অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

வேளாண்மையில் வானிலை முன்னறிவிப்பின் பயன்கள்

வேளாண்மையில் வானிலை முன்னறிவிப்பின் பயன்கள்

இந்திய மற்றும்  தமிழக பொருளாதாரத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வேளாண்மை முக்கிய பங்கு வகிக்கிறது. தொழில் நுட்பங்களில் பல்முக வளர்ச்சி இருந்தாலும், பயிர் பருவகாலங்களில் மழையின் அளவு மற்றும் மழை பரவலில் ஏற்படும் மாற்றங்கள் வேளாண்மை உற்பத்தியினை மிகவும் பாதிக்கின்றது. வேளாண்மையும் அதை சார்ந்த தொழில்களின் உயர்வும், தாழ்வும் நிகழும் வானிலையினை பொருத்தே அமையும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதை அறிந்தே திருக்குறளில் "வான்சிறப்பு" அதிகாரத்தினை கடவுள் வாழ்த்திற்கு அடுத்த படியாக வைத்து உலகமே மழையினை அடிப்படையாக கொண்டது.

முப்புறமும் கடல் சூழ்ந்த இந்திய தீபகற்பத்தின் தென்கோடியில் அமைந்த தமிழகத்தின் வானிலை இந்திய பெருங்கடலில் ஏற்படும் வானியல் மாற்றங்களை சார்ந்துள்ளது. தமிழகத்தில் சராசரியாக ஓர் ஆண்டில் 911 மி.மீ. மழை, 35 - 40 மழை நாட்களில் பெறப்படுகிறது. குளிர்காலத்தில் (ஜனவரி - பிப்ரவரி) 35 மி.மீ. மழை, 2 - 3 மழை நாட்களிலும், கோடைகாலத்தில் (மார்ச் - மே) 129 மி.மீ. மழை, 5 - 7 மழை நாட்களிலும், தென்மேற்கு பருவத்தில் (ஜூன் - செப்டம்பர்) 316 மி.மீ. மழை, 12 - 15 மழை நாட்களிலும், வடகிழக்கு பருவத்தில் (அக்டோபர் - டிசம்பர்) 431 மி.மீ. மழை, 15 - 18 மழை நாட்களிலும் பெறப்படுகிறது.

நமது முன்னோர்களிடம், மழை பற்றிய சிறப்பான கணிப்பு இருந்தது. காற்றின் திசை, வேகம் மற்றும் கடந்த ஆண்டின் மழை நிகழ்வுகளை வைத்து வரும் பருவத்தின் மழை நிகழ்வுகளை பருவம் தொடங்குவதற்கு முன்னரே சிறப்பாக கணித்து பயிர்களையும், வேளாண் பணிகளையும் தேர்வு செய்தனர். நமது தமிழ் பஞ்சாங்கங்களும், கோள்கள் மற்றும் நட்சத்திரங்களின் பாதைகளையும், அவற்றின் கோணங்களையும் கணித்து மழைபெறக் கூடிய காலங்களை சிறப்பாக கணித்து தருகின்றன. ஆனால், சுகபோக வாழ்க்கையின் மீதான மனிதனின் அதிகப்படியான ஆசையின் காரணமாக கடந்த நூற்றாண்டில் ஏற்பட்ட தொழில் நுட்ப புரட்சியின் காரணமாகவும், அழித்து வருவதாலும் காலநிலையில் பெருமாற்றங்கள் ஏற்பட்டு காடுகளை வேளாண் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கி விட்டன. இயற்கை சார்ந்த வாழ்க்கை நடைபெற்ற காலங்களில் தன்னை தானே சீரமைத்துக் கொண்ட புவியின் வளிமண்டலமானது, கடந்த நூறு ஆண்டுகளில் மிகவும் பாதிக்கப்பட்டு வெப்பநிலையில் 1°செ. அளவிற்கும், கரியமில அளவில் 70 பிபிம் அளவிற்கும் உயர்ந்துள்ளது. இந்த மாற்றங்கள் வரும் மிகவும் தீவிரமடையுமென்றும் வெப்பநிலை தற்போதைய அளவிலிருந்து 1°(2050),2°(2070), 39 (2085), 49 (2100) கூடுதலாகும் என காலங்களில் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டு கோடையும், இந்த நூற்றாண்டின் அதிகப்படியான வெப்பநிலையை பதிவுசெய்து உயிரிழப்புகளையும் கூடுதலாக்கி வருகின்றது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தில் கடந்த 2015-16ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆராய்ச்சியின்படி, வெப்ப பகுதியான தமிழகத்தில் பருவ மழையின் மொத்த அளவு கூடி வருவதாகவும், மண்டல மழை நாட்களில் ஒரு நாளில் கிடைக்கும் மழையின் அளவு அதிகமாகியுள்ளதாகவும் அறியப்பட்டுள்ளது. இதனால் மழையின் வேகம் கூடி மண்ணின் நீராதார இருப்பில் மழைநீர் சேமிக்கப்படாமல் ஓடி வீணாகும். மேலும், வளமான மேல் மண்ணையும் அரித்து மண் வளத்தினை குறைக்கும் எனவும் தெரியவந்துள்ளது. கடந்த 1950 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் பருவமழை ஆரம்பமாகும் நாட்களில் ஏற்பட்டுள்ள மாறுதலைப்பற்றிய மற்றொரு ஆராய்ச்சியின் முடிவின்படி பல்வேறு காலநிலை மாற்றக் காரணிகளால் பருவகால மழை 1 அல்லது 2 வாரங்கள் முன் கூட்டியோ அல்லது காலதாமதமாகவோ மாறியுள்ளது என அறியப்பட்டுள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் 1950-60ஆம் ஆண்டை காட்டிலும் இரண்டு வாரம் முன்னதாகவும், வடமேற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் ஒரு வாரம் முன்னதாகவும், மேற்கு தொடர்ச்சி மழை ஆரம்பமாகிறது. பொதுவாக உள்நாட்டு நிலப்பகுதிகளில் ஓரிரு வாரம் முன்னதாகவும், கடற்கரையினை ஒட்டிய பகுதிகளில் ஓரிரு வாரம் தாமதமாகவும் மழை ஆரம்பமாவதாக அறியப்பட்டுள்ளது.

தமிழக அரசின் குறிக்கோளான "இருமடங்கு உற்பத்தி மும்மடங்கு லாபம்" என்ற இலக்கினை அடைவதற்கு காலநிலை சார்ந்த வேளாண் தொழில் நுட்பங்களை செயல்படுத்துவது மிகவும் அவசியமாகும். மேலும், தமிழகத்தின் அனைத்து நீராதாரங்களும், வேளாண்மையும் பருவ மழையினை பொருத்தே அமைந்துள்ளதால் வேளாண் சார்ந்த திட்டங்களை நிகழ்த்த மழை மற்றும் பிற வானிலைக் காரணிகள் பற்றிய சீரிய முன்னறிவிப்பு மிகவும் அவசியமாகிறது.

வேளாண்மை உற்பத்தியில், வானிலையின் பங்கு மிக முக்கியமானதாகும். குறிப்பாக மானாவாரி சாகுபடியானது, பெய்யும் மழை அளவு, காலம் முதலியவற்றை பொருத்து அமைகிறது. அதே போல் தோட்டக்கால், நன்செய் நிலங்களிலும் பயிர்களின் முழு விளைவுத்திறனைப் பெற தட்பவெப்பநிலை அன்றாட குறைந்த மற்றும் அதிக பட்ச வெப்பநிலை, சாதகமாக அமைய வேண்டும். காற்றின் ஈரப்பதம், மழை அளவு, நீர் ஆவியாதல், சூரிய ஒளி, காற்றின் வேகம் மற்றும் காற்றடிக்கும் திசை முதலியவைகளைக் கணக்கிட்டு வேளாண்மை உத்திகளை கையாளும்போது அதிகபட்ச உற்பத்தித் திறனை பெறமுடியும்.

பொதுவாக வேளாண் வானிலை முன்னறிவிப்பு முன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது

 • குறுகிய கால வானிலை முன்னறிவிப்பு
 • மத்திய கால வானிலை முன்னறிவிப்பு
 • நீண்ட கால வானிலை முன்னறிவிப்பு

குறுகிய கால வானிலை முன்னறிவிப்பு

இந்த அறிவிப்பில் அடுத்து வரும் மூன்று நாட்களில் வானிலை எவ்வாறு இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த குறுகிய கால வானிலை முன்னறிவிப்பின் துல்லியம் 70 முதல் 80 சதவிகிதம் வரையில் இருக்கும். இது அடுத்த 72 மணி நேரத்தில் பகல், இரவு வெப்பநிலை, காற்றின் திசை சூரிய ஒளி கிடைக்கும் நேரம், காற்றின் ஈரப்பதம், மழை, மேகமூட்டம், தூறல் மற்றும் அதன் வேகம்  போன்ற காரணிகளால் ஏற்படும் மாற்றங்களை தெரிவிக்கிறது. இந்த குறுகிய கால வானிலை முன்னறிவிப்பு, வேளாண்மையில் அன்றாடம் செய்யக்கூடிய வேலைகளைத் துரிதப் படுத்தவோ அல்லது தள்ளிப்போடவோ உதவுகிறது. கீழ் விவரிக்கப்பட்டுள்ள வேளாண் பணிகளுக்கு இக்குறுகிய கால வானிலை முன்னறிவிப்பு மிக உதவியாக இருக்கும்.

 • மழை வருவதை பொருத்து பயிர்களுக்கு தண்ணிர் பாய்ச்சுவதைத் தள்ளி வைக்கவும்.
 • வானிலை மப்பும் மந்தாரமாகவும் இருந்தால் நிலத்தை உழுதல், களை எடுத்தல் போன்ற வேலைகளை சீர்படுத்தலாம். அடுத்த மூன்று நாட்களில் மழை பெறும் சாத்தியம் இல்லையெனில் நிலத்தின் ஈரம் தகுந்த அளவு வரும் பொழுது அறுவடை போன்ற வேளாண் பணிகளை செய்யலாம்.
 • பயிர்ப்பாதுகாப்பு செய்ய பூச்சி மற்றும் பூஞ்சாண மருந்து தெளிக்கும் பொழுது, வானிலை மப்பும் மந்தாரமும் மற்றும் மழை இல்லாமல் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் பூச்சிகளையும், நோய்களையும் பூச்சி மருந்து கட்டுப்படுத்தும். மருந்து தெளித்த பின்பு மழை பொழிந்தால் தெளித்த மருந்துகளிலிருந்து எதிர்பார்கிற பலன் கிடைக்காது.
 • வானிலை சாதகமாக இல்லையென்றால், வேலை ஆட்கள் முழு திறமையுடன் வேலை செய்ய முடியாது.
 • அறுவடை செய்தல், கதிரடித்தல், தூற்றுதல் மற்றும் உலர வைத்தல் போன்ற வேலைகளுக்கு, நல்ல வெய்யிலும், காற்றும் தேவைப்படுகிறது. வானிலையின் நிலமை குறித்து அதற்குத் தகுந்தாற்போல் மாற்று ஏற்பாடுகள் செய்யலாம்.

மத்திய கால வானிலை முன்னறிவிப்பு

இந்த அறிவிப்பு, 3 முதல் 10 நாட்கள் வரை மேகமூட்டங்கள், காற்றின் வெப்பநிலை,  திசை, உயர்ந்த பட்ச குறைந்த வெப்பநிலை ஆகிய வானிலைக் காரணிகளில் ஏற்படும் மாற்றத்தை தெரிவிக்கும். இவ்வறிக்கையின் உதவியால், பயிர் விதைப்பு செய்யவோ அல்லது விதைப்பைத் தள்ளிப்போடவோ முடிவெடுக்கலாம். மானாவாரி நிலங்களில் அடுத்த ஒரு வாரத்தில் மழை கிடைக்கும் வாய்ப்பு அதிகமாக இருந்தால், புழுதியில் விதைப்பு எடுக்க சிபாரிசு செய்யலாம். இவ்வாறு செய்வதால்,முதல் மழையின் முழுப்பயனையும் பெற முடியும். வேளாண்மைக்கு அதிக பயன்தரும் முன்னறிவிப்பு வானிலை முன்னறிவிப்பாகும்.

 • அறிக்கையின் படி நீர் பாசனத்தை சீர்ப்படுத்தலாம்.
 • அறுவடை செய்யும் காலத்தை நிர்ணயம் செய்து அதற்குண்டான ஏற்பாடுகளை செய்யலாம்.
  • வானிலை, பூச்சி மற்றும் பூஞ்சாணங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று தெரிந்தால், தக்க மருந்து தெளித்து தேவையற்ற இழப்புகளை தவிர்க்கலாம்.
  • பண்ணை வேலை ஆட்கள், டிராக்டர் மற்றும் தெளிப்பான் போன்ற கருவிகளை உரிய முறையில் நவீன திறமையுடன் பயன்படுத்தலாம்.
  • குறைந்த செலவில், நிரந்தர, அதிக நிகர வருமானம் விவசாயத்தில் பெற, இக்காலநிலை அறிக்கை மிகவும் உதவுகிறது.

நீண்டகால வானிலை முன்னறிவிப்பு

இந்த அறிக்கையின் மூலம் 10 நாட்கள் முதல் ஒரு பருவம் வரை வானிலையில் ஏற்படும் மாற்றங்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்த அறிக்கையில் 60 - 70 சதவிகிதம் வரை துல்லியம் கிடைக்கிறது. இந்த முன்னறிவிப்பு, வெப்பநிலை, மழையளவு ஆகிய இவைகளின் அசாதாரணமான நிலையைக் குறிப்பிட்டுக் கீழ்க்காணும் தொழில் நுட்பங்களைத் தேர்வு செய்ய மிகவும் பயன்படுகிறது.

 • பயிர்களின் பாசனத்திற்கு நீர் அளவையும் கருத்தில் கொண்டு நீர் நிர்வாக முறையினைச் சீராக்கலாம்.
 • எதிர்நோக்கும் பருவத்தின் வானிலையைக் கொண்டு அதற்கு ஏற்றாற்போல் பயிர் நிர்ணயம் செய்யலாம்.
 • பண்ணையின் பயிர்த்திட்டம் தயாரிக்க, இந்த நீண்டகால வானிலை அறிவிப்பு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வானிலை முன்னறிவிப்புகள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்திலிருந்து விவசாயிகளின் நன்மை கருதி ஒவ்வொரு ஆண்டும் மே மாத இறுதியில் எதிர்வரக்கூடிய தென்மேற்கு மற்றும்  வடகிழக்குப் பருவமழைக்கான முன்னறிவிப்பு மாவட்டவாரியாக வழங்கப்படுகின்றது. மேலும், மத்திய வானிலைத் துறையுடன் இணைந்து வாரவாரம் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அடுத்துவரும் 5 நாட்களுக்கான மத்திய கால வானிலை முன்னறிவிப்புகள் மாவட்ட வாரியாக வழங்கப்படுகின்றது. வானிலை முன்னறிவிப்புடன் வேளாண்மை மற்றும் அது சார்ந்த வேளாண் அறிவுரைகள் தருவதே தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கால்நடைகளுக்கான வானிலை முன்னறிவிப்பின் சிறப்பாகும். இவ்வறிவுரைகள் தொலைக்காட்சி, வானொலி, மற்றும் அலைபேசி குறுந்தகவல்கள் மூலமாக விவசாயிகளை சென்றடைகின்றன. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், மற்றும் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தையும் இணைத்து 8 நிலையங்களில் இருந்து சுமார் 8 லட்சத்து 64 ஆயிரம் குறுந்தகவல்கள் வாரம் இருமுறை அனுப்பப்படுகின்றன. இது தவிர தமிழ்நாட்டின் 385 வட்டாரங்களுக்குரிய அடுத்த 6 மத்திய கால வானிலை முன்னறிவிப்புகள் 7 வானிலை காரணிகளுக்கு தினசரி வழங்கப்படுகிறது.

ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate