অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

தமிழ்நாடு புவியியல் அமைப்பும் தேர்தல்களும்

தமிழ்நாடு புவியியல் அமைப்பும் தேர்தல்களும்

முன்னுரை

தமிழகம் என அழைக்கப் பெறும் தமிழ்நாடு (Tamil Nadu) இந்தியாவின் 28 மாநிலங்களில் ஒன்றாகும். மதராஸ் மாநிலம் என்று இருந்த பெயர் 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு என மாற்றப்பட்டது. இதன் தலைநகராக சென்னை உள்ளது. தமிழ்நாடு இந்தியத் துணைக்கண்டத்தின் தென்முனையில் அமைந்துள்ளது. இதன் ஆட்சிப்பகுதி எல்லைகளாக மேற்கிலும் வடக்கிலும் கேரளா, கருநாடகா மற்றும் ஆந்திர மாநிலங்கள் உள்ளன.

புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளைச் சுற்றிலும் தமிழ்நாடு மாநிலம் எல்லைகளைக் கொண்டுள்ளது. புவியியல் எல்லைகளாக வடக்கே கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரும், மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் நீலமலை வீச்செல்லை, ஆனை மலை வீச்செல்லை, பாலக்காடு கணவாய் ஆகியவையும் கிழக்கில் வங்காள விரிகுடாக் கடலும், தென்கிழக்கில் மன்னார் வளைகுடா, பாக்கு நீரிணை ஆகியவையும் தெற்கில் இந்தியப் பெருங்கடலும் உள்ளன.

தமிழகம் ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் தமிழில் சென்னை மாகாணம் என்றும் அழைக்கப்பெற்றது. இதனை தமிழ்நாடு என்று மாற்றக்கோரி போராட்டங்கள் நடைபெற்றன. சங்கரலிங்கனார் என்பவர் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தார். பின்னர் மதராசு ஸ்டேட் என்று இருந்த பெயர் 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது.

தமிழ்நாடு இந்திய மாநிலங்களில் பரப்பளவில் 11வதாகவும் மக்கள் தொகையில் ஏழாவதாகவும் விளங்குகிறது. இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்திக்குப் பங்களிப்பதில் நான்காவதாக (2010இல்) உள்ளது.

2006ஆம் ஆண்டில் மனித வளர்ச்சிச் சுட்டெண்ணில் பத்தாமிடத்தில் (ஒன்றிய ஆட்சிப்பகுதிகளையும் சேர்த்தால் பதினாறாவது இடத்தில்) இருந்தது. மேலும் இந்தியாவிலேயே அதிக நகர்ப்புறமாக்கப்பட்ட மாநிலமாகத் திகழ்கிறது.

இந்தியாவின் 6% மக்கள்தொகையே கொண்டிருந்தும் மிகக் கூடுதலான வணிக நிறுவனங்கள் கொண்ட மாநிலமாகவும் (10.56%) மொத்த வேலை வாய்ப்புகள் கொண்ட மாநிலங்களுள் இரண்டாவதாகவும் (9.97%) விளங்குகிறது.

தமிழக அரசியல் வரலாறு

1986 வரை தமிழ் நாட்டில் இரண்டு அடுக்கு சட்ட மன்றங்கள் இருந்தன. தற்பொழுது ஒரு அவை மட்டுமே உள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றுக்கும் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்து எடுக்கப் படுகின்றனர்.

தமிழ் நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளாக திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை விளங்குகின்றன. காங்கிரஸ் கட்சி, மார்க்சிய கட்சிகள், பாட்டாளி மக்கள் கட்சி , மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், பாரதிய ஜனதா கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சி, மூவேந்தர் முன்னேற்ற கழகம், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, மற்றும் முஸ்லிம் லீக் ஆகியவையும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த கட்சிகளாக உள்ளன.

காமராஜர், ஈ. வெ. ராமசாமி, அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்கள் தமிழக அரசியலில் முக்கியம் வாய்ந்தவர்களாகக் கருதப்படுகின்றனர். ஊழல், காழ்ப்புணர்ச்சி, அரசியல் பகை போன்ற குற்றச்சாட்டுகள் பெரும்பான்மையாக இருந்தாலும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும், சமூக மாற்றங்களுக்கும் தமிழக அரசியல் முக்கிய ஊன்றுகோலாக இருந்தது என்று சொல்வது மிகையாகாது.

1900 - 1947

தமிழகத்தின் முதல் அரசியல் கட்சியாக நீதிக்கட்சி விளங்கியது. 1916 ஆம் ஆண்டு தியாகராய செட்டி அவர்களால் தொடங்கப்பட்டது. மதராஸ் மாகாணத்தில் 1920 இல் நடந்த தேர்தலில் 98 தொகுதிகளில் 63 தொகுதிகள் வெற்றி பெற்று பெரும்பான்மையாக ஆட்சியைப் பிடித்தது.

காங்கிரஸ் கட்சியில் இருந்த பெரியார், இட ஒதுக்கீடு சம்பத்தப்பட்ட கொள்கையில் கருத்து வேறுபாடு காரணங்களினால் நீதிக் கட்சியில் சேர்ந்தார். 1944 ஆம் ஆண்டு நீதிக் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார். பின்பு நீதிக் கட்சியை திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றினார். அக்கட்சி பின்பு திராவிட கொள்கைகளும், ஹிந்தி எதிர்ப்பு கொள்கைகளும், தனித் திராவிட நாடு கொள்கைகளும் மக்களிடம் பரப்பி கொண்டு வந்தது. ஆட்சி அதிகாரத்தில் விருப்பம் இல்லாமல் இருந்த பெரியாரை விட்டு பிரிந்த அறிஞர் அண்ணா பின்பு திராவிட முன்னேற்ற கழகத்தைத் தொடங்கினார்.

1947 - 1962

இந்திய சுதந்திரத்திற்கு பின் காங்கிரஸ் அனைத்து மாநிலங்களிலும் ஜனநாயக முறையில் பெரும் வெற்றியைப் பெற்றது என்று சொல்வது மிகையாகது.

மொழி அரசியல் இக்கால கட்டத்தில் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற ராஜாஜி சிறிது காலத்திலேயே கட்சிக்குள்ளே ஏற்ப்பட்ட கருத்து வேறுபாடுகளால் முதலமைச்சர் பதவியை துறந்தார். இதன் பின் முதல்வர் பதவி ஏற்ற காமராஜ் தமிழகத்தில் மிக பெரிய அளவில் கல்வி மற்றும் தொழில் துறையில் பெரும் புரட்சி ஏற்படுத்தினார்.

இவர் காலத்தில் தொடங்கிய மதிய உணவு திட்டம் இன்று தமிழகம் கல்வியறிவில் சிறந்து விளங்க முக்கிய காரணமாக உள்ளது. இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிளும் முதல் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு உள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கு மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.

மேலும் விவசாயம் மற்றும் தொழில் வளம் பெருகிட இந்த ஆட்சி உதவியது. தமிழக அரசியலில் மிக முக்கியமான கல்வி மற்றும் தொழில் வளர்ச்சி இக்காலத்தில் ஏற்பட்டதால் அரசியல் ஆர்வலர்கள், பெரும்பானவர்கள் கட்சி, கொள்கை வேறுபாடின்றி பாராட்டும் 'பொற் கால ஆட்சி' முக்கிய கூறாக விளங்கியது. திராவிட இயக்கத்தில் இருந்து பிரிந்த அண்ணா 1949ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகத்தைத் சென்னை இராயபுரம் ராபின்சன் பூங்காவில் தொடங்கினார்கள். 1952ஆம் ஆண்டு முதல் இந்தி எதிர்ப்பு போராட்டம் பெரியாரால் தொடங்கி வைக்கப்பட்டது.

1962 - 1967

1965 மற்றும் 1968ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்கள் தமிழக அரசியலில் பெரிய மாற்றங்களை கொண்டு வந்தது. தனி தமிழ்நாடு போராட்டங்கள் 1939 முதல் இருந்தாலும் 1963ஆம் அன்றைய பிரதமர் நேரு கொண்டு வந்த சட்டம் தனிநாடு கேட்கும் கட்சிகளை தடை செய்தது. பின்பு அண்ணா அக்கோரிக்கையை கைவிட்டார். 1960களில் திமுக போராடிய ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்கள் 1967 தேர்தலில் அவர்களுக்கு பேரும் வெற்றியை கொண்டு வந்தது. அன்று முதல் இன்று வரை திராவிட கட்சிகளே தமிழக ஆட்சி கட்டிலில் அமர்கின்றனர்.

1967 - 1971

அண்ணா முதலமைச்சர் கட்டிலில் 2 ஆண்டுகள் வகித்தார். இக்காலத்தில் மதராஸ் மாகாணம் என்பது தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டது. இரு மொழி கொள்கையும், சுயமரியாதை கல்யாணம், இட ஒதுக்கீடு ஆகியவை சட்டங்களாக இயற்றப்பட்டன. இரண்டே ஆண்டுகள் ஆட்சி செய்தாலும் நிறைய சமூக மாற்றங்களுக்கு இந்த ஆட்சி முக்கிய பங்கு வகித்தது.

எம். ஜி. ஆர், எஸ். எஸ். ஆர், கண்ணதாசன், சிவாஜி போன்ற சினிமா பிரபலங்கள் இக்கால கட்டத்தில் அரசியல் களத்தில் புகழ் பெற்றனர். 1969ஆம் ஆண்டு அண்ணா மறைவுக்கு பின்னர் எம். ஜி. ஆர் உதவியால் கருணாநிதி முதல்வரானார்.

இக்கால கட்டத்தில் திமுக கட்சியில் உயர் மட்ட தலைவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கண்ணதாசன், சிவாஜி போன்றோர் அரசியலில் பிரகாசிக்கவில்லையென்றாலும் எம்.ஜி.ஆர் மக்களிடையே மிக பிரபலம் அடைந்தார். திமுக-விலிருந்து பிரிந்த எம்.ஜி.ஆர் 1972ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்னும் தனி கட்சியை தொடங்கினார்.

1977 - 1990

தனி கட்சியை ஆரம்பித்த எம்.ஜி.ஆர் 1977 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான வெற்றிப் பெற்று தமிழக முதல்வரானார். அவர் ஆண்ட இக்கால கட்டத்தில் நிறுத்தி வைத்திருந்த மதிய உணவு திட்டத்தை மறுபடியும் தொடங்கி வைத்தார். மேலும் உயர் கல்வியிலும் நிறைய மாற்றங்களை கொண்டு வந்தார்.

இக்கால கட்டத்தில் தமிழ் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது, மேலும் பல புதிய பொறியியல் கல்லூரிகள், மற்றும் மருத்துவ கல்லூரிகளும் தொடங்க வைக்கப்பட்டன. 1988ஆம் எம்.ஜி.ஆர் மறைந்தவுடன் குறுகிய காலம் அவர் மனைவி ஜானகி ராமச்சந்திரன் முதல்வர் பதவியில் இருந்தார்.

1991 - 2006

1991 முதல் 1996 வரை ஆண்ட ஜெயலலிதா 1996ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் பெரும் தோல்வி அடைந்தார். பின்பு 1996 முதல் 2001 வரை கருணாநிதி முதல்வர் பதவி வகித்தார். இக்கால கட்டத்தில் மதிமுக கட்சி உருவானது. பின்பு 2001ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற அதிமுக 2006 வரை ஆட்சி பொறுப்பில் இருந்தது. சினிமா நடிகர் விஜயகாந்த் தேசிய திராவிட முற்போக்கு கழகம் என்னும் கட்சியை தொடங்கனார். 2006ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தது.

2006 - 2011

தமிழக அரசியலில் முதன் முறையாக பெரும்பான்மை கிடைக்காத காரணத்தினால் திமுக, காங்கிரஸ் கட்சியின் உதவியால் கூட்டணி ஆட்சி அமைத்தது.

2011 -

திமுக-காங்கிரஸ் கூட்டணியின் படுதோல்விக்கு பின் அஇஅதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. தேமுதிக எதிர்கட்சி அந்தஸ்து பெற்றது.

குடியரசுத் தலைவர் ஆட்சி

தமிழ்நாட்டில் 4 முறை குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப் பட்டுள்ளது. நெருக்கடி நிலை காலத்தில் முதன்முறையாக கருணாநிதி தலைமையிலான ஆட்சியைக் கலைத்துவிட்டு கடந்த 31.1.1976 முதல் 30.6.1977 வரை குடியரசுத் தலைவர் ஆட்சி பிறப்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, 17.2.1980 முதல் 6.6.1980 வரையில் எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு பின்னரும், 30.1.1988 முதல் 27.1.1989 வரையில் ஜானகி எம்ஜிஆர் ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தபோதும், இறுதியாக, கருணாநிதி தலைமையிலான ஆட்சியைக் கலைத்துவிட்டு 30.1.1991 முதல் 24.6.1991 வரையிலும் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

தமிழக சட்டமன்றத் தொகுதிகளும் மாவட்டங்களும்:

தமிழ் நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள் எண்ணிக்கை 234.

நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 39, புதுச்சேரி -1

தமிழ் நாட்டின் 32 மாவட்டங்கள்

1. அரியலூர் மாவட்டம்

2. இராமநாதபுரம் மாவட்டம்

3. ஈரோடு மாவட்டம்

4. கடலூர் மாவட்டம்

5. கரூர் மாவட்டம்

6. கன்னியாகுமரி மாவட்டம்

7. காஞ்சிபுரம் மாவட்டம்

8. கிருஷ்ணகிரி மாவட்டம்

9. கோயம்புத்தூர் மாவட்டம்

10. சிவகங்கை மாவட்டம்

11. சென்னை மாவட்டம்

12. சேலம் மாவட்டம்

13. தஞ்சாவூர் மாவட்டம்

14. தர்மபுரி மாவட்டம்

15. திண்டுக்கல் மாவட்டம்

16. திருச்சிராப்பள்ளி மாவட்டம்

17. திருநெல்வேலி மாவட்டம்

18. திருப்பூர் மாவட்டம்

19. திருவண்ணாமலை மாவட்டம்

20. திருவள்ளுவர் மாவட்டம்

21. திருவாரூர் மாவட்டம்

22. தூத்துக்குடி மாவட்டம்

23. தேனி மாவட்டம்

24. நாகபட்டினம் மாவட்டம்

25. நாமக்கல் மாவட்டம்

26. நீலகிரி மாவட்டம் மாவட்டம்

27. புதுக்கோட்டை மாவட்டம்

28. பெரம்பலூர் மாவட்டம்

29. மதுரை மாவட்டம்

30. விருதுநகர் மாவட்டம்

31. விழுப்ப்ரம் மாவட்டம்

32. வேலூர் மாவட்டம்

மறு சீரமைப்புச் சட்டம்

மக்களவை, சட்டமன்ற தொகுதி மறு சீரமைப்பு சட்டம் 2008 படி சட்டமன்ற தொகுதிகள் சீரமைக்கப்பட்டுள்ளன. இதன் படி சில தொகுதிகள் நீக்கப்பட்டும் சில சேர்க்கப்பட்டும் சிலவற்றின் எல்லைகள் மாற்றியும் அமைக்கப்பட்டுள்ளன. தனி தொகுதிகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த சேந்தமங்கலம், சேலம் மாவட்டத்தை சார்ந்த ஏற்காடு சட்டமன்ற தொகுதிகள் பழங்குடி மக்களுக்காக ஒதுக்கப்பட்டவை.

ஆதாரம் : பணிப்புலம் வலைதளம்

கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate