অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்

குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்

குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்

குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் என்பது குழந்தைத் திருமணத்தைத் தடுக்க இந்தியாவில் நிறைவேற்றப்பட்ட சட்டம் ஆகும். இது 1891 ஜனவரியில் சட்ட முன்வடிவாக ஆங்கில அரசினால் முன்வைக்கப்பட்டு, 1929 செப்டம்பர் 28ஆம் நாள் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இது சார்தா சட்டம் என்றும் அழைக்கப்பட்டது. இதன்படி, திருமணம் செய்வதற்கு பெண்ணுக்கு பதினைந்து வயதும், ஆணுக்கு பதினெட்டு வயதும் நிறைவடைந்திருக்க வேண்டும்.

19ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே, இதுபோன்ற ஒரு சட்டத்தைக் கொண்டுவர ஆங்கிலேய அரசு முயன்றது. 1880 குஜராத்தைச் சேர்ந்த, பி.எம்.மலபாரி என்பவர் ஆங்கில அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் ஐந்து வயது பெண் குழந்தைகளுக்கெல்லாம் திருமணம் செய்யும் கொடுமையை அரசு தலையிட்டு உடனே நிறுத்த வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் மலபாரி குறிப்பிட்டிருந்தார். இது லண்டன் வரை சென்று, பல விவாதங்களுக்கு உள்ளாகி, இறுதியில் 1891 ஜனவரியில் சட்ட முன்வடிவாக அரசினால் முன்வைக்கப்பட்டது. இச்சட்டம் 1930 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்தது.

தற்போது பெண்ணின் திருமண வயது 21 எனவும், ஆணின் திருமண வயது 23 எனவும் மாற்றப்பட்டுள்ளது.

எதிர்ப்புகள்

அன்றைய கால கட்டத்தில் பாலகங்காதர திலகர் தன்னுடைய கேசரி இதழில் இது குறித்த மிகக் கடுமையான கண்டனங்களையும், கட்டுரைகளையும் வெளியிடத் தொடங்கினார். இந்து மதத்தின் அடிப்படைக் கூறுகளில் தலையிட ஆங்கிலேயர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று முழங்கினார். அவருடைய எழுத்துகளுக்கு, அன்று இந்தியாவில் இருந்த இந்துக்களிடையே பேராதரவு கிடைத்தது. இது போன்றதொரு சட்டத்தை எக்காரணம் கொண்டும் நிறைவேற்ற விடமாட்டோம் என்றார் திலகர்.

மலபாரி, பார்சி மதத்தைச் சார்ந்தவர் என்பதால், அவருக்கு இந்துமதப் பண்பாடுகளில் தலையிடுவதற்கு உரிமை இல்லை என்ற திலகரின் கூற்றுக்கு மக்களிடையே ஆதரவு இருந்தது. இச்சட்டத்துக்கு ஆதரவு குறைவாகவும், எதிர்ப்பு மிகக் கூடுதலாகவும் ஆகிவிட்ட நிலையில், அச்சட்ட முன்வடிவை அரசு திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டது.

மீண்டும் 1913இல் அதே மாதிரியான இன்னொரு சட்ட முன்வடிவை அரசு கொண்டுவந்தது. அப்போதும் ஆச்சார்யா போன்ற இந்து மதவாதிகள் சட்டமன்றத்திலேயே கடுமையாக எதிர்த்தனர். 'பூப்படையாத பெண்களுக்குத் திருமணம் செய்தால் சிறைத் தண்டனை என்கிறது உங்கள் அரசு. பூப்படைவதற்குள் திருமணம் செய்யவில்லை என்றால் நரகத்திற்குப் போவீர்கள் என்கிறது எங்கள் இந்து மதம். நாங்கள் என்ன செய்வது?’ என்றார் ஆச்சார்யா. அச்சட்ட முன்வடிவை, மெய்யறம் என்னும் தனது நூலில் வ. உ. சிதம்பரம்பிள்ளை வரவேற்று எழுத, அதே நூலின் முன்னுரையில், சுப்பிரமணிய சிவா அதனைக் கண்டித்து எழுதினார். இப்படிப் பல்வேறு ஆதரவு, எதிர்ப்புகளுக்குப்பின் மீண்டும் அது கிடப்பில் போடப்பட்டது.

தமிழகத்தில் பெண்கள் எழுச்சி

19ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே நீதிபதி மாயூரம் வேதநாயகம் பிள்ளை போன்றோரும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாரதியார் போன்ற கவிஞர்களும் பெண் விடுதலைக்காக எழுதினர். 1926 அதன் பிறகு இந்தியாவில் பெண் விடுதலை இயக்கங்கள் வீறுகொண்டு எழுந்தன.[6] அதன் விளைவாக, பெண்கள் பலர் எழுச்சி பெற்றனர். சிறு வயதுப் பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்யும் கொடுமையை தடை செய்ய வேண்டும் என்று குரலெழுப்பினர். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி போன்றவர்கள் அம்முயற்சியில் முன்னின்று பணியாற்றினர்.

சட்டம் நடைமுறையாதல்

இச்சூழலைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, 1929-இல் மீண்டும் ஒரு முயற்சி நடைபெற்றது. இம்முறை அச்சட்ட முன்வடிவை ' ராய் சாஹிப் ஹாபிலாஸ் சார்தா' என்னும் ஆங்கிலேயர் முன் மொழிந்தார். அதனால்தான் அச்சட்டம் 'சார்தா சட்டம்' என்று அறியப்பட்டு, காலப்போக்கில் சாரதாச் சட்டம் ஆகிவிட்டது. 1929 செப்டம்பர் 28-ஆம் நாள் சட்டமாக நிறைவேற்றப்பட்டு, 1930 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. 1978-ஆம் ஆண்டில், சட்டத் திருத்தம் செய்யப்பட்டு, பெண்களின் குறைந்த பட்ச திருமண வயது 18 எனவும், ஆண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 21 எனவும் மாற்றப்பட்டது. தற்போது அது பெண்ணின் திருமண வயது 21 எனவும், ஆணின் திருமண வயது 23 எனவும் மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தினால் குழந்தைத் திருமணங்களை தடுக்க முடியும். நடைபெற்று முடிந்த திருமணங்களை ரத்து செய்வதற்கான வழிவகை எதுவும் இல்லை.

ஆதாரம் : இந்தியாவின் சட்டங்கள்

கடைசியாக மாற்றப்பட்டது : 7/11/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate