பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / வேளாண்மையும் சுற்றுச்சூழலும் / நீர்வள மேலாண்மை தொடர்பான சிக்கல்கள், சவால்கள், முக்கிய முன்முயற்சிகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

நீர்வள மேலாண்மை தொடர்பான சிக்கல்கள், சவால்கள், முக்கிய முன்முயற்சிகள்

நீர்வள மேலாண்மை தொடர்பான சிக்கல்கள், சவால்கள், முக்கிய முன்முயற்சிகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

நோக்கம்

தண்ணிர் நாம் உயிர்வாழ்வதற்கு மட்டும் அவசியமானதல்ல. ஒருநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கிய கருவியாக திகழ்கிறது. தண்ணிர் புதுப்பிக்கவல்ல ஆதாரம்தான் என்றாலும், இயற்கையில் அதன் அளவு மிகவும் குறைவாகவே இருப்பதால், அதன் நீடித்த மேம்பாட்டிற்கும், திறமையான மேலாண்மைக்கும் நாம் திட்டமிட வேண்டும். அப்போதுதான் அதிகரித்து வரும் மக்கள்தொகை, பெருகிவரும், தொழிற்சாலைகள் அதிகவேக நகரமயமாக்கல் ஆகியவற்றுக்கான தண்ணீர் தேவையையும் புவிவெப்பமயமாதலால் ஏற்படும் சவால்களையும் நம்மால் சமாளிக்க முடியும்.

இருப்பில் உள்ள தண்ணிரும், பயன்படுத்துவதற்கு ஏற்ற தண்ணிரும்

இந்தியாவின் பனிப்பொழிவு, பனிமலை உருகுதல் ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் நீரையும் சேர்த்தால், இந்தியாவின் ஆண்டு தண்ணிர் உற்பத்தி 4 லட்சம் கோடி கனமீட்டர் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. எனினும், ஆவியாதல், தண்ணிரை எடுக்கும்போது ஆவியாதல் போன்றவற்றால் ஏற்படும் இழப்பு போக மீதம் கிடைப்பது 10,869 லட்சம் கோடி கன மீட்டர்தான். இந்த தண்ணிரையும் முழுமையாக பயன்படுத்திவிட முடியாது. புவி அமைப்பு, தண்ணீரின் தன்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு பார்க்கும்போது 1.123 லட்சம்கோடி கனமீட்டர் தண்ணீரை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். இந்த அளவு தண்ணீர் இருப்பும்கூட காலநிலை, அளவு ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும்.

நீர்வள உருவாக்கம்

இந்தியாவில் நீர் ஆதாரங்களை உருவாக்குவதென்பது நீர்ப்பாசன அமைப்புகளை ஏற்படுத்துதல், மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குதல், தொழிற்சாலைகளின் தண்ணிர் தேவையை சமாளித்தல், சுற்றுச்சூழல் பிரச்சினைகளை சரி செய்தல் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்டதாகும்.

நீர்பாசன அமைப்புகளை உருவாக்குதல்

இந்தியாவில் விவசாயம் செய்வதற்கு ஏற்ற நிலங்களின் பரப்பு சுமார் 14 கோடி ஹெக்டேர் ஆகும். ஆனால் அதில் வெறும் 44% நிலப்பரப்பு மட்டுமே, அதாவது 6.2 கோடி ஹெக்டேர் நிலங்கள் மட்டுமே பாசனவசதி பெற்று உள்ளன. இந்தியாவிலுள்ள 14 கோடி ஹெக்டேர் நிலங்களில் 7.6 கோடி ஹெக்டேரில் தரைக்கு மேல் உள்ள நீரைக் கொண்டும், 6.4 கோடி ஹெக்டேர் நிலங்களில் நிலத்தடி நீரைக் கொண்டும் பாசனம் செய்ய முடியும். அது இன்றைய நிலையில் 1.2 கோடி ஹெக்டேராக உயர்ந்திருக்கும்போதிலும், சிறப்பான நீர் மேலாண்மை நடைமுறைகளை பயன்படுத்தி, மீதமுள்ள நிலப்பரப்பையும் பாசன வசதி உள்ளதாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இது மிகவும் சவாலான பணிதான். அதிலும் குறிப்பாக, நீர் ஆதாரங்களை உருவாக்குவதற்கான எளிமையான, சிறந்த வாய்ப்புகள் அனைத்தும் பயன்படுத்தப்பட்டுவிட்ட நிலையில், புதிய நீர்வள திட்டங்களை பல்வேறு நிலவியல் மற்றும் நீரியல் முட்டுக்கட்டைகளைத் தாண்டிதான் உருவாக்க வேண்டும் என்பதால் இது மிகவும் சிரமமானதுதான். எனினும் மாநிலங்களில் ஆறுகளை இணைத்தல், நிலத்தடி நீரை செயற்கை முறையில் மறுஉருவாக்கம் செய்தல் ஆகியவற்றின் மூலம் புதியநீர் ஆதாரங்களை உருவாக்க முடியும். ஆறுகளை இணைப்பதன் மூலம் 3.5 கோடி ஹெக்டேரில் பாசன வசதியை உருவாக்க முடியும். நிலத்தடி நீரை  செயற்கை முறையில் மறுஉருவாக்கம் செய்வதன் மூலம் 3,600 கோடி கன மீட்டர் நீரை உருவாக்க முடியும்.

தண்ணீர் துறையில் சவால்கள்

1951ம் ஆண்டில் தனிநபர் தண்ணிர் இருப்பு 5,177 கனமீட்டராக இருந்தது. மக்கள் தொகைப் பெருக்கம், நகரமயமாக்கல், தொழில்மயமாக்கல் ஆகியவற்றால் தனிநபர் தண்ணிர் இருப்பு 1,650 கன  மீட்டராக குறைந்துவிட்டது. திட்டமிடப்படாத வளர்ச்சி, நிலத்தடி நீர் எடுக்கப்படுவதை ஒழுங்குபடுத்த போதிய சட்டங்கள் இல்லாதது ஆகியவற்றால் நிலத்தடி நீர் அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்பட்டு பல இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் பெருமளவில் குறைந்து விட்டது. இந்தியாவிலுள்ள தாலுக்காக்களில் 15 சதவீதம் தாலுக்காக்கள் அளவுக்கு அதிகமாக தண்ணிர் உறிஞ்சி எடுக்கப்பட்ட தாலுக்காக்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. தரைக்கு மேல் உள்ள நீர் ஆதாரங்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதாலும் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. பாசனத்திற்கு அதிக தண்ணிர் பயன்படுத்தப்படுவதால் பல இடங்களில் தண்ணிர் ஓட வழியின்றி தேங்கி நிற்கும் நிலை ஏற்படுகிறது. ஆறுகள் மாசுபடுவதும், நிலத்தடிநீரின் தரம் குறைந்து வருவதும், அனைவரும் அறிந்த ஒன்றுதான். நகர்ப்புறங்களில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரும், தொழிற்சாலைக் கழிவுகளும் கலப்பதுதான் தண்ணிர் மாசுபடுவதற்கு முக்கிய காரணமாகும். அளவுக்கதிகமாக வேதிப்பொருட்கள், உரங்கள், பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தப்படுவதும் தண்ணிர் மாசுபடுவதற்கு காரணங்கள்.

தண்ணிர் மிகவும் முக்கியமாகும். தட்பவெப்பநிலை மாற்றத்தால் தண்ணிர் துறையில் எத்தகைய தாக்கம் ஏற்படும் என்பது இன்னமும் தெளிவாக மதிக்கப்படவில்லை என்றபோதிலும், தண்ணிர் கிடைக்கும் காலமும் அளவும் பாதிக்கப்படலாம் என்றும் வெள்ளம், வறட்சி ஆகியவை தீவிரம் அடையும் என்றும் கூறப்படுகிறது. எனவே, தட்ப வெப்பநிலை மாற்றத்தால் தண்ணிர் துறையில் எத்தகைய தாக்கங்கள் ஏற்படும் என்ற விவரங்களை தொகுக்கவும் அதை எப்படி சமாளிப்பது என்பதற்கான திட்டங்களை வகுக்கவும் உடனடியாக ஆய்வு நடத்தப்பட வேண்டும்.

தேசிய நீர் இயக்கம்

தட்பவெப்பநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கான தேசிய செயல் திட்டத்தை பிரதமர் கடந்த 2008ம் ஆண்டில் வெளியிட்டார். அந்த செயல்திட்டத்தின் கீழ் 8 தேசிய இயக்கங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் தேசிய நீர் இயக்கமாகும். தண்ணிரை பாதுகாப்பது, தண்ணீர் வீணாவதை குறைப்பது, மாநிலங்களுக்கிடையேயும், மாநிலத்திற்குள்ளும் சம அளவில் தண்ணிர் பகிர்ந்துகொள்ளப்படுவதை ஒருங்கிணைந்த நீர்வள மேம்பாடு மற்றும் மேலாண்மையின் மூலம் உறுதி செய்தல் ஆகியவைதான் தேசிய நீர் இயக்கத்தின் நோக்கங்கள் ஆகும். இந்த இயக்கத்தின் ஐந்து முக்கிய இலக்குகளின் விவரம் வருமாறு.

 1. தட்பவெப்பநிலை மாற்றத்தால் நீர் ஆதாரங்களின்மீது எத்தகைய தாக்கம் ஏற்படும் என்பதை மதிப்பிடுதல் மற்றும் நீர்வளம் தொடர்பான அனைத்து விவரங்களையும் பொது மக்களின் பார்வைக்கு வைத்தல்.
 2. தண்ணிரை பராமரிப்பது மற்றும் தண்ணிர் வசதிகளை மேம்படுத்துவதற்கு மக்கள் நடவடிக்கைகளும், அரசின் நடவடிக்கையையும் ஊக்குவித்தல்.
 3. நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சும் பகுதிகள் உட்பட தண்ணிர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் அதிக கவனம் செலுத்துதல்.
 4. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் திறனை 20 சதவீதமாக அதிகரித்தல்.
 5. பாசனப்பகுதியை ஒருங்கிணைந்த நீர்வள மேலாண்மையை செயல்படுத்த ஊக்குவித்தல்.

மத்திய நீர்வள அமைச்சகமும், விண்வெளி ஆய்வு தேசிய தொலையுணர்வு மையமும் இணைந்து இணைய தளம் சார்ந்த நீர் வளதகவல் அமைப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. மிகவும் முக்கியமான, ரகசியமானது என்று அறிவிக்கப்பட்ட தகவல்களை தவிர மற்ற அனைத்து தகவல்களும் இணைய தளம் வழியாக பொதுமக்களுக்கு வெளியிடப்படும். நீர்வள மேலாண்மையில் தொடர்புடைய அனைவரும் தங்களுக்கு தேவையான தகவல்களைப் பெறவும் திட்டமிடவும், ஒழுங்கு முறையை அதிகரிக்கவும் இந்த முறை பெரிதும் உதவியாக இருக்கும்.

மத்திய நீர்வள அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அமைப்புகளான மத்திய நீர் ஆணையம், மத்திய நிலத்தடி நீர் வாரியம், தேசிய நீரியல் நிறுவனம், பிரம்மபுத்திரா வாரியம் ஆகிய இயக்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று தண்ணிரை சிக்கனமாக பயன்படுத்தும் அளவை 20 சதவீதம் அதிகரிப்பதாகும்.

நீர் ஆதாரங்களை உருவாக்குவதற்கான சில முக்கிய முன்முயற்சிகள்

நீர் ஆதாரங்களை மக்களுக்கு பயனளிக்கும் வகையில் நீடித்து நிற்கும் வகையில் மேம்படுத்த வேண்டும், திறமையாக நிர்வகிக்க வேண்டும் என்ற இலக்குகளை எட்டவேண்டுமானால் மாநில அரசுகளிடையே நல்ல புரிந்துணர்வும் ஒத்துழைப்பும் தேவை. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் நீர் வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் கால்வாய், வடிகால்கள், தண்ணிரை தேக்கி வைத்தல் ஆகியவற்றை மாநில அரசுகளின் அதிகார வரம்பிற்குள் வைக்கலாம் என அரசியல் சட்டம் பரிந்துரைத்திருக்கிறது. மத்திய அரசின் முக்கியமான பணிகளில் ஒன்று, மாநில அரசுகளிடையே ஒத்துழைப்பு ஏற்படுவதை உறுதி செய்வதும், மாநிலங்களுக்கிடையிலான நதிநீர் பிரச்சினைகளை முடிந்தவரை சிறப்பான வகையிலும், கருத்தொற்றுமையின் அடிப்படையிலும் தீர்ப்பதுதான்.

நீர் ஆதாரங்களை உருவாக்கும் வேகத்தை அதிகரித்தல், தண்ணிர் தொடர்பான பிரச்சினைகளை தீர்த்தல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பல்வேறு முக்கியத் திட்டங்களை மத்திய நீர்வள அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. இவற்றில் விரைவுபடுத்தப்பட்ட நீர்ப்பாசன பயன்கள் திட்டம், பாசனப் பகுதி மேம்பாடு மற்றும் நீர் மேலாண்மைத் திட்டம், வெள்ளத் தடுப்புத் திட்டம், நீர் நிலைகளை சீரமைத்து புதுப்பித்தல் திட்டம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.

ஒருபகுதியில் உபரி நீரும், மற்றொரு பகுதியில் பற்றாக்குறையும் நிலவுவதை போக்குவதற்காக அதிக தண்ணிர் உள்ள பகுதியிலிருந்து பற்றாக்குறை பகுதிக்கு உபரி நீரை திருப்பி விட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மழைநீர் சேமிப்பு, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்கான பல்வேறு திட்டங்கள் ஆகியவற்றையும் மத்திய நிலத்தடி நீர் வாரியம் செயல்படுத்தி வருகிறது.

மேம்படுத்தப்பட்ட மேலாண்மை

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் தன்மையை அதிகரிக்க, சிறப்பான மேலாண்மை நடவடிக்கைகள், முறையான ஒழுங்குமுறை நடவடிக்கைகள், தண்ணிர் பயன்பாட்டிற்கு திட்டமிடுதல், தண்ணிர் பயன்பாட்டை தணிக்கை செய்தல் ஆகியவை மிகவும் முக்கியமாகும்.

நீர்ப்பாசன வசதிகள் சிறப்பாக பயன்படுத்தப்படாமல் இருத்தல்

நீர்நிலை மற்றும் நீர்ப்பாசனம் தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட வசதிகள் அவற்றின் முழுத்திறன் அளவுக்கு பயன்படுத்தப்படாமல் இருப்பது இன்னொரு சவால் ஆகும். இந்தியாவில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளில் 85 சதவீதம் மட்டும்தான் திரும்பத் திரும்ப பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இருக்கும் வசதிகள் முழுமையாக பயன்படுத்தப்படாமல் இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.)

 1. போதிய பராமரிப்பின்மை,
 2. முழுமையற்ற வினியோகமுறை,
 3. பாசனப்பகுதி மேம்பாடு முழுமையடையாதது,
 4. தொடக்கத்தில் உருவாக்கப்பட்ட வடிவமைப்பில் மாற்றம் செய்தல்,
 5. பாசன வசதி பெற்ற நிலங்கள் வேறு பயன்பாட்டிற்காக திருப்பிவிடப்படுதல் ஆகியவை அவற்றில் முக்கியமானவையாகும். இருக்கும் வசதிகளை மேம்படுத்துவதில் வன்பொருட்கள் வடிவில் அதிநவீன கருவிகளும், மென் பொருள் வடிவில் சிறந்த மேலாண்மை முறைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

நீர்ப்பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட வசதிகளின் திறன் மேம்படுத்துதல்

இந்தியாவில் இப்போதுள்ள நீர்ப்பாசன முறையின் திறன் மிகவும் குறைவாக இருக்கிறது. இவற்றை மேம்படுத்துவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. தரைக்கு மேலே உள்ள நீர்நிலைகளின் நீரை சிக்கனமாக பயன்படுத்தும் திறனை இப்போதுள்ள 35-40 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாகவும், நிலத்தடி நீரை சிக்கனமாக பயன்படுத்தும் திறனை 65 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாகவும் உயர்த்த முடியும் என்று ஒருங்கிணைந்த நீர்வள மேம்பாட்டிற்கான தேசிய ஆணையம் மதிப்பிட்டிருக்கிறது. நீரை சிறப்பாக பயன்படுத்துவதன் மூலமும், பாசன வசதிகளின் திறனை அதிகரிப்பதன் மூலமும் நீரை சிக்கனமாக பயன்படுத்துவதை அதிகரிக்கலாம். நீர் நிலைகளை சீரமைத்தல், புதுப்பித்தல், நீர்ப்பாசனத் திட்டங்களை நவீனப் படுத்துதல், புதுப்பித்தல், விரிவுபடுத்துதல், சிறப்பாக பராமரித்தல் ஆகிய பணிகளை ஒருபுறமும், நிலங்களில் ஈரப்பத பராமரிப்பு, நுண்ணிய பாசனம் போன்ற நிலம் சார்ந்த நடவடிக்கைகளை மறுபுறமும் உடனடியாக மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். அதேநேரத்தில், தண்ணிர் கட்டணத்தை குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை உயர்த்துவதன் மூலமும், நீர்ப்பயன்பாட்டாளர் சங்கங்களை அமைக்க ஊக்குவிப்பதன் மூலமும், தண்ணிர் பங்கேற்பு மேலாண்மையை மேம்படுத்துவதன் மூலமும், நீர்ப்பாசன அமைப்புகளின் நிதி வலிமையை உறுதிசெய்வதும் மிகவும் அவசியமாகும்.

அதிக பயிர்கள் ஒவ்வொரு சொட்டு தண்ணிருக்கும் வருமானம் என்ற வாசகத்தை உண்மையாக்க வசதியாக உழவர்களுக்கு மிகச் சிறந்த தொழில்நுட்பங்கள் மற்றும் நடைமுறைகளை கற்றுத் தரவேண்டும். இதைக் கருத்தில் கொண்டு உற்பத்தியை அதிகரித்தல் / வேளாண்மை வருவாயை பெருக்குதலுக்காக புதிய தொழில் நுட்பங்களைக் கற்றுத்தரும் நோக்குடன் வேளாண் பல்கலைக் கழகங்கள், வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்கள் ஆகியவற்றின் மூலம், உழவர்கள் பங்கேற்பு ஆராய்ச்சித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்திற்கு உழவர்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதாகவும், விளைச்சலை அதிகரிக்கவும், தண்ணிரைச் சேமிக்கவும் இத்திட்டம் உதவுவதாக இத்திட்டம் பற்றிய இடைக்கால மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பெரிய அளவிலான நீர்நிலைகளின் திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தவிர, கழிவு நீர் சுத்திகரிப்பு, தண்ணீரை மறு சுழற்சி செய்து திரும்ப பயன்படுத்துதல், மழை நீர் சேமிப்பு, நிலத்தடி நீரை மறு உருவாக்கம் செய்தல், நீர்வள மேம்பாடு ஆகியவற்றுக்கும் அதிக முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

பங்கேற்பு மேலாண்மை

பங்கேற்பு மேலாண்மை என்பது மிகவும் முக்கியமானதாகும். பங்கேற்பு நீர்ப்பாசன மேலாண்மையை மத்திய நீர்வள அமைச்சகமும் ஊக்குவிக்கிறது. தண்ணிர் பயன்பாட்டாளர்கள் சங்கம் அமைக்கப்படுவதையும் அந்த அமைச்சகம் ஆதரிக்கிறது. இதுவரை இந்தியா முழுவதும் 57,000 தண்ணிர் பயன்பாட்டாளர்கள் சங்கம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. பங்கேற்பு நீர்ப்பாசன மேலாண்மை தொடர்பான வரைவுச் சட்ட மசோதா தயாரிக்கப்பட்டு மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டதன் அடிப்படையில் 13 மாநிலங்கள் முறையான சட்டத்தையும் நிறைவேற்றியுள்ளன.

இந்தியாவில் இருக்கும் நீர் ஆதாரங்களை தொடர்ந்து நீடிக்கச் செய்யும் நோக்குடன் அவற்றை மிகவும் சிறப்பாகவும் சிக்கனமாகவும் பயன்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு, நீர் ஆதாரங்களை நீடித்து நிற்கும் வகையில் மேம்படுத்துவதையும், சிறப்பாக நிர்வகிப்பதையும் உறுதி செய்யவேண்டியது மிகவும் அவசியமாகும். இருக்கும் நீர் ஆதாரங்களை விரிவான, ஒருங்கிணைந்த வகையில் மேம்படுத்த நடவடிக்கை எடுப்பது தவிர, இந்தியாவிலுள்ள ஒவ்வொருவருக்கும் பயனளிக்கும் வகையில் நாட்டை முன்னேற்றுவதற்கு தேவையான நீர் வள மேலாண்மை உத்திகள் தயாரிக்கப்படுவதும் அவசியமாகும். உள்ளூர் அளவிலும், பரவலாக வினியோகிக்கும் வகையிலும் நீர்வள கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். நீர்வளத் துறையில் ஏற்பட்டிருக்கும் சவால்களை சமாளிக்க, மத்திய-மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள், நகர்ப்புற உள்ளாட்சிகள், தொழில் நிறுவனங்கள், சமூக அமைப்புகள் உட்பட இதில் தொடர்புடைய அனைவரும் தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும். வீட்டில் பயன்பாட்டிற்கு தூய்மையான தண்ணிர், நீர்ப்பாசனத்திற்காக நீடித்து நிற்கக் கூடிய கட்டமைப்பை உருவாக்குதல், பல்வேறு வகையான தொழிற்சாலைகளின் நுகர்வு மற்றும் நுகர்வு சாராத பயன்பாட்டிற்கான தேவைக்கு தண்ணிர் வழங்குதல் ஆகிய இலக்குகளை எட்ட இதில் தொடர்புடைய அனைவரின் ஆதரவும் தேவை. அவ்வாறு செய்யும் போது சுற்றுச்சூழலுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

3.03921568627
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top