অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

மாற்றத்தின் முன்னோடி பாஸ்போர்ட் சேவை மையம்

மாற்றத்தின் முன்னோடி பாஸ்போர்ட் சேவை மையம்

பல அரசு அலுவலகங்கள் இப்போதும் தூசி, ஒட்டடை படிந்த கட்டிடங்களில்தான் இயங்கி வருகின்றன. பல அடுக்குகளில் பராமரிக்க முடியாத கோப்புகளும், பழைய கோப்புகளை வைக்க இடமில்லாமல் மூட்டையாகவேறு கட்டி போட்டிருப் பார்கள். ஊழியர்களோ கிடைத்த இடை வெளியில் நாற்காலிகளை போட்டு வேலைபார்ப்பார்கள். கோப்புகள் சேதம், அவசரத்துக்கு தேட முடியாதது, பராமரிக்க ஆட்கள் கிடையாது என பல சிக்கல்களோடு பணியாற்றுவார்கள். இதில் விதிவிலக்காக சில அரசு துறைகள் கணினி பயன்பாட்டை ஏற்றுக் கொண்டு, மின்னணு வடிவங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மத்திய மாநில அரசுகள் அரசு துறைகளை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அதில் ஒன்றுதான் அரசு தனியார் கூட்டு முதலீட்டு திட்டங்கள்.

புதிய பொருளாதாரக் கொள்கைக்கு பிறகு இந்த நிலைமைகளில் மாற்றமிருந்தது. சர்வதேச சந்தையோடு போட்டிபோடவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கவும் அரசு பல முயற்சிகளை எடுத்தது. அரசின் பல்வேறு திட்டங்களுக்கு சரியான முதலீடுகள் கிடைக்காமல் முடங்கி கிடந்தன. ஒருபக்கம் வளங்கள் முடங்கி கிடப்பது, இன்னொரு பக்கம் தேவையும் அதிகரித்தது. இவற்றுக்கு இடையில் அரசின் கொள்கைகள் தீர்க்கப்படாமல் இருந்தன.

அப்போது உதித்த திட்டம்தான் அரசு மற்றும் தனியார் கூட்டு முதலீட்டில் திட்டங்களை தொடங்குவது. அரசுக்கு சொந்தமான வளங்களில் தனியார் முத லீட்டில் கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் மக்களுக்கு சேவை கிடைக்கும். இதனால் அரசு செய்ய வேண்டிய ஒரு பொதுப்பணி நிறைவேறும். ஆனால் தனியார் ஏன் முதலீடு செய்ய வேண்டும்? அவர்களுக்கு இதில் என்ன ஆதாயம் என்கிற கேள்வி வரும்.

இந்த கூட்டு முதலீட்டின் மூலம் உருவாகும் கட்டமைப்பை பயன்படுத்து பவர்களிடமிருந்து ஒரு குறைந்தபட்ச கட்டணத்தை குறிப்பிட்ட வருடங்களுக்கு வசூல் செய்து கொள்வதன் மூலம் தனியார் முதலீட்டுக்கான பலன் கிடைத்து விடும். முதலில் தொழில் துறை சார்ந்து முயற்சித்துப் பார்க்கப் பட்டது. தற்போது இந்தியாவில் மிகப் பெரும்பாலான அரசு திட்டங்கள் இந்த வகையில்தான் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உள் கட்டமைப்புத் திட்டங்கள்

 • இந்தியாவின் உள்கட்டமைப்புத் திட்டங்களை நிறைவேற்ற அரசு இந்த கூட்டு முதலீட்டு வடிவத்தைக் கையிலெடுத்தது. உதாரணமாக சாலைகள், பாலங்கள், துறைமுகங்கள் என பல உள்கட்டமைப்பு வேலைகளை இப்படியான வழியில் நிறைவேற்ற முடியும் என்பதை அரசு கண்டுகொண்டது. இது பெரும் முதலீடுகள் செலவழிப்பதிலிருந்து அரசுக்கு விடுதலைக் கொடுத்தது. உதாரணமாக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தடங்கலில்லாத நெடுஞ்சாலை வசதி கொண்டுவர வேண்டும்.
 • இதற்கு திட்டமிட்டு, அரசாணை, முதலீடுகள் என ஒதுக்கி பல ஆண்டுகள் காலந்தாழ்த்துவதை விட, தனியார் முதலீட்டில் கூட்டுதிட்டமாக செய்தால் இந்த சேவை விரைவிலேயே மக்களுக்கு கிடைத்துவிடும். அரசுக்கும் பெரிய சுமை கிடையாது. இந்த சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களுக்கு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு கட்டணம் வசூல் செய்து கொள்வதன் மூலம் தனியார் தங்களது முதலீடுகளை திரும்ப எடுத்துவிட முடியும். இந்த அடிப்படையில் இந்தியாவில் பல உள்கட்டமைப்பு வேலைகள் நிறைவேறியுள்ளன. தற்போது இந்தியாவில் பல சாலை திட்டங்கள் இப்படித்தான் நடந்துள்ளன.
 • எண்ணூர் துறைமுகம் இந்த வகையில் தொடங்கப்பட்டதுதான். இப்போது சென்னை துறைமுகத்தைவிடவும் அதிக சரக்குகளை கையாளும் முனையமாக வளர்ந்து வருகிறது. இதுபோல பல திட்டங்கள் அரசு தனியார் கூட்டில் உருவாகியுள்ளன.
 • ஆனால் இவையெல்லாம் தொழில் துறை சார்ந்து மட்டுமே நடந்து வருகிறது. அங்குதான் சாத்தியம் என்று நினைக்கின்றனர். பிற அரசு துறைகளில் இது சாத்தியமா என்கிற கேள்வியும் எழாமல் இல்லை.

பாஸ்போர்ட் சேவை

 • இதன் முதல் கட்டமாக அரசு தனியார் கூட்டு அடிப்படையில் பொதுமக்களுக்கு நேரடியாக சேவை வழங்க பாஸ்போர்ட் துறையில் முடிவெடுக்கப்பட்டது. இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன்பு இருந்த பாஸ்போர்ட் அலுவலக செயல்பாடுகளுக்கும், இப்போது இதன் செயல்பாடுகளிலும் நிறைய மாற்றங்கள் வந்துள்ளன.
 • முன்பெல்லாம் பாஸ்போர்ட் எடுக்க வேண்டும் என்றால் எத்தனை நாட்களில் பாஸ்போர்ட் கிடைக்கும் என்பதே தெரியாது. வெரிபிகேஷனுக்கான போலீஸ்காரர் எப்போது வருவார் என்பதும் தெரியாது. பாஸ்போர்ட் அலு வலகம் சென்றாலோ, வேண்டாதவர்கள் வந்ததுபோல ஊழியர்கள் நடத்து வார்கள். பாஸ்போர்ட் எடுக்க தேவையான எல்லா ஆவணங்கள் இருந்தும், வரிசையாக அடுக்கவில்லை என்று, அதற்கு ஒரு நாள் அலைய விடுவார்கள். சரியாக அடுக்கிவிட்டோம் என்கிற நம்பிக்கையோடு கால்கடுக்க காத்திருந்து உள்ளே சென்றால் நேரம் முடிந்துவிட்டது நாளைக்கு வா என திருப்பி அனுப்பி விடுவார்கள்.
 • வெளியிலோ இதற்கென்றே காத்திருக்கும் பல புரோக்கர்கள் கையில் காசு திணித்தால் வேலை நடக்கும் என 1000 ரூபாய் பாஸ்போர்ட் எடுக்க 5000 ரூபாய் வரை செலவு வைப்பார்கள். அதுவும் சென்னை, திருச்சி இரண்டு இடத்தில்தான் எடுக்க முடியும். இதர ஊர்க்காரர்கள் பெட்டி கட்டிக் கொண்டு செல்ல வேண்டும். பிறகுதான் தமிழகத்தில் மேலும் இரண்டு இடங்களில் அலுவலகம் திறந்தார்கள்.

எளிமையான நடைமுறை

 • இப்படி பெரும் சுமையாக விளங்கிய பாஸ்போர்ட் எடுக்கும் வைபவத்தை எளிமையான நிகழ்வாக மாற்றியது அரசு தனியார் கூட்டு. இதற்காக டிசிஎஸ் நிறுவனத்தோடு மத்திய வெளி விவகார அமைச்சகம் ஒப்பந்தம் செய்து கொண்டது. மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தவிர இந்த சேவைகளை இன்னும் விரிவாக்க பாஸ்போர்ட் சேவா கேந்திரா என நாடு முழுவதும் 77 இடங்களில் விரிவுபடுத்தியது. அலுவல்கள் அனைத்தையும் கணினிமயமாக்கியதன் மூலம் பொதுமக்களும் தங்களது பாஸ்போர்ட் நிலவரத்தை பார்க்க முடியும் என்கிற வகையில் மாற்றப்பட்டது.
 • பாஸ்போர்ட் விண்ணப்பிக்க வரு பவர்களுக்கு தேவையான ஆவணங் கள் குறித்த தகவல் முதல், விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது, இணைப்பு ஆவணங்களை வரிசையாக அடுக்குவது உள்ளிட்ட சின்ன சின்ன பணிகளை செய்ய டிசிஎஸ் தனது பணியாளர்களை நியமித்தது. இந்த பாஸ்போர்ட் சேவை மைய அலுவலகம், சேவை அதிகாரிகள், விண்ணப்பிக்க வருபவர்களுக்கான இதர சேவைகளையும் டிசிஎஸ் கவனித் துக் கொள்கிறது. விண்ணப்பங்களை பரிசீலிப்பது, பாஸ்போர்ட் வழங்குவது தொடர்பான இதர பிற அரசு பணிகளை அரசு ஊழியர்கள் கவனித்துக் கொள்கின்றனர். அதாவது தனியார் அலுவலக அமைப்பில் அரசு பணி அல்லது அரசு அலுவலகத்தில் தனியார் சேவை என்கிற விதத்தில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் இயங்கி வருகின்றன.
 • இதில் டிசிஎஸ் நிறுவனம் இந்த வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு கட்டணம் எதுவும் விண்ணப்பதாரர்களிடமிருந்து வசூலிப்பதில்லை. பிறகு எப்படி அவர்களுக்கு வருமானம் கிடைக்கும் என்று கேள்வி எழும். டிசிஎஸ் நிறுவனத்தின் இந்த பணிகளுக்காக ஒரு விண்ணப்பத்துக்கு இவ்வளவு தொகை என்று இதற்கான ஒப்பந்தத்தில் ஈடுபடும்போதே மத்திய வெளியுறவு அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

கட்டணங்கள்

 • அந்த தொகையை விண்ணப்ப தாரர்களிடமிருந்து கட்டணமாக வசூலித்து கொடுத்து விடுகிறது வெளியுறவு அமைச்சகம். ஏற்கெனவே பாஸ்போர்ட் விண்ணப்பிக்க 1,000 ரூபாய் கட்டணம் என்றால், தற்போது 1,500 வசூலித்து, இதிலிருந்து ரூ. 145 டிசிஎஸ் நிறுவனத்துக்கு கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கும் வருவாய் அதிகரித்துள்ளது.
 • தவிர ஊழியர்களின் பணித்திறன் அதிகரித்துள்ளது. முன்பு போல விருப்பத்துக்கு பணியாற்ற முடியாது. தினசரி இத்தனை விண்ணப்பதார் களுக்கு அழைப்பு அனுப்புகிறோமோ அத்தனை விண்ணப்பங்களுக்கான வேலைகளையும் முடித்து ஆகவேண்டும். இன்னொரு பக்கம் பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்வது முதல் எத்தனை நாட்களில் பாஸ்போர்ட் கிடைக்கும் என்கிற விவரங்கள் வரை ஆன்லைனிலேயே விண்ணப்பதாரர்கள் பார்த்துக் கொள்ளலாம்.
 • பாஸ்போர்ட் எடுப்பதே பெரும் சவாலான வேலையாக இருந்த நிலைமை மாற்றியதில் இந்த கூட்டு முதலீடு திட்டம் வெற்றி கண்டுள்ளது. இதுபோல பிற அரசு துறைகளிலும் கொண்டுவர வேண்டும் என்பது பாஸ்போர்ட் சேவை மையங்களைப் பயன்படுத்தியவர்களின் எதிர்பார்ப்பு.
 • பெரும் சுமையாக விளங்கிய பாஸ்போர்ட் எடுக்கும் வைபவத்தை எளிமையான நிகழ்வாக மாற்றியது அரசு தனியார் கூட்டு. இதற்காக டிசிஎஸ் நிறுவனத்தோடு மத்திய வெளி விவகார அமைச்சகம் ஒப்பந்தம் செய்து கொண்டது. அலுவல்கள் அனைத்தையும் கணினிமயமாக்கியதன் மூலம் பொதுமக்களும் தங்களது பாஸ்போர்ட் நிலவரத்தை பார்க்க முடியும்.

ஆதாரம் : தி-இந்து தமிழ் நாளிதழ்© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate