பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / மாநில தகவல்கள் / தமிழ்நாட்டில் உள்ளாட்சி அரசாங்கம்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அரசாங்கம்

தமிழ்நாட்டின் உள்ளாட்சி அரசாங்கம் (Local Self Government) பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

சிறப்பு அம்சங்கள்

உள்ளாட்சி அரசாங்கத்தின் தந்தை எனப் போற்றப்படும் ரிப்பன் பிரபுவால் அறிமுகம் செய்யப்பட்ட கிராமப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அரசாங்கங்கள் பின்வரும் சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளன.

 1. உள்ளாட்சி அரசாங்கம் நன்றாக வரையறை செய்யப்பட்டுள்ள ஓர் அதிகார எல்லையைப் பெற்றுள்ளது. அது கிராமம் அல்லது மாவட்டம் போன்ற உறுதியானதோர் நிலைவரையைப் பெற்றுள்ளது. அதனுடைய குறிக்கோள், அந்த நிலப்பகுதிக்குள் அல்லது எல்லைக்குள் நிலவும் தனிப்பட்ட தன்மை வாய்ந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதாகும்.
 2. உள்ளாட்சி அரசாங்கம், அவ்வட்டாரத்திற்குள் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளால் ஆட்சி செய்யப்படுகின்றது. அவர்கள் வட்டாரத்து வாக்காளர்களுக்குப் பொறுப்பானவர்கள். மைய மாநில அரசாங்கங்களின் தேவையற்ற தலையீடின்றி வட்டாரத்து அலுவல்களைத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நிர்வாகம் செய்கின்றனர்.
 3. வட்டார மக்களின் தேவைகளை மேம்படச் செய்வது உள்ளாட்சி அரசாங்கத்தின் தலையாயக் கடமையாகும்.
 4. உள்ளாட்சி அரசாங்கம் தனது நிதி நிலை அறிக்கையினை தயாரிப்பதிலும், நிதி ஆதாரங்களைத் திரட்டுவதிலும் சுதந்திரம் பெற்றுள்ளது.

இந்திய அரசியலமைப்பு 1950 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 26ம் நாளன்று நடைமுறைக்கு வந்தது. தொன்மை சுயாட்சி முறையைப் புதுப்பிப்பதற்கென, நமது அரசியலமைப்பு 40ம் அங்கம் “அரசு கிராம பஞ்சாயத்துகளை அமைப்பதற்கும், தன்னாட்சி அமைப்பு கூறுகளாக அவை இயங்குவதற்காக தேவைப்படும் அதிகாரங்களையும் அதிகார அடைவடையும் அவற்றுக்கு வழங்குவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும் என விதித்துள்ளது. இதற்கிணங்க 1956-ல் பல்வந்தராய் மேத்தா குழு அமைக்கப்பட்டது. இக்குழு தனது அறிக்கையை 1957ல் சமர்பித்தது.

பல்வந்தராய் மேத்தாவின் அறிக்கை பஞ்சாயத்து இராச்சிய முறையின் மகா சாசனம் என்று புகழாரம் சூட்டப்பட்டுள்ள அதிகாரப் பரவலாக்கப்பட்டுள்ளது. மக்களாட்சியை உறுதி செய்யும் பொருட்டு மூன்றடுக்கு முறையான கிராமப்புற உள்ளாட்சி அரசாங்கத்தை பல்வந்தராய் மேத்தா குழு பரிந்துரை செய்தது. இம்மூன்று அடுக்கு முறையில் கிராம மட்டத்தில் பஞ்சாயத்தும் வட்டார அளவில் பஞ்சாயத்து சமிதியும் அல்லது பஞ்சாயத்து ஒன்றியமும் மாவட்ட நிலையில் ஜில்லா பரிஷத்தும் (மாவட்ட பஞ்சாயத்து) இடம் பெற்றுள்ளன.

பஞ்சாயத்து இராச்சியம் 1959-ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 2-ம் நாளன்று பண்டிதர் ஜவஹர்லால் நேருவினால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. பஞ்சாயத்து இராச்சிய நிறுவனங்களை அறிமுகம் செய்த முதல் மாநிலங்கள் ஆந்திர பிரதேசமும், ராஜஸ்தானும் ஆகும். மேகாலயா மிஜோரம் மற்றும் நாகலாந்து மாநிலங்களும் ஒன்றிய நிலப்பரப்புகளிலும் பஞ்சாயத்து இராச்சிய நிறுவனங்கள் நிறுவப்பட்டன. இவ்வாறு பஞ்சாயத்து இராச்சியம் ஆரவாரமற்ற துவக்கத்தை மேற்கொண்டது.

1977-ல் அசோக் மேத்தா தலைமையில் பஞ்சாயத்து இராச்சிய நிறுவனத்தின் மீதான ஒரு குழு அரசாங்கத்தால் நியமனம் செய்யப்பட்டது. பஞ்சாயத்து இராச்சிய நிறுவனங்களின் செயல்பாட்டை விசாரிப்பதற்கும் அவைகளை வலிமையாக்குவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆலோசனை வழங்கவும் அது நிறுவப்பட்டது. இக்குழு தனது அறிக்கையை 1978-ல் சமர்பித்தது.

இக்குழுக்களின் அறிக்கைகள், பஞ்சாயத்து இராச்சிய நிறுவனங்களின் மூலமாக ஊரக வளர்ச்சிக்கு முக்கியத்துவத்தை வழங்கின. அவை வளர்ச்சி திட்டங்கள் செயல்படுவதை வலியுறுத்தின. தன்னாட்சி நிறுவனங்களாகப் பஞ்சாயத்துக்களை உருவாக்க அவை முயலவில்லை. மேலும், நகர்ப்புற ஊராட்சி அரசாங்கங்களின் எதிர்கால அக்கறைகளைப் பற்றி பல்வந்தராய் மற்றும் அசோக் மேத்தா குழுக்கள் கவலை கொண்டிருக்கவில்லை. இச்செய்திகளைக் கருத்தில் கொண்டும், கிராமப்புற மற்றும் நகர்ப்புற மட்டங்களில் உண்மையான மக்கள் சக்தியை” நிறுவும் பொறுட்டும், அரசியலமைப்பு 64 மற்றும் 65வது சட்டதிருத்த முன்வரைவுகள் 1989-ல் மக்கள் அவையில் அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இம்மசோதாக்கள் விரிவானவையாகும். தேவையான அதிகாரங்களுடன், ஒரே மாதிரியான அமைப்புகளுடன் அடிமட்ட நிறுவனங்களை சீரமைக்க அவை வழிவகுத்தன.

மக்களவையால் நிறைவேற்றப்பட்ட போதிலும், போதிய பெரும்பான்மை இல்லதாததால் மாநிலங்களின் அவையில் இம்மசோதாக்கள் தோற்கடிக்கப்பட்டன. இத்தகைய சூழ்நிலையில், மாநில அரசாங்கங்களின் நெருக்கமான கட்டுப்பாட்டின் கீழ் இருந்த கிரமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அரசாங்கங்கள், வெற்றிகரமாகச் செயல்பட முடியவில்லை. அவை நிதி வகையிலான இன்னல்களைப் பெற்றிருந்தன. பல ஆண்டுகளாகத் தொடர்ந்து அவைகளுக்குத் தேர்தல்கள் கூட நடத்தப்படவில்லை. இக்குறைகளைச் சரிசெய்யும் பொருட்டு, அரசியலமைப்பு (73-வது மற்றும் 74 வது திருத்தங்கள்) சட்டங்கள் நாடாளுமன்றத்தால் 1992-ல் நிறைவேற்றப்பட்டன. அரசியலமைப்புச் (73வது மற்றும் 74 வது திருத்தங்கள்) சட்டங்கள், 1992 அரசியலமைப்பின் 73-வது மற்றும் 74 வது திருத்தங்கள் 1992-ம் ஆண்டு டிசம்பர் திங்களில் இயற்றப்பட்டன. 1993ஆம் ஆண்டு, ஏப்ரல் திங்கள் 24-ம் நாள் முதல் இத்திருத்தங்கள் நடைமுறைக்கு வந்தன. அவை பஞ்சாயத்துக்களையும், நகராட்சி அமைப்புகளையும் அரசியலமைப்பு முறைமைகளாக்கி உள்ளன.

சுயாட்சி அரசாங்க நிறுவனங்களாகச் செயல்படும் ஆணையுரிமைகளை உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கும் பொருட்டும், 73-வது மற்றும் 74-வது திருத்தங்கள் மாநில சட்டமன்றங்களுக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளன. பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நீதி ஆகியவற்றுக்கான திட்டங்களை தயாரித்தல், அரசியலமைப்பின் 11 மற்றும் 12-வது இணைப்பு பட்டியல்களில் கண்டுள்ள அம்சங்களின் அடிப்படையில் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமுதாய நீதி பற்றிய திட்டங்களை நிறைவேற்றுதல் ஆகிய கடும்பணிகள் அவைகளிடம் ஒப்புடைவு செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விணைப்புப் பட்டியல்கள் ஒரு புறம் மாநிலச் சட்டமன்றங்களுக்கும் மறுபுறம் பஞ்சாயத்துக்கள் மற்றும் நகராட்சி அமைப்புகளுக்கும் இடையே அதிகாரப் பகிர்வினை செய்துள்ளன. 73-வது திருத்ததின் கீழ் 11-வது இணைப்பு பட்டியல் 29 வகை அதிகாரங்களைக் கொண்டுள்ளது. அவற்றின் மீது முழுமையான அதிகாரத்தைப் பஞ்சாயத்துக்கள் பெற்றுள்ளன. 12-வது இணைப்பு பட்டியல் 18 வகை அதிகாரங்களை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கென கொண்டுள்ளது. இவை அவற்றின் சம்பந்தப்பட்ட பணிகளையும் சுட்டி காட்டுகின்றன.

ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கிராம சபைக்கும் மற்றும் கிராமம் பஞ்சாயத்து ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட நிலைகளில் பஞ்சாயத்துகள் அமையப் பெறவும் 73-வது திருத்தம் வகை செய்கின்றது. நகர்பாலிக் சட்டம் என்றும் அறியப்படும் 74வது திருத்தம் மூன்றுவகையான நகராட்சி அமைப்புகள் அமையப்பெறுவதற்கு வகைசெய்கின்றது. அவை, நகர பஞ்சாயத்துக்கள், நகராட்சி மன்றம் மற்றும் மாநகராட்சி மன்றங்கள் என்பவையாகும். ஒரு கிராமப்புற எல்லையிலிருந்து நகர்ப்புற எல்லைக்கு இடம்பெயர்வான பகுதிக்கு ஒரு நகர பஞ்சாயத்து அமைக்கப்படுகிறது. நகராட்சி மன்றங்கள் சிறிய நகர்ப்புறப் பகுதிகளுக்கும் பெரிய நகர்ப்புறப் பகுதிகளுக்கு மாநகராட்சி மன்றங்களும் நிறுவப்படுகின்றன.

சீரான ஐந்தாண்டுப் பதவிக்காலத்துடன் அனைத்து கிராமபுற மற்றும் நகர்ப்புற அமைப்புகளுக்கு நேர்முகத் தேர்தல் நடத்துதல். தாழ்த்தப்பட்ட சாதியாளர், மலைவாழ் குடியினர் பின்தங்கிய வகுப்பினர் ஆகியோருக்கென இடஒதுக்கீடு செய்தல், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மலைவாழ் பழங்குடியினர் மற்றும் பெண்கள் ஆகியோருக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்தல்.

 1. பெண்டிர்களுக்கு மூன்றில் இரண்டு பங்குக்கு குறைவில்லாத இடஒதுக்கீடு செய்தல்.
 2. மேற்சொல்லப்பட்டபடி, தலைவர்களுக்குரிய பதவிகளுக்கு இணையான இடஒதுக்கீடு செய்தல்.
 3. உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல்களை நடத்துவதற்கென ஒரு தேர்தல் ஆணையம் ஏற்படுத்துதல்.
 4. இந்நிறுவனங்களின் நிதி வலிமையை உறுதி செய்யும் பொருட்டு ஒரு நிதி ஆணையம் அமைக்கப்படல், இந்த ஆணையம் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலவரத்தை ஆய்வு செய்தல் வேண்டும்.
 5. உள்ளாட்சி அமைப்புகளின் கணக்குகளைத் தணிக்கை செய்வதற்கென ஏற்பாடு செய்தல்.
 6. ஏதேனும் உள்ளாட்சி அமைப்பு கலைக்கப்படுமேயானால் ஆறுமாத காலத்திற்குள் கட்டாயமாகத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடு செய்தல்.
 7. கட்சி வேட்பாளர்களாக வோ அல்லது சுயேச்சை நபர்களாகவோ உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிடலாம்.

நகர்ப்புற உள்ளாட்சி அரசாங்கங்கள்

நகர்ப்புற அல்லது ஊரக மக்கட்தொகை மிக வேகமாக நம் நாட்டில் பெருகி வருகின்றது. அதன் பிரச்சினைகளும் சிக்கல் மிகுந்தவையாய் உள்ளன. அவைகளைத் நிறைவேற்றும் பொருட்டு, நகர்ப்புற அல்லது ஊரக உள்ளாட்சி அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. இவ்வமைப்புகள் நகராட்சி அமைப்புகள் என்றும் அறியப்படுகின்றன. அமைப்பு, அதிகாரங்கள் மற்றும் பிறவற்றை இந்திய அரசியலமைப்பு உறுதி செய்துள்ளது. அவைகளுடைய பணிகள் 12 வது இணைப்புப்பட்டியலில் கூறப்பட்டுள்ளன. அரசியலமைப்பானது மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் நகரப் பஞ்சாயத்துக்கள் அரசியல் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவை தவிர நகரியங்கள், இராணுவக் கூட வாரியங்கள், குறிக்கப்பட்ட பகுதிகளின் குழுக்கள் போன்ற வேறு சில நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளும் உள்ளன.

மாநகராட்சி

நகராட்சி அமைப்பில் மாநகராட்சி மிக உயர்ந்த வகையைச் சார்ந்ததாகும். மாநாகராட்சி அதிகப்படியான அதிகாரங்களைப் பெற்றுள்ளது. ஏனைய வட்டார அமைப்புகளுடன் ஒப்பிடும்போது, அது விரிவான பணிகளையும், அதிக நிதித்தன்னாட்சியையும் அனுபவிக்கின்றது. மாநிலச் சட்டமன்றத்தால் இயற்றப்படும் சிறப்பு நகராட்சிச் சட்டங்களின் கீழ் மாநகராட்சிகள் பெரிய நகரங்களில் நிறுவப்படுகின்றன. நாடாளுமன்றத்தின் சட்டத்தினால் யூனியன் பிரதேசங்களின் மாநகராட்சிகள் அமைக்கப்படுகின்றன.

சாதாரணமாக 10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மக்கட்தொகையைக் கொண்டுள்ள பெரிய நகரங்கள் மாநகராட்சிகளாக அமைக்கப்படுகின்றன. அவைகளுடைய ஆண்டு வருமானம் பொதுவாக ஒரு கோடியாகும். உதாராணமாக சென்னை, மும்பை, கொல்கத்தா, டில்லி, ஹைதராபாத், பெங்களூர் மாநகராட்சிகள் இந்தியாவின் மிகப் பெரிய மாநகராட்சிகளாய் உள்ளன. அவை அதிக மக்கட்தொகையையும் சீரிய வருவாயையும் பெற்றுள்ளன. எனினும் இரண்டு இலட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகையைக் கொண்டுள்ள நகரங்களிலும் மாநகராட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவைகளின் ஆண்டு வருமானம் ரூ50,000 மேற்படுவதில்லை. சந்தர்ப்பச் சூழலைப் பொறுத்து, மாநகராட்சியை நிறுவ அரசே முடிவெடுக்கும். காலம் மாறும்போது, அதன் முக்கியத்துவம் மாறலாம். சென்னையையும் சேர்த்து, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, தஞ்சாவூர், வேலூர், சேலம் மற்றும் தூத்துக்குடி ஆகிய 12 மாநகராட்சிகள் தமிழ்நாட்டில் உள்ளன.

மாநகராட்சிகள் அனைத்தும் சில பொதுப்படையான சிறப்பம்சங்களைப் பெற்றுள்ளன.

 1. மாநிலச் சட்ட மன்றத்தினால் நிறைவேற்றப்படும் சட்டம் ஒன்றினால்தான் மாநகராட்சியொன்று நிறுவப்படுகின்றது.
 2. மாநகராட்சி நிர்வாகப்பணியால் தனிப்பட்ட அவசியமானப் பணிகளை ஆதாரமாக கொண்டுள்ளது.
 3. மாநில அரசாங்கம் நகராட்சிமன்றத்தை மேற்பார்வை செய்யவும், கட்டுப்படுத்தவும், கலைக்கவும் அதிகாரங்களைப் பெற்றுள்ளது.
 4. பொதுவாக, ஒரு மாநகராட்சி அதிக மக்கட் தொகையைக் கொண்டுள்ள நகர்ப்புறப் பகுதிகளில் அமைக்கப்படுகின்றது.
 5. ஒரு மாநகராட்சி குறிப்பிட்ட அதிகார வரம்பிற்குள் பணியாற்றுகின்றது.

மாநகராட்சி பணிகள்

கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளைப் போன்று நகராட்சி அமைப்புகள் சுயாட்சி அரசாங்க நிறுவனங்களாகச் செயல்பட வேண்டி உள்ளன. பொருளாதார மேம்பாடு மற்றும் சமுதாய நீதி ஆகியவற்றுக்கான திட்டங்களைத் தயாரிக்கும் பொறுப்பினை அவை பெற்றுள்ளன. பன்னிரண்டாவது இணைப்புப் பட்டியலில் குறிப்பிட்டுள்ள 18 அம்சங்கள் குறித்து பணிகளை மேற்கொள்வதோடு, செயல் திட்டங்களையும் அவை நிறைவேற்ற வேண்டியுள்ளது. இதன்படி மாநிலச் சட்டமன்றத்தின் சட்டங்களால் பின்வரும் பணிகள் நகராட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

 1. நகர திட்டமிடலுடன் ஊரகத் திட்டத்தையும் தீட்டுதல்.
 2. கட்டிடங்கள் கட்டுதல் மற்றும் நிலத்தைப் பயன்படுத்துதல் அவற்றை ஒழுங்குமுறைப் படுத்துதல்.
 3. பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்குத் திட்டமிடுதல்.
 4. சாலைகள் மற்றும் பாலங்கள் ஆகியவற்றைப் போர்க்கால அடிப்படையில் பராமரித்தல்.
 5. குடிநீர் விநியோகம் செய்தல்.
 6. பொதுச்சுகாதாரம் மற்றும் துப்புரவு பணிகளை மேற்கொள்ளுதல்.
 7. தீயணைப்புப் படை பணிகள்
 8. ஊரகக்காடு மற்றும் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாத்தல்.
 9. ஊனமுற்றோர் மற்றும் சிந்தை மந்தமுற்றோர் ஆகியோரை உள்ளடக்கிய, சமுதாயத்தின் நலிவுற்ற வகுப்புனரின் நலன்கள் பாதுகாத்தல்.
 10. சேரி முன்னேற்றம் செய்தல்.
 11. ஊரக வறுமை நீக்கம் செய்தல்.
 12. கல்வி மற்றும் கலாச்சார அம்சங்களின் வளர்ச்சிக்கு பாடுபடுதல்.
 13. பூங்காக்கள், தோட்டங்கள், விளையாட்டு மைதானங்கள் போன்ற நகர்புற வசதிகளுக்கு ஏற்பாடு செய்தல்.
 14. இடுகாடு மற்றும் சுடுகாடு, மைதானங்கள் பராமரித்தல்.
 15. கால்நடைக் குட்டைகளை அமைத்தல் மற்றும் மிருக வதையைத் தடை செய்தல்.
 16. பிறப்பு, இறப்பு ஆகியவற்றின் பதிவுடன் கூடிய மிக முக்கியமான புள்ளி விவரங்களைத் திரட்டல்.
 17. பேருந்து நிறுத்துமிடங்கள், கழிவறை, சாலை விளக்கு போன்ற பொது வசதிகளைச் செய்து கொடுத்தல்.
 18. இறைச்சித் தொட்டிகள், தோல் பதனிடல் ஆகியவற்றை ஒழுங்குமுறை படுத்துதல்.

மேற்கண்ட அம்சங்கள் சம்பந்தமாக, மாநகராட்சியையும் உட்கொண்ட நகராட்சி அமைப்புகள் அனைத்தும் பல பணிகளை ஆற்றுகின்றன. இவற்றோடு, தோப்பு, பண்ணை மற்றும் சாலையோர மரங்கள் ஆகியவற்றை கவனித்தல், உடைமையாளர் இல்லாத நாய்கள், சுற்றித் திரியும் பன்றிகள் மற்றும் தொந்தரவளிக்கும் விலங்குகளைத் தடுப்புக் காவல் வைத்தல் அல்லது கொன்று அழித்தல், சுற்றுலாக்களையும், கண்காட்சிகளையும் அமைத்து மேலாண்மை செய்தல் போன்ற தன் விருப்பப் பணிகள் சிலவற்றையும் அவை செயலாற்றுகின்றன.

மாநகராட்சியின் வருவாய் ஆதாரங்கள்

மாநகராட்சியின் வருவாய் ஆதாரங்கள் (அ) வரி விதிப்பு மூலம் பெறப்படும் வருவாய் (ஆ) வரிவிதிப்பில்லாத வகையிலிருந்து வரும் வருமானம் என இரு தன்மைகளை உடையனவாக உள்ளன. வரி விதிப்பைச் சாராத வருவாய் கட்டணங்கள், தண்டனைப் பணங்கள் மாநில அரசாங்கத்திலிருந்து பெறப்படும் உதவி மானியங்கள் மற்றும் கடன்கள் ஆகியவற்றின் மூலம் கிடைக்கின்றன. வரிகளின் மூலம் கிடைக்கப்பெறுவது தலையாய வருவாய் ஆதாராமாகும்.

பொதுவாகக் கீழே பட்டியல் செய்யப்பட்டுள்ளவாறு வரி விதித்து வசூலித்துக் கொள்ள ஓர் மாநகராட்சி அதிகாரம் பெற்றுள்ளது.

 1. கட்டிடங்கள் மற்றும் நிலங்களின் மீதான வரி.
 2. வாகனங்கள் மற்றும் கால்நடைகள் மீதான வரி.
 3. கொட்டகை (நாடகம், சினிமா) வரி.
 4. நகரத்திற்குள் மக்களுக்குக் காட்சியளிக்கும் பொருட்டு செயல்படும் விளம்பரங்கள் மீதான வரி.
 5. தொழில், வர்த்தகம் மற்றும் வாழ்க்கைப் பணி மீதான வரி.
 6. கேளிக்கை வரி.
 7. மின்சார நுகர்வு மற்றும் விற்பனை மீதான வரி.
 8. நில மதிப்புகள் உயர்வதின் மீது விதிக்கப்படும் மேம்பாட்டு வரி.
 9. சந்தை வரி அல்லது பாதை வரி.

மாநகராட்சியின் வருவாய் பெறுதல்கள் யாவும் மாநகராட்சி (பொது) நிதியில் செலுத்தப்படுகின்றன. இந்நிதியிலிருந்து அதன் செலவினத்திற்குத் தேவையான பணம் விடுவிக்கப்படுகின்றது. மாநகராட்சி மன்றம் மாநகராட்சி முக்கிய அங்கமாக மாநகராட்சி மன்றம் உள்ளது. நிலப்பரப்பு மக்கட்தொகை ஆகியவற்றின் அடிப்படையில், ஒரு மாநகராட்சி பல வட்டங்களாகப் பிரிக்கப்படுகின்றது, ஒவ்வொரு வட்டத்திலிருந்தும், வயது வந்தோர் வாக்குரிமையின் அடிப்படையில் ஒரு பிரதிநிதி தேர்ந்தெடுக்கப்படுவார்.

இப்பிரதிநிதிகள் அல்லது உறுப்பினர்கள், 'கவுன்சிலர்கள்' என்று அழைக்கப்படுகின்றனர். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் கவுன்சிலர்களை உட்கொண்டது தான் மாநகராட்சியின் மன்றம், பஞ்சாயத்து இராச்சிய அமைப்புகளும் உள்ளதைப்போன்று, மாநகராட்சிகளிலும் தாழ்த்தப்பட்ட சாதியினர், பழங்குடியினர், பெண்கள் ஆகியோர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற பின்தங்கிய வகுப்பினர்களுக்கும் இட ஒதுக்கீடு செய்ய சட்டமன்றம் அதிகாரம் கொண்டுள்ளது. பஞ்சாயத்து இராச்சிய அமைப்புகளின் உறுப்பினர்களுக்கு உண்டான வயது, தகுதிகள் மற்றும் தொடர்பானவைகள் மாநகராட்சிக் கவுன்சிலர்களுக்கும் பொருந்துவனவாய் உள்ளன. நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களைத் தவிர்த்து, மாநகராட்சி பகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களும் மாநகராட்சி மன்ற கூட்டங்களில் கலந்து கொள்ளலாம். ஆனால் வாக்களிக்கும் உரிமை கிடையாது. நகராட்சி நிர்வாகத்தில் அனுபவம் கொண்டுள்ள நபர்களை மாநகராட்சி மன்றத்திற்கு மாநில அரசாங்கம் நியமனம் செய்யலாம். ஆனால் மன்றத்தில் வாக்களிக்கும் உரிமை அவர்களுக்குக் கிடையாது.

மாநகராட்சி மன்றத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை மாநிலத்திற்கு மாநிலம், வேறுபட்டுக் காணப்படுகின்றது. சென்னை மாநகராட்சி 200 உறுப்பினர்களைப் பெற்றிருக்கிறது. தகுந்த காரணங்களுக்காக மாநகராட்சி மன்றம் முன்கூட்டிக் கலைக்கப்படுமாயின், ஆறு மாதங்களுக்குள் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். மாநகராட்சி மன்றம் ஒர் விவாத அமைப்பாகத் திகழ்கின்றது. உள்ளூர் சட்டப்பேரவையைப் போன்ற அது செயல்படுகின்றது. மக்களின் விருப்பத்தை நகரத்தின் சட்டங்களாக அது மாற்றுவிக்கின்றது.

மேயர் மற்றும் துணை மேயர்

மேயர் மாநகராட்சியின் அரசியல் ரீதியிலான தலைவர் ஆவார். அவர் நகரத்தின் முதற்குடிமகன் மற்றும் தந்தை என அழைக்கப்படுகின்றார். மேயரை மக்களே நேரடியாகத் தேர்நதெடுக்கின்றனர். கவுன்சிலர்கள் தமக்குள்ளிலிருந்து ஒருவரை துணை மேயராக தேர்ந்தெடுக்கின்றனர் அவர்களுடைய பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாகும். மாநகராட்சியின் மேயர் மாநகராட்சி சட்டதிட்டங்களுக்கு முரணாக செயல்பட நேரிட்டால், மாநகராட்சியின் மொத்த உறுப்பினர்களில் ஐந்தில் மூன்று பகுதியினர் எழுத்துமூலமாக மாநகராட்சி ஆணையருக்குத் தெரிவித்து, அதன் மீது ஐந்தில் நான்கு பகுதியினர் மேயருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்படவேண்டும். மேற்படி தீர்மானத்தை அரசு பரிசீலித்து மேயரின்விளக்கத்தினைப் பெற வேண்டும். மேயரின் விளக்கம் அரசுக்கு ஏற்புடையதாக இல்லை எனில், அரசு மேயரை நீக்குவதற்கு ஆணையிடலாம். இதில் அரசின் முடிவே இறுதியானது.

தகம் செய்யலாம் அல்லாதார். தீய நடத்தையின் கோ தலைமை தாங்கி, . மேயர் ஒரு விழாத் (அலங்கார) தலைவராகத் திகழ்கின்றார். விழாக்களில் அவர் மாநகரின் சார்பில் பங்கேற்கிறார். மன்றக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்கி, ஒழுங்கையும், அமைதியையும் பராமரிக்கின்றார். தீய நடத்தையின் பொருட்டு அவர் உறுப்பினர்களை சபை நீக்கம் செய்யலாம் அல்லது வெளியேற்றலாம். மன்றத்தின் நடவடிக்கைகளிலிருந்து தடை செய்யப்படுவற்குரிய எப்பகுதியினையும் அவர் ஒதுக்கலாம் அல்லது நீக்கலாம். மன்றத்தின் சிறப்புக் கூட்டங்களைக் கூட்டுவிக்க மேயர் அதிகாரம் படைத்துள்ளார். மாநகரத்தின் நிர்வாகம் பற்றிய எப்பொருள் மீதும் அவர் ஆணையரிடம் இருந்து தகவலைக் கோரமுடியும். மன்றத்தின் முடிவுகள் சரிவர நிறைவேற்றப்பட்டு வருவதை அவர் கவனித்துக் கொள்கிறார். எழுத்து மூலமாக மேயர், துணை மேயருக்கு தனது அதிகாரங்கள் சிலவற்றை ஒப்படைவு செய்யலாம். மாநில அரசாங்கத்திற்கும் மாநகராட்சிக்கும் இடையிலான 'தகவல் தொடர்பு அனைத்தும் மேயரின் வாயிலாக செல்ல வேண்டும். எனினும், மேயர் அதை நிறுத்தி வைக்க முடியாது.

குழுக்கள்

மாநகராட்சியின் குழுக்கள் மன்றத்தின் பல்வேறு நடவடிக்கைகளைக் கவனித்துக் கொள்வதில் முக்கியமானதோர் பங்குப்பணியை ஆற்றுகின்றன. மாநகராட்சியின் பணிகளின் திறமையான செயல்பாட்டிற்கு அவை துணை புரிகின்றன. இக்குழுக்களான நிலைக்குழு, பள்ளிகள் குழு, மருத்துவமனைகள் குழு, மின் விநியோகம் மற்றும் போக்குவரத்துக் குழு, மாநகர மேம்பாட்டுக் குழு, சுகாதார குழு, வரிவிதிப்பு மற்றும் நிதிகுழு, மாநகர நீர் மராமத்துக் குழு மற்றும் இன்னும்பிற. குழுக்கள் அனைத்திலும் தலையாயது நிலைக்குழுவாகும். இக்குழு செயலாக்க மேற்பார்வை, நிதி மற்றும் பணியாளர் குழாம் ஆகியவற்றின் மீது தேவையான அதிகாரங்களைப் பெற்றுள்ளது. மாநகராட்சி ஆணையர் ஆணையர் மாநகராட்சியின் தலைமை நிருவாகி ஆவார். மாநகராட்சி மன்றத்தால் இயற்றப்படும் கொள்கைகளைச் செயல்படுத்துவது அவருடைய தலையாயப் பொறுப்பாகும். ஆணையர் பெரும்பாலும் இந்திய ஆட்சித்துறை பணியாளர். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அவர் மாநில அரசாங்கத்தினால் நியமனம் செய்யப்படுகின்றார்.

ஆணையாளரின் அதிகாரங்கள்

மாநகராட்சி சட்டத்தின்படியும் மாநகராட்சி கவுன்சில் மற்றும் நிலைக்குழுக்களின் ஆலோசனையின் படியும் அவர் செயல்படுகிறார். மாநகராட்சிப் பணியாட்கள் மீது மேற்பார்வையினையும் கட்டுப்பாட்டையும் அவர் செலுத்துகின்றார். நிதி நிலை அறிக்கையைத் தயாரிப்பது ஆணையரின் பொறுப்பாகும். 74-வது, அரசியல் அமைப்புச் சட்டத்திற்குமுன் தேர்தல் நடத்தும் பணிகளை அவர் பெற்றிருக்கவில்லை.

மாநகராட்சியின் நிர்வாகத்தில் அச்சாணியாக ஆணையர் திகழ்கின்றார். மாநகராட்சியின் மன்றத்திலும் பல்வேறு குழுக்களின் கூட்டங்களிலும் கலந்து கொண்டு உரையாற்றும் உரிமையை அவர் பெற்றுள்ளார். கவுன்சிலர்களுக்கு தேவையான தகவல்களையும் விளக்கங்களையும் அவர் வழங்குகின்றார். அவர்கள் வாதங்கள் புரிவதற்கு வழித்துணையாக இருந்து மாநகராட்சியின் இன்றியமையா பங்குப் பணியினை ஆணையர் ஆற்றுகின்றார்.

நகராட்சிகள்

நகர உள்ளாட்சி அமைப்புகளில் அடுத்து வருவது நகராட்சிகளாகும். 'நகராட்சி' எனும் சொல், சுயாட்சியுள்ள நகரத்தை குறிப்பிடுகிறது. மாநிலத்திற்கு மாநிலம் நகராட்சிகளின் எண்ணிக்கை வேறுபடுகின்றது. நமது நாட்டில் 1500க்கும் அதிகமான நகராட்சிகள் உள்ளன. மாநில அரசுகள் இயற்றும் நகராட்சிச் சட்டங்களால் நகராட்சிகள் நிர்வகிக்கப்படுகின்றன. எந்த ஒரு சிறிய ஊரக அல்லது நகர்ப்புற பகுதியினையும் நகராட்சியென அறிவிக்கும் உரிமையை மாநில அரசு பெற்றுள்ளது. ஒரு நகராட்சியை அமைப்பதற்குக் குறைந்த பட்சமாக மக்கட்தொகை 5000 த்திலிருந்து 50,000 க்கு இடைப்பட்டதாக இருத்தல் வேண்டும். நகரங்களில் மக்களால் மேற்கொள்ளப்படும் பல்வேறுபட்ட தொழில்கள் பெரும்பாலும் விவசாயச் சார்பற்றவையாக உள்ளன. மக்கட்தொகை மற்றும் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் நகராட்சிகள் 3 அல்லது 4 வகையான பாகுபாடு செய்யப்பட்டுள்ளன.

பணிகள்

நகராட்சிகளின் பணிகள் ஏறத்தாழ மாநகராட்சிப் பணிகளுக்கு இணையாக உள்ளன. அவை அரசியலமைப்பின் பன்னிரண்டாவது இணைப்புப்பட்டியலின் அமைப்புக் கூட்டின் கீழ் வருகின்றன. எனினும், நகராட்சிப் பணிகளைக் கட்டாயப் பணிகள், தன் விருப்பப் பணிகள் எனவும் வகைப்படுத்தலாம்.

கட்டாயமான பணிகள்.

 1. தூய்மையான குடிநீர் விநியோகம் செய்தல்.
 2. பொதுச் சாலைகள் அமைத்துப் பராமரித்தல்.
 3. தெருக்களில் விளக்கு மற்றும் குடிநீர் வசதிகளைச் செய்தல்.
 4. தெருக்களை சுத்தம் செய்து கழிவுப் பொருட்களை அகற்றுதல்.
 5. அபாயமிக்க வர்த்தகங்களையும் செயல்களையும் ஒழுங்கு முறைப்படுத்தல்.
 6. மருத்துவமனைகளையும் பள்ளிக்கூடங்களையும் பராமரித்தல்.
 7. பிறப்பு, இறப்புகளைப் பதிவு செய்தல்.
 8. பொதுச் சாலைகள், பாலங்கள் மற்றும் ஏனைய பொது இடங்களில் தோன்றும் தடைகளையும், நீட்டிக் கொண்டிருப்பவைகளையும் அகற்றுதல்.
 9. சாலைகளுக்குப் பெயரிட்டு, இல்லங்களுக்கு எண் வழங்குதல்.
 10. பொதுச் சுகாதாரம், துப்புரவு, ஆபத்தான வியாதிகளைத் தடை செய்தல் மற்றும் பல்வேறு வகையிலான இறப்பினங்களை அடக்கம் செய்வதற்குரிய இடங்களை ஒழுங்குமுறைப் படுத்தல் போன்றவை சம்பந்தமான அனைத்துக் காரியங்களையும் செய்தல்.
 11. தீயணைப்புப் படைகளுக்கான ஏற்பாடு செய்தல்.

விருப்பப் பணிகள்.

 1. நகரப் பகுதிகளை வகுத்து அமைத்தல்.
 2. பெண்டிர் காப்பு இல்லங்கள், அனாதை இல்லங்கள், தொழுநோயாளிகளின் இல்லங்கள், ஓய்விடங்கள், நூலகங்கள், பொது பூங்காக்கள், தோட்டங்கள் முதலானவற்றை நிறுவி பராமரித்தல்.
 3. சாலையோரங்களில் மரங்களை நடுதல்.
 4. நில அளவைகளை மேற்கொள்ளுதல்.
 5. நலிவுற்ற பிரிவினருக்கு வீடுகள் கட்டிக் கொடுத்தல்.
 6. நகராட்சிப் பணியாளரின் பொது நலத்தைப் பேணிக்காத்தல்.
 7. நகராட்சிப் பகுதிக்குள் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி மக்களுக்கு கலாச்சாரம் மற்றும்பிற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல். வருவாய் ஆதாரங்கள்

நகராட்சியின் முக்கிய வருவாய் ஆதரங்களாவன.

 1. சொத்து வரி.
 2. தொழில் வரி.
 3. பொருள்கள் மீதான வரிகள் - சுங்க வரிகள்.
 4. கால்நடை மற்றும் வாகன வரி.
 5. கேளிக்கை வரி.
 6. குடிநீர் மற்றும் விளக்கு வரி.
 7. அரசாங்கம் வழங்கும் மானியங்களும் கடன்களும்.

பொது நிர்வாகம், மருத்துவம் மற்றும் பொதுச் சுகாதாராம், கல்வி, பொது மராமத்துப் பணிகள், நீர் விநியோகம், விளக்குகள் அமைத்தல் மற்றும் பிற வசதிகளை செய்து கொடுத்தல் யாவும் நகராட்சியின் செலவு இனங்கள் ஆகும். நகராட்சிகள் தமது வருவாயைச் செலுத்தி செலவிற்கென பணத்தைப் பெற்றுக் கொள்ள நகராட்சி நிதிகளைக் கொண்டுள்ளன. நகராட்சி மன்றம்

ஒவ்வொரு நகராட்சியும் ஒரு நிர்வாக அமைப்பைப் பெற்றுள்ளது. நகராட்சி மன்றம், நகராட்சிக் குழு, நகராட்சி வாரியம் என பல்வகையாக பல்வேறு மாநிலங்களில் பெயரிடப்பட்டுள்ளது. அது நகராட்சியின் சட்ட ஆக்கம் செய்யும் அமைப்பாகும். பல்வேறு வட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் கவுன்சிலர்களை நகராட்சி மன்றம் கொண்டுள்ளது. ஏனைய உள்ளாட்சி அமைப்புகளுக்கு உள்ளதைப் போல், தாழ்த்தப்பட்ட சாதியினர், பழங்குடியினர், பெண்கள் ஆகியோருக்கான இட ஒதுக்கீடுகள் உள்ளன. நகராட்சிகளின் தலைவர் பதவிகளும் மேற்கண்டவர்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள், வட்டக் குழுக்களின் தலைவர்கள்

ஆகியோரும் நகராட்சி மன்றங்களில் கலந்து கொள்ள ஏற்பாடு உள்ளது. நகராட்சி நிர்வாகத்தில் அனுபவம் அல்லது சிறப்பான அறிவு கொண்ட நபர்களை நகராட்சி நிர்வாகத்தில் மாநில அரசாங்கம் நியமனம் செய்யலாம். ஆனால், இவ்வுறுப்பினர்கள் மன்றத்தில் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றிருக்கவில்லை. நகர மக்கட் தொகையின் அடிப்படையில் நகராட்சி மன்றத்தின் அளவு அமைந்துள்ளது. ஒவ்வொரு கவுன்சிலரும், நியமன உறுப்பினரும், தனது இருக்கையில் அமர்வதற்கு முன், இந்திய அரசியலமைப்பிற்கு நேர்மை அல்லது பற்றுடன் இருக்கவும், இந்தியாவின் இறைமை மற்றும் ஒருமைப்பாட்டை உறுதி செய்யவும், தனது கடமையை நேர்மையுடன் ஆற்றவும் ஓர் உறுதிமொழியை எடுத்துக் கொள்ள வேண்டும். நகராட்சி மன்றத்தின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். அது முன்கூட்டியே நீக்கப்படுமாயின் ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதேபோன்று, இராஜினாமா, பதவி நீக்கம் அல்லது தகுதி இழப்பு போன்ற காரணத்தால் ஒரு உறுப்பினர் இடம் காலியாயின் அது ஆறு மாதங்களுக்குள் நிரப்பப்பட வேண்டும். தனது பணிகளை மேற்கொண்டு செயலாற்றுவதில் நிலைக்குழு மற்றும் பிற குழுக்கள் நகராட்சி மன்றத்திலும் துணை செய்கின்றன.

நகராட்சியின் தலைவர் ஒவ்வொரு நகராட்சி மன்றமும் ஒரு தலைவரையும், ஒரு துணைத்தலைவரையும் பெற்றுள்ளது. நகராட்சி மன்றத்தலைவர் மக்களால் நேரிடையாக தேர்ந்தெடுக்கப்படுகின்றார். துணைத்தலைவரை கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கின்றனர். நகராட்சித் தலைவரும், துணைத்தலைவரும் 5 ஆண்டுகளுக்கு பதவி வகிக்கின்றனர். தலைவர் அல்லது துணைத்தலைவர், மாநகராட்சியின் மேயர் மற்றும் துணை மேயரைப் போன்று பதவியிலிருந்து அகற்றப்படலாம். தலைவர் நகராட்சி மன்ற கூட்டங்களைக் கூட்டுவித்து கூட்டங்களுக்குத் தலைமை வகிக்கின்றார். பல்வேறு நடவடிக்கைகளை ஒழுங்கப்படுத்துகின்றார். நகராட்சியின் நிதி மற்றும் செயலாக்க நிர்வாகத்தை அவர் மேற்பார்வை செய்கின்றார். நகராட்சியின் பதிவுகள் அல்லது ஆவணங்கள் அனைத்தையும் அவர் பார்வையிடும் உரிமைகளை பெற்றுள்ளார். நகராட்சி நிர்வாகம் சம்பந்தமான எந்த தகவலையும் அவர் கோர முடியும். சுருக்கமாகக்கூறின், நகராட்சிச் சட்டத்தினால் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்துப் பணிகளையும் அதிகாரங்களையும் அவர் செயல்படுத்த வேண்டும். தலைவர் இல்லாத நேரத்தில், துணைத்தலைவர் தலைவருக்குரிய அனைத்துப் பணிகளையும் செய்தல் வேண்டும்.

நிர்வாக அலுவலர் ஆணையர்

ஒவ்வொரு நகராட்சிக்கும் ஒரு நிர்வாக அலுவலர் உள்ளார். அவர் ஆணையர் என்று அழைக்கப்படுகின்றார். அவர் மாநிலப் பணித்துறையைச் சேர்ந்தவர். அவர் மாநில அரசாங்கத்தினால் நியமனம் செய்யப்படுகின்றார். ஆணையர் எத்தருணத்திலும் இடப்பெயர்வு செய்யப்படலாம். பல்வேறு நகராட்சிகளிலும் பெருமளவிற்கு ஆணையர்களின் அதிகாரங்களும் பணிகளும் ஒத்திருப்பவையாக உள்ளன. சுருக்கமாகக் கூறின் மன்றத்தின் தீர்மானங்களையும் முடிவுகளையும் நகராட்சி ஆணையர் செயலாக்கம் செய்கின்றார். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தீர்மானங்களின் நகல்களை அவர் அனுப்பி வைக்கின்றார். அவர் ஒப்பந்தங்களைச் செய்கின்றார். சில அறிவிக்கைகள், உரிமங்கள், அனுமதிகள் போன்றவற்றைப் பிறப்பித்து நிகழ்ச்சி நிரலைத் தயாரிப்பில் தலைவருக்கு துணைபுரிகிறார். அவர் நகராட்சியின் நிலை அறிக்கையை தயார்செய்து செயலாக்கம் செய்கிறார். உயர்தணிக்கைக்கு நிர்வாக அறிக்கையை அனுப்பி வைக்கிறார். நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிதி இழப்புகள் மற்றும் கையாடல் பற்றிய அனைத்துச் செய்திகளையும் அவர் தலைவரின் கவனத்திற்கு எடுத்துச் செல்கிறார் அல்லது கொண்டு வருகின்றார். அவர் மன்ற கூட்டத்திலும் கலந்து கொள்ளலாம். மன்றத் தலைவர் மற்றும் ஆணையர் ஆகியோரிடையே நட்பும் சுமுகமாகவும் இசைவானதுமான உறவுகளைப் பெரிதும் சார்ந்துதான் நகராட்சியின் வெற்றிகரமான பணிச்செயல்பாடு அமையும்.

நகரப் பஞ்சாயத்து

1992 ஆம் ஆண்டின் அரசியலமைப்புச் (74வது திருத்தம்) சட்டம் புதியதோர் ஊரக உள்ளாட்சி அமைப்பு முறையை நம் நாட்டில் அறிமுகம் செய்துள்ளது. இது நகரப் பஞ்சாயத்து என அறியப்படுகிறது. இந்த உள்ளாட்சி அமைப்பானது ஒரு கிராமப்புற எல்லையிலிருந்து ஊரக எல்லைக்கு இடப்பெயர்விலுள்ள ஒரு பகுதிக்கென அமையப்பெறுகின்றது. இக்குறிக்கோளுக்கென ஒன்று அல்லது இரண்டு வருவாய் கிராமங்களை உள்ளடக்கியுள்ள ஒரு உள்ளூர்ப் பகுதி பஞ்சாயத்து நகரமாக அமைக்கப்படுகின்றது. ஒரு பஞ்சாயத்து நகரம் குறைந்தது 5000 பேர்களை மக்கட் தொகையாகக் கொண்டிருத்தல் வேண்டும். அதன் பெருவாரியான மக்கள் வேளாண்மைச் சாராத செயல்களில் ஈடுபட்டுள்ளவர்களாய் இருத்தல் வேண்டும். ஒரு பஞ்சாயத்து நகரத்தின் ஆண்டு வருமானம் ஒரு இலட்ச ரூபாய்க்கு குறைவாக இருத்தல் கூடாது.

ஒவ்வொரு பஞ்சாயத்து நகரத்திலும் ஒரு நகரப் பஞ்சாயத்து நிறுவப்படுகின்றது. இதற்கென, பஞ்சாயத்து நகரம் பல வார்டுகளாகக் கொண்டதாய் பிரிக்கப்படுகின்றது. ஒரு உறுப்பினர் ஒன்றுக்கு மேற்பட்ட நகரப் பஞ்சாயத்தில் உறுப்பினராய் இருத்தல் முடியாது. மற்றபடி, நகரப்பஞ்சாயத்தின் உறுப்பினர்கள் நகராட்சிக் கவுன்சிலர்கள் கொண்டுள்ளதற்கு இணையாக தகுதிகள், பணிகள், சலுகைகள் ஆகியவற்றைப் பெற்றுள்ளனர்.

நகரப் பஞ்சாயத்தின் உறுப்பினர்கள் தமக்குள்ளிருந்து, ஒரு துணைத் தலைவரை தேர்ந்தெடுக்கின்றனர். அவர் 5 ஆண்டுகளுக்குப் பதவி வகிக்கின்றார். நகராட்சித் தலைவர் கொண்டுள்ள அதிகாரங்கள், சலுகைகள் போன்றவற்றை அனுபவிக்கின்றார். ஏனைய உள்ளூராட்சி அமைப்புகளுக்கு உள்ளதைப் போன்று நகரப் பஞ்சாயத்தின் வருவாய் ஆதாரங்கள், செலவினங்கள், மற்றும் பிற செய்திகள், நகரப் பஞ்சாயத்திற்கும் அமைந்துள்ளன. பொருளாதார மேம்பாடு மற்றும் சமுதாய நீதிக்குரிய பணிகளை ஆற்றுவதற்கு தனக்கு தேவையான குழுக்களை அது அமைத்துக் கொள்ளலாம்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

2.8
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
Back to top