অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

திருநெல்வேலி - வரலாறு

திருநெல்வேலி - வரலாறு

மாவட்டத்தின் தோற்றம்

1790-ல் கிழக்கு இந்தியா கம்பெனியால் திருநெல்வேலி மாவட்டம் உருவாக்கப்பட்டு பின் பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியாவின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் வந்தது. ஆற்காடு நவாப்பிடமிருந்து 1801-ல் பிரிட்டிஷார் இந்த நகரை கையகப்படுத்தி “Tinnevelly’ மாவட்டம் என பெயரிட்டனர். முதலில் திருநெல்வேலி நகரை அடுத்து அமைந்துள்ள பாளைங்கோட்டையை தலைமையிடமாக கொண்டுதான் இந்த மாவட்டம் ஆரம்பிக்கப்பட்டது. பாளையக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நடைபெற்ற போது பாளையங்கோட்டையைத்தான் பிரிட்டிஷார் தங்களது இராணுவ தலைமையிடமாக வைத்திருந்து செயல்பட்டனர். பின் காலங்களில் திருநெல்வேலி நகரை தலைமையிடமாக கொண்டு செயல் பட்டதாலும், திருநெல்வேலி சீமை என நாயக்கர் நவாப் காலங்களில் அழைக்கப்பட்டதாலும் இது தொடர்ந்து ”திருநெல்வேலி மாவட்டம்” என்ற பெயரில் அழைக்கப்படலாயிற்று. 20-10-1986 முதல் திருநெல்வேலி மாவட்டம் பிரிக்கப்பட்டு தூத்துக்குடி என்ற புதிய மாவட்டம் உதயமானது. இம்மாவட்டதிலுள்ள திருநெல்வேலி, பாளையங்கோட்டை என்ற இரு நகரங்களும் இரட்டை நகரங்கள் என அழைக்கப்பட்டு எல்லாவிதத்திலும் வேகமாக வளர்ந்தன.

புவியியல் அமைப்பு

உலக வரைபடத்தில் 08.8’ மற்றும் 09.23’ இடையேயுள்ள அட்சரேகையிலும் 77.09’ மற்றும் 77.54’ இடையேயுள்ள தீர்க்க ரேகையிலும் திருநெல்வேலி மாவட்டம் அமைந்துள்ளது. இம் மாவட்த்தின் மொத்த பரப்பளவு 6.823 சதுர கி.மீ. ஆகும்.

எல்லைகள்

திருநெல்வேலி மாவட்டமானது மேற்கே கேரளா, தென்கிழக்கில் மன்னார்வளைகுடா, வடக்கே விருதுநகர், கிழக்கே தூத்துக்குடி, தெற்கே கன்னியாகுமரி மாவட்டங்களால் சூழப்பட்டுள்ளது.

நிர்வாக அமைப்பு

மாவட்ட நிர்வாகமானது 3 வருவாய் கோட்டங்களையும், 16 வட்டங்களையும், 19 ஊராட்சி ஒன்றியங்களையும் 559 வருவாய் கிராமங்களையும் மற்றும் 425 கிராம பஞ்சாயத்துக்களையும் உள்டக்கியது.

காலநிலை மற்றும் மழைப்பொழிவு

மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் ஒரு வித்தியாசமான காலநிலை உள்ளது. 2015-2016 ஆண்டில் 1332.6 மிமீ அளவில் மழை பெய்தது. மாவட்டத்தில் 2012-2013 ஆம் ஆண்டைத் தவிர கடந்த 7 ஆண்டுகளாக சராசரி அளவிற்கதிமாக மழைப்பொழிவு பெறப்பட்டது. தென்மேற்கு பருவக்காற்று (1050.6 மிமீ), தென் மேற்கு பருவக்காலம் (158.3 மிமீ), கோடை (111.1 மிமீ) மற்றும் குளிர்காலம் (12.1 மி.மீ) ஆகியவற்றால் அதிகபட்ச மழை பெய்யும். இருப்பினும், குளிர்கால மற்றும் வெப்பமான கோடை பருவங்களில் மழையளவு பற்றாக்குறையாகத்தான் கிடைத்தது.

தொழில்

மாவட்டத்தின் பொருளாதாரத்தில் விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. மொத்த நிலப்பரப்பு 675850 ஹெக்டேரில், பயிரிடப்பட்ட நிலபரப்பு 206858 ஹெக்டேர் ஆகும். இது மொத்த நிலப்பரப்பில் 30.61 சதவீதமாகும். நெல், மக்காச்சோளம், சோளம் மற்றும் பிற சிறு தானியங்கள் முக்கிய உணவுப் பயிர்கள். பருத்தி, மிளகாய், கரும்பு மற்றும் நிலக்கடலை போன்ற வர்த்தக பயிர்களும் 2,06,858 ஹெக்டேர் பரப்பளவில் மொத்தம் 31,771 ஹெக்டேர் பரப்பளவில் ஒன்றுக்கு மேற்பட்ட முறையில் விதைக்கப்பட்டன.

நீர்ப்பாசனம்

இம் மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் அமைந்துள்ளது இந்த மாவட்டத்தின் சிறப்பாகும். இம் மலைகளிலிருந்துதான் கிழக்கு நோக்கி ஓடும் அனைத்து வற்றாத ஆறுகளும் பாய்கின்றன, மாவட்டத்தின் நதிகள் தாமிரபரணி, வைப்பார், நம்பியார் மற்றும் ஹனுமன் நதிகள் ஆகும். தாமிரபரணி மாவட்டத்தின் முக்கிய நதியாகும். பிற நதிகளான சேர்வலாறு, மணிமுத்தாறு, ராமநதி, பச்சையாறு, சித்தாறு மற்றும் உப்போடை ஆகியவை மழையளவு கூடுதலாக இருக்கும் பருவகாலங்களில் மட்டுமே ஓடும். மாவட்டத்தில் அமைந்துள்ள பல்வேறு கால்வாய், குளங்கள் மற்றும் கிணறுகள் மூலமாக நீர்பாசனம் முறையாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 154246 ஹெக்டேர் நிலப்பரப்பு பயனடைந்துள்ளது. இதில் கிணறுகள் மூலமாக 71307 ஹெக்டேரும், குளங்கள் மூலம் 55545 ஹெக்டேரும், கால்வாய்கள் மூலமாக 27394 ஹெக்டேரும் சேர்ந்து மொத்தமாக விளை நிலமாக உள்ளன.

தொழிற்சாலை

மாவட்டத்தில் 25 நடுத்தர மற்றும் பெரிய தொழிற்சாலைகள் உள்ளன. சிமிண்ட், பருத்தி நூல், கரும்பு, அரிசி, எண்ணெய் மற்றும் காகிதம் தயாரித்தல் ஆகிய தொழிற்சாலைகள் மாவட்டத்திலுள்ளன. பிற தொழிற்சாலைகளில் குண்டூசி, தீப்பெட்டி, பீடித் தொழில், பாத்திரங்கள் தயாரித்தல் போன்றவை முக்கியமானவைகள் ஆகும். கிராமங்களில் கைத்தறி, செங்கல் மற்றும் கருப்பட்டி தயாரித்தல் ஆகிய தொழில்கள் சிறு தொழில்களாக நடைபெற்று வருகின்றன. இங்கு தயாரிக்கப்படும் நூல் சேலைகள் மற்றும் நூல் கைலிகள் வட இந்தியாவில் விற்க்கப்படுகின்றன. கல்லிடைக்குறிச்சி அப்பளம், காருகுறிச்சி மண்பாண்டம் மற்றும் திருநெல்வேலி அல்வா ஆகியவைகள் இந்த மாவட்டத்திற்கு பெருமை தேடித் தரும் தொழில்களாகும்.

சுற்றுலா தளங்கள்

மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தின் தென்காசி வட்டத்திலுள்ள குற்றாலம் நீர்வீழ்ச்சியானது உலக புகழ் பெற்றதாகும். பாறைகள் வழியே ஓடி அருவியாக கொட்டும் குற்றால அருவியானது சிறிய நீர்த் திவலைகளாக உருமாறு காற்றில் கலந்து முகத்தில் தெறிப்பது சிறப்பான உணர்வாகும். பற்பல மருத்துவ குணங்கள் கொண்ட மரஞ் செடிகளுக்கிடையே பாய்ந்து வரும் குற்றால நீரில் குளிப்பது உடலுக்கும் உள்ளத்திற்கும் நன்மை உண்டாக்கும்.

மாவட்டத்தில் பாபநாசம் மற்றும் அகஸ்தியர் அருவி போன்றவைகளும் சிறப்பான சுற்றுலா தளங்களாகும். களக்காடு மற்றும் முண்டந்துறை வனவிலங்கு சரணாலயத்தில் புள்ளி மான்கள், சிங்கவால் குரங்கு, யானைகள், புலிகள் ஆகியவை நிறைய காணப்படுகின்றன. நாங்குநேரி வட்டத்திலுள்ள கூந்தன் குளம் பறவைகள் சரணாலயமும் ஓரு முக்கிய சுற்றுலா தளமாகும்.

ஆதாரம் : தமிழ்நாடு அரசு வலைதளம்

கடைசியாக மாற்றப்பட்டது : 5/6/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate