பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / டிஜிட்டல் இந்தியா / மின்னனு இந்தியா – வளர்ச்சியை மாற்றியமைத்தல்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மின்னனு இந்தியா – வளர்ச்சியை மாற்றியமைத்தல்

இந்தியாவில் மின்னனு புரட்சி சார்ந்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

எத்தனையோ சமூக, பொருளாதார புரட்சிகளுக்கு வரலாறு சாட்சியமாக இருந்து வந்துள்ளது. வேளாண்மையில் இருந்து தொடங்கி தொழில் துறையைச் சென்றடைந்து, தற்போது மின்னணு புரட்சி வரை எட்டிப்பிடித்து, மனித குலத்தின் முகத்தையே இணையப் புரட்சி மாற்றியமைத்துள்ளது. இப்போது, இணையப் புரட்சியானது வளர்ச்சி என்பதை மறு வரையறை செய்து சமூகம், பண்பாடு, வாழ்க்கைமுறை ஆகியவற்றின் வளர்ச்சி வேகத்தை முடுக்கிவிடும் கணக்கற்ற புதுப்புது வழிகளை ஏற்படுத்தித் தந்துள்ளது.

மின்னணு புரட்சி ஒரு நூதன நிகழ்வாக நீண்ட காலத்திற்கு முன்பே துடிப்புடன் ஆரம்பித்தது. ஆனால், அதன் வேகம் படிப்படியாக அதிகரித்தது. இதனால் உருவான மாற்றங்கள் கண்ணுக்குப் புலப்படாத அளவிற்கு மிகவும் நுட்பமானவையாக இருந்தன. ஆரம்ப காலத்தில் மின்னணு முன்முயற்சிகள் பதிவேடுகளைப் பாதுகாப்பதற்காகவும், அலுவலக நிர்வாகத்திற்காகவும், தரவுகளை ஆராயவும் மேற்கொள்ளப்பட்டன. கடந்த சில ஆண்டுகளாக மின்னணுப் புரட்சி பல்வேறு வாய்ப்புகளுக்கான மூலங்களைக் கண்டறிந்து வளர்ச்சிக்கான வழிமுறைகளை மறுவரையறை செய்திருக்கிறது. இணையத்தில் தொடங்கி செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் வரையிலும் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சிகள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சமூக, பொருளாதார சீரமைப்புகளுக்கான வாய்ப்புகளை வழங்கியுள்ளன. இதனால், இந்தியா உலகில் பொருளாதார வளர்ச்சியை மிக விரைவாகக் கண்டுவரும் நாடாக ஆக முடிந்தது. தொடர்புகளை மேம்படுத்தும் சீர்மிகு தொழில்நுட்பங்கள், தொழில்கள், அரசாங்கம், சமூகம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக மாறியது. மக்கள் ஒருவரோடு ஒருவர் இடைவினைகளை மேற்கொள்வதிலும், தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதிலும், எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதிலும் நலவாழ்வையும், நிதியையும் நிர்வகிப்பதிலும் மிகுதியான தாக்கத்தை இது ஏற்படுத்தியது.

தகவல் தொழில்நுட்பப் புரட்சி

இந்தியப் பொருளாதாரத்திற்கு மிகப் பெரிய முன்னோக்கிய பாய்ச்சலை வழங்கியது. வேலைவாய்ப்பு உருவாக்கத்திலும், வருவாய்ப் பெருக்கத்திலும் இந்திய இளைஞர்களுக்கு ஒரு மாபெரும் வரமாக அமைந்தது. உலக அளவில் ஆற்றல் மிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிவதற்காக பல்வேறு இடங்களுக்குச் செல்லவும், இந்தியாவிற்குத் திரும்பி வந்து தொழில்கள் தொடங்கவும், புதுமையாக்கங்களுக்கும் மின்னணுப் புரட்சி துணை செய்தது.

மின்னணுப் புரட்சி

தற்போது சாதாரண பொது மனிதர்களோடு தொடர்புடைய பல பகுதிகளைத் தொட்டிருக்கிறது. இதற்கு முக்கியமான உதாரணமாக கைபேசிப் புரட்சியைக் கூறலாம். ரிக்ஷாக்காரர், மாணவர்கள், குடும்பத்தலைவியர் தொடங்கி, தொழில் அதிபர் வரையிலும் அநேகமாக ஒவ்வொரு இந்தியக் குடிமகனிடத்திலும் கைபேசிகள் இருக்கின்றன. இணையம் வாயிலாக பலவிதமான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. முன்பு நேரில் சென்று வரிசையில் நின்று பெற்றுவந்த பல சேவைகளை இணையம் வழியாக இருந்த இடத்தில் இருந்தபடியே பெற்றுக்கொள்ள முடிகிறது. கடவுச்சீட்டு, விசா சேவைகள், ரயில்வே முன்பதிவுகள், வங்கிகளில் இருந்து பணம் எடுப்பது ஆகிய அனைத்தும் இணையத்தின் வழியாக எளிதில் நடக்கிறது. அரசாங்கம் பல திட்டங்களை இதன் மூலம் அறிமுகம் செய்துவருகிறது. நேரடி பணப்பரிமாற்றத்திட்டம் போன்ற அரசின் சேவைகள் பலவற்றை நெறிப்படுத்துவதற்கு ஆதார் திட்டம் மிகப் பெரிய முன்னெடுப்பு ஆகும். பீம் செயலி, ரூபே அட்டைகள் போன்றவற்றின் மூலம் மின்னணு பணப்பரிமாற்றம் செய்யமுடிகிறது. ஆவணங்களில் மின் ஒப்பம் இடுவதற்கான வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஜீவன் பிரமான் மூலம் வயதானவர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கான வாழ்நாள் சான்றிதழை மிக எளிதாக சமர்ப்பிக்க முடிகிறது. பொதுச்சேவை மையங்கள், மின்னணு வகுப்பறைகள், இணைய மருத்துவமனைகள் ஆகியவற்றை உள்ளடங்கிய கிராமப்பகுதிகளில் இருப்பவர்களும் எளிதில் அணுக முடிகிறது.

தொடர்ந்து நடைபெற்று வரும் மின்னணு புரட்சிகள் ஒவ்வொரு வணிகத்திலும், தொழிலிலும் ஆழமாக ஊடுருவி இருக்கிறது. மற்ற எந்த தொழில் நுட்பங்களையும் போலவே இதிலும் பொய்யான உள்ளடக்கங்களும், இணைய ஏமாற்றுகளும் நடைபெறவே செய்கின்றன. வங்கித்துறையிலும், காப்பீட்டுத் துறையிலும் இது போன்ற ஏமாற்றுகளைத் தடுக்கும் பாதுகாப்பு வழிமுறைகளைக் கொண்டுவருவதற்கு அரசு முயற்சிகள் பலவற்றை மேற்கொண்டு வருகிறது. மின்னணு மயமாக்கல் பயணமானது, அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி, உலகப்பொருளாதார சக்தியாக இந்தியாவை மாற்றுவது ஆகியவற்றை இலக்காகக் கொண்டுள்ளது. சாதாரண பொதுமனிதனின் வாழ்க்கையை அனைத்து வகைகளிலும் மின்னணு புரட்சி தொட்டுள்ளது. மனித அனுபவத்தை முழுமையாக மறு வரையறை செய்துள்ளது. வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது. வாழ்க்கையை மேம்படுத்தி வளப்படுத்தி இருக்கிறது. குடிமக்கள் தரப்பில் பொறுப்புணர்வும், நிறுவனங்களின் சார்பாக மின்னணு ஆற்றல் திறமும் இணைவது தேவையாக இருக்கிறது. அப்போதுதான் டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்காக செலவிடுவதைக் காட்டிலும் அதிகமான ஆதாயங்கள் தேசத்திற்குக் கிடைக்கும்.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

Filed under:
2.875
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top