অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

கிராமப்புற வளர்ச்சி

கிராமப்புற வளர்ச்சி

அறிமுகம்

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கிராமபுற பகுதிகளில் வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல்படுத்தவும் மேற்பார்வையிடவும் மாவட்ட அளவில் முக்கிய அங்கமாக செயல்படுகிறது. இம்முகமையானது ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சி திட்டத்தை நடைமுறைபடுத்த உருவாக்கப்பட்டது. பின்னர் மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் இம்முகமை மூலம் செயல்படுத்த வரையறுக்கப்பட்டது. ஏப்ரல் 1999 ஆம் ஆண்டு முதல் நிர்வாக செலவினங்களை நிர்வகிக்க தனி நிறுவனமாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அறிமுகப்படுத்தப்பட்டது. இது கிராமபுற மேம்பாடு முகமையினை வலுப்படுத்தவும், வறுமை ஒழிப்பு திட்டத்தை செயல்படுத்த மாவட்ட நிர்வாகத்தையும், அரசையும் இணைக்கும் பாலமாக விளங்குகிறது.

கிராமபுற வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு திட்டங்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன பெரிய புவியியல் பகுதிகள் நிர்வாக தேவைகள் மற்றும் திட்டங்கள் செயல்படுத்துவதில் கீழ்நிலை அதிகாரிகள் மற்றும் சமூகம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது கிராமபுற பகுதிகளில் வேலைவாய்புகளை உருவாக்க மத்திய அரசு இத்திட்டத்தை செயல்படுத்துகிறது. மாநில அளவில் முதன்மைச் செயலர் ஊரக வளர்ச்சி ஆணையர் ஆகிய அலுவலர்கள் இத்திட்டங்கள் செயல்படுத்துவதில் முழுப் பொறுப்பாவார்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அளவில் உள்ள ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள், வங்கியாளர்கள், அரசுசாரா தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் சமூகத்தில் நலிவடைந்த மக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் ஆலோசனைகள் வழங்கும் குழுவாக செயல்படுவார்கள். கிராமப்புற வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல திட்டங்களை அவ்வப்போது அறிமுகப்படுத்துகின்றன. இத்திட்டங்களின் பயன்களை பொருத்து திட்டங்கள் அவ்வப்போது மாற்றியமைக்கப்படுகிறது. ஊரக பகுதிகளில் தேவைகள் கண்டறிந்து திட்டங்கள் வகுத்து செயல்படுத்தவும், தொழில்நுட்பம் நிர்வாகம் மற்றும் நிதி தொடர்பான செயல்பாடுகளை செயல்படுத்துவதாகும்.

  1. முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்
  2. தாய் திட்டம்
  3. அம்மா பூங்கா
  4. அம்மா உடற்பயிற்சி கூடம்
  5. தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்
  6. தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி
  7. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம்
  8. தன்னிறைவுத் திட்டம்
  9. திடக்கழிவு மேலாண்மை திட்டம்
  10. சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டம்
  11. எல்.இ.டி.விளக்குகள்
  12. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்
  13. பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா (கிராமின்)
  14. பாராளுமன்ற உறுப்பினர் உள்ளுர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம்
  15. பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்
  16. தூய்மை பாரத இயக்கம்
  17. தேசிய ரூர்பன் திட்டம்
  18. நாடாளுமன்ற உறுப்பினர் மாதிரி கிராமத் திட்டம்

முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்

முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டமானது தமிழக அரசால் 2011-12 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஊரக பகுதிகளில் வறுமையில் வாழுகின்ற அனைத்து வீடற்ற மக்களுக்கு வீடு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழான அனைத்து வீடுகளுக்கும் சூரிய மின்சக்தி உடன் கூடிய விளக்குகள் அமைத்து தரப்படுகிறது. இத்திட்டமானது அனைவருக்கும் வீடு வழங்கும் ஒரு முன்னோடி திட்டமாகும்.

  • இத்திட்டம் 100 சதவிகிதம் மாநில அரசு நிதியைக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது.
  • ஊரக பகுதியில் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள ஏழ்மையில் வாழும் மக்களுக்கு வீடு வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

நன்மைகள்

  • அலகு தொகை – ரூ.2.10 இலட்சம்
  • ஒரு வீட்டிற்கு – ரூ.1.80 இலட்சம்
  • சூரிய மின்கலம் அமைக்க- ரூ. 0.30 இலட்சம்
  • வீடுகட்ட தேவையான நிலப்பரப்பு – 300 சதுர அடி

பயனாளி:

கிராமப்புற பகுதி மக்கள்

பயன்கள்:

சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு

தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் (தாய் திட்டம்)

குக்கிராமங்களில் தற்போதுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் தேவைப்படும் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை குறித்து விரிவான கணக்கெடுப்பு நடத்தி அதன் மூலம் கண்டறியப்படும் அடிப்படைத் தேவைகளை தாய் திட்ட நிதியிலிருந்தும், இதர திட்டங்கள் மற்றும் இதர துறை திட்டங்கள் மூலமும் நிறைவு செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்

மேற்கொள்ளப்படும் பணிகள்

குக்கிராமம் குறித்த அடிப்படை வசதிகளின் விவரங்களான குடிநீர் விநியோகம் (மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், சிறுமின்விசை பம்புகள், தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகள், கைப்பம்புகள்), தெருவிளக்குகள், தெருக்கள் மற்றும் சந்துகள், இடுகாடு / சுடுகாடு> அரசு / உள்ளாட்சி கட்டடங்கள்> அரசு / உள்ளாட்சி பள்ளி கட்டடங்கள்> சிறுகுளங்கள் மற்றும் ஊரணிகள்> விளையாட்டு திடல்கள்> பேருந்து நிலையங்கள்> சந்தைகள்> கிராம ஊராட்சி சாலைகள்> ஊராட்சி ஒன்றிய சாலைகள் ஆகிய உள்கட்டமைப்பு வசதிகளின் இன்றைய தன்மையை அறிந்து அவற்றை மேம்படுத்துவது அல்லது புதிதாக உருவாக்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

கூடுதல் தேவைப்பணிகளாக அங்கன்வாடி மையம், பொது விநியோக கடை, சுய உதவிக்குழு கட்டிடம், கதிரடிக்கும் களம், விளையாட்டு மைதானம் மற்றும் அனுமதிக்கப்பட்ட இதர பணிகள்.

கிராம ஊராட்சிகளில் அமைந்துள்ள குக்கிராமங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இத்திட்டத்திற்கான மொத்த நிதி ஒதுக்கீடும் மாநில அரசைச் சார்ந்தது.

தாய் திட்டம் II – 2016 – 17

குக்கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு தமிழ்நாடு அரசு 2011-12ம் ஆண்டு முதல் தாய் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. தற்போது தமிழ்நாடு அரசு தாய்திட்டம் – II 2016-17-ம் ஆண்டின்கீழ் பின்வரும் பணிகள் செயல்படுத்தி வருகிறது.

  • சிறுபாசன ஏரிகள் மேம்படுத்தல்
  • தார் சாலைகள் அமைத்தல்
  • அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல்
    1. குடி நீர் பணிகள்
    2. கிராமப் பகுதிகளிலுள்ள குடியிருப்புகளுக்கு சிமெண்ட் கான்கிரீட் அல்லது பேவர் பிளாக் அமைத்தல்
    3. மயானம் மேம்பாடு செய்தல்
    4. மயானத்திற்கு அணுகு சாலைகள் அமைத்தல்

சிறுபாசன ஏரிகள் மேம்படுத்தல்

தாய் திட்டத்தின்கீழ் ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டிலுள்ள சிறுபாசன ஏரிகளில் 2016-17-ம் ஆண்டின்கீழ் 62 ஏரிகள் மேம்படுத்தும் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் இயந்திரங்களின் மூலம் ஏரிகளில் உள்ள முட்புதர்களை அகற்றி தூரி வாரப்பட்டு மதகு மற்றும் கலங்கள் புதிதாக கட்டப்பட்டு கரைகள் பலத்தப்படும். இதனால் சிறுபாசன ஏரிகள் முழு கொள்ளளவினை எட்ட முடியும். இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதால் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளை பூர்த்தி செய்ய வழி வகுக்கும்.

அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல்

தாய் திட்டத்தின்கீழ், குக்கிராமங்களில் குடிநீர் பணிகள், தெரு விளக்குகள், அணுகுசாலைகள், இடுகாடு அமைத்தல், இடுகாடு/சுடுகாடு செல்ல சிமெண்ட் சாலைகள் அமைத்தல் ஆகிய அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுகிறது. மேலும் சாலைகளின் தரத்தினை மேம்படுத்தவும், மண் சாலைகளை தார் சாலைகளாக மாற்றும் பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பயனாளி:

கிராமப்புற மக்கள்.

பயன்கள்:

கிராமப்புற பகுதிக்கு அடிப்படை வசதிகள்

அம்மா பூங்கா

ஊரகப் பகுதிகளிலுள்ள மக்களின் நலனுக்காக விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள், விளையாட்டு மன்றங்கள் மற்றும் கலாச்சார மையங்கள் ஆகியவற்றை அமைத்தல் கிராம ஊராட்சியின் விருப்பக் கடமைகளில் ஒன்றாகும்.

அதனடிப்படையில், 2016-17 ஆம் நிதியாண்டில் நகர பகுதிகளுக்கு இணையாக ஊரக பகுதிகளில் கேளிக்கை உட்கட்டமைப்பு வசதிகளுடன் ரூ.100 கோடி மதிப்பீட்டில் பூங்கா ஒன்றுக்கு ரூ.20 இலட்சம் வீதம் 500 அம்மா பூங்காக்கள் அமைக்கும் பணிகள் எடுக்கப்பட்டுள்ளன.

அம்மா பூங்காக்கள் தெரிவு செய்தல் மற்றும் அதன் திட்ட கூறுகள்

அம்மா பூங்காக்கள், ஆண்டு வருமானம் ரூ.20 இலட்சத்திற்கு மேலாகவும் மற்றும் 14வது நிதிக்குழு மானியத்தின் மூலம் ரூ.20 இலட்சத்திற்கு மேலாக வருமானம் பெறக்கூடியதாகவும் உள்ள கிராம ஊராட்சிகளில் அமைக்கப்படும். அம்மா பூங்கா கிராம ஊராட்சிகளில் குடியிருப்புகளுக்கு நடுவில் சுமார் 15,000 முதல் 20,000 சதுர அடி வரை கிராம ஊராட்சிக்கு சொந்தமான நிலம் அல்லது ஒப்படைக்கப்பட்ட திறந்த வெளி பாதுகாக்கப்பட்ட இடத்தில் அமைக்கப்படும்.

அம்மா பூங்கா அமைக்கப்படும் புற நகரம் / நகரத்தை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில் பெண்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் விளையாட்டு சாதனங்களுடன் கூடிய அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும்.

அம்மா பூங்கா கீழ் கண்ட வசதிகளுடன் அமைக்கப்படும்

  1. சிமெண்ட் கான்கிரீட் அல்லது பேவர் பிளாக் நடைபாதை
  2. LED விளக்குகளுடன் கூடிய ஒளி அமைப்புகள்.
  3. சிமெண்ட்/கிரானைட் பெஞ்சுகள் அல்லது எஃகினால் ஆன பெஞ்சுகள்
  4. பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கான கழிப்பறை
  5. குடிநீர் வசதிகள் மற்றும் தோட்ட பராமரிப்பு, கழிப்பறைகளுக்கு தேவையான தண்ணீர் வசதி
  6. விளையாட்டு பொருட்களுடன் கூடிய குழந்தைகள் விளையாடும் பகுதி
  7. கொடிகளுடன் கூடிய நல்வரவு வலைவு மற்றும் வெளியே செல்லும் வழி
  8. பாதுகாப்பு கம்பிகளுடன் கூடிய சுற்றுசுவர் வசதிகள்
  9. தலைப்புகளுடன் கூடிய தகவல் மற்றும் அறிவிப்பு பலகைகள் உரிய இடங்களில் வைக்கப்படும்
  10. கூழாங்கல் நடைபாதை மற்றும் எட்டு வடிவிலான கூழாங்கல் நடைபாதை தேவையான இடங்களில் அமைக்கப்படும்

பயனாளி:

கிராமப்புற மக்கள்.

பயன்கள்:

கிராமப்புற மக்களின் பொழுதுபோக்கு

அம்மா உடற்பயிற்சி கூடம்

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 111 ன்படி ஊரகப் பகுதியிலுள்ள மக்களின் நலனுக்காக உடற்பயிற்சி கூடங்கள், பூங்காக்கள், விளையாட்டு மன்றங்கள் மற்றும் கலாச்சார மையங்கள் போன்ற தேவையான வசதிகளை வழங்குதல் கிராம ஊராட்சியின் விருப்பக் கடமைகளில் ஒன்றாகும். அதனடிப்படையில், 2016-17 ஆம் நிதியாண்டில் ஊரக இளைஞர்களின் உடல் ஆரோக்கியத்தையும் மன வளத்தையும் மேம்படுத்த அம்மா உடற்பயிற்சி கூடம் ஒன்றுக்கு ரூ.10 இலட்சம் வீதம் ரூ.50 கோடி மதிப்பீட்டில், 1,161 சதுர அடி பரப்பளவில் 500 அம்மா உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கும் பணிகள் எடுக்கப்பட்டுள்ளன.

அம்மா உடற்பயிற்சி கூடத்தின் நன்மைகள்

  • ஊரக பகுதி இளைஞர்கள் உடற்பயிற்சி செய்யவும், தங்களது உடலினை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது
  • ஊரகபகுதி மக்களின் சுகாதார உணர்வினை அதிகரிக்கிறது
  • இளைஞர்களின் மன உறுதியை மற்றும் ஒருமித்த உணர்வினை வளர்க்கிறது
  • விளையாட்டு போட்டிகளுக்கு இளைஞர்களை தயார்படுத்துகிறது
  • அம்மா உடற் பயிற்சி கூடம், அம்மா பூங்காவிற்குள் அமைக்கப்பட்டு கிராம ஊராட்சிகளால் பராமரிக்கப்படும்

பயனாளி:

கிராமப்புற பகுதி மக்கள்.

பயன்கள்:

கிராமப்புற பகுதி மக்களின் ஆரோக்கியம்

தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்

அனைத்து கிராம பகுதிகளில் உள்ள அனைத்து பேருந்து செல்லும் சாலைகள் மற்றும் கிராம மக்கள் பயன்படுத்தும் சாலைகள் தார் சாலைகளாக முழுவதுமாக செப்பனிட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருதல். இதன் மூலம் கிராம பகுதிகளிலிருந்து நகர பகுதிகளுக்கு தங்கு தடையின்றி போக்குவரத்து வசதி செய்யப்படுகிறது.

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் பழுதடைந்த ஊராட்சி ஒன்றிய சாலைகள் மற்றும் ஊராட்சி சாலைகளில் மிகவும் பழுதடைந்த சாலைகளை அன்றாட பொதுமக்களின் போக்குவரத்து பயன்பாட்டிற்காக தார்ச் சாலைகளாக மேம்பாடு செய்திட தமிழக அரசால் நபார்டு வங்கியின் நிதியுதவியுடன் 2006-07ஆம் நிதியாண்டிலிருந்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கு ஆண்டு ஒன்றிற்கு தேவைப்படும் மொத்த நிதியில் 20% விழுக்காடு மாநில அரசாலும் மீதமுள்ள 80% நிதி ஒதுக்கீட்டினை நபார்டு வங்கியின் மூலம் கடன்தொகை மூலம் நிதி ஒதுக்கப்பட்டு தார்ச்சாலைப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் இத்திட்டம் 2006-07 நிதியாண்டு முதல் ஐந்து கட்டங்களாக 2012-13ல் நபார்டு ஆர்.ஐ.டி.எப்.-XVII வரை உரிய நிதி ஒதுக்கீடுகள் மற்றும் நிர்வாக அனுமதி ஆணையர் ஊரக வளர்ச்சி முகமை மூலம் தார்ச் சாலைப் பணிகள் நபார்டு திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பணிகள் தேர்வு

ஒவ்வொரு நிதியாண்டும் மாவட்டத்திற்கு இத்திட்டத்திற்கென அரசால் ஒதுக்கப்படும் நிதி ஒதுக்கீட்டிற்கு ஏற்ப பணிகள் தேர்வு செய்ய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் கீழ்க்கண்ட தேர்வு குழு உறுப்பினர்கள் முன்னிலையில் கூட்டம் நடத்தி கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள பேருந்து மற்றும் சிற்றுந்துகள் செல்லும் தார்ச் சாலைகளில் மிகவும் பழுதடைந்த சாலைகள் மற்றும் பொதுமக்களின் அன்றாடம் பயன்படுத்தும் சாலைகளின் தன்மை குறித்தும் பணிகள் தேர்வு செய்யப்படுகிறது.

பணிகள் தேர்வு செய்யும் முறை

  • தேர்வு செய்யப்படும் பணிகளில் பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் இயங்கும் சாலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
  • சுற்றுலாப் பகுதிகள் மற்றும் வழிபாட்டுத்தலங்களுக்கு செல்லும் சாலைகள்.
  • தொழில் மற்றும் வணிக மையங்களுக்கு செல்லும் சாலைகள்.
  • இதர முக்கியமான விவசாயத்திற்கு பயன்படும் பழுதடைந்த சாலைகள்.
  • குறைந்தபட்சம் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சாலைப் பணிகள் தேர்வு செய்யப்படுகிறது.
  • கடந்து ஐந்து ஆண்டுகளில் வேறு எந்த ஊரக வளர்ச்சி மற்றும் நெடுஞ்சாலை துறை திட்டங்களின் கீழ் தேர்வு செய்யப்படாத சாலைகளை மட்டும் தேர்வு செய்யப்பட வேண்டும்.
  • இத்திட்டத்தில் ஓரடுக்கு மற்றும் ஈரடுக்கு ஜல்லி பரத்தி தார்ச்சாலை பணிகள் செய்யப்பட வேண்டும்.
  • இத்திட்டத்தில் தார்ச்சாலைப் பணிகள் மற்றும் சிமெண்ட் சாலைகள் தேர்வு செய்தல் கூடாது.
  • இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் சாலையின் அகலம் 7.50 மீட்டர் மற்றும் தார்ச்சாலை அகலம் 3.75 மீட்டர் இருக்க வேண்டும். மிகவும் அத்தியாவசியமான தேவைப்படும் இடங்களில் 3.00 மீட்டர் அகலத்திற்கு தார்ச்சாலை அமைக்கப்படுகிறது.

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம்

சட்ட மன்ற உறுப்பினர் ஒவ்வொருவரும் தனது தொகுதிக்குத் தேவைப்படும் முக்கியப் பணிகளை செயல்படுத்திடவும் மற்றும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளில் உள்ள இடைவெளிகளை நிரப்புவதுமே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

சிறப்பு அம்சங்கள்

இத்திட்டம், மாநில அரசின் முழு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டமாகும். இதன்படி ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தனது தொகுதிகளில் தேவைப்படும் பணியினைக் கண்டறிந்து அப்பணியினை செயல்படுத்திட பரிந்துரைப்பார் ஊரக மற்றும் நகர்ப் புறங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு

சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியாக ஆண்டு ஒன்றிற்கு ஒவ்வொரு தொகுதிக்கும் 2011-12 ஆம் ஆண்டு முதல் 2016-17 ஆம் ஆண்டு வரை ரூ.200.00 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது 2017-18ஆம் ஆண்டு முதல் ரூ.250.00 இலட்சமாக உயர்த்தி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வரையறுக்கப்பட்ட மற்றும் வரையறுக்கப்படாத நிதி

மொத்த ஒதுக்கீடான ரூ.250.00 இலட்சத்தில் ரூ.150.000 இலட்சம் வரையறுக்கப்பட்ட நிதியாகவும், அத்தொகையில் அரசால் குறிப்பிடப்பட்ட முன்னுரிமை பணிகளை மட்டும் செய்யப்படவேண்டும். மீதமுள்ள ரூ.100.000 இலட்சம் வரையறுக்கப்படாத நிதியாகவும் அத்தொகையில் சட்டமன்ற உறுப்பினர் தனது விருப்பப்படி சட்டமன்ற உறுப்பினர் திட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள பணிகளை தேர்வு செய்யலாம்.

மேற்கொள்ளப்படும் பணிகள் (ஊரகப் பகுதிகளில்)

வரையறுக்கப்பட்ட நிதியான ரூ.150.000 இலட்சத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் அவர் தம் விருப்பத்தின் அடிப்படையில் கீழ்க்கண்டவற்றுள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பணிகளை தேர்வு செய்யலாம்.

சூரிய சக்தியுடன் கூடிய தெரு விளக்குகள் நிறுவுதல், சரளை மற்றும் கப்பிச்சாலைகளை தார்ச்சாலையாக மேம்படுத்துதல், மிகவும் பழுதடைந்துள்ள தார்ச்சாலைகளைப் புதுப்பித்தல் (தேவையின் அடிப்படையில் தார்ச் சாலையில் உள்ள பள்ளங்களை நிரப்பி தார்ச்சாலைப் பணி மட்டும் மேற்கொள்ளல்), சிமெண்ட் கான்கிரிட் சாலைகள் அமைத்தல்.

அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு கால்நடை மருத்துவமனைகள் ஆகியவைகளுக்கு கட்டடம் மற்றும் சுற்றுச்சுவர் கட்டிக் கொடுத்தல் மற்றும் அரசு பள்ளிகள், ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள், ஆதி திராவிடர் நலப் பள்ளிகள், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள், அரசுக் கல்லூரிகள் மற்றும் அரசு தங்கும் விடுதிகள் ஆகியவைகளுக்கு கட்டடம் மற்றும் சுற்றுச்சுவர் கட்டுதல்.

மாற்றுத் திறனாளிகளுக்காக அரசு நடத்தும் சிறப்புப் பள்ளிகள் மற்றும் அரசு அனாதை விடுதிகள் ஆகியவைகளுக்கு உள்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுத்தல், பாலங்கள் கட்டுதல், கிராம ஊராட்சிகளில் இடுகாடு / சுடுகாடு வசதி இல்லாத பகுதிகளில் கூடுதலாக இடுகாடு, சுடுகாடுகள் மற்றும் சுற்றுச் சுவர் அமைத்தல், இந்திரா நினைவுக் குடியிருப்புத் திட்ட விதிமுறைகளின் அடிப்படையில் புதிய வீடுகள் கட்டுதல்.

மேற்கொள்ளப்படும் பணிகள் (நகர்ப்புறப் பகுதிகளில்)

சூரிய சக்தியுடன் கூடிய தெரு விளக்குகள் நிறுவுதல், சரளை மற்றும் கப்பிச்சாலைகளை தார்ச்சாலையாக மேம்படுத்துதல், மிகவும் பழுதடைந்துள்ள தார்ச்சாலைகளைப் புதுப்பித்தல் (தேவையின் அடிப்படையில் தார்ச் சாலையில் உள்ள பள்ளங்களை நிரப்பி தார்ச்சாலைப் பணி மட்டும் மேற்கொள்ளல்), சிமெண்ட் கான்கிரிட் சாலைகள் அமைத்தல்.

அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு கால்நடை மருத்துவமனைகள் ஆகியவைகளுக்கு கட்டடம் மற்றும் சுற்றுச்சுவர் கட்டிக் கொடுத்தல் மற்றும் அரசு பள்ளிகள், ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள், ஆதி திராவிடர் நலப் பள்ளிகள், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள், அரசுக் கல்லூரிகள் மற்றும் அரசு தங்கும் விடுதிகள் ஆகியவைகளுக்கு கட்டடம் மற்றும் சுற்றுச்சுவர் கட்டுதல்.

மாற்றுத் திறனாளிகளுக்காக அரசு நடத்தும் சிறப்புப் பள்ளிகள் மற்றும் அரசு அனாதை விடுதிகள் ஆகியவைகளுக்கு உள்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுத்தல்.

பாலங்கள் கட்டுதல், இடுகாடு/சுடுகாடு வசதிகளை ஏற்படுத்துதல், தேவையின் அடிப்படையில் மழைநீர் வடிகால் வசதிகளுடன் கூடிய சிமெண்ட் கான்கிரிட் நடைபாதைகள் அமைத்தல், புதிய பொது பூங்காக்கள் அமைத்தல், பொதுக் கழிப்பிடங்கள் கட்டுதல், ஜெட்ராடிங் இயந்திரங்கள் மற்றும் ஹைட்ராலிக் விசையால் இயக்கப்படுகின்ற தூர்வாரும் இயந்திரங்கள் வாங்குதல்.

தன்னிறைவுத் திட்டம்

தமிழ்நாடு அரசு பொதுமக்கள் பங்களிப்புடன் பணிகள் செயல்படுத்த தன்னிறைவுத் திட்டம் என்ற திட்டத்தினை 2011-12-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.

2017-18-ம் ஆண்டு தன்னிறைவுத் திட்டத்தின்கீழ் 10.83 இலட்சம் பொதுமக்கள் பங்குத் தொகை பெறப்பட்டு அங்கன்வாடி மையங்கள் மற்றும் சுற்றுச் சுவர் கட்டும் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திடக்கழிவு மேலாண்மை திட்டம்

மாவட்டத்தில் உள்ள 333 கிராம ஊராட்சிகளிலும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் பகுதி வாரியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பின்வரும் நடைமுறைகளால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்திட கீழ்கண்ட வழிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

  • 150 வீடுகளுக்கு ஒரு தூய்மை காவலர் வீதம் 2663 தூய்மை காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு வீடுதோறும் குப்பைகள் சேகாpக்கப்படுகின்றன.
  • 300 வீடுகளுக்கு ஒரு மூன்று சக்கர வண்டிவீதம் 2111 வண்டிகள் வழங்கப்பட்டு குப்பைகள் சேகரிக்கப்பட்டு தரம்பிரிக்கும் மையத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன.
  • 333 ஊராட்சிகளில் 910 தரம் பிரிக்கும் மையங்கள் மூலமாக மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகின்றன.
  • 1820 குப்பைகுழிகளில் மக்கும் குப்பைகள் இடப்பட்டு உரம் தயாரிக்கப்படுகிறது. 910 மக்காத குப்பைகள் சேகாpப்பு மையத்தில் ஒருங்கிணைப்பு மூலம் குழிகளில் இடப்பட்டு பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்படுகிறது.
  • மறுசுழற்சி செய்யக் கூடிய பிளாஸ்டிக் சார்ந்த குப்பைகளை 2 குப்பை அரைக்கும் இயந்திரங்கள் மூலமாக அரைக்கப்பட்டு 57 சாலைகளுக்கு 109.621 கி.மீ வரை பயன்படுத்தப்பட்டுள்ளது. (கிருஷ்ணகிரி வட்டாரம் கட்டிகானப்பள்ளி ஊராட்சி மற்றும் ஓசூர் வட்டாரம் கொத்த கொண்டப்பள்ளி ஊராட்சிகளில் பிளாஸ்டிக் அரைக்கும் இயந்திரங்கள் இயங்கி வருகின்றன.)
  • 62210 கி.கி. மக்கிய உரத்தினை விவசாயிகளுக்கு விற்பனை செய்ததின் மூலம் ரூ.80755/- ஐ (1 கிலோ ரூ.1.50 பைசா வீதம்) சம்மந்தப்பட்ட வங்கி கணக்கிற்கு செலுத்தப்பட்டுள்ளது.
  • மக்காத மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பைகளை விற்பனை செய்ததில் ரூ.43457/- வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
  • தினசரி நாளொன்றுக்கு ஊரக பகுதிகளில் 4 முதல் 6 டன்கள் வரை குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
  • 4694 குப்பைத்தொட்டிகள் ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டு குப்பைகளை சேகரிக்கப்படுகிறது.
  • தினசரி திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகளை மாவட்ட அளவில் இணையதளம் வாயிலாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டம்

தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில், நக்சலைட்டுகளின் பிரச்னைகளை தடுத்திடும் வகையில் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான சிறப்புத் திட்டமாக 2003-04ம் ஆண்டு சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு முறையே தலா ரூ.700 இலட்சம் மற்றும் ரூ. 50 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பசுமை வீடுகள் கட்டுதல், ஆவின் பாலகம் கட்டுதல், வேளாண் கூலி விவசாயிகளுக்கு பூச்சி மருந்து தெளிப்பான் வாங்குதல், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்குதல், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் குடிநீர் குழாய் விரிவாக்கம் செய்தல், அங்கன்வாடி மையங்களை நவீனப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளும் பல்வேறு பயிற்சித் திட்டங்களும் 2015-16ஆம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்பட்டன. 2016-17ம் நிதியாண்டிற்கும் இத்திட்டத்திற்காக ரூ.50.00 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

எல்.இ.டி.விளக்குகள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்டு, கிராம ஊராட்சிகளில் தெரு விளக்குகளில் உள்ள குழல் விளக்குகள், சோடியம் ஆவி விளக்குகள் மற்றும் பாதரச ஆவி விளக்குகளுக்கு பதிலாக எல்.இ.டி.விளக்குகள் பொருத்தும் பணிகள் 2015-16-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் 2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இயற்றப்பட்டது. 01/04/2008 முதல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நோக்கம்

  • ஒரு குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்கு 100 நாட்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி
  • இந்த வேலை வாய்ப்பின் மூலம் பொது சொத்துக்களை உருவாக்குதல்

புதிய அணுகுமுறைகள்

மொத்தம் உள்ள 333 ஊராட்சிகளிலும் தொழிலாளர்களின் ஊதியம்தர் வங்கி கணக்கில் மின்னணு நிதி மாற்றம் மூலமாக அரசு கணக்கிலிருந்து நேரடியாக தொழிலாளர்களின் வங்கி கணக்கிற்கு ஊதியத்தொகை வழங்கப்பட்டு வந்தது. தற்போது 09.11.2016 முதல் 333 ஊராட்சிகளிலும் தொழிலாளர்களின் ஊதியம் வங்கி கணக்கில் பயனாளியின் ஆதார் எண் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு தேசிய மின்னணு நிதி மாற்றம் மூலமாக ஊதியத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் சொத்துக்கள் அனைத்தும் கைபேசி செயலி (Mobile Application) மூலம் பணியின் விவரங்களை பூகோள குறியிடுதல் (Geo – Tagging) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புகைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

2017-18-ம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் முக்கிய திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளில் பணிபுhpயும் தொழிலாளர்களுக்கு மின்னனு வருகை பட்டியல் (e-MR) முறையில் பயனாளிகள் (தனியாகவோ அல்லது குழுவாகவோ) பிரதி செவ்வாய்கிழமை தோறும் வேலை கேட்பு விண்ணப்பத்தின் அடிப்படையில் வேலை ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இணையத்திலிருந்து பெறப்படும் மின்னனு வருகைப்பட்டியலின்படி வேலைக் கேட்பு அளித்த பயனாளிகளுக்கு பிரதி வியாழக்கிழமை முதல் புதன்கிழமை வரை பணி வழங்கப்படும். இதனால் பணிகள் எவ்வித பாரபட்சமும் இன்றி, எளிமையான முறையில் வெளிப்படையான முறையில் பணி கோருபவர்களுக்கு பணி வழங்கப்பட்டு வருகிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சீரிய முறையில் பணிகளை திறம்பட நிர்வகிக்கும் பொருட்டு “சீரிய நிர்வாகம்“ (Good Governance Activities) என்ற தலைப்பின் கீழ் இத்திட்டத்தில் தொடர்புடைய அனைத்து அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு பதிவேடுகள் மற்றும் ஆவணங்கள் பராமாpக்கப்படுகிறது.

ஒவ்வொரு பணித்தளத்திலும் பணி தொடர்பான தகவல் பலகை (Citizen Information Board) மற்றும் ஊராட்சியில் மேற்கொள்ளப்படும் பணிகள் தொடர்பாக சுவர் விளம்பரம் (Wall Painting) ஊராட்சி மன்ற அலுவலகம் / கிராம சேவை கட்டிடத்தில் எழுதுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நடைபெற்று வரும் பணிகளை பற்றி பொதுமக்கள் தொpந்து கொள்வதுடன் ஒளிவு மறைவற்ற நிர்வாகம் உறுதி செய்யப்படுகிறது. மேலும், விளம்பரங்களின் மூலமாக அனைத்து தரப்பு மக்களும் பயனடைய ஏதுவாக உள்ளது.

ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைத்தல் மற்றும் ஆதார் எண் அடிப்படையில் ஊதியத்தொகை வழங்குதல்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் சொத்துக்கள் அனைத்தும் கைபேசி செயலி மூலம் பணியின் விவரங்களை பூகோள குறியிடுதல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புகைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

2017-18-ம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் முக்கிய திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மின்னனு வருகை பட்டியல் முறையில் பயனாளிகள் (தனியாகவோ அல்லது குழுவாகவோ) பிரதி செவ்வாய்கிழமை தோறும் வேலை கேட்பு விண்ணப்பத்தின் அடிப்படையில் வேலை ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இணையத்திலிருந்து பெறப்படும் மின்னனு வருகைப்பட்டியலின்படி வேலைக் கேட்பு அளித்த பயனாளிகளுக்கு பிரதி வியாழக்கிழமை முதல் புதன்கிழமை வரை பணி வழங்கப்படும். இதனால் பணிகள் எவ்வித பாரபட்சமும் இன்றி எளிமையான முறையில் வெளிப்படையான முறையில் பணி கோருபவர்களுக்கு பணி வழங்கப்பட்டு வருகிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சீரிய முறையில் பணிகளை திறம்பட நிர்வகிக்கும் பொருட்டு “சீரிய நிர்வாகம்“ என்ற தலைப்பின் கீழ் இத்திட்டத்தில் தொடர்புடைய அனைத்து அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு பதிவேடுகள் மற்றும் ஆவணங்கள் பராமாpக்கப்படுகிறது.

ஒவ்வொரு பணித்தளத்திலும் பணி தொடர்பான தகவல் பலகை மற்றும் ஊராட்சியில் மேற்கொள்ளப்படும் பணிகள் தொடர்பாக சுவர் விளம்பரம் ஊராட்சி மன்ற அலுவலகம் / கிராம சேவை கட்டிடத்தில் எழுதுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நடைபெற்று வரும் பணிகளை பற்றி பொதுமக்கள் தொpந்து கொள்வதுடன் ஒளிவு மறைவற்ற நிர்வாகம் உறுதி செய்யப்படுகிறது. மேலும் விளம்பரங்களின் மூலமாக அனைத்து தரப்பு மக்களும் பயனடைய ஏதுவாக உள்ளது.

பணித்தளத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அசம்பாவிதத்தின் போது முதலுதவி மேற்கொள்ள முதலுதவி பெட்டிகள் மொத்தம் 672 எண்ணிக்கையில் வழங்கப்பட்டுள்ளது.

333 ஊராட்சிகளிலும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் தூய்மை காவலர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திட்டத்தின் கீழ் பயன் பெற தேவையான தகுதிகள்

  • 18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.
  • அந்த ஊராட்சிக்குள் குடியிருத்தல் வேண்டும்.
  • குடும்பத்திற்கு 100 நாட்கள் வேலை வழங்கப்படும்.
  • குடும்பத்தில் உள்ள 18 வயது நிரம்பிய அனைத்து உதவியாளா்களும் பதிவு செய்து வேலை அட்டை பெற்று கொள்ளலாம்.
  • எந்த ஒரு சாதாரண உடல் உழைப்பிலாலான வேலைகளையும் செய்வதற்கு விருப்பமுடையவராக இருக்க வேண்டும்.
  • ஆண் / பெண் இருபாலருக்கும் வேலை வழங்கப்படும்.
  • பயனாளிகள் அனைவரும் வங்கி கணக்கு மற்றும் ஆதார் எண் வைத்திருக்க வேண்டும்

பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா (கிராமின்)

  • இத்திட்டத்தில் 60% விழுக்காடு மத்திய அரசு நிதி 40% விழுக்காடு மாநில அரசு நிதி என்ற விகிதத்தில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இது ஒரு மத்திய அரசு திட்டமாகும்.
  • ஊரக பகுதியில் 2022-க்குள் வீடுகள் இல்லாதவர்களுக்கும் மற்றும் பழுதடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டி தருவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
  • வீடுகள் கட்ட தேவையான நிலப்பரப்பு 269 சதுரடி இருக்க வேண்டும்.
  • மொத்த மதிப்பீடு ரூ.170000 ஆகும். இதில் மத்திய அரசு நிதி (ரூ.72,000) + மாநில அரசு நிதி (ரூ.48,000) + மேற்கூரை அமைக்க மாநில கூடுதல் நிதி (ரூ.50,000).
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.12,000/- மதிப்பிலான கழிப்பறை கட்டிதரப்படுகிறது.
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழான மனிதசக்தி நாட்களை கொண்டு 90 நாட்களுக்கு வீடு கட்டப்படுகிறது. (90 X ரூ.205 = ரூ.18450)
  • சமூக பொருளாதார சாதி வாரியான கணக்கெடுப்பின் மூலம் வீடு இல்லாதவர்களை கண்டறிந்து அதன் மூலம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்.

பயனாளிகளின் தகுதிகள்

  • வீடு இல்லாத பயனாளிகள்.
  • ஆதரவற்ற கைவிடப்பட்டவர்கள் மற்றும் பிச்சை பெறுபவர்கள்.
  • மனித கழிவுகளை கையால் எடுத்து அப்புறப்படுத்துபவர்கள்.
  • புராதான மலைவாழ் மக்கள்.
  • சட்டபூர்வமாக விடுவிக்கப்பட்ட கொத்தடிமைகள்.

பாராளுமன்ற உறுப்பினர் உள்ளுர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம்

23.12.1993 அன்று மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களால் இத்திட்டம் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. முதலில் இத்திட்டமானது ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. இத்திட்டத்தின் முதல் வழிகாட்டு நெறிமுறைகள் பிப்ரவாp 1994-ல் வெளியிடப்பட்டது. இதில் இத்திட்டத்தின் கருத்து செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல் ஆகியன தொpவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் அக்டோபர் 1994-ல் புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டது. இத்திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் கடைசியாக ஜுன் 2016-ல் திருத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் நோக்கமானது பாராளுமன்ற உறுப்பினர் தங்களது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், ஆரம்பக்கல்வி, பொது சுகாதாரம், தூய்மைப் பணிகள், சாலைப்பணிகள் மற்றும் இதர பணிகளில் முக்கியமானவற்றை தேர்வு செய்து செயல்படுத்த பாpந்துரைக்க வேண்டும்.

இத்திட்ட ஆரம்ப காலமான 1993-94-இல் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் ரூ.50.000 இலட்சமாக ஒதுக்கப்பட்ட தொகுதி நிதியானது 1994-95 இல் ரூ.1.000 கோடியாக உயர்த்தப்பட்டது. பின்னர் 1998-99-இல் ரூ.2.000 கோடியாக உயர்த்தப்பட்ட இத்தொகுதி நிதியானது 2011-12 நிதியாண்டு முதல் ரூ.5.000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ரூ.5.000 கோடியில் ரூ.10.000 இலட்சம் நிர்வாக செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்

கட்டம் I

கிராமப்புற மக்களின் வறுமையை போக்கும் விதமாக “பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தினை” 25 டிசம்பர் 2000-ல் மத்திய அரசால் ஆரம்பிக்கப்பட்டது.

அனைத்து காலங்களிலும் ஆண்டு முழுவதும் உதவக்கூடிய வகையிலும் சிறுபாலங்கள் மற்றும் வடிகால் வசதியுடன் கூடிய சாலைகள் அமைக்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மக்கள் தொகை 500 உள்ள அனைத்து குக்கிராமங்களிலும் சாலைகள் மூலம் இணைக்க இத்திட்டத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

கட்டம் II

இத்திட்டம் மே-2013-ல் தொடங்கப்பட்டது. மக்களின் போக்குவரத்து மற்றும் சந்தை வசதிக்காக ஏற்கனவே உள்ள கிராம சாலைகள் மேம்படுத்தப்படுகின்றன. மக்களின் பொருளாதாரம் மற்றும் ஊரக சந்தைகள் மேம்பாடு அடையும் வகையில் இத்திட்டத்தின் மூலம் சாலைகள் அமைக்கப்படுகின்றன.

தூய்மை பாரத இயக்கம்

தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) – முக்கிய நோக்கங்கள்

  • கிராம பகுதிகளில் தூய்மை சுகாதாரம் மற்றும் திறந்தவெளி மலம் கழித்தலற்ற நிலையினை உருவாக்கி அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்த ஊக்குவித்தல்.
  • 02 அக்டோபர் 2019-ற்குள் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்)-த்தின் குறிக்கோளினை அடைய கிராமப்புறங்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்த துரிதப்படுத்துதல்
  • சமூக ஊக்குவிப்பாளர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை நிறுவனங்கள் மூலம் கிராமப்புறங்களில் சுகாதாரம் குறித்து கல்வி மற்றும் விழிப்புணாதர்வுகள் செய்து அப்பகுதிகளில் நீடித்த நிலைத்த சுகாதாரத்தினை ஏற்படுத்துதல்.
  • பாதுகாப்பான சுற்றுச்சூழல் மற்றும் நீடித்த நிலைத்த சுகாதாரத்தினை ஏற்படுத்தும் பயனுள்ள தொழில்நுட்பங்களை ஊக்குவித்தல்.
  • கிராமப்புறங்களில் தூய்மைக்காக திட மற்றும் திரவ கழிவுகளை அகற்ற தூய்மை பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்தல்.
  • தனிநபர் இல்லக் கழிப்பறையினை கட்டி அதனை பயன்படுத்தும் பயனாளிகளுக்கு ரூ.12000.00 ஊக்கத்தொகை வழங்குதல் (மத்திய அரசு பங்கு ரூ.7800.00 மாநில அரசு பங்கு ரூ.4200.00)
  • 02/10/2014 அன்று தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) தொடங்கப்பட்டது.
  • தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டும் பயனாளிகளுக்கு வழங்கப்படும் ஊக்க தொகையில் மத்திய அரசு மற்றும் மாநில அரசின் பங்கு விகிதம் 60:40

பயனாளிகளுக்கான தகுதிகள்

  1. குடும்பம் வறுமை கோட்டிற்குள் இருக்க வேண்டும்.
  2. வறுமை கோட்டிற்கு மேல் உள்ள SC / ST சிறு குறு விவசாயிகள், நிலமற்ற விவசாய கூலித் தொழிலாளர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்களை குடும்ப தலைவர்களாக கொண்ட குடும்பங்கள்.
  3. மத்திய மற்றும் மாநில அரசுகளின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகள், இந்திரா அவாஸ் யோஜனா பயனாளிகள், முதலமைச்சரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடு திட்ட பயனாளிகள்.
  4. மேற்கண்ட குடும்பங்களில் ஏற்கனவே மத்திய மாநில அரசு திட்டங்களில் தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டியதற்கான ஊக்கத் தொகை பெறாத அனைத்து குடும்பங்கள்.

தூய்மை கிராம விருது

தூய்மை கிராமத்திற்கான விருதினை சட்டசபையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் அறிவிக்கப்பட்டு அரசாணை எண்: 30, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நாள்:13/01/2012-ன்படி அறிவிக்கப்பட்டது. கிராமப்புற மேம்பாட்டிற்காக மாவட்டத்தில் உள்ள தூய்மையான கிராமங்களுக்கு விருதுகள் வழங்கி, அதன் மூலமாக அக்கிராமத்தில் நல்ல சுகாதார பழக்க வழக்கங்களை கடைப்பிடித்திட வழிவகை செய்யப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு தூய்மையான கிராம ஊராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டு அவ்வூராட்சிக்கு ரூ.5.00 இலட்சம் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.

திட்டத்தின் கீழ் பயன் பெற தேவையான தகுதிகள்

  • கிராம ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளிலும் 100 சதவீதம் கழிப்பறை பயன்பாடு
  • கிராம ஊராட்சியில் உள்ள பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் 100 சதவீத கழிப்பறை பயன்பாடு.
  • கிராம ஊராட்சியில் திறந்த வெளிமலம் கழித்தலற்ற நிலை இருத்தல் வேண்டும்.
  • கிராம ஊராட்சியில் ஒருங்கிணைந்த மகளிர் மற்றும் ஆண்கள் சுகாதார வளாகம் முழு பயன்பாட்டில் இருத்தல் வேண்டும்.
  • கிராம ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளிலும் 100 சதவீத மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இருத்தல் வேண்டும்
  • வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரினை வேளாண்மை மற்றும் காய்கறி தோட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும்
  • கிராம ஊராட்சியில் வெளியேற்றப்படும் திட கழிவுகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரித்து மக்கும், குப்பைகளை உரமாக மாற்றிட ஊக்குவித்தல் வேண்டும்.

தூய்மையான கிராம ஊராட்சிக்கு வழங்கப்படும் ரூ. 5.00 இலட்சம் நிதியினை திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கும் மற்றும் சுகாதார மேம்பாட்டு பணிகளுக்காகவும் பயன்படுத்தப்பட வேண்டும்.

தேசிய ரூர்பன் திட்டம்

மத்திய அமைச்சகத்தால் “ஷ்யாம் பிரசாத் முகர்ஜி ரூர்பன் மிஷன்” திட்டம் 16.09.2015 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டு 06.11.2015 முதல் செயல்படுத்தி வருகிறது. மேலும் இத்திட்டம் தற்போது “நேஷனல் ரூர்பன் மிஷன்” என அழைக்கப்படுகிறது.

ஊரகப் பகுதிகளின் சமூக பொருளாதார வளர்ச்சியினை நகர்ப்புற பகுதிக்கு இணையாக உயர்த்தும் பொருட்டு இந்திய அரசு இத்திட்டத்தினை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ் கிராம ஊராட்சிகள் தொகுப்பு கிராம ஊராட்சிகளாக செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின்கீழ் 300 கிராம ஊராட்சிகளின் சமூக பொருளாதார வளர்ச்சியினை நகர்ப்புற பகுதிக்கு இணையாக உயர்த்தி திட்டமிடப்பட்டு செயல்படுத்தி வருகிறது.

தற்போது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அலசப்பள்ளி பட்வாரப்பள்ளி தொகுப்பு கிராம ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு 2018 முதல் 2021 வரை 3 ஆண்டுகளுக்கு பணிகள் செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அலசப்பள்ளி பட்வாரப்பள்ளி தொகுப்பு ஊராட்சியில் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராம ஊராட்சிகள்.

  1. அலசப்பள்ளி பட்வாரப்பள்ளி
  2. பாகலூர்
  3. பெலத்தூர்
  4. ஈச்சாங்கூர்
  5. நந்திமங்கலம்
  6. சேவகானப்பள்ளி
  7. தும்மனப்பள்ளி

நாடாளுமன்ற உறுப்பினர் மாதிரி கிராமத் திட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர் மாதிரி கிராமத் திட்டம் 11.10.2014ல் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் http://saanjhi.gov.in வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் கிராமங்களில் அனைத்து துறைகளின் திட்டங்களையும் ஒருங்கிணைத்து, ஒருமுகப்படுத்தி, மாதிரி கிராமங்களில் செயல்படுத்தி அனைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். கிராம ஊராட்சியே இத்திட்டசெயலாக்கத்தின் அடிப்படை அலகாகும். சமவெளிப்பகுதிகளில் மக்கள் தொகை 3000 முதல் 5000 வரையும், மலைப்பகுதி மற்றும் பழங்குடி கிராமங்கள் எனில் மக்கள் தொகை 1000 முதல் 3000 வரையும் உள்ள கிராம ஊராட்சியை ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தேர்ந்தெடுக்க வேண்டும். மாவட்டங்களில் இந்த அலகு அளவுக்கு மக்கள் தொகை கிடைக்கவில்லை என்றால் ஏறக்குறைய இதே அளவுக்கு மக்கள் தொகை உள்ள கிராம ஊராட்சிகளை தேர்வு செய்யலாம்.

நாடாளுமன்ற உறுப்பினர் தனது (அ) தனது மனைவியின் / கணவனின் சொந்த கிராமத்தை தவிர்த்து இதர கிராமங்களிலிருந்து மாதிரி கிராமமாக உருவாக்க வேண்டிய கிராம ஊராட்சியை தங்கள் விருப்பப்படி கண்டறியலாம். மக்களவை உறுப்பினர் தனது தொகுதிக்குள்ளும், மாநிலங்களவை உறுப்பினர் தனது மாநிலத்திற்குள்ளும், நியமன உறுப்பினர் இந்திய அளவில் எந்த ஒரு மாநிலத்திலும், ஒரு கிராமத்தைதேர்ந்தெடுக்கலாம். நகர்ப்புற தொகுதியை பொறுத்தவரையில் கிராம ஊராட்சிகள் இல்லையெனில் சம்பந்தப்பட்ட மக்களவை உறுப்பினர் அருகிலுள்ள ஊரகத் தொகுதியிலிருந்து கிராமத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் மாதிரி கிராமமாக உருவாக்க வேண்டிய ஒரு கிராம ஊராட்சியை உடனடியாகவும் மற்ற இரண்டு கிராம ஊராட்சிகளை பின்னரும் தெரிவு செய்ய வேண்டும்.

முக்கியமாக, 2019 மார்ச் மாதத்திற்குள் மூன்று மாதிரி கிராமங்களை உருவாக்க வேண்டும், அதில் ஒன்று 2016க்குள் உருவாக்கப்படுதல் வேண்டும். இவ்வாறாக 2024-க்குள் 5 மாதிரி கிராம ஊராட்சிகளை (ஆண்டிற்கு ஒன்று வீதம்) தேர்வு செய்து மேம்படுத்த வேண்டும்.

அரசு தலைமை செயலாளரின் தலைமையிலான உறுப்பினர்கள் அடங்கிய மாநில அளவிலான அதிகாரம் அளிக்கப்பட்ட குழு அரசாணை நிலை எண்.23, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி (ம.அ.தி 2) துறை நாள் 13.02.2015ன்படி அமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரி கிராமங்களில் பல்வேறு துறைகளின் ஏற்கனவே நடைமுறையில் உள்ள அரசுத் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு என தனியாக நிதி ஒதுக்கீடு எதுவும் செய்யப்படவில்லை. மேலும், புதிய உட்கட்டமைப்பு மற்றும் கட்டுமானம் தொடர்புடைய திட்டங்களும் அனுமதிக்கப்படவில்லை. அனைத்து வளங்களும் ஒரே இலக்கினை நோக்கி ஒருங்கிணைந்த வகையில் அதிகபட்ச பயன்களை தரும் வகையில் உபயோகிக்கப்பட வேண்டும்.

மத்திய அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களில் தொடர்புடைய அமைச்சகம், மத்திய அரசுத் துறைகள் / மத்திய அரசு நிதிப் பங்களிப்போடு செயல்படுத்தப்படும் திட்டங்களில் மாதிரி கிராமங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகளில் தகுந்த மாற்றங்கள் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தொடர்பு அலுவலர் விவரம்

பெயர் / பதவி

தொடர்பு எண்

மின்னஞ்சல் முகவரி

முகவரி

கண்காணிப்பாளர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கிருஷ்ணகிரி.

04343-230022

drda[dot]tnkgi[at]nic[dot]in

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கிருஷ்ணகிரி.

துணை வட்டார வளர்ச்சி அலுவலர், கிருஷ்ணகிரி.

04343-236128

Kgikgri[dot]tnkgi[at]nic[dot]in

வட்டார வளர்ச்சி அலுவலகம்,கிருஷ்ணகிரி.

வட்டார வளர்ச்சி அலுவலர், காவேரிப்பட்டிணம்.

04343-252026

kgikpnm[dot]tnkgi[at]nic[dot]in

வட்டார வளர்ச்சி அலுவலகம், காவேரிப்பட்டிணம்

வட்டார வளர்ச்சி அலுவலர், பர்கூர்.

04343-265951

kgibgur[dot]tnkgi[at]nic[dot]in

வட்டார வளர்ச்சி அலுவலகம், பர்கூர்

துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மத்தூர்

04341-256234

kgimthr[dot]tnkgi[at]nic[dot]in

வட்டார வளர்ச்சி அலுவலகம், மத்தூர்

துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஊத்தங்கரை.

04341-220002

kgiugri[dot]tnkgi[at]nic[dot]in

வட்டார வளர்ச்சி அலுவலகம், ஊத்தங்கரை.

துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வேப்பனப்பள்ளி.

04343-260422

kgivnpi[dot]tnkgi[at]nic[dot]in

வட்டார வளர்ச்சி அலுவலகம், வேப்பனப்பள்ளி.

துணை வட்டார வளர்ச்சி அலுவலர், சூளகிரி.

04344-252224

kgisgri[dot]tnkgi[at]nic[dot]in

வட்டார வளர்ச்சி அலுவலகம், சூளகிரி.

துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஒசூர்.

04344-222478

kgihsur[dot]tnkgi[at]nic[dot]in

வட்டார வளர்ச்சி அலுவலகம், ஒசூர்.

துணை வட்டார வளர்ச்சி அலுவலர், கெலமங்கலம்.

04347-232228

kgikmgm[dot]tnkgi[at]nic[dot]in

வட்டார வளர்ச்சி அலுவலகம், கெலமங்கலம்.

துணை வட்டார வளர்ச்சி அலுவலர், தளி.

04347-234226

kgithly[dot]tnkgi[at]nic[dot]in

வட்டார வளர்ச்சி அலுவலகம், தளி.

ஆதாரம் : https://krishnagiri.nic.in/

கடைசியாக மாற்றப்பட்டது : 7/7/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate