பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

நீர்

நீரின்றி அமையாது உலகு.

நீர்க்கோளம்

சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி, எரிமலைகளால் சூழப்பட்ட நெருப்புக்கோளமாக இருந்தது. இதிலிருந்து வெளியான நீராவியும், வாயுக்களும்தான் வளிமண்டலத்தில் நிறைந்திருந்தன. பின்பு பூமி குளிர்ந்தபோது, வளிமண்டல நீராவியும் குளிர்விக்கப்பட்டு மழையாகப் பெய்தது. இம்மழைநீரால் பூமியின் தாழ்வான இடங்கள் நிரப்பப்பட்டு ஏரிகளும், சமுத்திரங்களும் உருவாயின.

புவியிலுள்ள நீர் சூழாத நிலப்பரப்பை ஒன்றுபடுத்தி பார்த்தால் அவை புவியின் மூன்றில் ஒரு பகுதி பரப்பளவையே கொண்டதாக இருக்கும். மீதமுள்ள மூன்றில் இரண்டு பகுதி நீரினால் சூழப்பட்டிருக்கும். விண்வெளியிலிருந்து பூமியை நோக்கினால் அது ஒரு நீல நிற மேற்பூச்சுடன் இருப்பதாகத் தோன்றும். இதனாலேயே புவி நீலக்கோள் என்று அழைக்கப்படுகிறது.

உயிரின் அடிப்படை நீர்

உலகின் முதல் உயிரினம் கடலில் உருவானது. இவை காலப்போக்கில் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தகவமைப்புகளை மாற்றிக்கொண்டு நீரில் நீந்தவும், கடற்கரையிலிருந்து நிலப்பரப்புகளிலில் ஊர்ந்து வரவும், மரங்களிலும், மலைகளிலும் ஏறவும், வான்வெளியில் பறந்து செல்லவும் கற்றுக்கொண்டு பூமியில் வலம் வரத் தொடங்கின.

பூமியில் உயிரினங்கள் இருப்பதற்கு காரணம் நீர். நமது உடலில் 65% நீரே உள்ளது. உயிரினம் கடல்நீரிலிருந்தே உருவானது என்பதற்கு ஆதாரமாக நமது இரத்தத்தில் உள்ள உப்பின் அளவும், கடல்நீரில் உள்ள உப்பின் அளவும் ஏறக்குறைய ஒன்றாக உள்ளது. புவியில் அமைந்துள்ள நீரின் காரணமாகவே இது உயிரினங்களுக்கு வாழ்விடமாக அமைகிறது.

வாழ்வின் ஆதாரம்-நீர்

நிலப்பரப்பில் உள்ள நீரும் கடல் நீரில் இருந்து உருவானதே. கடல் நீரானது பல பில்லியன் முறைகள் நீர் சுழற்சிக்கு உட்படுகிறது. இதனால் பல மில்லியன் ஆண்டுகளாக பூமியில் உள்ள நீரின் அளவானது நிலையாகவே உள்ளது.

ஒரு நீர்த்துளியானது சில வாரங்கள் ஆற்றிலோ, சில நூற்றாண்டுகள் குளத்திலோ அல்லது பல்லாயிரம் ஆண்டுகள் பனிக்கட்டி ஆறுகளிலோ இருந்திருக்கலாம். நாம் இன்று பருகும் நீரானது முன்னொரு காலத்தில் அமேசானிலோ அல்லது நைல் நதியிலோ இருந்திருக்கலாம். அல்லது, கோயிலில் அபிஷேகத்திற்கோ, சீனாவில் விவசாயத்திற்கோ பயன்பட்ட நீராக இருக்கலாம்.

தாவரங்கள், மிருகங்கள் மற்றும் மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் நீர் இன்றியமையாதது.

ஒளிச்சேர்க்கையின் மூலமாக தங்களுக்குத் தேவையான உணவை தாவரங்கள் தயாரிக்க, வேர்களின் வழியாக நீரை உறிஞ்சிக் கொள்கின்றன.

மீன்களும், நீர்நிலையில் வாழும் உயிரினங்களும் நீரிலேயே வாழ்ந்து இனப்பெருக்கம் செய்கின்றன.

நாம் குடிப்பதற்கும், குளிப்பதற்கும், சமைப்பதற்கும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருப்பதற்கும் நீர் பயன்படுகிறது.

சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு நதிகளின் கரைகளில்தான் நாகரீகங்கள் தோன்றின.

எகிப்திய நாகரிகம் நைல் நதிக்கரையிலும், மெசபடோமியா நாகரீகம் யூப்ரடீஸ், டைகரீஸ் நதிக்கரைகளிலும், மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரீகங்கள் சிந்து நதிக்கரையிலும், சீன நாகரீகம் யாங்சீ நதிக்கரையிலும் உருவாயின.

அன்று முதல் நீரை சேகரிக்கவும், பயன்படுத்தவும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லவும் வழிவகைகள் ஆராயப்பட்டன. இதன் விளைவாக சக்கரங்களின் உதவியுடன் களிமண்ணைப் பயன்படுத்தி சுடுமண் பாத்திரங்கள் உருவாக்கப்பட்டு, அவற்றின் மூலம் நீரை சேகரித்து, பாதுகாத்து மற்ற இடங்களுக்கு கொண்டு செல்ல பயன்பட்டன.

நீர்-இயற்கையின் வரப்பிரசாதம்

பூமியில் இருக்கும் திரவங்களில் உயிரினங்களுக்கு மிக அத்தியாவசியமானது நீரே. இதனை அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக்குவது சில குறிப்பிட்ட பண்புகளேயாகும்.

நீரின் முக்கியத்துவம் வாய்ந்த சில இயற்பியல் பண்புகள்

நீர் மூன்று உபயோகமிக்க நிலைகளில் காணப்படுகின்றது.

திரவநிலை - நீர்

நீரின் இந்நிலையே நாம் அதிக அளவில் பயன்படுத்தக்கூடியது. சுத்தமான நீர் நிறம், மணம், சுவையற்ற நடுநிலைத் தன்மை வாய்ந்தது. எனவே நீர் நம் அனைத்து அன்றாட தேவைகளுக்கும் பயன்படுகிறது. மேலும் நீரானது விவசாயம் மற்றும் தொழிற்துறைகளில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. நீர்வீழ்ச்சிகளில் அதிக ஆற்றலோடு பாயும் நீரானது மின் உற்பத்தி செய்யவும், ஆறு, கடல் போன்றவற்றின் நீரானது பொருட்களை கொண்டு செல்லும் நீர்வழிப் போக்குவரத்திற்கும் பயன்படுகின்றது. நீரினை கொள்கலன்களின் மூலம் எளிதாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லலாம்.

திரவ நிலையில் நீர், அதிக எண்ணிக்கையிலான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் உயிர்வாழவும், கடல்வாழ் உயிரினங்களின் இருப்பிடமாகவும் திகழ்கின்றது.

திடநிலை - பனிக்கட்டி

நீரின் உறையும் தன்மையினாலேயே நாம் ஐஸ்கிரிம் மற்றும் குளிர்பானங்களை உண்டு மகிழ முடிகிறது. பழங்கள், காய்கறிகள், உணவுப்பொருட்கள் மற்றும் உயிரியல் மாதிரிகளை பதப்படுத்துவதற்கு நாம் ஐஸ்கட்டிகளைப் பயன்படுத்துகின்றோம். பூமியின் நன்னீர் ஆதாரம் அனைத்தும் உறைந்த பனிக்கட்டிகளாகவே துருவப்பகுதிகளில் உள்ளன.

பனிக்கட்டியின் மிதக்கும் தன்மையினாலே நீர்நிலைகளின் மேற்பரப்பு மட்டும் உறைந்து காணப்படுகிறது. பனிக்கட்டி ஒரு வெப்பம் கடத்தாப்பொருள் ஆகும். இதனாலேயே “எஸ்கிமோ” மக்கள் பனிக்கட்டிகளைப் பயன்படுத்தி வீடுகள் அமைக்கின்றனர். இதற்கு “இக்லு” என்று பெயர்.

பனிக்கட்டி மிகக் கடினமான திடப்பொருள். இதில் நாம் நடக்கவும், பனிசறுக்கு விளையாடவும், வீடுகள் கட்டவும், வண்டிகள் ஓட்டவும் முடியும். கடலில் மிதக்கும் பனிப்பாறைகள், தவறுதலாக மோதும் பெரிய கப்பலைக்கூட உடைத்து நொறுக்கக்கூடிய கடினத்தன்மை வாய்ந்தவை.

வாயு நிலை - நீராவி

நீரின் ஆவியாகும் பண்பே இயற்கையில் நீர்சுழற்சி நடைபெற அடிப்படை காரணம் ஆகும். வளிமண்டலத்திலுள்ள நீராவி குளிர்ந்து நீர்துளிகளாகி மழையாகப் பொழிகிறது.

நீராவி, அனல்மின்நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யும் இயந்திரங்களை இயக்கவும், நீராவி இயந்திரத்தால் ஓடும் இரயில்களிலும் பயன்படுகின்றது.

ஆதி முதல் ஆழ்கடல் வரை

பூமி வரைபடத்தில் இயற்கை பூசிய நீலச்சாயங்களோ என எண்ணி வியக்க வைக்கும் ஆறுகள், ஓடைகள், கால்வாய்கள், மெல்லெனத் தவழ்ந்தோ, அவசரகதியில் ஓடியோ இறுதியில் சென்று சேர்வது கடலில் தான். நீரின் அபரிமிதத்தை நாம் அனுபவிக்கும் அதே வேளையில் நீரை யோசனையின்றி வீணாக்குவது, தயக்கமின்றி மாசுபடுத்துவதோடு மட்டுமல்லாமல் அதை நம் வசப்படுத்த திட்டங்களும் போடுகின்றோம்.

உலகில் பெரும்பாலான முக்கிய நீர் ஆதாரங்கள் மிகவும் மோசமான நிலையில் மாசுபட்டுள்ளன. தெளிந்த முத்து போன்ற வெண்ணிறத்தில், மலைகளிலில் வழிந்தோடி வருகின்ற நீரானது இறுதியாக கடலில் சேரும் பொழுது கலங்கி, மங்கலாகி விடுகிறது.

மனித வாழ்வில் நீர்

1. நீரின் புனித தன்மை

நீர் நமக்கு தூய்மையாக வாழ்க்கைக்கு உதவுவதோடு, பல்வேறு மதசடங்குகளுக்கும் இன்றியமையாத ஒன்றாக விளங்குகிறது. இந்தியாவில் கங்கை, யமுனை, பிரம்மபுத்திரா, கோதாவரி, நர்மதை, காவேரி மற்றும் புராணகால சரஸ்வதி ஆகிய நதிகளை தெய்வங்களாக வணங்கி வருகிறோம். இந்நதிகளின் நீரானது உடலுக்கு சுகமளித்து, மனதை தூய்மையாக்கும் சக்தியைக் கொண்டுள்ளன.

இந்துக்கள் புனித நதிகளில் நீராடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இறப்பிற்கு பின்னர் அவர்களின் ‘அஸ்தி’யானது புனித நதி, குளம் அல்லது கடலில் கரைக்கப்படுகிறது.

இஸ்லாமியர்கள், தங்கள் பாதங்களை நீரால் சுத்தம் செய்த பின்னரே மசூதிகளில் தொழுகையை தொடங்குவர்.

கிறிஸ்தவர்கள் ஞானஸ்நானம் பெறுவதும் நீரினாலே.

2. போக்குவரத்தும், வணிகமும்

பண்டை காலங்களில், நீர்வழிப் போக்குவரத்தே ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தது. ஆற்றின் கழிமுகப்பகுதிகள் தானியங்கள், ஆடுமாடுகள் போன்ற வியாபாரப் பொருட்களை ஏற்றி இறக்குவதற்கு வசதியாக மாற்றியமைக்கப்பட்டன.

நீர்வழிப் போக்குவரத்துக்கு ஏதுவாக உலகெங்கிலும் ஆறுகளின் போக்குகள் மாற்றியமைக்கப்பட்டன. கால்வாய்களும் துறைமுகங்களும் ஏற்படுத்தப்பட்டு கப்பல் போக்குவரத்து மூலமாக பல நகரங்கள் இணைக்கப்பட்டன.

3. நீரின்மேல் வாழ்க்கை

தொழில் நிர்பந்தம், இடப்பற்றாக்குறை மற்றும் இயற்கை அமைவிடம் காரணமாக சில இடங்களில் மக்கள் நீர்நிலைகளில் தங்கள் குடியிருப்புகளை அமைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

உலகில் முதன் முதலாக 8000 ஆண்டுகளுக்கு முன்பே இத்தகைய வீடுகள் அமைக்கப்பட்டதாக தெரிகிறது. பெரிய அலைகளினாலும், வெள்ளத்தினாலும் பாதிப்பு ஏற்படாவண்ணம் மரத்தூண்களில் மேடையமைத்து கட்டப்பட்டன.

இத்தாலி நாட்டில் உள்ள வெனீஸ் நகரம், கடல் நடுவில் மணல் திட்டுகளின் மேல் உருவாக்கப்பட்டது. இந்நகரமானது சாலைகளுக்கு பதிலாக கால்வாய்களினாலேயே இணைக்கப்பட்டுள்ளது.

உலகின் பல பகுதிகளில் படகுவீடுகள் ஆறுகளிலும், துறைமுகப்பகுதிகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் இவற்றை கேரளா மற்றும் காஷ்மீர் மாநிலங்களில் காணலாம்.

வெள்ளத்தினால் உண்டாகும் பாதிப்பைத் தவிர்பதற்காக, கம்போடியாவில் மீகாங் ஆறு மற்றும் டாங்லி சேப் ஏரிக்கரைகளில் வீடுகள் நிலமட்டத்திலிருந்து சற்று உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

பழங்கள், காய்கறிகள் மற்றும் உணவுவகைகள் சிறிய படகுகள் மூலம் தாய்லாந்து நாட்டில் கால்வாய் மற்றும் ஆறுகளிலுள்ள படகு வீடுகளில் வாழும் மக்களுக்கு வியாபாரத்திற்காக எடுத்துச்செல்லப்படுகின்றன.

பிலிப்பைன்ஸ் நாட்டின் அனைத்து மீனவகிராமங்களும், ஆற்றின் கழிமுகப்பகுதிகளிலும் மற்றும் மணல் திட்டுகளின் மேலும் கட்டப்படுகின்றன.

4. நீர் விளையாட்டு

நீச்சல், நீர்ச்சறுக்கு, பாய்மரக்கப்பலோட்டுதல், பனிச்சறுக்கு போன்றவை உற்சாகமளிக்கும் நீர் விளையாட்டுகள் ஆகும்.

நீர், கவிஞர்கள் மற்றும் கலைஞர்களின் சிந்தனைக்கு தூண்டுகோலாக அமைகிறது. நீருற்றுகள், நீரோடைகள், நீர் காட்சிகள் போன்றவை வீடுகள் மற்றும் அலுவலக கட்டடங்களின் உட்பகுதியில் செயற்கையான முறையில் அமைக்கப்படுகிறது.

பூமியிலுள்ள 1.4 பில்லியன் கனகிலோ மீட்டர் நீர்ப்பரப்பில் 97 சதவீதம் கடலில் உப்பு நீராக உள்ளது.

பூமியிலுள்ள நன்னீரின் அளவு 36 மில்லியன் கன கிலோமீட்டர் பரப்பு ஆகும். இதில் 28 மில்லியன் கன கிலோமீட்டர் பரப்பில் உள்ள நீர் உறைந்த நிலையில் அண்டார்டிக் மற்றும் கீரீன்லாந்து பகுதிகளில் காணப்படுகிறது.

ஆறு, ஏரி, குளங்களில் நாம் பயன்படுத்தக் கூடிய நிலையில் உள்ள நீரின் அளவு 0.5 சதவீதம் அதாவது 8 மில்லியன் கன கிலோமீட்டர் பரப்பளவே ஆகும்.

பூமியின் பரப்பளவில் சுமார் 66% சமுத்திரங்களால் சூழப்பட்டூள்ளது. பூமியிலுள்ள மொத்த கடல்நீரின் அளவில் பாதிக்கும் மேற்பட்ட அளவு நீர், பசிபிக் பெருங்கடலில் உள்ளது. நீர் சீதோஷ்ணநிலை மாற்றத்திற்கு அச்சாணியாக விளங்குகிறது. கடல் உணவுப்பொருட்கள், உப்புகள், தாதுப்பொருட்கள், கடல்வாழ் உயிரினங்கள் ஆகியவை சமுத்திரங்களில் உள்ளன. ஏறத்தாழ 80 சதவீதத்திற்கும் அதிகமான கடல்வாழ் உயிரினங்கள் இன்னும் கண்டறியப்படாதவைகளாவே உள்ளன.

சீதோஷ்ண நிலை சமன்படுத்தும் சாதனம்

வெப்ப நீரோட்டம் கடலின் மேற்பகுதியிலும், குளிர் நீரோட்டம் கடலின் அடிப்பகுதியிலும் ஆறுகளைப் போல ஓடிக் கொண்டிருக்கின்றன. இவை ஒன்றோடொன்று கலப்பதால் நிலப்பரப்பில் தட்ப வெப்பநிலை கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்படுகிறது. மேலும் இவை தொடர்ந்து கடலின் அடிப்பகுதியில் பிராணவாயுவை எடுத்து செல்லவும், மேல்மட்டத்திற்கு சத்துப்பொருட்களை கொண்டு சேர்க்கவும் உதவுகிறது.

அட்லாண்டிக் பெருங்கடலில் ஓடும் கல்ஃப் வெப்ப நீரோட்டமானது இங்கிலாந்து நாட்டில் விவசாயப்பண்ணைகளுக்கும், கனடாவில் துருவக்கரடிகள் வாழ்வதற்கும் காரணமாக அமைகிறது.

சமுத்திரங்களில் மேற்பரப்பு வெப்பம் 270 செ முதல் - 10 செ வரை உள்ளது. இதுவே காற்று, மழை காற்றழுத்தம், ஈரப்பதம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் காரணி. வங்காள விரிகுடாவில் உண்டாகும் உயர்ந்த, தாழ்வான காற்றழுத்த மண்டலங்களினாலேயே இந்தியாவின் பருவக்காற்றுகள் உருவாகின்றன. உலகின் பல பகுதிகளில் தட்பவெப்ப நிலையில் பெரும் மாற்றங்களை உண்டுபண்ணக் கூடிய “எல்நினோ” விளைவுகள் பசிபிக் சமுத்திரத்தில் ஏற்படும் வெப்பநிலை மாறுப்பாடினாலேயே நிகழ்கிறது.

கடல்வாழ் உயிரினங்கள்

உயிரினங்கள் கடலிலிருந்தே உருவாயின. அதிக அளவிலான உயிரின வகைகள் கடலிலேயே காணப்படுகிறது. பல அடிப்படை தாது உப்புகள், நீரில் கரையும் வாயுக்கள், கனிமங்கள் ஆகியவை கடல் நீரில் உள்ளதால் பல்வேறு உயிரின வகைகள் வளர்ந்து பெருகுவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துகிறது.

பவளப்பாறைகள் - சமுத்திர வனங்கள்

நிலப்பரப்பில் உள்ள மழைக்காடுகளைப் போன்றது கடலில் உள்ள பவளப்பாறைகள். சுமார் 6 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பில் விரிந்து கிடக்கும் இவை பலவகையான கடல்வாழ் உயிரினங்களின் வசிப்பிடமாக திகழ்கின்றன. இப்பாறைகளின் வளர்ச்சி பவளத்திட்டுகள் அல்லது பவளத்தீவுகளை உருவாக்குகின்றன. பவளப்பூச்சியின வகைகள் இந்தியா மற்றும் பசிபிக் சமுத்திரங்களில் அதிக எண்ணிக்கையில் உள்ளன. 60% பவளப்பாறைகள் இந்திய மகா சமுத்திரத்தில் மட்டுமே உள்ளது. பவளப்பாறைகள் இந்தியாவில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகள், மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி மற்றும் கட்ச் வளைகுடாப் பகுதிகளில் காணப்படுகிறது.

பவளப்பாறைகளில் உள்ள வேதியியல் பொருட்கள் பல்வேறுபட்ட நோய்களை குணப்படுத்தும் மருந்துகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

பவளப்பாறைகள், கடலோரப்பகுதிகளை புயல் மற்றும் அலைகளின் பாதிப்பிலிருந்து காக்கின்றன. இப்பவளப்பாறைகள் அழிக்கப்படும்பொழுது கரை அரிப்பு ஏற்படுவதற்கான அபாயம் உருவாகிறது.

கடலிலிருந்து உணவு

உலகில் வாழும் 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட மக்கள் கடல்சார்ந்த உணவையே நம்பியிருக்கின்றனர். மீன் புரதச்சத்து நிறைந்த உணவு. உலகநாடுகளில் 80 மில்லியன் டன் மீன் சேகரிக்கப்படுகிறது. அதில் இந்தியாவில் மட்டும் 1.5 மில்லியன் டன் மீன் சேகரிக்கப்படுவதோடு இந்தியா மீன்பிடிப்பில் எட்டாம் நிலையை வகிக்கிறது.

தாதுவளம்

பல்லாயிரம் வருடங்களுக்கு தேவையான தாதுப்படிமங்கள் கடலின் அடியில் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சிர்கான், கார்னட், மோனாஸைட், தாமிரம், அலுமினியம், நிக்கல் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை நுண்முடிச்சுகளாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆழ்கடலில் சுரங்கம் அமைத்து இத்தாதுப் பொருட்களை பெறுவது பொருளாதார ரீதியில் சிந்திக்க வேண்டியதொரு காரியமாகும்.

கடலில் கரைந்துள்ள கனிமங்கள்

உப்பு கடல் நீரிலிருந்தே எடுக்கப்படுகிறது. கடலிலுள்ள உப்பையெல்லாம் எடுத்து பூமியின் மேல் பரப்பினால் அது 150மீ. உயரத்திற்கு வரும். இந்து மகா சமுத்திரம்தான் உலகில் மிக அதிக உப்புத்தன்மை வாய்ந்தது. மெக்னீசியம், சோடியம் சல்பேட் மற்றும் பொடாசியம் சல்பேட் ஆகியவை கடல் நீரிலிருந்தே பிரித்தெடுக்கப்படுகின்றன.

எண்ணெயும் இயற்கை வாயுக்களும்

உலகத்தில் பயன்படுத்தப்படும் எண்ணெய் மற்றும் இதர இயற்கை வாயுக்களில் ஐந்தில் ஒருபங்கு கடலிலிருந்து பெறப்படுகிறது. இந்தியாவில், கம்பாட் வளைகுடா, மும்பை ஹை பகுதி, காவிரி ஆற்றுப்படுகை, வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளிலிருந்து எண்ணெய் பெறப்படுகிறது.

மருந்துகள்

கடல்வாழ் உயிரினங்கள் பல்வேறு நுண்ணுயிர் மற்றும் பூஞ்சைகளை எதிர்க்கும் சக்தி கொண்ட மருந்துகள் தயாரிக்க பயன்படுகின்றன. ஒரு சில கடல்மீன்கள் தன்னை எதிரிகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள நச்சுத்தன்மை கொண்ட இரசாயண திரவங்களை வெளியிடுகின்றன. அவை மருத்துவ குணத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது. கடல் பஞ்சுகளிலிருந்து பெறப்படும் பொருட்கள் பலவகை நுண்ணுயிர் மற்றும் பூஞ்சைகளை எதிர்க்கும் தன்மை பெற்றவையாக உள்ளது.

ஆற்றல்

அலைகளின் இயக்கத்திலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யலாம். சௌராஷ்டிரா கடற்கரைகளில் அலைகள் 6 மீ உயரம் வரை எழும்பும் தன்மையுள்ளது. உலகத்திலேயே முதல் அலையாக்க சக்தி நிலையம் பிரஞ்சு நாட்டின் பிரிட்டானி நகரத்தில் ரான்ஸ் என்ற நதிக்கரையில் தான் அமைக்கப்பட்டது.

வணிகமும், போக்குவரத்தும்

சாலை, இரயில் மற்றும் வான்வழி போக்குவரத்து தொடங்குவதற்கு முன்பு நீர்வழி போக்குவரத்தே பிரதானமாக இருந்தது. தற்பொழுது, ஏறத்தாழ 80 சதவீத உலக வணிகம் கடல்வழியே நடக்கிறது. நிலக்கரி, தானியங்கள், காய்கறிகள், பழவகைககள், விரைவில் கெடும் தன்மையுள்ள பொருட்கள் ஆகியவற்றை சரக்குக் கப்பல்கள் எடுத்துச் செல்கின்றன. பெரும்பாலான மக்கள் இன்றும் கடல்மார்கமாக பயணம் செய்கின்றனர். ஆடம்பரக் கப்பல்கள் ஒரு சுற்றுலா சொர்கமாகவும் இன்றைய நிலையில் மாறிவருகிறது.

உலகின் கடற்கரைப் பகுதி சுமார் 10 லட்சம் கி.மீ. ஆகும். ஏறத்தாழ மூன்றில் இரண்டு பகுதி நகரங்கள் கடற்கரை மற்றும் ஆறுகளின் முகத்துவாரங்களுக்கு அருகில் அமைந்துள்ளன. சுமார் 25 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்நகரங்களில் வசிக்கின்றனர்.

குறைந்துவரும் நீர்வளம்

உலகில் ஏராளமாக நீர் இருப்பினும், 40% மக்கள் நீர்பற்றாகுறை உள்ள பகுதிகளிலேயே வசித்து வருகின்றனர். இது 2025ல் சுமார் 48 சதவீதமாக உயரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.நா. மக்கள்தொகை நிதி அமைப்பின் கருத்துப்படி 2050-ல் சுமார் 4.2 பில்லியன் மக்கள் தங்கள் தினசரி குறைந்தபட்ச தேவைகளான குடிப்பது, குளிப்பது மற்றும் சுத்தம் செய்வதற்கான 50 லிட்டர் நீர் கூட கிடைக்காத நிலைக்கு தள்ளப்படுவர் என அஞ்சப்படுகிறது.

உலகின் மொத்த நீர் தேவையில் 20% நிலத்தடியிலிருந்தும் 20% ஆறுகளிலிருந்தும் எடுக்கப்படுகிறது.

பன்மடங்கு பெருகிவரும் மக்கள்தொகை, விவசாயத்துறை மற்றும் தொழிற்துறையில் அதிகரித்து வரும் மாற்றம் மற்றும் முன்னேற்றத்தால் உலகின் நீர் தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதிகரித்து வரும் நகரம் மற்றும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை இரசாயன உரங்களின் பயன்பாடு ஆகியவை 70% நன்னீரை மாசுபடுத்திவிடுகின்றன.

சரியான பங்கீடில்லாமல் நுகரப்படும் நீர் சில பகுதிகளில் அபரிதமாகவும் சில இடங்களில் பற்றாக்குறையாகவும் காணப்படுக்கிறது.

குறைந்துவரும் நீர்வளம்

உலகில் ஏராளமாக நீர் இருப்பினும், 40% மக்கள் நீர்பற்றாகுறை உள்ள பகுதிகளிலேயே வசித்து வருகின்றனர். இது 2025ல் சுமார் 48 சதவீதமாக உயரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.நா. மக்கள்தொகை நிதி அமைப்பின் கருத்துப்படி 2050-ல் சுமார் 4.2 பில்லியன் மக்கள் தங்கள் தினசரி குறைந்தபட்ச தேவைகளான குடிப்பது, குளிப்பது மற்றும் சுத்தம் செய்வதற்கான 50 லிட்டர் நீர் கூட கிடைக்காத நிலைக்கு தள்ளப்படுவர் என அஞ்சப்படுகிறது.

உலகின் மொத்த நீர் தேவையில் 20% நிலத்தடியிலிருந்தும் 20% ஆறுகளிலிருந்தும் எடுக்கப்படுகிறது.

பன்மடங்கு பெருகிவரும் மக்கள்தொகை, விவசாயத்துறை மற்றும் தொழிற்துறையில் அதிகரித்து வரும் மாற்றம் மற்றும் முன்னேற்றத்தால் உலகின் நீர் தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதிகரித்து வரும் நகரம் மற்றும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை இரசாயன உரங்களின் பயன்பாடு ஆகியவை 70% நன்னீரை மாசுபடுத்திவிடுகின்றன.

சரியான பங்கீடில்லாமல் நுகரப்படும் நீர் சில பகுதிகளில் அபரிதமாகவும் சில இடங்களில் பற்றாக்குறையாகவும் காணப்படுக்கிறது.


நீரின்றி அமையாது உலகு

ஆதாரம் : சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையம்.

3.14864864865
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top