப்பளவிற்கேற்ப்ப பாத்திகளின் எண்ணிக்கை இருக்கலாம். கல்வாழை, டாலியா, லில்லி, சம்பங்கி ஆகிய செடிகளை தனித்தனிப் பாத்திகளில் நட்டு அமைக்கப்படும் மலர்ப்பாத்திகள் மிகவும் அழகாக இருக்கும். குட்டையான செடிகளை முன்புறத்திலும் உயரமாக வளரும் செடிகளை புறமாகவும் நடவு செய்யலாம். இம்முறை சிறு மற்றும் பெருநகரங்களிலுள்ள தாவர பூங்காக்களில் சிறுவர் மற்றும் குழந்தைகளுக்காக பொழுது போக்கிற்காகவும் மற்றும் சிந்தனை அறிவைத் தூண்டுவதற்காகவும் பயன்படுகிறது. சவுக்கு, காகிதப்பூ, பைன் மற்றும் குப்ரசுஸ் ஆகிய தாவரங்களைப் பயன்படுத்தி மனித உருவ அமைப்பு மற்றும் கூடாரங்கள் மறைவுகள் போன்றவைகள் உருவாக்கப்படுகிறது.

இந்த உருவ அமைப்பினை ஏற்படுத்துவதற்கு அனுபவம் வாய்ந்த கவாத்து நிபுணர் தேவைப்படுகிறது. இதுபோன்ற தாவரங்களை நெருக்கமாக வளர்த்து மிதமாக வளர்ந்த பிறகு தேவையான உருவ அமைப்புகளைக் கவாத்து செய்து பெற்றுக் கொள்ளலாம். பொதுவாக மழைக் காலங்களில் அதிக அளவு வளர்ச்சி இருப்பதால் சீராக பராமரித்தல் அவசியம்.

தாவர வளைவுகள்

பூந்தோட்டங்களில் நடைபாதையின் மேல் அரைவட்டங்களில் இரும்பு கம்பிகளை தொடர்ச்சியாக 8-9 மீட்டர் உயரத்தில் அமைக்க வேண்டும். அதன்பின் அக்கம்பிகளின் மீது குறிப்பிட்ட தாவரங்களை படர விட்டு வளர்ப்பது ஆகும். இவ்வகையான தாவரங்களை வளர்ப்பதற்கு அலமண்டா, இரங்கூன் கொடி மற்றும் துன்பர்ஜியா போன்ற கொடிவகைகள் உகந்தவைளாக கருதப்படுகிறது.

பூக்கின்ற கொடிகளைக் கொண்டு உருவகங்களை அமைத்தல்

வைரோஸ்டீஜியா, வெட்ரியாவாலிபிலிஸ்,  முல்லை, மல்லி காகிதப்பூ போன்ற அதிக கவர்ச்சியான பூக்களைக் கொண்ட செடிகளைப் பயன்படுத்தி பல்வேறு உருவங்களில் பயிற்சி செய்து பராமரிக்கலாம்.

மரத்தொகுப்பு

பெரிய பூங்காக்களில் அழகு மற்றும் பயனுள்ள மர வகைகளை ஒரே இடத்தில் வகைவாரியாக நட்டு பராமரிக்கலாம். இம்முறை அர்ப்பேரேட்டம் என அழைக்கப்படுகிறது. இதில் அழகு தரும் பூக்கும் மரங்கள், நறுமணம் தரும் மரங்கள், அழகான இலை அமைப்பு மற்றும் மரங்களின் வடிவ அமைப்புகளுக்கு ஏற்றாற்போல பிரித்து நடலாம்.

டிராபி

பூந்தோட்டத்தின் மையத்திலோ அல்லது முக்கியமான இடத்திலுள்ள வளரும் மரம் அல்லது ஏதாவது ஒரு பொருளைச் சுற்றியோ அழகிய அழங்காரப்பூந்தொட்டிகளை நெருக்கமாகப் பல அடுக்குகளில் அடுக்கும் முறை டிராபி எனப்படும். இதற்கு உகந்த தாவரமாக கருதப்படுவது அக்லோனிமா, பெகோனியா குறுந்தாவரங்கள் போன்றவைகளாகும்.

தாவர வளைவுகள்

பூங்காக்களின் பிரதான நுழைவாயில்கள் மற்றும் பூந்தோட்டத்தின் பிற முக்கிய பகுதிகளின் நுழைவாயில்களில் இலகுவாக வளையும் தன்மை கொண்ட செடிகளைக் கொண்டு வளைவுகளாகப் பயிற்சி செய்து பராமரிக்கலாம். இவ்வகையான தாவர வளைவுகள் அமைப்பதற்கு அலமண்டா, துன்பர்ஜியா, காகிதப்பூ போன்ற கொடி வகைகள் உகந்தவைகளாக கருதப்படுகிறது.

பாதைகள்

ஒரு அழகிய பூந்தோட்டம் பலரால் கண்டு மகிழ உருவாக்கப்படுகிறது. இதனின் பல அங்கங்களை பார்த்து ரசிக்க தோட்டத்தின் எல்லா பகுதிக்கும் சென்று வர வேண்டியது அவசியம். இதற்கான பாதைகள் தோட்டங்களின் இன்றியமையாத ஒன்றாகும். பூந்தோட்டத்தின் தன்மைகளைப் பொருத்து பாதையின் அகலம் அமைகிறது. பொருந்தா பாதைகள் அமைத்து அதன் அழகு கெடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சிறிய பாதையாகுமானால் அது 3 அடி அகலத்திலிருக்கலாம். இதுவே பெரிய தோட்டமாக இருந்தால் 10-15 அடி அகலம் வரை அமைக்கலாம். பாதைகள் நேராகவோ அல்லது தேவையான அளவு வளைவுகளுடனோ இருக்கலாம். குறுகிய வளைவுகள் தோட்டங்களின் அழகைக் கெடுத்துவிடும்.

பாலங்கள்

பூந்தோட்டங்கள் மன அமைதிக்காக  அனுகப்படும். அவற்றில் மனம் கவரும் அமைப்புகள் அமைப்பது அவசியம். ஜப்பானிய பூந்தோட்டங்களில் பாலங்கள் ஒரு அங்கமாகவே விளங்குகின்றன. சிறிய நீரோடை அமைத்து அதனை கடக்க சிறிய மரத்தால் அல்லது சிமெண்ட்டாலான பாலங்கள் அமைத்து தோட்டங்களின் அமைப்பை மேம்படுத்தலாம். இதற்கு பூசப்படும் நிறம் அங்கு இடம்பெற்றுள்ள மரம் செடி கொடிகளின் இயல்போடு இயங்கி அமைவது நலம். பாலங்கள் அமைக்கும் போது அவை உறுதியாகவும் கலை நயத்துடனும் அமையப் பெறுவது பூந்தோட்டத்தின் அழகிற்கு அழகு சேர்க்கும். பாலங்களை மூங்கில் கொண்டு செய்து அதன் உறுதியை உறுதி செய்யலாம்.

படிக்கட்டுகள், அடுக்குகள்

சமச்சீர் மற்றும் சமச்சீரில்லாத பூந்தோட்டங்கள் பல இடங்களில் நிர்மாணிக்கப்படுகின்றன. அவற்றில் தேவைக்கேற்ப்ப அழகு நிலை பெறுவதற்கு பல அடுக்குகள் அமைத்து அதில் மனம் கவரும் மலர்களும் அலங்காரச்செடிகளும் வளர்க்கப்படுகின்றன. இவ்வகைத் தோட்டங்கள் மண்ணுக்கடியில் அமைவதால் கட்டப்படும் சுவர்கள் செடிகளுக்கு பின்னால் ஒரு திரைபோல் அமையும் போது அவற்றின் வடிவம் முழுமை பெற ஏதுவாகிறது. இவ்வகை அடுக்குகள் கற்களினால் செய்யப்படும் போது காண்போரின் கவனத்தை எளிதில் கவரும். இவ்வகைத் தோட்டங்கள் சமதளத்திற்கு கீழே அமையும் போது பார்வையாளரின் கவனம் முழுவதுமாக ஈர்க்கப்பட்டு பூந்தோட்டத்தின் முழு அழகையும் ரசிக்கத் தூண்டும்.

கூடங்கள்

மரச்சட்டங்கள் மற்றும் கண்ணாடியால் வேயப்பட்ட கூடங்கள் பூந்தோட்டங்களின் ஓர் இன்றியமையாத அங்கமாக உள்ளன. பொதுவாக பூந்தோட்டங்களில் பல வகையான மலர் மற்றும் அழகுச் செடிகள் பராமரிக்கப்படுகின்றன. இவற்றில் சில வகைகள் மிகவும் மென்மையாகவும் வெயிலின் கடுமையைத் தாங்கும் சக்தியில்லாமலும் காணப்படும். இக்கூடாரங்களில் செடிகள் பற்றிப் படர தூண்களும், அத்தூண்களில் நீரைப்பிடித்து வைக்கும் பாசி வகைகளும் வளர்க்கப்பட்டு அதன் மீது பற்றிப் படரும் கொடி வகைகள் வளர்க்கலாம். மேலும் இவற்றில் தொட்டிகளைத் தொங்கவிட்டு அவற்றில் நல்ல விலையுயர்ந்த செடி வகைகள் நட்டுப் பராமரிக்கலாம். இவ்வகையான கூடாரங்களில் நீர்த்தொட்டிகள் அமைத்து கூடாரத்தின் ஈரப்பதத்தை சரியான அளவு பராமரித்து,  இவ்வகையான அலங்காரச் செடிகள் நன்கு வளர உதவலாம்.

குடில், குடிசை

பூந்தோட்டங்கள் மன அமைதியை நாடி வருவோருக்கு ஓர் சிறந்த உறைவிடம். பூந்தோட்டங்களைத் தேடி வரும் பலர் தங்களது தனிமை இனிமையாகக் கழிய வேண்டும் என்று நினைப்பது தவறில்லை. இவ்வகையான மக்கள் தங்களது தனிமையை உறுதி செய்ய குடில்கள் உதவுகின்றன. இது தவிர இவை குடை போல் நிழல் தருவதுடன் அழகிய பூந்தோட்டத்தில் முளைத்த பெரிய காளான்கள் போன்ற பிரம்மையை நமக்குத் தரும். பொதுவாக கடலுக்கு அருகாமையிலுள்ள பூந்தோட்டங்களில் இவ்வகைக் குடில்கள் பெரும்பாலும் நிரந்தர அங்கமாகவே அமைவது சிறப்பு.

பாறை அமைவிடம்

மனதினால் ஆக்கப்படும் பூந்தோட்டங்கள்யாவும் அவன் மனதை பாதித்த இயற்கையின் பிரதிபலிப்பாகவே இருக்கும். எனவே பூந்தோட்டங்கள் பல நேரங்களில் இயற்கையின் அளப்பரிய வடிவத்தின் சுருக்கிய அமைப்பாகத் தென்படலாம். பெரிய மலைக் குன்றுகள், மலைத் தொடர்கள் நம்மின் உள் உணர்வுகளை தூண்டி ஆழ் மனதில் அமரும் போது அவற்றின் புறப்பரிமானமாக சிறிய பாறைகளைப் பயன்படுத்தி அதன் பிரதிபலிப்பை உண்டாக்குவதின் முயற்சியே பாறை அமைவிடம் அல்லது பாறைத்தோட்டம். இவ்வகையான பூந்தோட்டங்கள் நம்மை இயற்கையின் வாசலுக்கு இட்டுச் செல்வது போல் ஓர் பிரம்மையை ஏற்படுத்த தவறுவதில்லை. இவ்வகைப் பூந்தோட்டங்கள் சிலநேரம் கரடுமுரடான பாறைகளைக் கொண்டும், சில நேரம் வளவளப்பான பாறைகளைக் கொண்டும் அமைக்கப்படுகின்றன. பாறைகளின் வடிவம், அமைப்பு, புறத்தோற்றம் இவையாவும், தொகுப்போரின் எண்ண அலைகளின் வெளிப்பாடாக இருக்கும்.

நீர்த்தேக்கம்

பூந்தோட்டத்தின் புறத்தோற்றத்தினைப் பிரதிபலிக்க நீரின் உதவியை நாடி அவற்றின் கண்ணாடியாக நீர்த்தேக்கங்கள் பயன்படுகின்றன. இதனை அமைக்க இடத்தேர்வு மிகவும் முக்கியமானது. சரியான இடத்தை தேர்வு செய்து அமைக்கும் போதுதான் அதன் பயனை முழுமையாக்க முடியும். இவ்வகை நீர்த்தேக்கம் பல வடிவங்களில் அமைக்கப்பெற்று அவற்றில் தாமரை, அல்லி போன்ற நீர்வாழ்தாவரங்களும் மீன் போன்ற உயிரினங்களும் பயன்பாட்டை மேலும் வலுப்படுத்தும்.

அமர்விடங்கள்

பூந்தோட்டங்களைக் கண்டு மகிழ வருவோர் அதனை அமர்ந்து மகிழ வசதி செய்ய தேவைக்கேற்ற அமர்விடங்கள் அவசியமாகிறது. நிழல் தரும் தாவரங்களுக்கு கீழ் சிமெண்ட்டால் ஆன அமர்விடங்கள் அல்லது மரத்தாலான அமர்விடங்கள் நிர்மானித்து காண்போரை ஆசுவாசப்படுத்தலாம்.

பறவைக் குளியல்

பூந்தோட்டத்திற்கு மனிதன் மட்டும் சொந்தக்காரன் அல்ல. அவை இயற்கையின் உறைவிடம் என்பதால் பறவைகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். எனவே பறவைகள் வந்து தமது அலகுகளையும், இறக்கைகளையும் நனைக்க சிறிது நீர் நிற்குமாறு பறவைக் குளியல் அமைப்பது அவசியம். இவ்வமைப்புகள் கல்தூண்களில் அல்லது சிமெண்ட்டாலான சிறு கட்டட அமைப்புடன் செய்யலாம்.

தடுப்புகள்

பூந்தோட்டங்கள் பல அங்கங்களின் தொகுப்பாகும். ஒவ்வொன்றும் அதன் அழகை வெளிப்படுத்த அவற்றைப் பிரித்துக் காட்டுவது அவசியமாகிறது. இதற்காக பூந்தோட்டங்களில் மரத்தடுப்புகள் மற்றும் கம்பிகளினாலான தடுப்புகள் அமைக்க வேண்டும். இத்தடுப்புகளில் படரும் செடிகளைப் படரவிட்டு முழுமையான தடுப்பாக செய்யலாம். இவ்வகைத்தடுப்புகள் தேவைக்கேற்ப அமைத்து பயன்பெறலாம்.

விளையாட்டுப் பொருள்கள்

பூந்தோட்டங்கள் சிறுவர் சிறுமியருக்கும் சொந்தம்தான். அவர்கள் கண்டு மகிழ்ந்த பின்னர் ஆடி மகிழ சீசா, ஊஞ்சல், சறுக்கு, இராட்டினம் போன்ற விளையாட்டுப் பொருள்கள் அமைப்பது அவசியம். குழந்தைகள் இதனைப் பயன்படுத்தி மகிழ்வதைக் கண்டு பெற்றோர் இன்புறுவர். இவற்றினை நிர்மாணிக்கும் போது அவையாவும் ஆபத்தை விளைவிக்காமல் பாதுகாப்பானதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

வளைவுகள்

பூந்தோட்டங்களை இணைக்க வளைவுகள் அவசியம். அவை நிழல் குடைபோல் அமைந்தால் பயன்படுத்துவோருக்கு மிகவும் பாதுகாப்பான சூழ்நிலையில் இருப்பது போன்ற உணர்வு மேலிடும். இதற்காக சிமெண்ட் தூண்கள் இருபுறமும் அமைத்து கம்பிகள் கொண்டு இணைத்து அவற்றில் படரும் கொடிகள் வளர்த்து அவை நிழல் தருமாறு செய்யலாம். இவற்றைப் பலவகையான தோட்டங்களை இணைக்க பயன்படுத்தலாம்.

உருவங்கள், சிலை

பிரம்மாண்டமான உருவங்கள் சில பூந்தோட்டங்களில் அமைப்பது அதனின் அழகை மேலும் வலுப்படுத்தும். மெரினாவில் உள்ள உழைப்பாளிகள் சிலை, அமெரிக்காவின் லிபர்ட்டி சிலை இவ்வகைகளைச் சாரும். பூந்தோட்டங்களில் இவ்வகையான சிலைகள் சிந்தனையைத் தூண்டுவதாக அமைக்கலாம். இவ்வகை அமைப்புகள் தொகுப்போரின் எண்ணப்போக்கைப் பொறுத்து இடம்பெறும் அல்லது இடம்பெறாமலும் போகலாம்.

அடிப்படை கொள்கைகள்

அழகுத் தோட்டம்

அழகுத் தோட்டம் என்பது வெளிப்புற வாழுமிடமாகும். ஆதலால் அழகுத் தோட்டம் அமைக்கும் முன் திட்டமிடுதல் மற்றும் வரைபடம் தயார் செய்வது மிக முக்கியமானதாகும். அழகுத் தோட்டம் அழகாகவும், ரம்மியமாகவும் இருக்க வேண்டும். திட்டமிடும் பொழுது நிலத்தின் அமைப்பு, மண் எந்த வகையைச் சார்ந்தது, அப்பகுதியில் நிலவும் தட்பவெப்பநிலை, காற்றின் திசை மற்றும் வேகம், கட்டிடத்தின் உயரம் மற்றும் நிழல் விழும் பகுதி, தண்ணீர் வசதி போன்றவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் அப்பகுதியில் உள்ள மரங்கள், செடிகள், கொடிகள்  மற்றும் அதன் வளர்ச்சி பற்றி ஆய்வு செய்து கொள்ள வேண்டும். மேற்கூறிய அனைத்து புள்ளிவிவரங்களையும் சேகரித்துக் கொண்டு அதன் பின்புதான் அழகுத்தோட்டம் அமைப்பதற்கான வரைபடம் தயார் செய்ய வேண்டும்.

அழகுத்தோட்ட வரைபடம் தயார் செய்தல்

அழகுத்தோட்ட வரைபடம் தயார் செய்யும் போது வீட்டு அழகுத் தோட்டம் அல்லது வேறு வகையான அழகுத் தோட்டமாக (பொது பூங்கா, தொழிற்சாலைப் பூங்கா) இருந்தாலும் அழகுத் தோட்டம் அமைக்க இருக்குமிடத்தில் உள்ள கட்டிடம், மதில் சுவர், பூமிக்கடியிலுள்ள குடிநீர்க் குழாய், வடிகால் குழாய், கழிவுநீர்த் தொட்டி ஆகியவற்றைப் போன்ற நிரந்தர அமைப்புகளை வரைபடத்தில் குறித்துக் கொள்ள வேண்டும். வீட்டின் வெளிப்புறச்சுவரில் உள்ள சன்னல்கள், வாசல்கள், வராண்டா, வெளியே தெரியும் முக்கிய இடங்களையும், மறைக்க வேண்டிய இடங்களையும் குறித்துக் கொள்ள வேண்டும். ஆங்காங்கே உள்ள மரங்கள், செடிகள், கொடிகள் போன்றவற்றையும் குறித்துக் கொள்ள வேண்டும்.

தனிக் காகிதம் ஒன்றில் தோட்டத்தில் இருக்க வேண்டிய அம்சங்களை வரிசைப்படி குறித்துக் கொள்ள வேண்டும். வரைபடத்தில் இந்த அம்சங்களை எல்லாம் அளவுப்படி ஒப்பிட்டு பார்க்க வேண்டும். சில நேரங்களில் எல்லா அழகுத் தோட்ட அம்சங்களையும் பொருத்த முடியாவிட்டால் முக்கியத்துவம் குறைந்த  அம்சங்களை விட்டு விட்டு மிக முக்கியமான அம்சங்களை மற்றும் தேர்வு செய்த அம்சங்களை எந்தெந்த இடத்தில் பொருத்தினால் நன்றாக இருக்கும் என்று ஊகித்து அதற்கு மாற்று அம்சங்களையும் வைத்துக் கொண்டு வரைபடம் தயார் செய்ய வேண்டும். அதில் எது மிகவும் நன்றாக இருக்கிறதோ அல்லது வீட்டின் உரிமையாளர் எவ்வாறு விரும்புகிறாரோ அது போன்று இறுதியான வரைபடம் தயார் செய்ய வேண்டும். பின்னர் தோட்டத்தை 3 அல்லது 4 பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு பகுதியின் படத்தையும் நான்கு மடங்கு பெரிதாகப்போட்டுக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் புல்தரை முக்கியமான அம்சமாகும். ஆதலால் வீட்டின் முன்பகுதி அல்லது வீட்டின் இட அல்லது வடபகுதியில் அமைக்க வேண்டும். புல்தரையினையோ, நடைபாதையினையோ அல்லது சாலையையோ இரண்டாகப் பிரிக்கக்கூடாது. வீட்டுத் தோட்டத்தில் பாதை மற்றும் சாலை நேராக அமைக்க வேண்டும். மரங்களை பொதுவாக வீட்டின் பின்புறம், இடப்புறம் மற்றும் வலதுபுறங்களில் நடவு செய்ய வேண்டும். முன் பகுதியில் நடவு செய்தால் வீட்டின் தோற்றத்தை மறைத்து விடும். மரங்கள் தேர்வு செய்யும் பொழுது அதன் உயரம், வேர்களின் வளர்ச்சி,  மரத்தின் அமைப்பு, இலை உதிரும் தன்மை, பூக்களின் வண்ணம் போன்றவற்றை கருத்தில் கொண்டு தேர்வு செய்ய வேண்டும்.

குத்துச் செடிகள், கொடிகள் போன்றவற்றை அப்பகுதியின் சூழ்நிலைக்கேற்ப உகந்த செடிகளை தேர்வு செய்து அதனை பல்வேறு இடங்களில் பயன்படுத்தவேண்டும். பூ படுக்கைகள் அமைத்து தோட்டத்திற்கும் வீட்டிற்கும் அழகு சேர்க்கலாம்.

அழகுத் தோட்ட வரைபடம் தயார் செய்யும் பொழுது அங்குள்ள கட்டிடத்தின் அமைப்பு, வர்ணம், அருகிலுள்ள கட்டிடங்கள் நில அமைப்பு போன்றவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். மொத்தத்தில் அழகுத் தோட்டம் அமைத்த பின் அது மிகவும் அழகாகவும் அருகிலுள்ள அமைப்புகளுடன் ஒத்துப்போவதாகவும் உகந்த வண்ணத்தில் உள்ளதாகவும் இருக்க வேண்டும். ஒவ்வொரு வகையான அழகுத் தோட்டம் அமைக்கும் பொழுது அதன் முக்கியப் பண்புகள் மாறாமல் இருக்க வேண்டும். பல்வேறு அழகுத் தோட்டங்களின் பண்புகளைப் பற்றி இங்கே காண்போம்.

வீட்டுத் தோட்டம்

வீட்டுத் தோட்டம் அமைக்கும் பொழுது அளவுகள் சரியான குறித்த விகிதத்தில் இருக்க வேண்டும். அதில் வீடு முக்கிய அம்சமாகும். சில நேரங்களில் வீட்டுத் தோட்டத்தில் அலங்காரத் தண்ணீர்த் தொட்டி, சிலை, அல்லது மேடைப் புல் தரை அல்லது சிறந்த மரம் போன்றவை சிறப்பு அம்சமாக இருக்கலாம். நடைபாதை மற்றும் சாலை மிகவும் அழகானதாக அமைக்க வேண்டும்.

தொழிற்சாலைகளில் அழகுத் தோட்டம் அமைப்பு

தொழிற்சாலைகள், பொதுவாக பெரிய மற்றும் சிறிய நகரங்களில் அல்லது தேசிய, மாநில நெடுஞ்சாலை அருகில் அமைக்கப்படுகின்றன. பொதுவாக தொழிற்சாலைகளில் பல்வேறு வகையான தூசி, ரசாயன வாயு, கழிவு நீர் மற்றும் ஒலி போன்றவை சுற்றுப்புற சூழலை மாசுபடுத்துகின்றன. இத்தகைய மாசுபட்ட சூழ்நிலையில் சுற்றுப்புற சூழ்நிலையை நன்றாக உருவாக்க வேண்டுமானால் அழகுத் தோட்டங்கள் அமைப்பது மிகவும் இன்றியமையாததாகும். தொழிலாளர்கள் உணவருந்தவும் இடைவெளியில் இளைப்பாறவும் வசதியாக புல்தரை, மண்டபம் போன்ற அமைப்புகள் வைக்கலாம். இவ்வாறு அமைக்கப்படும் தோட்டங்கள் தொழிற்சாலைகளில் சுற்றுப்புற சூழ்நிலையைப் பாதுகாப்பதுடன், தொழிலாளர்களின் களைப்பை போக்கவும் உதவுகின்றது. அதற்கு ஏற்றாற்போல் தொழிற்சாலைகளில் தோட்டங்கள் அமைக்க அதிக அளவு மரங்கள் (மாசுபடிதலை எதிர்த்து வளரக்கூடியவை) செடிகள் மற்றும் புல்தரையினை அமைக்க வேண்டும். தேர்வு செய்யக்கூடிய செடிகள், கொடிகள் மற்றும் புல்வகைகள் பல்வேறு வகையான மாசுபட்ட சூழ்நிலையையும் தாங்கி வளரக்கூடியதாக இருக்க வேண்டும்.

அழகுத் தோட்டங்கள் எல்லா இடங்களிலும் அதாவது உணவு விடுதிகள், மருத்துவ மனைகள், கல்வி நிறுவனங்கள், கோவில்கள் போன்ற இடங்களில் அமைக்கப்படுகின்றன. அவ்வாறு அமைக்கப்படும் பூங்காக்கள் அவற்றின் தன்மைக்கேற்ப அமைப்பு, மரங்கள், செடிகள், புல்தரை போன்றவற்றை அமைத்துக் கொள்ள வேண்டும்.

அழகுத் தோட்டம் அல்லது பூங்காக்கள் அமைக்கும் பொழுது மேலே குறிப்பிட்ட அனைத்து விபரங்களையும் மனதில் கொண்டு சிறந்த வரைபடம் தயார் செய்ய வேண்டும்.

மாடித்தோட்டம்

நகர்புறங்களில் வீட்டைச்சுற்றி செடிகள் நடுவதற்கு போதிய இடம் இல்லாததால் மாடியில் தோட்டம் அமைக்கும் பழக்கம் பரவிக் கொண்டு வருகிறது. மாடியில் செடிகள் வளர்ப்பதற்கு முன் அங்குள்ள சூழ்நிலைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். தரையில் செடி வளர்ப்பதற்கும் மாடியில் செடிகள் வளர்ப்பதற்கும் உள்ள முக்கிய வேறுபாடுகளைத் தெரிந்து கொண்டால் தான் அந்த மாறுபட்ட சூழ்நிலைகளில் செடிகளை ஆரோக்கியமாக வளர்ப்பதற்கு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்கு உதவியாக இருக்கும்.

மாடிச் சூழ்நிலைகள்

மாடியில் இருக்கும் செடிகளுக்கு குறைந்த அளவு மண்தான் கிடைக்கும். அதனால் ஆழமாக வேர்விட்டு வளர முடியாது. குறைந்த அளவு மண்ணில் ஊட்டச் சத்துகளும் குறைவாகத் தானிருக்கும், அதனால் செடிகளுக்கு வேண்டிய ஊட்டச் சத்துக்களை நாம் அடிக்கடி செயற்கை உரங்கள் மூலம் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். மாடியில் வெயில், வெளிச்சம் மற்றும் காற்று அதிகமாக இருக்கும். எனவே தண்ணீரின் தேவை அதிகமாக இருக்கும் மண்ணில் உள்ள ஈரம் விரைவில் காய்ந்துவிடும். காற்றில் ஈரப்பதம் குறைவாக இருக்கும். அதனால் செடிகள் விரைவில்  வாடிவிடும். ஆகவே மாடியில் உள்ள செடிகளுக்கு அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டியது அவசியமாகிறது. மாடியில் வடிகால் எளிதாக இருக்கும். தண்ணீர் எப்போதும் தேங்காது. ஆனால் மழைக் காலங்களில் மண்ணிலுள்ள ஊட்டச் சத்துக்கள் தண்ணீரில் கரைந்து எளிதில் வெளியேறிவிடும்.

அதனால் செடிகளுக்கு வேண்டிய ஊட்டச் சத்துக்களை நாம் அடிக்கடி செயற்கை உரங்கள் மூலம் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அதுவும் சிறிதுசிறிதாக பல தவனைகளில் இட வேண்டும். கடுமையான வெயிலையும், மழையையும், காற்றையும் தாங்கி வளரக்கூடிய செடிகள் மட்டுமே மாடிச்சூழ்நிலைகளில் வளரும்.

மாடியில் செடி வளர்ப்பதற்கு இரண்டு வழிகள் உண்டு. தொட்டிகளில் செடிகளை வளர்த்து மாடியில் பல இடங்களிலும் வைத்து விடலாம் அல்லது மாடியில் குறிப்பிட்ட இடங்களில் மண் கலவையைப் போட்டு அதில் நேரடியாகச் செடிகளை நட்டு விடலாம். எந்த முறையைக் கையாண்டாலும் முக்கியமாக ஒன்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது மாடியில் எவ்வளவு எடையை ஏற்றலாம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

மாடியில் புல் தரை

ஒரு பசுமையான புல் தரையை மாடியில் அமைத்துவிடலாம். புல் தரை அமைக்க வேண்டிய பகுதியில் தண்ணீர் உறிஞ்சாத பொருளினால் மெழுகி தரையை தயார் செய்து கொள்ள வேண்டும். பின்னர் மண் கலவையை இட வேண்டும். தண்ணீர் வடிவதற்கு ஏதுவாக ஒரு பக்கம் சற்று சரிவாக இருக்க வேண்டும். புல் தரை அமைப்பதற்கு சுமார் 10 முதல் 12 செ.மீ உயரத்திற்கு மண் கலவை போட்டால் போதும்.

நல்ல வெளிச்சத்தையும் வெப்பத்தையும் தாங்கக்கூடிய அறுகம்புல், ஜப்பான் புல், மணிலா புல், கொரியன் புல், ஹைதிராபாத் புல், குட்டை பெர்முடா ஆகிய புல் வகைகளும் மாடியில் நடுவதற்கு ஏற்றதாகும்.

மாடியில் இருக்கும் புல்தரைக்கு தவறாமல் உரமிடுதல் வேண்டும். ஒரு சதுர மீட்டருக்கு 100 கிராம் சூப்பர் பாஸ்பேட், 50 மூரியேட் – ஆப் – பொட்டாஷ் மற்றும் 200 கிராம் வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றைப் புல் நடுவதற்கு முன்பாக மண் கலவையோடு கலந்து விட வேண்டும். பின்னர் ஆண்டுக்கு ஒரு முறை சூப்பர் பாஸ்பேட் உரத்தையும்  மூரியேட் – ஆப் – பொட்டாஷ் உரத்தையும் இதில் பாதி அளவுக்கு கொடுக்க வேண்டும்.

தொட்டிகள்

மாடித் தரையில் மண் கலவை போட்டு நேரடியாக செடிகள் நடுவதை விட தொட்டிகளில் செடிகள் வளர்த்து மாடியில் வைப்பது நல்லது. தொட்டிகள் அகன்ற அடிப்பாகத்தை கொண்டதாக இருந்தால் காற்றில் சாய்ந்து விடாமல் இருக்கும். கனமான பெரிய தொட்டிகளை அஸ்திவாரத்திலிருந்து எழுப்பப்பட்ட சுவற்றின் மேல் வைக்க வேண்டும். சிறிய தொட்டிகளை கீழே சுவர் இல்லாத பகுதியில் கூட வைக்கலாம். பெரிய தொட்டிகளில் மற்றும் தாழ்களில் சிறிய மரங்களை வளர்க்கலாம். சுமார் 60 செ.மீ உயரமும் குறுக்களவும் கொண்ட தொட்டிகள் அல்லது பெட்டிகள் மரம் வளர்ப்பதற்கு ஏற்றதாக இருக்கும்.

கைப்பிடிச் சுவர்களையும் தொட்டிகள் வைப்பதற்கு பயன்படுத்தலாம். கைப்பிடி சுவற்றின் மேல் ஆங்காங்கே செடிகள் வைப்பது கட்டிடத்தின் அழகைக் கூட்டும் மாடியில் இடம் குறைவாக இருந்தால் சுவற்றில் குறிப்பிட்ட கான்கிரீட் பலகைகளைச் சொறுகி அதன் மேல் தொட்டியில் உள்ள செடியை வைக்கலாம். கான்கிரீட் பலகைகளுக்கு பதிலாக இரும்பு வளையங்களை சுவற்றில் பொருத்தி அதில் தொட்டிகளை வைத்து விடலாம்.

பந்தல்கள்

மேற்குப் பக்கத்து சுவர்களின் ஓரமாக ஒரு பந்தல் போட்டுவிட்டால் வசதியாக இருக்கும். பந்தல் போடுவதற்கான கால்களை மண் தரையில் எங்கு வேண்டுமானாலும் ஊன்றி விடலாம். ஆனால் மாடியில் கால்களை நிறுத்துவதற்கு சில சிறப்பான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கைப்பிடிச் சுவற்றில் இரண்டு மூன்று இரும்பு வளையங்களை ஒன்றின் கீழ் ஒன்றாக 50 செ.மீ இடைவெளியில் பொருத்தி அதில் மூங்கில் கம்புகளை சொறுகி விடலாம். வளையங்கள் சிறியதாக மூங்கில் அல்லது சவுக்கு மரக்கம்புகள் நுழையும் அளவுக்கு இருந்தால் போதும்.

மாடியில் வளர்ப்பதற்கேற்ற செடிகள்

நல்ல வெயிலையும் முழு வெளிச்சத்தையும் தாங்கக்கூடிய செடிகளைத் தான் மாடியில் வளர்க்க வேண்டும். வீட்டிற்கு வெளியே திறந்த வெளியில் வளரக் கூடிய எல்லா வகைச் செடிகளையும் வளர்க்க முடியும். ஆனால் மாடியில் குறைந்த அளவே மண் இருப்பதனால் மரங்களையும் பெரிய செடிகளையும் வளர்ப்பது கடினம். மாடியில் முழு ஒளியும் கிடைப்பதினால் வண்ண வண்ண பூக்களையும், இலைகளையும் கொடுக்கக் கூடிய செடிகளை வளர்க்கலாம்.

திசு வளர்ப்பு

தாவரங்களின் செல் அல்லது திசுக்களைக் கொண்டு பயிர்ப்பரப்புதல் தற்போது பிரபலமான முறையாக கருதப்படுகிறது. தாவரத்தின் செல், திசுக்களை எடுத்து அதை வளர ஏதுவான சூழ்நிலையை ஏற்படு்த்தி செடியான பின்னர் பயன்படுத்துவது திசு வளர்ப்பு என கருதப்படுகிறது. இம்முறையில் ஆர்க்கிட், ஆந்தூரியம் போன்ற விலையுயர்ந்த அழகிய மலர்கள் பயிரிடப்படுகின்றன. இம்முறையில் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் குறுகிய காலத்தில் பல இலட்சக்கணக்கில் கன்றுகளை உற்பத்தி செய்து பயன்பெறலாம்.

கேள்வி பதில்கள்

புல் தரை அமைப்பதற்கான சுலபமான மற்றும் சிக்கனமான முறை என்ன? எவ்வாறு புல்தரையினை சிக்கனமாகவும் சுலபமாகவும் அமைக்கலாம்?

வேர்களை ஊன்றி புல்தரை அமைப்பதே சிக்கனமான முறையாகும். ஆனால் இம்முறையில் புல்தரை அமைப்பதற்கு அதிக காலம் தேவைப்படும். இதில் ஈரமான நிலையிலுள்ள தயார்படுத்தப்பட்ட நிலத்தில் சிறு வேர்களை(15 செ.மீ. இடைவெளிவிட்டு)  ஊன்ற வேண்டும். நடவு செய்த ஆறுமாத காலத்தில் வேர்கள் நன்கு படர்ந்து வளர்ந்ததுடன் புல் வெட்டுதல், உருளையை உருளவிடுதல் மற்றும் நீர்ப்பாசனம் ஆகிய செயல்களை மேற்கொண்டு திடமான புல்தரையும் உருவாகிவிடும்.

எனது வீட்டில் மிகவும் குறைந்த அளவே நீர்ப்பாசன வசதி உள்ளது. இத்தகைய சூழலுக்கு எவ்வகையாக புல்லினை பயன்படுத்தி புல்தரை அமைக்கலாம்?

அருகம்புல் என்று பொதுவாக அழைக்கப்படும் பெர்முட புல்லானது விரைவான வளர்ச்சி, வறட்சியைத் தாங்கும் தன்மை, குறைந்த நீர் தேவை மற்றும் அடிக்கடி வெட்டப்படுவதற்கான பிறதிச்செயல் ஆகிய தன்மைகளைக் கொண்டுள்ளதால்  இத்தகைய புல்லினை நீங்கள் பயன்படுத்தலாம்.

புல்தரையில் அதிகமான வளர்ச்சியடைந்த புற்களை எவ்வாறு வெட்டவேண்டும்?

புல்வெட்டும் கருவியைக் கொண்டு சீரான உயரத்திற்கு புற்களை வெட்ட வேண்டும். ஆனால் புதிதாக அமைக்கப்பட்ட புல்தரையினை நன்கு படர்ந்து வளரும் வரை வெட்டக்கூடாது. ஆரம்பத்தில் வீசுக் கத்தியினைக் (Scythe) கொண்டு புற்களை நறுக்க வேண்டும். பருவத்தைப் பொறுத்து புல் வெட்டுவதற்கான கால இடைவெளி மாறுபடும். புற்களின் உயரம் 5-6 செ.மீட்டருக்கு மிகையாகமல் இருக்கும்படியாக புல்வெட்டும் கருவியிலுள்ள கத்திகளின் உயரத்தை பொறுத்த வேண்டும்.

ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை.

2.9756097561
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top