பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / டிஜிட்டல் இந்தியா / டிஜிட்டல் இந்தியா - அனைவருக்கும் அதிகாரம் அளிக்கும் எதிர்காலத்தை நோக்கி
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

டிஜிட்டல் இந்தியா - அனைவருக்கும் அதிகாரம் அளிக்கும் எதிர்காலத்தை நோக்கி

டிஜிட்டல் இந்தியா பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

டிஜிட்டல் இந்தியா என்பது பிரதம மந்திரியின் தொலைநோக்குத் திட்டம் ஆகும். தகவல் தொழில்நுட்பத்தின் ஆற்றலை உந்துதலாகக் கொண்டு இந்தியாவை உருமாற்றம் செய்ய வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். சிக்கனமான செலவில், வளர்ச்சியை நோக்கிய, அனைவரையும் உள்ளடக்கிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் ஏழைகளுக்கும், புறக்கணிக்கப்பட்டவர்களுக்கும் அதிகாரம் அளித்தலே இந்தத் திட்டத்தின் முக்கியமான நோக்கமாகும். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சாதாரண இந்தியர்களுக்கும் அதிகாரம் அளித்தல் ஆகியன டிஜிட்டல் இந்தியாவின் மையப்புள்ளிகளாக உள்ளன.

உலக அளவில் 80 நாடுகளில் உள்ள 200 நகரங்களில், தனது வளர்ந்து வரும் தகவல் தொழில் நுட்பத் தொழில் திறனால் இந்தியா இன்று அங்கீகாரம் பெற்றுள்ளது. இந்தியாவில் ஐடி தொழிலின் வளர்ச்சி என்பது மூன்று காலகட்டங்களாகப் பிரித்துப் பார்க்கப்படலாம்:

காலகட்டம் I

இந்தக் கால கட்டத்தில் இந்தியாவில் தகவல் தொழில் நுட்பத் தொழில் நிபுணர்களும், ஐடி நிறுவனங்களும் உலகின் பல்வேறு பாகங்களுக்கும் பயணித்து தங்களுடைய இருப்பை நிலைநாட்டினர்.

காலகட்டம் II

இந்தக் கால கட்டத்தில் சர்வதேச அளவில் மிகப் பிரபலமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யத் தொடங்கி இந்தியாவின் மிகப் பெரிய உள்நாட்டுச் சந்தையை ஆக்கிரமிக்க ஆரம்பித்தன. பல்வேறு தகவல் தொழில்நுட்ப, இண்டர்நெட் நிறுவனங்களுக்கு இந்தியா இன்று மிகப்பெரும் எண்ணிக்கையில் பயனாளிகளை வழங்கும் நாடாக உள்ளது.

கால கட்டம் III

இந்தக் காலகட்டம் என்பது தற்போதைய நிகழ்காலமாகும். புதிதாக தொழில் தொடங்கும் ஸ்டார்ட் அப்புகள் மூலம் புதிய கண்டு பிடிப்புகளிலும் தொழில் முனைதலிலும் அளப்பரிய வளர்ச்சி ஏற்பட்டு வருவதை நாம் கவனித்து வருகிறோம். இந்த ஸ்டார்ட் அப்புகளில் பெரும்பாலானவை இளைஞர்களால் தொடங்கப்படுகின்றன. அதே சமயம் இவைகளுக்கு ஊக்கம் தரும் நமது அரசின் முயற்சிகள் நல்ல பலனைத் திரும்ப வழங்க ஆரம்பித்துள்ளன. மிக அதிகமான எண்ணிக்கையில் ஸ்டார்ட்அப் ஆரம்பிக்க உகந்த சூழல் உள்ள நாடுகளில் மூன்றாவது இடத்தை இன்று இந்தியாவானது பெற்றுள்ளது. இந்தியாவின் துடிப்புமிக்க ஐடி தொழிலானது மிக வேகமாக வளர்ந்து வருகிறது.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு தொடக்க நடவடிக்கைகள்

டிஜிட்டல் முறையில் அடையாளம் வழங்குதல், டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல். சேவைகளை டிஜிட்டல் முறையில் அளித்தல், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவு வாய்ப்புகளை அதிகரித்தல் ஆகியவற்றுக்காக இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றின் காரணமாக டிஜிட்டல் அதிகாரம் பெற்ற சமுதாயத்தைக் கொண்ட நாடாக இந்தியா உருமாறியுள்ளது. அதே சமயம் குடிமக்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தையும் இது கொண்டு வந்துள்ளது.

டிஜிட்டல் முறையிலான அடையாளம்

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் உள்ளுறை ஆற்றலாகவும் அதை அணுகுவதற்கான வாயிலாகவும் இருப்பது டிஜிட்டல் அடையாளமே ஆகும். தனிப்பட்ட டிஜிட்டல் அடையாளங்களை வழங்குவதற்காக நாட்டில் உள்ள சுமார் 122 கோடி மக்களுக்கு ஆதார் அடையாளம் வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு சமூக நலத்திட்டங்களின் பலன்களைப் பெறுவதற்காக தனிநபர்களுக்கு அவர்களின் உடல்தோற்ற அடையாளங்களோடு டிஜிட்டல் அடையாளத்தையும் ஆதார் அட்டையானது வழங்குகிறது. மேலும் எங்கிருந்தாலும் எந்த இடத்திற்குச் சென்றாலும் கிடைக்கக் கூடியதாக இது உள்ளது. பொதுமக்களுக்கான நல்வாழ்வுப் பலன்களை அளிப்பதில் ஊழல் செய்வதையோ அல்லது குறைபாடு ஏற்படுவதையோ இந்த அடையாளமானது தடுக்கிறது. இன்று ஆதார் அடிப்படையிலான நேரடிப் பலன்கள் பரிமாற்றத் திட்டத்தைப் பயன்படுத்தி 434 அரசு சேவைகளின் நிதிசார் பலன்கள் பயனாளிகளுக்கு நேரடியாக வழங்கப்படுகின்றன.

ஆதார் குறித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில் உச்சநீதிமன்றம் ஆதாருக்கான அரசியல் சட்ட உத்திரவாதத்தை உறுதி செய்துள்ளதோடு, ஆதார் அட்டை என்பது ஏழை மக்கள் அதிகாரம் பெறுவதற்கான ஒரு கருவி என்றும் விவரித்துள்ளது.

டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதிகள்

தேவையான அளவு டிஜிட்டல் உள்கட்டைமைப்பு வசதிகளை உருவாக்குவதே டிஜிட்டல் இந்தியாவின் வெற்றிக்கு மிகவும் இன்றியமையாததாகும்.

  • பாரத் நெட் இந்தியாவில் உள்ள 2.50 இலட்சம் கிராமப் பஞ்சாயத்துகளையும் கண்ணாடி ஒளி இழைக் கட்டமைப்பு வழியாக இணைப்பதன் மூலம் இந்தியாவின் ஊரகப் பகுதிகளில் அதிவிரைவு இணைய வசதிகளை வழங்குவதே பாரத் நெட்டின் நோக்கம் ஆகும்.

தேசிய அறிவு நெட்வொர்க் (NKN)

கல்வி நிலையங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு இடையில் ஒருங்கிணைப்பையும், அறிவுப் பகிர்தலையும் மேம்படுத்துகின்ற ஒரு நவீன நெட்வொர்க்காக தேசிய அறிவு நெட்வொர்க் (NKN) இருக்கிறது. மெய்நிகர் வகுப்பறைகள், தேசிய அறிவு நெட்வொர்க் (NKN) மூலமான ஒருங்கிணைப்பு ஆய்வுக்குழுக்கள் (இதனை பயனாளர் குழுவினரால் மட்டுமே பயன்படுத்த முடியும்), என்.டி.எல் (NDL), என்.பி.டீ.இ.எல் (NPTEL), மற்றும் பல்வேறு விநியோக சட்டக அமைப்புகள் (கேன்சர் சட்டகம், மூளை சட்டகம், பருவநிலை மாறுதல் சட்டகம் போன்றவை) தேசிய அறிவு நெட்வொர்க் (NKN) மூலம் செயல்படுத்தப்படும் சில பயன்பாடுகள் ஆகும். அக்டோபர் 2018 அன்றுள்ளபடி, கல்வி நிலையங்களுக்கு 1672 இணைப்புகள் (Edge Links) நிறுவப்பட்டு, நாடு முழுவதும் உள்ள தேசிய அறிவு நெட்வொர்க் (NKN) வாயிலாக இவை செயல்படத் தொடங்கியுள்ளன. இதில் NMEICT- இல் இருந்து தேசிய அறிவு நெட்வொர்க்குக்கு (NKN) இடம் மாற்றம் செய்யப்பட்ட 388 இணைப்புகளும் அடங்கும். என்ஐசி (NIC) மாவட்ட மையங்களோடு 497 மாவட்ட இணைப்புகள் தேசிய அறிவு நெட்வொர்க் (NKN) திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ளன.

ஜிஐ கிளவுட் (மேக்ராஜ்) [GI Cloud] மேகக்கணினியின் பயன்களைப் பெறவும் அவற்றைப் பயன்படுத்தவும் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. தகவல் பரிமாற்றங்களுக்காக (ICT) அரசு செலவிடுவதைக் கட்டுப்படுத்துவதையும், நாட்டில் மின்னணு சேவைகள் வழங்கப்படுவதை விரைவுபடுத்துவதையும் இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. உள்கட்டமைப்பு வசதிகள் சரியான அளவில் பயன்படுத்தப்படுவதை இது உறுதி செய்கிறது. வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கு மின்னணு அரசாங்கப் (eGov) பயன்பாடுகளை செயல்படவும் வைக்கிறது.

மின்னணு கையெழுத்து (eSign)

இசைன் என்கிற மின்னணு கையெழுத்துச் சேவையானது மின்னணு ஆவணங்களில் எளிதாகவும், திறம்படவும், பாதுகாப்பாகவும் கையெழுத்திட உதவுகின்ற ஒரு புதுமையான, அடிப்படை நடவடிக்கையாகும். உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்து கொள்ளுங்கள் (e-KYC) எனும் சேவையைப் பயன்படுத்தி கையெழுத்திடும் நபருக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. வழங்குகின்ற சேவைகளை மேலும் மேம்படுத்தக்கூடிய சில பயன்பாடுகளாக டிஜிட்டல் லாக்கர், நிதிசார் பிரிவில் இஃபைலிங், வங்கிகளில் மற்றும் அஞ்சல் நிலையங்களில் கணக்கு தொடங்குதல், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், வாகனப் பதிவு, பிறப்புச் சான்றிதழ், சாதி மற்றும் திருமணச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் முதலானவற்றைக் குறிப்பிடலாம். இதற்காக "இசைன்' வழங்குகின்ற 5 சேவையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை 5.89 கோடிக்கும் அதிகமாக இசைன்கள் வழங்கப்பட்டுள்ளன.

சிறப்பான அரசு நிர்வாகத்துக்கு டிஜிட்டல் இந்தியா

நேரடிப் பலன்கள் பரிமாற்றத் திட்டத்திற்கு ஒன்றில் மூன்றான திட்டம் (அனைவருக்கும் வங்கிக் கணக்கு ஆதார் மொபைல் ஃபோன்). (DBT) 32.94 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள், 121 கோடி மொபைல் ஃபோன்கள் மற்றும் 12 கோடி ஆதார் மூலமான டிஜிட்டல் அடையாளம் ஆகியவற்றின் சங்கமமானது ஏழை மக்கள் தங்களுக்கு உரிய பலன்களை நேரடியாக தங்களது வங்கிக் கணக்குகளில் பெற உதவி செய்துள்ளது.

434 அரசுத் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் நிதி உதவிகள், நேரடிப் பலன்கள் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் இவர்களுக்குத் தரப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் ரூ.5.09 இலட்சம் கோடி தொகையானது பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளது. இதனால் ரூ.90,000 கோடி மிச்சமாகியுள்ளது. இது சேவை விநியோகிக்கப்படும் முறையைத் திறனுடையதாக செய்திருப்பதோடு, இடையில் நடக்கும் கையாடல்களையும் தடுத்திருக்கிறது. ஊழலை ஒழித்திருக்கிறது.

டிஜிட்டல் பட்டுவாடா

டிஜிட்டல் பட்டுவாடா செய்வதற்கான சூழல்சார் அமைப்பின் வளர்ச்சியானது பொருளாதாரத்தையே உருமாற்றம் செய்துவருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் டிஜிட்டல் பட்டுவாடா பரிவர்த்தனைகள் பல மடங்கு அதிகரித்துள்ளன. 2014 - 15ஆம் ஆண்டில் 316 கோடி பரிவர்த்தனைகள் என்று இருந்த எண்ணிக்கை 2017-18இல் 2071 கோடி பரிவர்த்தனைகள் என்று அதிகரித்துள்ளது. பீம்யுபிஐ (ஒருங்கிணைந்த பட்டுவாடா இடைமுகம்) பிளாட்பார்ம் மற்றும் ரூபே அட்டைகள் இன்று பிரபலமான டிஜிட்டல் பட்டுவாடா உபகரணங்களாக விளங்குகின்றன. பணம் அனுப்புவதற்கு, பணம் பெறுவதற்கு மற்றும் பணம் செலுத்த பீம்செயலி பயன்படுத்தப்படுகிறது. செப்டம்பர், 2018இல் ரூ.74,978 கோடி மதிப்பு கொண்ட 48 கோடி பரிவர்த்தனைகள் பீம்யுபிஐ மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பீம்யுபிஐ என்பது இந்தியாவின் தனிப்பட்ட மொபைல் ஃபோன் அடிப்படையிலான புத்தாக்க முயற்சி ஆகும். இந்த முயற்சியானது உலகம் முழுவதும் பாராட்டைப் பெற்றுள்ளது.

உமாங் (UMANG)

பொதுமக்களின் கைகளில் நிர்வாகத்தின் அதிகாரத்தை உமாங் வழங்கியுள்ளது. இது ஒரு மொபைல் ஃபோன் செயலி ஆகும். இந்தச் செயலி 307 அரசாங்கச் சேவைகளை வழங்குகிறது. ஒரே மொபைல் ஃபோன் செயலியில் 1200 டிஜிட்டல் சேவைகளுக்கும் அதிகமான சேவைகளை வழங்கவேண்டும் என்பதே இதன் இலக்காகும். அரசாங்கச் சேவைகளைப் பெற பல்வேறு வலைத்தளங்களைத் தேடிக் கொண்டிருப்பதற்கு பதிலாக இப்போது குடிமக்கள் இந்த ஒரே ஒரு மொபைல் செயலியைப் பயன்படுத்தினால் போதுமானதாகும். இந்தச் செயலியை 13 மொழிகளில் பயன்படுத்திக் கொள்ளமுடியும்.

சேவைகளை டிஜிட்டல் முறையில் வழங்குதல்

சேவைகளை டிஜிட்டல் முறையில் வழங்குதல் என்பது தற்போது பரவலாகி வருகிறது. இதற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ள போர்ட்டல் அல்லது உமாங் மொபைல் செயலி மூலம் சாதாரண மக்களுக்கும் டிஜிட்டல் சேவைகள் கிடைக்கின்றன. பிரபலமான டிஜிட்டல் சேவைகளில் ஒரு சில இங்கே தரப்படுகின்றன:

  • தேசிய கல்வி உதவித்தொகை போர்ட்டல் என்பது மாணவர்களின் அனைத்து கல்வி உதவித்தொகை தேவைகளுக்குமான ஒரே இடமாக மாறியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இந்தப் போர்ட்டலில் 1.08 கோடி மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். ரூ.5,295 கோடி மதிப்பிலான உதவித்தொகைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
  • ஆதார் டிஜிட்டல் அடையாளம் மூலம் ஓய்வூதியதாரர்கள் சரிபார்ப்பை எளிதாக்க ஜீவன் பிரமான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • மருத்துவர்களை நோயாளிகள் எளிதில் சந்திக்க முடிவதை உறுதிப் படுத்தும் வகையில் இஹாஸ் பிட்டல் மற்றும் ஆன்லைன் பதிவுச் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தச் சேவை 318 மருத்துவமனைகளில் நிறுவப்பட்டுள்ளது.
  • மண் வள அட்டை: மண்ணின் வளம் குறித்த தகவலை மின்னணு முறையில் வழங்குவதற்காக 2015ஆம் ஆண்டில் தேசிய மண் வள அட்டைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
  • இநாம் (eNAM): மின்னணு தேசிய விவசாயச் சந்தை (இநாம்) என்பது இந்தியா முழுவதற்குமான மின்னணு வியாபார போர்ட்டல் ஆகும். இந்தப் போர்ட்டலில் தற்போது செயல்பட்டுவரும் வேளாண் விளைபொருள் சந்தைக் குழுக்களின் (APMC) மண்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. விவசாய விளை பொருள்களுக்கு நாடு முழுவதும் சீரான ஒரே சந்தையை உருவாக்குவதுவே இதன் நோக்கமாகும்.

டிஜி லாக்கர்

அரசாங்கத்தின் சேவை ஒன்றைப் பெறுவதற்கு எந்த ஒரு சான்றிதழையும் கையோடு எடுத்துச் செல்ல வேண்டிய தேவை இல்லாமல் மாற்றப்பட்டுள்ளது. இதில் 1.57 கோடி பதிவு பெற்ற பயனாளிகள் உள்ளனர். 68 வழங்குபவர்கள், 27 கோருபவர்கள் உள்ளனர். டிஜி லாக்கர் என்ற ஒற்றை பிளாட்ஃபாரத்தில் 336 கோடிக்கும் அதிகமான சான்றிதழ்கள் டிஜிட்டல் வடிவத்தில் சேமிக்கப்பட்டுள்ளன. டிஜி லாக்கரில் பான்கார்டு, ஓட்டுநர் உரிமம், ஆதார் முதலான மிக முக்கிய ஆவணங்கள் பலவற்றை டிஜிட்டல் வடிவத்தில் சேமித்து வைக்கமுடியும்.

இவிசா (eVisa)

இவிசா சேவைகள் என்பது இடைத்தரகர் / ஏஜென்ட் போன்றவர்களின் இடையீடு ஏதும் இல்லாமல் ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கக் கூடிய வசதிகளைத் தருபவை ஆகும். 163 நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா வாசிகளுக்கு 24 விமான நிலையங்கள் மற்றும் 5 துறைமுகங்களில் இடூரிஸ்ட் விசா திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இ நீதிமன்றங்கள் (eCourts)

இ நீதிமன்றங்கள் செயலி மற்றும் போர்ட்டல் மூலம் இந்தியா முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் நடக்கும் வழக்குகளின் தற்போதைய நிலைமை குறித்து தடம் அறிந்து கொள்ளமுடியும். தங்களது வழக்குகள் குறித்த அறிவிப்புகளை வழக்கறிஞர்களும் வழக்கு தொடுத்தவர்களும் பெற முடியும்.

தேசிய நீதித்துறை தரவு விநியோகச் சட்டகம்

9.16 கோடி நீதிமன்ற வழக்குகள் மற்றும் 5.63 கோடி நீதிமன்றத் தீர்ப்புகள் என விரிவான தரவுத்தொகுப்பாக இது உள்ளது. இந்தத் தரவுத்தொகுப்பு இ நீதிமன்றங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் பதிவாகின்ற சிவில் மற்றும் குற்ற வழக்குகள், நிலுவையில் உள்ள வழக்குகள், தீர்த்து வைக்கப்பட்ட வழக்குகள் ஆகியவை குறித்த தகவலை இது வழங்குகிறது.

ஜெம் (GeM)

அரசாங்க இசந்தை (GeM) என்பது அரசு மேற்கொள்ளும் கொள்முதல்களுக்கான வெளிப்படையான ஆன்லைன் சந்தை இடமாகும். 29,812 கொள்முதல் செய்யும் நிறுவனங்கள், 1,55,821 விற்பனையாளர் சேவை வழங்குபவர்கள் மற்றும் 6,01,749 சரக்குகள் இந்த ஜெம்மில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது அரசாங்கக் கொள்முதல்களில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதோடு குறு, சிறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் அரசுத்துறைகளுக்கு தங்களது பொருள்களை விற்பனை செய்வதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கித் தருகிறது.

வீட்டிற்கு அருகிலேயே டிஜிட்டல் சேவை கிடைத்தல் (பொது சேவைகள் மையம்)

சிக்கனமான செலவில் ஊரகப் பகுதிகளில் டிஜிட்டல் சேவைகள் கிடைக்கச் செய்வதற்காக நாடு முழுவதும் 2.10 இலட்சம் கிராமப்பஞ்சாயத்துகளில் 3.06 இலட்சம் டிஜிட்டல் சேவை விநியோக மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் 12 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி இருப்பதன் மூலமும் ஊரகத் தொழில் முனைவோரை உருவாக்குவதன் மூலமும் சமுதாயத்தின் விளிம்புநிலைப் பிரிவினருக்கு அதிகாரம் அளிக்கச் செய்கிறது. இதில் 61,055 பேர் பெண்கள் ஆவர். இந்த பொதுச்சேவை மையங்கள் ஸ்திரீ ஸ்வாபிமான் (Stree Swabhiman) திட்டத்தைச் செயல்படுத்தவும் செய்கின்றன. ஊரக மக்களிடம் மாதவிடாய் கால ஆரோக்கியம் மற்றும் சுத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுவே இதன் முக்கிய நோக்கம் ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ் ஊரகப்பகுதிகளில் 300க்கும் அதிகமான சானிட்டரி பேட் உற்பத்திப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த உற்பத்திப் பிரிவுகள் ஊரகப் பகுதிகளில் உள்ள பெண்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கித் தருவதோடு குறைந்த செலவில் சானிட்டரி பேட்கள் அவர்கள் வசிக்கும் இடத்திலேயே கிடைக்கவும் வழி செய்கின்றன.

நாட்டு மக்களுக்கு டிஜிட்டல் அறிவூட்டல்

நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் ஒருவருக்காவது மின்னணு கல்வியறிவு தருதல் என்ற குறிக்கோளுடன் என்.டி.எல்.எம் (NDLM) மற்றும் திஷா (DISHA) என்ற பெயரிலான இரண்டு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு திட்டங்களின் மூலம் நம் நாட்டில் இதுவரை 53.7 இலட்சம் நபர்கள் மின்னணு - கல்வி அறிவுக்கான பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றுள்ளனர். முந்தைய திட்டங்களைப் போலவே தற்போது அரசு “பிரதம மந்திரி கிராம டிஜிட்டல் சக்ஸ்சர்த அபியான்” (PMGDISHA) என்ற புதிய திட்டத்துக்காக அனுமதி அளித்துள்ளது. இதன் நோக்கம் ஊரகப்பகுதிகளில் உள்ள 6 கோடி வீடுகளுக்கு டிஜிட்டல்- கல்வி அறிவைக் கொண்டு செல்வதே ஆகும். இந்த பிரதம மந்திரி கிராம் டிஜிட்டல் சக்ஸ்சர்த அபியான்” (PMGDISHA) திட்டத்தில் இதுவரை 1.47 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். இதில் 1.43 கோடி பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 74.5 இலட்சம் பேர் சான்றிதழ் பெற்றுள்ளனர். உலகிலேயே மிகப் பெரிய மின்னணுகல்வி அறிவு இயக்கமாக இது விளங்குகிறது.

சிறு நகரங்களில் பிபீஓ(BPO) தொழிலை மேம்படுத்துதல்

உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஐடி சார்ந்த சேவைகள் பிரிவின் கீழ் (IT/ITES) ஒவ்வொரு மாநிலத்திலும் பிராந்திய வளர்ச்சியை சமநிலையில் பராமரிக்கவும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பிபீஓ மேம்பாட்டுத் திட்டம் மற்றும் வடகிழக்கு பிபிஓ மேம்பாட்டுத்திட்டம் என்ற இரண்டு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் 20 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் சுமார் 100 சிறு நகரங்களில் 230க்கும் அதிகமான பிபிஓக்கள் இன்று உருவாகியுள்ளன. விசாகப்பட்டினம், பீமாவரம், ஜம்மு, சோப்போர், சிம்லா, பாட்னா, முஜாபர்பூர், சாகர், நாசிக், நாக்பூர், சங்கிலி, அவுரங்காபாத், ஜெய்ப்பூர், அமிர்தசரஸ், குவாலியர், கோயம்புத்தூர், மதுரை, ஆரோவில், பேரெய்லி, லக்னெள, கான்பூர், கௌஹாத்தி, கொஹிமா முதலான இடங்களில் பிபீஓ மேம்பாட்டுத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள் திட்டத்துக்காக டிஜிட்டல் இந்தியா மின்னணு சாதனங்களின் உற்பத்தியை மேம்படுத்துதல்

மின்னணு சாதனங்களின் இறக்குமதியைக் குறைக்கும் நோக்கத்தில் இந்தியாவில் உள்நாட்டு மின்னணு சாதனங்களின் உற்பத்தியை அதிகரிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டுவருகிறது. இந்தியாவில் மொபைல் ஃபோன்கள் மற்றும் உதிரி பாகங்கள் உற்பத்திக்கு உகந்த சூழல்சார் அமைப்பை வலுப்படுத்தவும் விரிவுபடுத்தவும் வளர்ச்சி கட்ட உற்பத்தித் திட்டத்தை அரசு மொபைல் ஃபோன்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. 2014இல் மொபைல் ஃபோன்கள் மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் பிரிவுகள் இரண்டு மட்டுமே இருந்தன. இப்போது 127 தொழில் பிரிவுகள் உள்ளன. மொபைல் ஃபோன் உதிரிபாகங்களுக்கான இறக்குமதி வரி 2016-17இல் 29 சதவிகிதத்தில் இருந்து 12.5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது. 2014-15ஆம் ஆண்டில் 60 மில்லியனாக இருந்த உள்நாட்டு மொபைல் ஃபோன் உற்பத்தி 2017-18ஆம் ஆண்டில் 225 மில்லியனாக அதிகரித்துள்ளது. அரசின் திருத்தப்பட்ட குறிப்பிட்ட ஊக்கத்தொகைத் தொகுப்புத் திட்டத்தின் கீழ் மின்னணு மற்றும் தகவல் தொடர்பியல் அமைச்சகமானது 8 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டு மதிப்பிலான 245 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது. முதலீட்டுக்காக பெறப்பட்ட விண்ணப்பங்களில் 142 விண்ணப்பங்களை அமைச்சகம் அனுமதித்துள்ளது. அனுமதிக்கப்பட்ட நிறுவனங்களில் 74 நிறுவனங்கள் வர்த்தக ரீதியான உற்பத்தியைத் தொடங்கிவிட்டன. இது 4.5 இலட்சத்துக்கும் அதிகமாக வேலைவாய்ப்புகளை (நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள்) உருவாக்கியுள்ளது. நம் நாட்டில் எல்சிடி / எல்இடி டிவி உற்பத்தி செய்யும் சுமார் 35 உற்பத்திப் பிரிவுகள் உள்ளன. மேலும் எல்இடி பொருள்களை 128 தொழிற்சாலைப் பிரிவுகள் உற்பத்தி செய்கின்றன.

உருவாகி வரும் தொழில் நுட்பங்களுக்கான அடிப்படை நடவடிக்கைகள்

இணையம் மூலம் பல கருவிகளை ஒன்றாக இணைத்தல் (InternetThings), உள்முகப்பாதுகாப்பு, அகலப்பரப்பு நெகிழ்வு மின்னணுவியல், அறிவுசார் சொத்துரிமை, பார்வைத்திறன் குறைந்தவர்களுக்கு தொடுதல் மூலமான கிராஃபிக்ஸ், வேளாண் மற்றும் சுற்றுச்சூழல், இஎடிஎம், ஃபின்டெக், மொழித் தொழில்நுட்பம், தானியங்கி மின்னணுவியல், மெய் நிகர் தூண்டல் நிகழ்வு, மருத்துவத் தொழில் நுட்பம், சுகாதாரத் தகவலியல், பிளாக்செயின், கேமிங் மற்றும் அனிமேஷன், பயோமெட்ரிக் முதலான பிரிவுகளில் 20 உயர்திறன் மையங்கள் (CoE) அமைக்கப்பட்டு வருகின்றன.

இணையப் பாதுகாப்பு

நீடித்த வளர்ச்சிக்காக அனைவரையும் உள்ளடக்கும் பாதுகாப்பான, உத்தரவாதமான இணைய வெளியை உருவாக்குவதற்கு சைபர் ஸ்வச்சத கேந்திரம் [Cyber Swachhta Kendra) (பாட்நெட் கிளியரிங் மற்றும் மால்வேர் பரிசோதனை மையம்) அமைக்கப்பட்டுள்ளது. நிதி சார்ந்த தரவுகளையும், இதரத் தரவுகளை பயனாளர்கள் இழக்க நேரிடும் போது அவர்களுக்கு இந்த மையமானது எச்சரிக்கையை அளிக்கும். நிகழ் நேரத்திலேயே பாட்நெட்டுகளை சுத்தப்படுத்தும் வழியையும் இந்த மையம் வழங்குகிறது. 2017ஆம் ஆண்டில் இருந்து தேசிய சைபர் ஒருங்கிணைவு மையமானது செயல்பட ஆரம்பித்துள்ளது.

முன்னுள்ள வழி

21ஆம் நூற்றாண்டில் சர்வதேசப் பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய உந்து சக்தியாக டிஜிட்டல் பொருளாதாரம் உருவாகியுள்ளது. எரிபொருள், சுற்றுச்சூழல் மற்றும் சமத்துவமின்மை உள்ளிட்ட உலகளாவிய வால்களைத் திறம்பட இந்த டிஜிட்டல் பொருளாதார முறை எதிர்கொள்ளும். வர்த்தகர்கள், பணியாளர்கள் மற்றும் குடிமக்கள் ஆகியோர் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடவும் திறனை மேம்படுத்திக் கொள்ளவும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் புதிய வாய்ப்புகளை வழங்குகின்றன.

உலக அளவில் டிஜிட்டல் நுகர்வோர் நிறைந்த முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக இப்போது இந்தியா விளங்குகிறது. டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதிகளை தரநிலை உயர்த்துதல் உள்ளிட்ட டிஜிட்டல் மயமாக்கும் செயல்முறைகளை மேம்படுத்துதல், உறுதிப்படுத்தும் மதிப்பீட்டுக்கான பரிசோதனைகள் மற்றும் தர அளவுகளை உருவாக்குவதற்கான திறன், பொருத்தமான ஊக்க நடவடிக்கைகளுடன் மின்னணு சாதனங்களை உற்பத்தி செய்தலை மேம்படுத்துதல், உருவாகி வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பலன்களைப் பெறுதல், டிஜிட்டல் பட்டுவாடா உள்ளிட்ட இணையப்பாதுகாப்பை வலுப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் பொருளாதாரத்தில் ஊடுருவுகின்றன. இதனால் 2025ஆம் ஆண்டுக்குள் டிரில்லியன் டாலர் டிஜிட்டல் பொருளாதாரம் உருவாகும் வாய்ப்பு உள்ளது.

இந்தியாவில் டிஜிட்டல் கதை என்பது டிஜிட்டல் ரீதியில் அதிகாரம் அளித்தல், அனைவரையும் உள்ளடக்குதல் ஆகியவற்றின் கதையாகும். செலவு குறைந்த, அனைவரையும் உள்ளடக்கி சமவாய்ப்பு அளிக்கும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ஏற்படும் டிஜிட்டல் உருமாற்றத்தின் கதையாகும். தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் எதிர்காலத்திற்கான வழிகளை டிஜிட்டல் இந்தியா திட்டம் உருவாக்கித் தருகிறது. 2025ஆம் ஆண்டில் நமது டிஜிட்டல் பொருளாதாரம் டிரில்லியன் டாலர் என்ற உயர் அளவை அடைவதற்கான வழிகளை இந்தத் திட்டம் ஏற்படுத்தித் தருகிறது.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

Filed under:
2.90625
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top