অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

வாழ்க்கைத் தரத்தை வளப்படுத்தும் அகண்ட அலைவரிசை

வாழ்க்கைத் தரத்தை வளப்படுத்தும் அகண்ட அலைவரிசை

அறிமுகம்

உலகெங்கிலும் கடந்த பத்தாண்டுகளில் நிகழ்ந்து வரும் தொலைத் தொடர்புப் புரட்சி பூகோளரீதியாக நாடுகளின் எல்லைகளை விரிவுபடுத்தி உலகை ஒன்றுபடுத்தியிருக்கிறது. ஆண்டாண்டு காலமாக மாவீரன் அலெக்சாண்டர் முதல் சதாம் ஹுசைன் வரை பிற, நாடுகளை கைப்பற்றவும், தத்தம் தாய் நாடுகளின் எல்லைகளை விரிவுபடுத்தவும் பேரரசுகளை உருவாக்கவும் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி கண்டு உலக இல்லங்களை ஒன்றுபடுத்தியிருக்கிறது.

கணினித் தொழில்நுட்பமும், தொலைத் தொடர்புத் தொழில் நுட்பமும் கைகோர்த்து நடைபோடத் துவங்கிய நாள் முதல் தகவல் தொடர்பு சாதனங்கள் குக்கிராமங்களுக்கும் தொலை தூரப் பகுதிகளுக்கும் போய்ச் சேரத்துவங்கிவிட்டன. தொலைக் கல்வி, தொலை மருத்துவம், தொலை ஆட்சி நிர்வாகம் என்று தொலைத் தொடர்பு மூலமாக அனைத்து சேவைகளும் குடிமக்களின் இல்லங்களின் வரவேற்பு அறைகளுக்கே செல்லும் நாள் இது.

இணைய சேவைகள்

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வாழ்க்கைத் தர மேம்பாட்டிற்கும் இணையமும், அது சார்ந்த சேவைகளும் பெருமளவில் உதவுகின்றன, இணைய தளம் தோன்றிய நாள் முதல் இன்று வரை தொழில் நுட்ப புரட்சி காரணமாக இத்துறையில் மாபெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தாராளமயமாக்கல், உலக மயமாக்கல் மற்றும் தன்னிறைவு ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டு விளங்கும் இந்திய நாட்டின் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி இம் மாற்றங்களை ஒதுக்கித் தள்ளிவிட இயலாது.

அகண்ட அலைவரிசை

இணையம் மற்றும் கணினிகளின் பெருக்கத்தை அடிப்படையாகக் கொண்டே அகண்ட அலை வரிசைக்கான தேவை ஏற்பட்டுள்ளது. பல்வேறு ஆசிய நாடுகளோடு ஒப்பிட்டு பார்க்கையில் இந்தியாவில் அகண்ட அலை வரிசைக்கான வசதிகள் மிகவும் குறைவாகவே உள்ளன. அகண்ட அலைவரிசையின் வெற்றி நாட்டில் இணைய சேவைகளின் பயன்பாட்டுப் பெருக்கத்தையும், கணினிகளின் பெருக்கத்தையும் பொறுத்தே அமையும்

கண்ணாடி இழை தொழில் நுட்பம்

அகண்ட அலை வரிசைக் கொள்கையின் படி தற்போது கிடைக்கப் பெறும் பல்வேறு தொழில் நுட்பங்கள் ஒன்றுக் கொன்று இணைந்து செயல்படலாம். இத்தகைய கட்டமைப்பு உருவாகும் போது தொழில் நுட்பங்களுக்கும், சேவை நிறுவனங்களுக்கும் மத்தியில் ஆரோக்கியமான போட்டி நிலவ வேண்டும் என்று அரசு விரும்புகிறது. எந்த சூழ்நிலையிலும் அகண்ட அலைவரிசைத் தொழில் நுட்பங்கள் நாட்டின் தொலைத் தொடர்பு கட்டமைப்பு வளர்ச்சியை பாதிக்க அனுமதிக்கப்படாது.

தாமிரத்தை கொண்டு அமைக்கப்படும் கட்டமைப்பை விட கண்ணாடி இழை கொண்டு அமைக்கப்படும் கட்டமைப்பு அளவற்ற அலை வரிசை வசதிகளை வழங்குவதால் நகரத்திற்குள்ளே அமைக்கப்படும் கட்டமைப்பிற்கு பெரிதும் உதவுகிறது. பெருநகரங்களிலும் அதிக எண்ணிக்கையிலான அகண்ட அலைவரிசை வாடிக்கையாளர்களை கொண்ட பகுதிகளிலும் கண்ணாடி இழை தொழில்நுட்பம் பெரிதும் உதவக்கூடும். இத்தொழில் நுட்பத்தில் கிட்டும் வசதிகள் வாடிக்கையாளர்களின் இல்லம் வரை அதிநவீன சேவைகளை கொண்டு சேர்க்க உதவுகின்றன. மிக உயர் தரத்திலான ஒலி, தகவல், காட்சி ஆகியவற்றை இந்த தொழில் நுட்பம் வழங்குகிறது.

வர்த்தக ரீதியாக இத் தொழில்நுட்பத்தின் செலவீனம் குறைந்து வருவதால் கண்ணாடி இழை கட்டமைப்பு நீண்டகால அடிப்படையில் அகண்ட அலைவரிசையின் விரிவாக்கத்திற்கு பெரிதும் உதவும்.

டிஜிட்டல் தொடர்புகள் - தாமிர வளையம் வாயிலான அகண்ட அலை வரிசை சேவைகளை வழங்கும் டி.எஸ்.எல். எனப்படும் டிஜிட்டல் வாடிக்கையாளர் தொடர்புகள் மற்றுமொரு முக்கிய தொழில்நுட்பமாகும். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அகண்ட அலைவரிசை சேவைகளை நாடெங்கும் விரிவுபடுத்துவதில் அரசு துறை நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் பெரும் பங்கு வகிக்க வேண்டுமென்று அரசு வெளியிட்டுள்ள அகண்ட அலைவரிசைக் கொள்கை வலியுறுத்துகிறது. அகண்ட அலை வரிசை சேவை வழங்குவோர் தங்களுக்குள் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்தி கொண்டு தாமிர வளையம் மூலமான சேவைகளை விரிவுபடுத்துவதற்கு இந்த கொள்கை வழி வகுக்கிறது. ஒரு சேவை வழங்கும் நிறுவனம் எந்த பகுதியில் அகண்ட அலைவரிசை சேவையை வழங்குகிறது என்ற தகவல்களை இணைய தளத்தில் வெளியிட வேண்டும் என்று இந்த கொள்கை வலியுறுத்துகிறது. இத்தகைய வர்த்தக ஒப்பந்தங்களில் நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்திக் கொள்ள, அகண்ட அலை வரிசைக் கொள்கை அனுமதி வழங்குகிறது.

கேபிள் டிவி கட்டமைப்பு

தொலைபேசி கட்டமைப்பை காட்டிலும் கூடுதலான மக்களை சென்றடைய கேபிள் டிவி கட்டமைப்பு உதவும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே கேபிள் டிவி கட்டமைப்பு மூலம் நாட்டில் அகண்ட அலைவரிசை விரிவாக்கத்தை துரிதப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதன் அடிப்படையில் அகண்ட அலை வரிசை வழங்கும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு கேபிள் டிவி சேவை வழங்கும் நிறுவனங்கள் அகண்ட அலை வரிசை சேவைகளை வழங்கலாம். எனினும் அகண்ட அலை வரிசை சேவைக்கான சட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவது உரிமம் பெற்றுள்ள அகண்ட அலை வரிசை சேவை நிறுவனத்தையே சாரும்.

செயற்கைகோள் ஊடகம்

வி - சாட் எனப்படும் மிகச் சிறிய ஊடகங்கள் மற்றும் இல்லத்திற்கே நேரடி சேவை ஆகிய தொழில் நுட்பங்கள் மூலமாக அகண்ட அலைவரிசை இணைய சேவைகளை தொலை தூர மற்றும் எளிதில் அடைய முடியாத பகுதிகளுக்கு கொண்டு சேர்க்கலாம் என்று அரசு கருதுகிறது. நாட்டின் பாதுகாப்புத் தேவைகளை கருத்தில் கொண்டு செயற்கை கோள் மூலமான வி - சாட் சேவைகளை நியாயமான கட்டணத்தில் வழங்க இந்த கொள்கை வழிவகுக்கிறது. சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுடன் ஆலோசனை மேற் கொண்டு வி - சாட் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு திறந்த வான்வெளி கொள்கையை நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்நடவடிக்கையில் விண்வெளி ஆய்வுத் துறையின் பங்கு முக்கியமானதாக இருக்கும்.

எளிய நடைமுறைகள்

வி - சாட் சேவை வழங்குவோர் உரிமங்களுக்காக உரிய ஆவணங்களை சமர்ப்பித்த ஒரு மாத காலத்திற்கு பின் சேவைகளை துவக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. அகண்ட அலை வரிசைக்கான புதிய கொள்கையின்படி தகுதி பெற்ற கட்டடத்தின் மேற்தளத்தில் ஐந்து மீட்டருக்கு அதிகப்படாத இத்தகைய அமைப்புகளுக்கு இந்த சலுகை பொருந்தும்.

அலை வரிசைகளை ஒதுக்குதல், உரிமம் பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை நீக்குதல், தரக்கட்டுப்பாடு ஆகியவற்றை வெளிப்படையான திட்டம் மூலம் உறுதிப்படுத்த இக்கொள்கை வழி வகுக்கிறது. அகண்ட அலைவரிசை சேவைகளில் சர்வதேச அலைவரிசை முக்கிய பங்கு வகிப்பதால் திட்டமிட்ட கால வரையறைக்குள் இதற்கான உரிம கட்டமைப்பை உருவாக்க அரசு முடிவு மேற்கொண்டுள்ளது. முன்னுரிமை அடிப்படையில் அரசும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு படுத்து ஆணையமும் இந் நடவடிக்கையை மேற்கொள்ளும்.

இந்தியாவிலிருந்து செல்லும் மற்றும் இந்தியாவிற்குக்குள் வரும் இணையதள போக்குவரத்தை இந்தியாவிற்குள்ளேயே வழிப்படுத்த இந்திய தேசிய இணைய தள பரிமாற்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இணைய தள சேவைகளை மேம்படுத்தி விரிவுபடுத்துவதில் இந்த அமைப்பு முக்கிய பணியாற்றும்.

இணையம் மற்றும் அகண்ட அலை வரிசை சேவைகளை விரிவுபடுத்துவதில் கணினிகளும், கணினிப் பயன்பாடுகளும் முக்கிய பங்கு வகிப்பதால் கிராம் அளவில் பரந்துபட்ட ஆட்சி நிர்வாகத்தை கொண்டு சேர்க்க அகண்ட அலை வரிசை உதவும். மின் துறையினர், மாநில அரசுகளின் தகவல் தொழில்நுட்பத் துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மற்றும் கல்வித்துறை போன்றவை அகண்ட அலைவரிசையின் மூலம் பெரும் பலன்களை ஈட்ட முடியும்.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

கடைசியாக மாற்றப்பட்டது : 5/6/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate