பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

நில அபகரிப்புச் சட்டம் – 2011

நில அபகரிப்புச் சட்டம் – 2011 பற்றி அறிய வேண்டிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

 • மண்ணுக்கும் பொன்னுக்கும் தான் உலகில் நிறைய சண்டைகள் நடந்து இருக்கின்றன. அரசுகளுக்கிடையே நடந்த போர்கள் இந்தியா உருவாக்கப்பட்ட  பின்னர்  மக்கள் ஒரு புறமும் அரசும் பெரிய நிறுவனங்களும் மறு புறமும் என சண்டை நடந்து கொண்டிருக்கிறது. சில வருடங்களாக இந்தப் போர் உக்கிரம் அடைந்து இருக்கிறது.
 • இந்தப் போரைப்   புரிந்து கொள்வதற்கு முன்பு நிலத்தின் முக்கியத்துவத்தை மக்கள் புரிந்து கொள்வது அவசியம். நிலத்தின் மதிப்பு என்பது வெறும் பணத்தை மட்டும் வைத்து மதிப்பிடப்படுவது அல்ல. மக்களின் வாழ்வியல், பழக்க வழக்கங்கள், மொழி, கலாச்சாரம் அனைத்திற்கும் நிலமே அடிப்படையாக இருக்கிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு துண்டு நிலத்திற்குப் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது. குடும்பங்களின் வரலாறு இருக்கிறது. எவ்வளவோ ரத்தம் சிந்தப்பட்டு இருக்கிறது. இந்தியாவிலுள்ள நிலங்கள் சமீப காலம் வரை பெரும்பாலும் சிறு விவசாயிகள் மற்றும் சாதாரண மக்களுக்குத் தான் சொந்தமாக இருந்தன.
 • சுதந்திரம் அடைந்த பின்னர் முதலாளிகளுக்கு நிலம் தேவைப்பட்ட போதெல்லாம் 1894  இல் இயற்றப்பட்ட ஒரு மோசமான சட்டத்தை பயன்படுத்தி இந்திய அரசு லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தியது. இதில் வசித்த மக்களுக்கு ஒழுங்கான நஷ்ட ஈடும் வழங்கப்படவில்லை. இதற்கு நல்ல உதாரணம் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்கள். அந்தப் பகுதியில் வசித்த மக்கள் இன்று நாடோடிகளாக திரிகிறார்கள். பலர் தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டு அரசாலேயே ஒழித்துக் கட்டப்பட்டனர்.  அரசு இந்த அளவு மோசமாக நடந்து கொள்வதற்குக் காரணம் மக்களுக்கு தங்கள் உரிமை குறித்த விழிப்புணர்வு இல்லாததே.
 • சமீபத்தில் மேற்கு வங்காளத்தில் சிங்கூரில் டாடா தொழிற்சாலைக்கு எதிராக நடந்த போராட்டம், நாடு முழுவதும் நிலம் குறித்து மக்களிடையே எழுந்து இருக்கும் விழிப்புணர்வும் இப்போது ஏழைகளிடம் இருந்து நிலங்களை பிடுங்குவதில் அரசுக்கு சிக்கலை உருவாக்கி இருக்கின்றன. இந்த சிக்கலை சமாளிக்க  இந்திய அரசு “வேலை வாய்ப்பு” என்ற மந்திர சொல்லை பயன்படுத்துவது வழக்கம். யார் என்ன சொன்னாலும் சரி, எத்தனை பேர் வாழ்வு இழந்தாலும் சரி ஒரு பத்து பேருக்கு வேலை எனச் சொல்லி விட்டால் எவ்வளவு நிலத்தையும் கையகப்படுத்தலாம் என்பதே இந்திய அரசின் நிலையாக இருக்கிறது.
 • ஆனால் அரசுக்கு புதிதாக ஒரு சிக்கல் தோன்றி இருக்கிறது. 1894  இல் இயற்றப்பட்ட நில கையகப்படுத்துதல் சட்டம் தெளிவில்லாதது. மக்கள் நீதிமன்றங்களுக்கு போகாத வரையில் அந்தச் சட்டத்தை பயன்படுத்தி அரசால் நிலத்தை கையகப்படுத்த முடிந்தது. இப்போது மக்கள் பலர் நீதிமன்றங்கள் செல்ல ஆரம்பித்து இருக்கும் நிலையில் அரசுக்கு மக்களின் நிலங்களை கையகப்படுத்த ஒரு வலுவான ஆயுதம் தேவைப்படுகிறது. அந்த ஆயுதம் தான் நில கையகப்படுத்துதல் சட்டம் – 2011  என்ற வடிவில் பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது.
 • ஏழை விவசாயிகளின் நலனை காக்க என உருவாக்கப்படும் இந்த சட்டம் உண்மையில் எந்தச் சிக்கலும் இல்லாமல் ஏழை மக்களிடம் இருந்து நிலங்களை  சுலபமாக பிடுங்க வழி செய்கிறது. இனி இந்தச் சட்டம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். இந்த சட்டம் பக்கம் பக்கமாக நீண்டாலும் இதன் முக்கிய அம்சங்கள் கீழே உள்ளவை  தான்.
 • இந்தச் சட்டப்படி அரசு அரசுத் திட்டங்களுக்காகவும், தனியார் நிறுவனங்களுக்காகவும் நிலத்தை மக்களிடம் இருந்து கையகப்படுத்தலாம்.
 • இந்தச் சட்டம் என்ன காரணங்களுக்காக நிலத்தை கையகப்படுத்தலாம் என ஒரு பெரிய பட்டியல் போட்டுள்ளது. இந்தப் பட்டியலில் அடங்காதது எதுவுமே இல்லை. இது போதாது என்று அரசு நினைத்தால் இந்தப் பட்டியலில் எப்போது வேண்டுமானாலும் எதையும் சேர்க்கலாம் என்ற வாசகத்தை அரசு சேர்த்துள்ளது. சுருக்கமாக சொல்வதென்றால் உங்கள் நிலத்தை பிடுங்க அரசுக்கு காரணம் தேவை இல்லை. இது தான் இந்தச் சட்டத்தின் மூலமாக அரசு அடைய விரும்பும் அதிகாரம்.
 • இந்தச் சட்டம் நல்லது எனச் சொல்ல அரசு சொல்லும் காரணம் நிலத்தை கையகப்படுத்த எண்பது சதவீத மக்களின் ஒப்புதலை பெற வேண்டும் என்பது தான். இது இப்போது அறுபத்தி ஐந்து சதவீதமாக குறைக்கப்பட்டு  இருக்கிறது. ஆனால் இந்தப் பிரிவையும் கூர்ந்து கவனித்தால் அரசின் ஏமாற்றுத்தனம் தெரியும்.  இந்த அறுபத்தி ஐந்து சதவீதம் பேர் நிலம் வைத்திருப்பவர்கள் இல்லை. இந்த நில கையகப்படுத்தலின் மூலம் பாதிக்கப்படுபவர்கள் சரி என்று சொன்னால் போதும். யார் பாதிக்கப்படுபவர்கள் என்று அரசு விளக்கம் கொடுத்து  இருக்கிறது. ஆனால் உண்மை என்ன வென்றால் அரசு எத்தனை நபர்களை வேண்டுமானாலும் பாதிக்கப்பட்டவர்கள் என செயற்கையாக தயார் செய்ய முடியும். நிலத்துக்கு சொந்தமில்லாத ஒரு நபர் அரசு ஒரு லட்சம் கொடுத்து பாதிக்கப்பட்டவர் என்று சொன்னால் எப்படி மறுக்கப் போகிறார்?. இதன் மூலம் அரசு மக்களுக்கிடையே பிரிவை ஏற்படுத்தி நிலங்களுக்கு உண்மையான சொந்தக்காரர் யார் என்பதில் குழப்பத்தை ஏற்படுத்த முனைகிறது. இதன் மூலம் யார் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி அரசால் உங்கள் நிலத்தை பிடுங்க முடியும். அது மட்டும் அல்ல. அது பிடுங்கி முடிக்கும் போது ஊருக்குள் தீராத பகை உருவாக்கி இருக்கும்.
 • நிலம் என்பது மாநிலங்களுக்கு சொந்தம். ஆனால் மாநில அதிகாரங்களை எடுக்கும் மத்திய அரசின் திட்டம் இந்தச் சட்டத்திலும் பிரதிபலிக்கிறது. இந்த சட்டத்தை  எப்படி மாநிலங்கள் அமல்படுத்தப்படும் என்பதை கண்காணிக்க மத்திய அரசு ஒரு குழுவை இந்தச் சட்டத்தின் மூலம் அமைக்கும். இதன் மூலம் நிலங்களை தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுக்க மத்திய அரசு திட்டமிடுகிறது.
 • நிலம் என்பது மக்களின் சொத்து. நிறுவனங்கள் அதை வாங்க விரும்பினாலோ அல்லது அரசு தன்னுடைய திட்டங்களுக்காக வாங்க விரும்பினாலோ முடிந்த அளவு குறைவாக வாங்க வேண்டும். அதுவும் மக்களின் விருப்பம் இருந்தால் மட்டுமே வாங்க வேண்டும். இது போன்ற அடக்குமுறைச் சட்டங்கள் மூலமாக ஏற்கனவே தற்கொலை செய்து கொண்டிருக்கும் விவசாயிகள் வாழ்வில் அடிப்பது என்பது இந்தியாவின்  உணவுப் பாதுகாப்புக்கு நிரந்தர ஆபத்தை ஏற்படுத்தும். மக்கள் குறிப்பாக விவசாயிகள் இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும்

ஆதாரம் : பிரபு கண்ணன் (சிறகு நாளிதழ்)

3.07291666667
நவீன் Apr 01, 2020 11:28 AM

ஒரு பத்திரம் பதிவு செய்தால் கிரயம் எழுதி கொடுத்தவர் வழக்கு தொடக்க முடியுமா

Megan Oct 17, 2019 07:34 PM

மிகவும் அருமையான உள்ளது

TASNA Jan 21, 2016 11:30 AM

பொது தகவல் அலுவலரைத் தொடர்புக் கொண்டு வேண்டிய விவரங்களைப் பெறலாம். விண்ணப்பிக்கும் முறையை http://www.tn.gov.in/rti/procedure.htm என்ற இணைப்பில் காணலாம். நன்றி

அர்ச்சுனன் சோ. Jan 20, 2016 03:20 PM

தமிழக மக்களுக்கு பல உபயோகமான தகவல்களை தந்து உதவிக்கரம் நீட்டுகின்ற விகாஸ்பீடியாவிற்கு முதற்கண் என்னுடைய பாராட்டுதல்களை தெரிவிக்கிறேன்.

ஒரு தர்ம ட்ரஸ்ட்டின் நிலத்திற்கு அரசு பதிவு பெற்ற உழவடை குத்தகைதாரராக உள்ளேன்.

தர்ம காரியங்களுக்காக நிறுவப்பட்ட (தனியார்) பொதுநல ட்ரஸ்ட் சம்பந்தமான கேள்விகளுக்கான விளக்கங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிந்து கொள்ள இயலுமா...? அந்த தகவல்களை சம்பந்தப்பட்ட ட்ரஸ்ட் நிர்வாகிகளிடமே கேட்டுப் பெறலாமா....? அல்லது அதற்கென்று தனியாக வேறு ஏதேனும் அலுவலரை தொடர்பு கொண்டு விண்ணப்பித்து பெற வேண்டுமா....? இதற்கென்று யாரை அணுகி விண்ணப்பித்து, தகவல் பெற வேண்டும்.....? எந்த முறையில் விண்ணப்பிக்க வேண்டும்...? இது குறித்து சரியான தகவல் தந்தால் மிகவும் நன்றியுடையவனாக இருப்பேன்....

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top