অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

இந்தியக் கூலி வழங்கல் சட்டம்

இந்தியக் கூலி வழங்கல் சட்டம்

கூலி வழங்கல் சட்டம்

இந்தியாவில் முதலாளிகள் தொழிலாளர்களுக்கு, கூலியினை வழங்காமல் அல்லது தாமதப்படுத்தி வழங்கித் தொழிலாளர்களைச் சுரண்டுவதைத் தடுக்கும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்டது கூலி வழங்கல் சட்டம் - 1936 ஆகும். இச்சட்டம் தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய நியாயமான கூலி, குறித்த வடிவத்தில், குறிப்பிட்ட காலத்தில் சட்ட விரோதமான பிடித்தங்களின்றி வழங்கப்பட வேண்டும் என்பதை உள்ளடக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

கூலி

கூலி என்பது முதலாளியால் கொடுக்கப்பட்ட வேலையை செய்து முடித்தத் தொழிலாளிக்கு மறு பயனாக வழங்கப்படும் தொகையாகும். இது பணமாகவோ அல்லது வங்கிக் காசோலையாகவோ வழங்கப்படலாம். இவை தவிர கூலி என்பது, முதலாளிக்கும் தொழிலாளிக்கும் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் அல்லது நீதிமன்ற உத்தரவின் பேரில் வழங்கப்படும் தொகை கூலியாகும். இவை தவிர;

மிகுதி நேரம் சம்பளம் (Over Time wage) விடுமுறை நாள் சம்பளம் போன்றவையும் கூலி எனப்படும்.

மீதூதியம் போன்ற எந்தவொரு கூடுதல் சன்மானமும் கூலி எனப்படும்.

வேலையின் முடிவில் அந்த வேலைக்காக வழங்கப்படும் தொகை கூலி எனப்படும்.

கூலி இல்லாதவை.

  1. பயணப்படி அல்லது பயணச் சலுகைத் தொகை.
  2. பணியின் தன்மையினால் வரும் கூடுதல் செலவுகளைச் சரிக்கட்டப்பட வழங்கும் தொகை.
  3. நன்றித்தொகை அல்லது பணிக்கொடை.
  4. லாபமாகக் கிடைக்கும் மீதூதியம்.
  5. வீட்டு வசதி, தண்ணீர் வசதி மற்றும் மின்சார வசதி போன்ற சேவைகள்.
  6. ஓய்வூதியம், வைப்புநிதி மற்றும் இவைகளின் மேலான வட்டித் தொகை, இவற்றிற்காக முதலாளி செலுத்தும் சந்தாத் தொகை.

-போன்றவைகள் கூலியாகக் கருதப்படாது.

கூலியின் வடிவம்

கூலியை பணமாகவோ அல்லது வங்கிக் காசோலையாகவோ மட்டும் வழங்க வேண்டும். வேறு வழிகளில் இவை வழங்கக் கூடாது.

கூலி வழங்கும் நாட்கள்

தொழிலாளர்களுக்கு கூலி அவ்வப்போது வழங்கப்பட்டு விட வேண்டும். மாதாந்திர சம்பளத்தில் வேலை பார்க்கும் தொழிலாளிக்கு மாதத்தின் முதல் ஏழு நாட்களிலிருந்து பத்து நாட்களுக்குள் மாதக் கூலி வழங்கப்பட வேண்டும்.

கூலி வழங்கப்படும் காலம்

கூலி குறிப்பிட்ட கால இடைவெளியில் சரியாக வழங்கப்பட வேண்டும். கால இடைவெளி என்பது வாரம், மாதமிருமுறை, மாதம் என்பதைக் குறிக்கும். இந்தக் கால இடைவெளியில் வாரம் என்றால் குறிப்பிட்ட கிழமையிலும், மாதமிருமுறை எனில் குறிப்பிட்ட தேதிகளிலும் மாதமாக இருந்தால் குறிப்பிட்ட சில நாட்களுக்குள்ளும் வழங்கப்பட வேண்டும்.

சட்ட விரோதமான பிடித்தங்கள்

தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய கூலியிலிருந்து நியாயமான பிடித்தங்கள் தவிர சட்டவிரோதமான பிடித்தங்கள் எதுவும் செய்யக் கூடாது.

கூலி வழங்குவது குறித்த விதிகள்

  1. கூலி வழங்கல் சட்டம் 1936 ன் பிரிவு 3ன் படி ஒவ்வொரு முதலாளியும், தன்னால் பணியில் அமர்த்தப்பட்ட தொழிலாளிக்குச் சேர வேண்டிய அனைத்துக் கூலியையும் வழங்க வேண்டும் என்பதைச் சட்டக் கடமையாக்குகிறது.
  2. கூலி வழங்கல் சட்டம் 1936 ன் பிரிவு 4ன் படி ஒவ்வொரு முதலாளியும் கூலி வழங்கும் கால இடவெளியை உருவாக்கிக் கொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது ஒரு மாத கால இடைவெளிக்கு அதிகமாகக் கூடாது.
  3. தொழிலாளர்கள் எண்ணிக்கை 1000 க்கு அதிகமாகாத நிலையில் ஊதியக் காலத்தின் கடைசி நாளிலிருந்து ஏழு நாட்கள் முடிவடைவதற்கு முன்பும், 1000 க்கு அதிகமாக உள்ள போது பத்து நாட்கள் முடிவடைவதற்கு முன்பும் கூலி வழங்கப்பட வேண்டும். இதை விடுமுறை நாளில் அளிக்கக் கூடாது என்பதை கூலி வழங்கல் சட்டம் 1936 ன் பிரிவு 5 மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
  4. கூலியை நடப்பிலுள்ள இந்தியப் பணமாகவும் சில்லரைக்காசுகளாகவும் கொடுக்க வேண்டும். தொழிலாளர்கள் ஒப்புதல் பெற்று வங்கிக் காசோலையாகவோ அல்லது அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைப்பதன் வாயிலாகாவோ வழங்கலாம் என்று கூலி வழங்கல் சட்டம் 1936 ன் பிரிவு 6 தெரிவிக்கிறது.
  5. சட்டம் அனுமதிக்கும் பிடித்தங்களைத் தவிர வேறு எவ்வித பிடித்தங்களும் இல்லாமல் தொழிலாளர்களுக்குக் கூலி வழங்கப்பட வேண்டும். முதலாளிக்கு அல்லது அவரது முகவர்க்கு தொழிலாளர்கள் செலுத்தும் தொகை அனைத்தும் பிடித்தங்கள் எனப்படும். ஊதிய உயர்வு அல்லது பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்படுதல், கீழ் பதவிக்கு மாற்றம் செய்தல் மற்றும் தற்காலிகப் பணி நீக்கம் ஆகியவற்றால் ஏற்பட்ட கூலி இழப்புகள் பிடித்தங்களாகக் கருதப்படமாட்டாது என கூலி வழங்கல் சட்டம் 1936 ன் பிரிவு 7ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டம் அனுமதிக்கும் பிடித்தங்கள்

கூலி வழங்கல் சட்டம் 1936-ன் படி சில பிடித்தங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. அவை

அபராதத் தொகை

தொழிலாளி கடமையைச் செய்ய தவறியதற்காகவோ, செய்யக்கூடாத செயலைச் செய்ததற்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையைக் கூலியில் பிடித்தம் செய்யலாம். இப்பிடித்தம் அவரது ஒரு மாதக் கூலியின் மொத்தத் தொகையில் மூன்று சதவிகிதத்திற்கு அதிகமாக இருக்கக் கூடாது.

வேலை செய்யாத நாட்கள்

கூலி வழங்கும் காலத்திற்குரிய வேலை நாட்களில் வேலைக்கு வராத நாட்களுக்குரிய கூலியைப் பிடித்தம் செய்து கொள்ள அனுமதிக்கிறது.

சேதத்திற்கான இழப்பு

தொழிலாளியிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பில் கவனக்குறைவாய் இருந்து அதனால் ஏற்பட்ட சேதம் அல்லது இழப்பை ஈடு செய்யும் வகையில் ஒரு தொகையை கூலியிலிருந்து பிடித்தம் செய்யலாம். இப்படி பிடித்தம் செய்யப்படும் முன்பு, தொழிலாளிக்கு இது குறித்த நியாயமான விளக்கங்கள் அளிக்கப்பட வேண்டும்.

சேவைகளுக்கான தொகை

வீட்டு வசதி, தண்ணீர், மின்சார வசதி மற்றும் வாகன வசதி போன்ற சேவைகள் வழங்கப்பட்டால் அதற்குச் சமமான தொகையைக் கூலியில் பிடித்தம் செய்யலாம். ஆனால் அச்சேவைகளுக்கு தொழிலாளி ஏற்பளித்திருக்க வேண்டும்.

முன்தொகை

தொழிலாளி வேலையில் சேரும் முன்பு அல்லது சேர்ந்த பின்பு அல்லது விழாக் காலங்களில் வழங்கப்பட்ட முன்தொகையினைக் கூலியில் பிடித்தம் செய்ய அனுமதிக்கிறது. இது போல் அதிகமாகக் கொடுக்கப்பட்டு விட்ட கூலியைத் திரும்பப் பெறவும் பிடித்தம் செய்யலாம். ஆனால் போக்குவரத்து செலவுகளோ அல்லது முன்பணம் மற்றும் அதிகமாக வழங்கப்பட்ட கூலிக்கு வட்டியோ பிடித்தம் செய்யக் கூடாது.

கடன் தொகைகள்

மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட வீட்டு வசதிக் கடன், வாகனக் கடன் மற்றும் தொழிலாளரால் பெறப்பட்ட கடன்கள் போன்றவற்றின் மாதாந்திர தவணையிலான பிடித்தங்கள் கூலியிலிருந்து கழித்துக் கொள்ளலாம்.

உறுப்பினர் தொகை

மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொழிலாளர்களின் கூட்டுறவு சங்கத்திற்கு தொழிலாளர் செலுத்தும் உறுப்பினர் தொகை மற்றும் பிற தொகைகளைப் பிடித்தம் செய்யலாம்.

காப்பீட்டுத் தவணைத் தொகை

ஆயுள் காப்பீடு, தபால் அலுவலக வழிக் காப்பீடு போன்றவைகளுக்குச் செலுத்த வேண்டிய தவணைத் தொகையினை தொழிலாளர் சம்மதத்தின் பேரில் அவரிடம் உரிய கடிதம் பெற்று அதன் பின்பு பிடித்தம் செய்யலாம்.

பிற பிடித்தங்கள்

  1. வருமான வரிக்கான பிடித்தம்.
  2. நீதிமன்ற உத்தரவுகளின் பேரிலான பிடிக்கப்பட வேண்டிய தொகை.
  3. வருங்கால வைப்புநிதி மற்றும் ஒய்வூதியத் திட்டம் ஆகியவைகளுக்குச் செலுத்த வேண்டிய தொழிலாளர்களின் சந்தாத் தொகை.
  4. தொழிலாளர்களின் தொழில் வரிப் பிடித்தம்.
  5. பிரதமர் தேசிய உஅதவி நிதி மற்றும் பிற நிவாரண நிதிகளுக்கான நன்கொடைத் தொகை போன்றவை தொழிலாளர்களின் சம்மதக் கடிதத்தின்படி பிடித்தம் செய்யலாம்.
  6. தொழிற்சங்கத்திற்கான உறுப்பினர் தொகை தொழிலாளர்களின் சம்மதக் கடிதத்தின்படி பிடித்தம் செய்யலாம்.

பிடித்தத்தின் பொது வரம்பு

தொழிலாளியின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் பொழுது அனைத்துத் தலைப்புகளின் கீழும் செய்யப்படும் மொத்தப் பிடித்தம் தொழிலாளியின் மாதச் சம்பளத்தில் 50 சதவிகிதத்திற்கு மேல் இருக்கக் கூடாது. கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் கடன் தொகைகளுக்காகப் பிடித்தம் செய்யப்படும் பொழுது 75 சதவிகிதம் வரை பிடித்தம் செய்யலாம்.

முறையீடுகள்

  1. சட்டத்தில் சொல்லப்பட்ட விதிமுறைகள் மீறப்பட்டு சட்டவிரோதமான பிடித்தங்கள் செய்யப்படும் போது அல்லது தகுந்த காலத்தில் கூலி வழங்கப்படாத போது அது குறித்த முறியீடுகளை மாநில அரசு நியமித்துள்ள அதிகாரியிடம் முறையீடு செய்யலாம்.
  2. இந்த அதிகாரி முறையீடுகள் வரும் போது கூலியில் செய்யப்பட்ட பிடித்தம் சட்டப்படி சரியானதுதானா? கூலி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதா" என்பதையும் இவற்றுடன் தொடர்புடைய பிற செயல்கள் குறித்தும் விசாரித்து முடிவு செய்வார்.
  3. அதிகாரியின் முடிவு சரியானதல்ல என்று கருதினால் மாவட்ட நீதிமன்றத்திற்கு முறையீடு செய்யலாம். மேல் முறையீட்டு நீதிமன்றம், வழக்கில் ஏதேனும் சட்ட வினாக்கள் இருப்பதாகக் கருதினால் அவ்வழக்கை உயர்நீதிமன்றத்திற்கு மேற்கோள் செய்து அனுப்பி வைக்கலாம். அதன் பின்னர் உயர்நீதி மன்றத்தின் முடிவிற்குத் தகுந்தபடி மாவட்ட நீதிமன்றம் மேல் முறையீட்டை முடிவு செய்யலாம்.

ஆதாரம் : தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம்

கடைசியாக மாற்றப்பட்டது : 5/6/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate