பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மருத்துவ துறையில் செயற்கை நுண்ணறிவு

மருந்து பற்றாக்குறையை களைய உதவும் செயற்கை நுண்ணறிவு பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

உலக அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோர் அதிகம் வசிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஸ்மார்ட் போன்களும் அதை இயக்கும் செயற்கை நுண்ணறிவும் மனிதனுக்கு ஆற்றும் சேவைகள் எண்ணிலடங்காதவை.

மின்சாரக் கட்டணம், மொபைல் கட்டணம், பள்ளிக் கட்டணம் ஆகியவற்றைச் செலுத்த வேண்டிய தேதியை மறந்துவிடாமல் நமக்கு அது நினைவூட்டுகிறது. வானிலை எப்படி இருக்கும், வெளியில் செல்லும்போது குடை எடுத்துக்கொண்டு செல்ல வேண்டுமா, வேண்டாமா என்பது போன்றவற்றை அது நமக்குத் தெரிவிக்கிறது. இன்று செயற்கை நுண்ணறிவின் சேவை மருத்துவ உலகிலும் நுழைந்துவிட்டது. செயற்கை நுண்ணறிவின் நவீனத் தொழில்நுட்பம், சுகாதாரத் துறையில் பெரிய மாற்றங்களை முன்னெடுக்கத் தொடங்கியுள்ளது.

நோயைக் கண்டறியும் செயற்கை நுண்ணறிவு

 • உலக அளவில் செயற்கை நுண்ணறிவின் தொழில்நுட்ப வளர்ச்சியால் இனி ஒவ்வோர் ஆண்டும் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு 40 சதவீத வளர்ச்சி ஏற்படும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 • செயற்கை நுண்ணறிவால் வருங்காலத்தில் சுகாதாரத் துறையில் 30-லிருந்து 40 சதவீதம் வரையில் செலவு குறையும் எனவும் அந்த ஆய்வின் முடிவுகள் உணர்த்துகின்றன.
 • தலைவலி, உடல்வலி, காய்ச்சல் என எதற்கெடுத்தாலும் மருத்துவமனைக்குச் செல்லும் போக்கு இன்று அதிகரித்துள்ளது. நோயாளிகளின் பிரச்சினை என்ன என்பதை விரைந்து கண்டுபிடித்துச் சொல்வது மருத்துவர்கள் முன் இருக்கும் பெரிய சவாலாக உள்ளது.
 • பல உயிர்க்கொல்லி நோய்களை முன்கூட்டியே கண்டுபிடிக்காததன் விளைவாகப் பல உயிரிழப்புகளும் நிகழ்கின்றன.
 • பொதுவாகப் புற்றுநோய் கட்டிகளை நம்மால் எளிதில் கண்டுபிடிக்க முடியாது. இந்தச் சவாலை எதிர்கொள்வதற்குச் செயற்கை நுண்ணறிவு, மருத்துவர்களுக்குப் பெரிதும் உதவுகிறது.
 • செயற்கை நுண்ணறிவின் இன்றைய உயரிய தொழில்நுட்பத்தின் மூலமாக உடலில் மறைந்திருக்கும் புற்றுநோய் செல்களைக் கூட மருத்துவர்களால் சுலபமாகக் கண்டறிய முடிகிறது.

செயற்கைப் பற்றாக்குறை

 • இந்தியாவில் சிறிய கிளினிக் நடத்தும் மருத்துவர்கள் ஏராளம் உள்ளனர். இவர்களிடம் மருந்துகளின் இருப்பு தேவைக்கு ஏற்பவே இருக்கும்.
 • மருந்துகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் திட்டமிட்டே சில மருந்துகளுக்கான பற்றாக்குறையை ஏற்படுத்துவார்கள். இதன் மூலம், என்ன மருந்தை இந்த மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும் என்பதை மறைமுகமாக அந்த நிறுவனங்கள் தீர்மானிக்கும்.
 • இதுபோன்ற செயற்கைப் பற்றாக்குறையைச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் தடுக்க முடியும்.

தொழிற்நுட்பத்தின் பயன்கள்

 • இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு மருத்துவமனையில் கையிருப்பு மருந்துகள் எவ்வளவு, என்ன மாதிரியான மருந்துகள் பற்றாக்குறையாக உள்ளன, இதற்கு முன்பு அவர்களிடம் விற்பனை செய்யப்பட்ட மருந்துகள் என்னென்ன, பருவகாலத்திற்கு ஏற்றாற்போல் எந்தெந்த மருந்துகள் தேவைப்படும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு மருந்துகளின் கையிருப்பை அதிகரிக்க முடியும்.
 • இதன்மூலம், நோயாளிகளுக்கான மருந்துகள் எப்போதும் சந்தையில் இருப்பதை உறுதிசெய்ய முடியும். பொதுமக்களும் ஸ்மார்ட் போன் உதவியால் தங்களுக்குத் தேவையான மருந்துகளை நிறுவனங்களிடமிருந்து நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
 • உதாரணத்துக்குக் கிராமத்தில் கிளினிக் வைத்திருக்கும் மருத்துவருக்குச் சுற்றுவட்டாரத்தில் டெங்கு நோய் அதிகரித்து இருப்பதற்கான தகவல் கிடைத்தவுடன், அவர் தன்னிடம் எவ்வளவு மருந்துகள் உள்ளன, எவ்வளவு தேவைப்படும் என்றெல்லாம் யோசித்து நேரத்தை வீணாக்காமல், ஸ்மார்ட் போனில் உள்ள செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தித் தன்னிடம் உள்ள மருந்தின் இருப்பை அறிந்துகொண்டு சிகிச்சையில் முழு கவனம் செலுத்த முடியும். அதேபோல் விற்பனையாளர்களும் எதிர்வரும் நாட்களின் தேவைக்கு ஏற்றாற்போல் மருந்துகளைத் தயாரித்து விற்பனை செய்ய முடியும்.

மாற்றங்கள்

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால், மருந்துகளுக்கான செயற்கைப் பற்றாக்குறையை ஏற்படுத்தும் நிறுவனங்கள், தங்களுடைய வியாபாரப் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி விற்பனையாளர்கள் சுகாதாரத் துறையை டிஜிட்டல் மயமாக்க முன்வர வேண்டும். இத்தொழில்நுட்பத்தைச் செயல்படுத்தினால் மருந்தகங்களில் உள்ள மருந்துகளின் தேவையை அறிந்துகொள்வதுடன் அதற்கேற்றாற்போல் மருந்துகளை விற்பனையும் செய்ய முடியும்.

ஆதாரம் : நலம் மாத இதழ்

3.14285714286
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top