অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

மின்னணு முத்திரை தாள்

மின்னணு முத்திரை தாள்

அறிமுகம்

வீடு, மனை அல்லது காலி இடங்களை வாங்குவது அல்லது விற்பது மற்றும் வாடகை மற்றும் குத்தகை போன்ற வணிகம் சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்கள் ஆகிய அனைத்தும் அவற்றிற்கேற்ற முத்திரைத்தாள் கட்டணம் செலுத்தப்பட்டு ஆவணங்களாக பதிவு செய்யப்படுகின்றன. மேலும், அவற்றின் மதிப்பிற்கேற்ப, முத்திரை தாள் எனப்படும் ஸ்டாம்ப் பேப்பர்கள் மற்றும் ‘காங்கர் ஷீட்’ என்ற கூடுதல் இணைப்பு தாள்கள் கொண்டு பத்திரங்களாக எழுதி, பதிவு செய்யப்படுவது வழக்கம்.

மின்னணு முறை

பத்திரப் பதிவு முறைகளின்போது ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கும் வகையில் இ-ஸ்டாம்பிங் (E-Stamping) என்ற மின்னணு ‘ஸ்டாம்ப் டியூட்டி’ என்ற முத்திரைத்தாள் கட்டணத்தை செலுத்தும் புதிய முறை அறிமுகமாகி உள்ளது. அதன் காரணமாக, ஸ்டாம்ப் பேப்பர்கள் பற்றாக்குறை அல்லது உயர் மதிப்புள்ள பேப்பர்கள் கிடைக்காத நிலையில் குறைந்த மதிப்பிலான வெவ்வேறு ஸ்டாம்ப் பேப்பர்கள் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை.

போலிகள் இல்லை

குறிப்பாக, சில சமயங்களில் அதிகப்படியான பண மதிப்பு கொண்ட ஸ்டாம்ப் பேப்பர்கள் வாங்க வேண்டிய நிலையும் மேற்கண்ட இ-ஸ்டாம்பிங் முறையில் தவிர்க்கப்படுகிறது. மேலும், இந்த முறையில் போலி முத்திரை தாள்கள் பயன்பாட்டுக்கு எவ்விதமான வாய்ப்புகளும் இல்லை என்பது கவனிக்கத்தகது.

பாதுகாப்பான சேமிப்பு

பொதுவாக, பத்திரத் தாள்களை வாங்கி பதிவு செய்வதற்கும் இந்த முறைக்கும் நடைமுறையில் வித்தியாசங்கள் இருந்தாலும், நன்மைகளும் உள்ளன. முக்கியமாக பத்திரப்பதிவு குறுகிய காலத்தில் முடிந்துவிடும். பத்திரத் தாள்கள் காகிதமாக இருக்கும் பட்சத்தில் நாளடைவில் அவை பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. ஆனால், இ-ஸ்டாம்பிங் முறையில் அதன் தகவல்கள் SHCIL அமைப்பின் சேமிப்பகம் மூலம் பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன. ஒவ்வொரு இ-ஸ்டாம்பிங் பதிவுக்கும் தனிப்பட்ட ஒரு எண் (UIN-Unique Identification Number) தரப்படுவதால், அதன் உண்மை தன்மை எப்போதும் மாறாமல் பாதுகாக்கப்படுவதால், தேவையான சமயங்களில் சரி பார்த்து கொள்ளவும் இயலும்.

‘கலெக்ஷன்’ மையம்

மத்திய அரசால் உருவாக்கப்பட்ட Stock Holding Corporation of India Limited என்ற அமைப்பின் கீழ் இ-ஸ்டாம்பிங் சம்பந்தப்பட்ட விண்ணப்பங்கள், பதிவுகள் மற்றும் இதர ஆவணங்கள் சம்பந்தமான அனைத்து நடவடிக்கைகளும் வருகின்றன. மேலும், பத்திரப்பதிவில் இந்த முறையானது சம்பந்தப்பட்ட மாநில அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதை கவனித்து பயன்படுத்தவேண்டும். அதற்கான தகவல்களை அறிந்து கொள்ள www.shcilestamp.com என்ற இணைய தளத்தை அணுகலாம். அரசின் அங்கீகரிக்கப்பட்ட கலெக்ஷன் மையங்கள் மூலம் விண்ணப்பங்களை பெற்று அவற்றை நிரப்பியும் பத்திர பதிவை முடித்துக்கொள்ளலாம்.

பத்திர விபரங்கள்

மேற்குறிப்பிட்ட விண்ணப்பத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினர் பெயர்கள், ஸ்டாம்ப் கட்டணம் அளிக்கப்பட்ட தேதி, ஆவணத்திற்கான தனிப்பட்ட பதிவு எண் போன்ற விவரங்கள் மின்னணு முறையில் பதிவு செய்யப்பட்டிருக்கும். பத்திர பதிவுக்குரிய முத்திரை தாள் கட்டணத்தை இணையம் வழியாகவும், வங்கி கணக்குகளிலிருந்து RTGS, NEFT ஆகிய முறைகளை பயன்படுத்தியும் செலுத்த இயலும்.

சான்றிதழ்கள் பாதுகாப்பு

குறிப்பாக, இ-ஸ்டாம்பிங் சான்றிதழ்களை தொலைத்து விடாமல் பத்திரமாக பாதுகாப்பாக வைத்துக்கொள்வது அவசியம். காரணம் அதற்கான நகல் பிரதிகள் தரப்படுவதில்லை. இன்றைய நிலையில் சில முக்கியமான நகரங்களில் இ-ஸ்டாம்பிங் முறைப்படி முத்திரைத்தாள் கட்டணம் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.

ஆதாரம் : முற்றம் மாத இதழ்

கடைசியாக மாற்றப்பட்டது : 7/23/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate