অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டம் 2017

சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டம் 2017

அறிமுகம்

சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டம் 2017 என்பது இந்திய அரசியலமைப்புச்சட்டம் 1950 சட்டப்பிரிவு 301இல் தெரிவித்துள்ள 'இந்தியா முழுமைக்கும் சென்று தொழில் செய்யலாம்' என்கிற நமது சட்ட மேதைகளின் கனவினை நனவாக்கும் ஒரு சட்டமாகும். இதுவே 'இந்தியா - வேற்றுமையில் ஒற்றுமை காணும்' என்ற தாரக மந்திரத்தின் உண்மையான செயலாக்க வடிவமாகும். உலகமயம் என்றும் தாராளமயம் என்றும் உலகளாவிய பொருளாதார சீர்திருத்தத்தினை 1991 ஆம் ஆண்டு முதல் இந்தியா கடைபிடித்து வந்தாலும் அதை நனவாக்கும் இந்தியா முழுமைக்குமான முதற்சட்டம் இதுவேயாகும். எப்படியெனில், உலகமயம், தாராளமயம் இவற்றிற்கிடைப்பட்ட இந்தியமயம் என்பதைச் சாத்தியமாக்கும் முதல் முழுச்சட்டம் சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டம் 2017 ஆகும். மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, இச்சட்டத்தினை 01.07.2017 முதல் நடைமுறைப்படுத்தியதன் மூலம் மத்திய அரசு மாநில அரசுகளும் இணைந்து கூட்டுறவுக் கூட்டாட்சித் தத்துவத்திற்கு புதுப்பொலிவையும் உண்மையான பங்களிப்பையும் அளித்துள்ளன.

GST வரலாறு

உலகிலேயே முதன் முதலில் சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டம் பிரான்ஸ் நாட்டில் 1954 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. இருப்பினும் இந்தியா போன்ற உலகத்தில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட, பல்வேறு மத, மொழி, இன, சாதிகள் கொண்ட ஒரு நாட்டில் இது சாத்தியப்படுமா எனும் கேள்வியே உலகத்தின் முன்னால் இருந்தது. இப்பொழுது, கேள்விக்குறி ஆச்சரியக்குறியானது விந்தையிலும் விந்தையானதாகும். ஆம், 1987ஆம் ஆண்டு அன்றைய இந்திய நிதியமைச்சர் திரு வி.பி.சிங் அவர்களால் கருக்கொண்டு முன்னெடுக்கப்பட்டு, மெது மெதுவாக, படிப்படியாக ஒவ்வொரு அடியாக முன்னேறி 2003இல் மதிப்புக்கூட்டு வரி என்று முகமெடுத்து ஒவ்வொரு மாநில அளவில் உருவாகி, திரு. ப.சிதம்பரம் போன்றோரால் வடிவமளித்து உருவாக்கப்பட்டு, இந்திய நிதியமைச்சர் திரு. அருண் ஜெட்லி அவர்களால் உலகமே வியக்கும் வண்ணம் இந்தியா செய்துகாட்டிய செப்படி வித்தையாகும் இந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டம் 2017. இது சுதந்திரம் பெற்ற பிறகு, இந்தியா  மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தங்களிலேயே மிக முக்கியமான, உலகமே எதிர்பார்த்த, பெரும்பாலான இந்தியர்களாலேயே இப்பொழுது முடியுமா என்று எதிர் பார்க்கப்பட்ட, ஆனால் உண்மையிலேயே சாத்தியமாக்கப்பட்ட ஒரு வரிச்சீர்திருத்தமாகும். இதனால் கடந்த 01.07.2017 முதல் தேசியக்கவி சுப்பிரமணிய பாரதியார் கனவு கண்டது போல் நம் தாய்நாடாகிய இந்தியா சுமார் 130 கோடி முகமுடையாள் எனினும் ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை எனும் சிந்தனை உடையவளாக மாறியுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த 70 ஆண்டுகள் கடந்த பின்னர் அவரது கனவு மெய்ப்பட்டுள்ளது.

சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டம் 2017, இந்தியாவில் இதுவரை ஒருபுறம் மத்திய அரசால் விதிக்கப்பட்டு வந்த உற்பத்தி வரி, உள்நாட்டு உற்பத்தியைக் காத்துவந்த கூடுதல் எதிர்சமனப்படுத்தும் வரி, சிறப்புக் கூடுதல் வரி, சேவை வரி ஆகிய வரிகளுக்கு மாற்றாகவும், மற்றொருபுறம் மாநில அரசுகளால் விதிக்கப்பட்டு வந்த மதிப்புக்கூட்டு வரி, மத்திய விற்பனைவரி, ஆடம்பரவரி, கேளிக்கைவரி, சூதாட்டவரி, வாகன நுழைவு மீதானவரி, பொருட்கள் நுழைவு மீதான வரி, விளம்பரவரி போன்ற சுமார் பதினேழு பதினெட்டு வரிகளை ஒன்றாக இணைத்துச் சமைத்த வரிச்சட்டமாகும். ஒன்றுபடல் எனும் இலக்கணம் தான் இந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டம் 2017 என்றால் மிகையாகாது. இச்சட்டத்தினை உருவாக்க மத்திய அரசு, 29 மாநில அரசுகள் மற்றும் சட்டமன்றம் உள்ள புது தில்லி மற்றும் பாண்டிச்சேரி ஆகிய இரு யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்கள், தொடர்புடைய அமைச்சர்கள் ஆகியோர் இணைந்து சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றத்தினை உருவாக்கி, அதன் மூலம் இந்த மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டம், மாநில சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டம் மற்றும் யூனியன் பிரதேச சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டம் ஆகியவற்றை இயற்றியுள்ளது. சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றம் இந்தியா முழுமைக்கும் சுமார் 1300 சரக்கு மற்றும் சுமார் 90 சேவைகளுக்கு 3, 5, 12, 18 மற்றும் 28 சதவீதங்களில் வரி நிர்ணயம் செய்ய பரிந்துரை செய்துள்ளது.

நாட்டிற்கும் கிடைக்கப்போகும் பலன்கள்

  1. இந்தியாவில் இதுவரை நடைமுறையிலிருந்த பல்முனை வரிகள் நீக்கப்பட்டுள்ளன.
  2. வரிக்கு மேல் வரி தவிர்க்கப்பட்டுள்ளது.
  3. வரி ஏய்ப்பு நாளடைவில் குறைந்து, இந்தியப் பொருளாதாரம் இனி நாலுகால் பாய்ச்சலில் புதிய உத்வேகத்தோடு ஓட்டமெடுக்கும்.
  4. மாநிலங்களுக்கிடையேயான வரி வித்தியாசம் இருக்காது.
  5. இந்தியாவில் தயாரிப்போம் என்பதை இனி சாத்தியப்படுத்துவோம். இந்தியா இனி உலகத்திற்கு ஒரு தொழிற்சொர்க்கமாகும்.
  6. இந்தியர்களுக்கு இந்தியாவிலேயே இனி வேலைவாய்ப்புகள் கைநிறைய சம்பளத்துடன் கைகூடும். இந்தியா ஒரு தொழில்நுட்ப வேலைவாய்ப்பு மையமாகும்.
  7. இந்தியா இனி உண்மையிலேயே ஒரு தேசம், ஒரு வரியுடன் ஒரே சந்தையாகும் விந்தையாகும்.
  8. இந்தியா இனி ஒரு சர்வதேசப் பொருளாதார சக்தியாகும்.
  9. இந்தியாவின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 1 - 2 சதவீதம் கூடும்.
  10. இந்தியர்களின் தனிநபர் சராசரி வருமானம் உயரும்.
  11. இந்தியத் தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சியுடன் இணைந்து உண்மையான சமத்துவ, சமச்சீரான வளர்ச்சியாக மாறும்.
  12. இந்திய ஏற்றுமதி ஏறுமுகமாகும்.
  13. ஒற்றை வரியை சாத்தியமாக்கும் ஒரே வரி நாடெங்கும்.
  14. பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இனி இறங்குமுகமாகும்.
  15. இந்தியச் சந்தை - ஒரே சந்தை - உலகத்திலேயே மிகப்பெரிய சந்தையாகும்.
  16. பல மத்திய மாநில வரிச்சட்டங்கள் ஒன்றாகி ஒரே வரிச் சட்டமானது.
  17. மாநிலங்களுக்கிடையே இருந்த உள்நாட்டு எல்லைகள், சோதனைச்சாவடிகள் இனி இல்லை என்றானது.
  18. நதிகள் தேசிய மயமாக்கத்திற்கு ஒரு முன்னோட்டம், மாநிலச் சந்தைகள் இணைந்த ஒரு தேசிய சந்தை.
  19. இந்தியா என்றால் தேசபக்தி மக்களின் மனம் மாநில எல்லைகளைக் கடப்பது போல், இன்று பொருளாதாரம் - ஒரே சந்தை என மாநில எல்லைகளை கடந்துள்ளது.
  20. நாடு முழுவதும் சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டத்தால் ஒருங்கிணைந்த பொருளாதாரச் சூழல் என்னும் தறியால் ஒன்றாகக் கட்டியுள்ளோம்.

வணிகர்களுக்கும், தொழிற்துறையினருக்கும்ச்சட்டம் வழங்கும் பலன்கள்

  • இதுவரை மாதந்தோறும் மத்திய, மாநில என அரசு அலுவலகங்களுக்கு சென்றுவந்த நிலை இனி இல்லை. காரணம், அனைத்தும் கணினிமயம், அதனால் காலவிரயம் அறவே இல்லை. பதிவு பெறுதல் இலவசம் - கணினி வழி - மூன்றே நாட்களில். பதிவுச் சான்று நிரந்தரக் கணக்கு எண்ணை அடிப்படையாக வைத்து 15 இலக்கம் கொண்ட எண்ணாக வழங்கப்படுகிறது. பதிவெண் பெற ஆண்டு மொத்த விற்பனை ரூபாய் 10 இலட்சத்திலிருந்து ரூபாய் 20 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.வணிகர்கள் இணக்க வரி செலுத்த, இதுவரை நடைமுறையிலிருந்த ஆண்டு மொத்த விற்பனை ரூபாய் 50 இலட்சத்திலிருந்து ரூபாய் 75 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இவர்கள் மாதாந்திர நமூனாகளுக்கு பதிலாக காலாண்டு அடிப்படையில் நமூனாக்கள் சமர்ப்பித்தால் போதுமானது.
  • பெரு வணிகர்களுக்குக் கிடைக்கும் அனைத்து சலுகைகளும் இனி சிறு, குறு வணிகர்களுக்கும் கிடைக்கும். வரி  செலுத்துதல் முழுவதும் இணைய வழியிலான எளிய சேவை - வங்கி வழி மூலம் முழு உத்தரவாதம். சிறு வணிகர்கள் ரூபாய் 10 ஆயிரம் வரை வங்கியில் நேரடியாக வரியினை செலுத்தலாம். வெளிமாநிலக் கொள்முதலுக்கும் உள்ளீட்டுவரி வரவு கிடைக்கும். மேலும் வெளிமாநில வர்த்தகத்திற்கு படிவங்கள் ஏதும் இனி தேவையில்லை. உற்பத்தி முதல் நுகர்வு வரை ஒரே குடையின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அதனால் வரி மேல் வரி கிடையாது. இதுவரை உற்பத்தியில் உருவான வரி, இனி நுகர்வின்மீது விதிக்கப்படுவதால் உற்பத்திச் செலவு கணிசமாகக் குறையும். இச்செயல் நமது தொழிற்துறையினர் உலகளவில் போட்டியிட்டு வெற்றிபெற வழிவகுக்கும்.
  • உற்பத்திச் செலவு குறைவதால் அது ரத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி பொருளின் தரம் உயர உந்துசக்தியாக மாறும். இந்தியச்சந்தை, தரம் வாய்ந்த பொருள்கள் நிறைந்த சந்தையாகும். தொழிற்சாலைகள் தரமான பொருள்களை உற்பத்தி செய்யும் தர மையங்களாகும். தொழிற்கல்வி கற்றோர் இந்தியாவில் விரும்பிப் பணியாற்றும் சூழல் உருவாகியுள்ளது. பொருட்களை ஓரிடத்திலிருந்து வேறிடங்களுக்குக் கொண்டு செல்வதில் இருந்த தங்கு தடைகள் அகற்றப்பட்டு, தடையற்ற சரக்குப் போக்கு வரத்து சாத்தியமாகியுள்ளது. உள்ளீட்டு வரி நேர்மையாக பொருளீட்ட நினைப்போருக்கு ஒரு தங்குதடையற்ற உந்து சக்தியாகும். மாநிலங்களுக்கு இடைப்பட்ட வழங்கலுக்கும், இறக்குமதிக்கும் இனி உள்ளீட்டு வரி கிடைக்கும்.
  • ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரி, மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள் வரி, மாநில சரக்குகள் மற்றும் சேவைகள் வரி, யூனியன் பிரதேச சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டங்கள் தொழில் செய்வதை எளிமைபடுத்தியுள்ளன.
  • ஏற்றுமதி செய்தால், செலுத்திய உள்ளீட்டு வரி திருப்புத் தொகையாக கிடைக்கும். அதுவும் 90 சதவீதம் ஏழே நாட்களிலும் மீதமுள்ள 10 சதவீதம் நடைமுறைகளைப் பின்பற்றி அடுத்த 60 நாட்களுக்குள் உங்கள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். தவறினால் வட்டியுடன் வரவு உத்தரவாதமாகும். ஏற்கனவே நடைமுறையில் உள்ளவாறு இன்வாய்ஸ்கள் கணினி மூலமாகவும் கையினாலும் எழுப்பப்படலாம். கணினி இல்லையென்ற கவலை வேண்டாம். அதேபோன்ற ஏற்கனவே நடைமுறையில் உள்ளவாறு மாதாந்திர நமூனாக்கள் மட்டும் இணைய வழிப்பதிவேற்றம் செய்தால் போதுமானது. வரிவிதிப்பு முற்றிலும் சுயம் சார்ந்ததாகும். மாற்றம் சார்ந்த சட்டப்பிரிவுகள் மத்திய மாநில வரி விதிப்பு நடைமுறைகளை எளிமையாக்குகின்றன. உண்மையாக  இருக்கும் உள்ளீட்டு வரிகளை இச்சட்டத்தின் கீழ் உள் வாங்கும் சக்தியுடையனவாகும். இச்சட்டத்தின்படி மேல்முறையீடு செய்தல் மற்றும் தெளிவுரைகள் பெறுதல் எளிமையாக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தினை நடைமுறைப்படுத்தும் மத்திய மற்றும் மாநில அரசு அலுவலர்களின் நேரடியான சந்திப்பிற்கு அவசியமின்றி அனைத்து சேவைகளையும் இணையவழி மூலம் வணிகர்கள் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வணிகர்கள் தங்களின் சேவைகளைப் பின்வரும் முறைகளில் தொடர்ந்து பெறலாம்.

1. கட்டணமற்ற தொலைபேசி சேவை-1800 103 6751.

2. இணையதள சேவைகள்

[i] www.gst.gov.in [ii] www.gstcouncil.gov.in [iii] http://ctd.tn.gov.in

[iv] www.cbec.gov.in

3. மின்னஞ்சல் முகவரி - helpdesk@ctd.tn.gov.in

தமிழகத்தில் இதுவரை வணிக வரித்துறை என்றழைக்கப்பட்ட துறை சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்ட அமலாக்கத்திற்குப் பிறகு மாநில வரித்துறை என்றழைக்கப்படுகிறது. வணிகர்களுக்கு இச்சட்டத்தின் பிரிவுகள், விதிகள் மற்றும் இதர நடைமுறைகளை எளிய முறையில் விளக்கும் வகையில் இச்சட்ட அமலாக்கத்திற்கு முன்னும் பின்னுமாக விளக்கக் கூட்டங்கள், கருத்தரங்குகள், கலந்தாய்வுக் கூட்டங்கள் தமிழகம் முழுவதும் ஒரு வணிக வரி வட்டத்தில் குறைந்தபட்சம் இரு கூட்டங்கள், சரக அளவில் மற்றும் கோட்ட அளவில் தொடர்ந்து கூட்டங்கள் நடத்தப்பட்டுவருகின்றன. வணிகர்கள் இதில் பங்குபெற்று தங்களது ஐயங்களை களைந்து எளிதாக வணிகத்தினை தொடர்ந்து செய்திடல் வேண்டும். இதற்கென ஒவ்வொரு வணிக வரி வட்டத்திலும் உதவி மையங்கள் திறக்கப்பட்டு அவை திறம்பட வணிகர்களின் ஐயங்களைக் களைந்துவருகின்றன. மேலும் ஒவ்வொரு வணிக வரிக் கோட்டத்திலும் "Facilitation Centre" அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சென்றும் வணிகர்கள் தங்களது வினாக்களின் மூலம் விடைபெறலாம்.

இந்திய மக்களாகிய நாம், சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தால் கிடைக்கப்போகும் நன்மைகளை மனதில் வைத்து அனைவரும் தவறாது வரிகளை உள்ளடக்கிய பில் என்னும் விலைப்பட்டியல்களைக் கேட்டுப்பெறுவோம். வருங்கால சமுதாயம் வளமாய் வாழ வழி வகுப்போம். தரமான சமுதாயமே இந்திய ஜனநாயகத்தின் ஊற்றுக்கண் என்பதை மெய்ப்பிப்போம். உலக அரங்கில் இந்தியாவின் பெருமையைப் பறை சாற்றுவோம். இந்தியர்களின் கனவான வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவோம்.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

கடைசியாக மாற்றப்பட்டது : 5/6/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate