অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

இந்திய பதிப்புரிமைச் சட்டம்

இந்திய பதிப்புரிமைச் சட்டம்

தோற்றம்

இந்தியாவில் அறிவுசார் சொத்துரிமை தொடர்பான முதன்மைச் சட்டம் இந்திய காப்புரிமைச் சட்டம், 1957 ஆகும். 1941-இல் முதன் முதலில் பதிப்புரிமைச் சட்டம் செயல்படுத்தப்பெற்றது. இப்பொழுது நடைமுறையிலிருப்பது, திருந்திய முறையில் இந்திய நாடாளுமன்றம் 1957இல் நிறைவேற்றிய பதிப்புரிமைச் சட்டம்.

1847ம் ஆண்டு அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் இந்திய பதிப்புரிமைச் சட்டத்தை இயற்றியது. காலப்போக்கில் அச்சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்படவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. எனவே 1914-ஆம் ஆண்டு மத்திய சட்டசபை, பிரிட்டனில் இருந்த சட்டத்தை அடிப்படையாக வைத்து சில மாற்றங்களுடன் புதிய சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தது. இந்த சட்டமே இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் நீடித்தது. இந்திய பதிப்புரிமைச் சட்டம் 1957ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு, 1984, 1994,1999,2010 ஆகிய ஆண்டுகளில் திருத்தப்பட்டது. கடைசியாக 2012 ஆம் ஆண்டில் மேலும் சில திருத்தங்கள் செய்யப்பட்டன.

சட்ட விளக்கம்

ஒன்றின் பதிப்புரிமை ஒருவருக்கு இருக்க வேண்டுமானால் அது முழுக்க அவரது சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும். மற்றொன்றைப் பார்த்துப் படைத்த ஒன்றுக்கு ஒருவர் உரிமை கொண்டாட இயலாது. கருத்துக்களுக்கோ, ஒருவரும் உரிமை கொண்டாட இயலாது. ஏனென்றால் அவை எல்லாம் பொதுச் சொத்துக்களாகும். ஒரு அதற்குப் பதிப்புரிமை கிடைக்கின்றது.

இந்தச் சட்டத்தின் 45ஆம் பிரிவு பதிப்புரிமையைப் பதிவு செய்து கொள்ள வாய்ப்பளிக்கின்றது. ஆனால் பதிவு செய்ய வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. இலக்கிய படைப்புகள், இசை, நாடகம் போன்றவற்றுக்குப் பதிப்புரிமை படைப்பாளியின் வாழ்நாள் முழுவதும் அவருக்கே சொந்தமாக இருக்கும். அவர் காலத்திற்குப் பின்பு அறுபதாண்டுகளுக்குப் பதிப்புரிமை அவரது சந்ததியினருக்கு உண்டு. புகைப்படங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றுக்கு பதிப்புரிமை வேளியாகி அறுபதாண்டுகளுக்குப் பின்பு காலாவதியாகிறது. அதன் பின்னர் யார் வேண்டுமானாலும் அவற்றை எடுத்துப் பயன்படுத்தலாம்.

விதிவிலக்குகள்

இச்சட்டத்தின்படி ஒருவரின் படைப்பிலிருந்து ஆய்வுக்காகவோ, தனிப்பட்ட படிப்புக்காகவோ, மதிப்பீட்டிற்காகவோ சில பகுதிகளை எடுத்துப்பயன்படுத்துவது குற்றமாகாது. நியாயமான முறையில் மேற்கோள்காட்டவோ சரியான முறையில் சுருக்கத்தைக் கூறவோ சட்டம் வாய்ப்பளிக்கின்றது. ஒருவரின் படைப்பிலிருந்து சிலவற்றைப் பயன்படுத்தும் பொழுது மூலத்தைக் குறிப்பிட வேண்டும்.

செய்தித்தாட்களுக்குச் சிறப்பு விதி விலக்குகள் வழங்கப் பெற்றுள்ளன. இதழ்கள் பொது நலன் கருதி, எந்த இலக்கியப் படைப்பையும், நாடகத்தையும், இசையையும் வெளியிடலாம், இது நடப்புச் செய்திகளை வெளியிடும் வகையில் சேரும். ஆனால் இதழில் வெளியான கட்டுரையை, அப்படியே சொல் மாறாமல் வெளியிட வேண்டுமானால் அந்த இதழின் அனுமதி பெற வேண்டும்.

இந்திய பதிப்புரிமைச் சட்டம் – 1999

  • ஒரு படைப்பாளி தனது படைப்பை மறுபிரசுரம் செய்யலாம்.
  • பிறமொழிகளில் பெயர்த்துக் கொள்ளலாம் அல்லது மற்றவர்கள் மொழியாக்கம் செய்ய அனுமதிக்கலாம்.
  • வேறு வடிவங்களில் மாற்றிக் கொள்ளலாம். அதாவது ஒருவர் தனது பாடலை இசைத்தட்டிலோ, ஒலி நாடாவிலோ, வானொலியிலோ, தொலைக்காட்சியிலோ இடம் பெறச் செய்யலாம்.
  • ஒருவர் தனது கதையை, கவிதையை, வசனத்தை புத்தக வடிவமாக மட்டுமின்றி விஞ்ஞானம் இன்று வரை வழங்கியுள்ள நாடகம், திரைப்படம், தொலைக்காட்சி, கணினி போன்ற சாதனங்களுக்கேற்ப வடிவமைத்துக் கொள்ளலாம்
  • தனது படைப்பைப் பகுதியாகவோ, முழுமையாகவோ குறிப்பிட்ட கால அளவிற்கு - எல்லைப் பரப்பிற்கு - வாடகைக்கு விடலாம் அல்லது விலைக்கு விற்கலாம்.
  • தனது படைப்பு சம்பந்தமான உரிமையைத் தான் விரும்பும் நபருக்கு, நிறுவனத்திற்குத் அமைப்புக்கு வழங்கலாம். அல்லது தேவைப்பட்டால் அதைத் திரும்பப் பெறலாம்.

சிறைத் தண்டனை

இந்தியாவில் படைப்புகளைத் திருடுவோருக்கு குறைந்த பட்சம் 6 மாதமும், அதிக பட்சம் ஒரு வருடமும் தண்டனை என்று 1957 ஆம் ஆண்டின் சட்டம் அறிவித்தது. 1984 ஆம் ஆண்டின் சட்டத்திருத்தம் அதிகபட்ச தண்டனையை 3 ஆண்டுகளாக உயர்த்தியது. அது மட்டுமின்றி குறைந்தபட்ச அபராதம் 50 ஆயிரம் ரூபாய் என்றும் அதிகபட்ச அபராதம் 3 லட்சம் ரூபாய் என்றும் விதித்தது.

இதே குற்றத்தை இரண்டாவது முறையாகச் செய்பவருக்குக் குறைந்த பட்ச சிறைத் தண்டனை ஒரு வருடமாகவும், குறைந்தபட்ச அபராதம் ஒரு லட்சமாகவும் விதிக்கப்பட்டதுடன், குற்றவாளி ஜாமீனில் விடப்படாமல் கட்டாய சிறைத் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார் என்றும் அது அறிவித்தது.

பதிப்புரிமைக் குறிய கால அளவு

ஒரு படைப்பாளிக்கு தனது படைப்பின் மீது உள்ள உரிமையை இந்திய பதிப்புரிமைச் சட்டம் உத்திரவாதம் செய்துள்ளது. அதன்படி அச்சிடப்படும் படைப்பாக இருந்தால் அப்படைப்பின் மீதான உரிமை அவரது மறைவிற்குப் பின் அவரது பெயருக்கு முதலில் 50 ஆண்டு காலம் வழங்கியது. இப்போது அது 60 வருடமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. திரைப்படமாகவோ, இசையாகவோ இருந்தால் அது வெளியிடப்படும் தேதியிலிருந்து 60 ஆண்டுகளுக்கும் ஒலிபரப்பப்பட்டால் 25 ஆண்டுகளுக்கும் அதற்கான உரிமை அவற்றின் படைப்பாளிகளுக்கு நீடிக்கிறது.

இந்திய பதிப்புரிமைச் சட்டம் – 2012

கலை,இலக்கியம் மற்றும் இசைத் துறை என அனைத்து துறையினரின் வேண்டுகோளுக்கு இணங்க சட்டத் திருத்தம் இது. உதாரணமாக திரைப்படத் தயாரிப்பாளர் அந்த திரைப்படத்துக்கு மட்டுமே உரிமை படைத்தவர். அதே திரைப்படம், வானொலியில், தனியார் அல்லது அரசு தொலைக்காட்சியில், இணையதளத்தில், குறுந்தகடுகள் மூலமாக கேபிள் டி.வி.க்களில், சிறு பகுதியாக அல்லது முழுமையாக அல்லது பாடல் மட்டும் என எந்த வகையில் வெளியானாலும், அதற்கான உரிமத்தொகை (ராயல்டி) பெறுவதற்கு இந்தக் காட்சி, பாடல் அல்லது இசைக்குச் சொந்தக்காரர்கள் உரிமை பெற்றவர் ஆகிவிடுகின்றனர்.

ஆதாரம் : இந்தியச் சட்டங்கள்

கடைசியாக மாற்றப்பட்டது : 5/6/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate