பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / பொதுவான தகவல்கள் / உயர்நீதிமன்றம் மற்றும் துணை நீதித்துறை
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

உயர்நீதிமன்றம் மற்றும் துணை நீதித்துறை

உயர்நீதிமன்றம் மற்றும் துணை நீதித்துறை பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

செயல்துறை மற்றும் சட்டத்துறை ஆகியவற்றைத் தொடர்ந்து, தமிழக அரசாங்கத்தின் மூன்றாவது கிளையாக நீதித்துறை இருக்கிறது. தமிழ்நாட்டின் நீதிமுறை உயர்நீதிமன்றம் மற்றும் துணை நீதிமன்றங்கள் ஆகிய இரண்டு பிரிவான நீதிமன்றங்களைப் பெற்றுள்ளது. சமீபத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை மதுரையில் 2004ம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உயர்நீதிமன்றத்தின் அமைவிடம் சென்னையில் உள்ளது மற்றும் துணை நீதிமன்றங்களின் அமைவிடங்கள் மாவட்டத் தலைநகரங்களிலும் அவைகளுக்கு கீழ்நிலையிலும் உள்ளன. இங்கே, பொதுவாக தமிழ்நாட்டு நீதித்துறை பற்றிய விபரங்கள் அடுத்துத்தரப்பட்டுள்ளன.

உயர்நீதிமன்றம்

தமிழ்நாட்டில் நீதித்துறையின் தலைமையாக உயர்நீதிமன்றம் திகழ்கிறது. அது ஒரு தலைமை நீதிபதியையும் மற்றும் பல நீதிபதிகளையும் பெற்றுள்ளது. தலைமை நீதிபதி இந்திய ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார். மற்ற நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, மாநில ஆளுநர் மற்றும் உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி ஆகியோருடன் கலந்து ஆலோசித்தபின்பு ஜனாதிபதியால் நியமிக்கப்படுகின்றனர். இதைத்தவிர உயர்நீதிமன்றத்தில் நிலுவைப் பணிகளை முடிப்பதற்காக இரண்டு வருடங்களுக்கு மிகாமல் தற்காலிகப் பதவி வகிக்கக்கூடிய கூடுதல் நீதிபதிகளை நியமனம் செய்வதற்கு ஜனாதிபதி அதிகாரம் பெற்றுள்ளார். மேலும், உயர்நீதிமன்றத்தின் ஒரு நிரந்தர நீதிபதி தற்காலிகமாக பணிக்கு வராமலிருந்தாலோ அல்லது அவரின் கடமைகளைச் செய்ய முடியாதிருந்தாலோ அல்லது தற்காலிகமாகத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டாலோ அந்த இடத்தில் ஒரு செயல் நீதிபதியை நியமிக்க ஜனாதிபதி அதிகாரம் பெற்றுள்ளார். உயர்நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி 62 வயது முடியும் வரை பதவி வகிப்பார். நிரந்தர, கூடுதல் அல்லது செயல் நீதிபதி ஒவ்வொருவரும் பதவிக்காலம் முடிவதற்கு முன்பு பின்வரும் வழிகளில் பதவியை விட்டு விலகலாம்.

 1. ஜனாதிபதிக்கு எழுதி சமர்ப்பித்து இராஜினாமா செய்வதால்.
 2. ஜனாதிபதியால் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டால் அல்லது ஒரு உய்ர்நீதிமன்றத்திலிருந்து வேறு உயர்நீதிமன்றத்திற்கு இட மாற்றம் செய்யப்பட்டால், மற்றும்
 3. துர்நடத்தை அல்லது திறமையின்மை காரணமாகப் பாராளுமன்றத்தின் ஈரவைகளில் ஜனாதிபதி உரைப்படி பதவி விலக்கப்பட்டால்.

தகுதிகள்

உயர்நீதிமன்ற நீதிபதி நியமனத்திற்கு அரசியலமைப்பின் பின்வருகின்ற தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

 • அவர் ஒரு இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
 • அவர் 62 வயது முடிந்தவராக இருத்தல் கூடாது.
 • இந்திய நிலப்பரப்பில் நீதித்துறையில் நீதிப்பணியை அவர் பெற்றிருந்திருக்க வேண்டும்; அல்லது
 • குறைந்தது 10 வருடங்களாவது ஒரு உயர்நீதிமன்றத்தில் ஓர் வழக்கறிஞராக இருந்திருக்க வேண்டும்.

நீதிபதிகளின் சுதந்திரம்

 1. உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளைப்போல, உயர்நீதிமன்ற நீதிபதிகளின் சுதந்திரத்தை நிலைநிறுத்த பின்வரும் வழிகளினால் அரசியலமைப்பு நாடுகிறது.
 2. உயர்நீதிமன்ற நீதிபதிகள் முக்கியமான அரசியலமைப்பு ஆணையுரிமையாளர்களாக உள்ளனர்.
 3. மாநிலத்தின் தொகுப்பு நிதியிலிருந்து நீதிபதிகளின் சம்பளங்களும், படிகளும் வழங்கப்பட்டுகின்றன.
 4. அரசியலமைப்பு விதி 360-ன்படி நிதி அவசரநிலைக் காலத்தில் தவிர, ஒரு நீதிபதிக்கு வழங்கக்கூடிய சம்பளத்தையும், படிகளையும் மற்றும் அவரின் பணி ஓய்விற்குப் பின்னர் உள்ள உரிமைகளையும் சலுகைகளையும் பாராளுமன்றத்தால் குறைக்க அல்லது வேறுபடுத்த முடியாது.
 5. உச்சநீதிமன்ற நீதிபதியின் பதவி நீக்கத்தைப் போல, உயர்நீதிமன்ற நீதிபதியின் பதவிநீக்கமும் ஒரு கடினமான வழிமுறையால் பின்பற்றப்படுகிறது. மற்றும்
 6. ஒரு நீதிபதி தனது பணி ஓய்வுக்குப் பின்னர் எவ்வித வருவாய் தரும் பதவியையும் வகித்தல் கூடாது.
 7. அதிகாரவரம்பும் அதிகாரங்களும் அரசியலமைப்பின்படி சென்னை உயர்நீதிமன்றம் பின்வருகின்ற அதிகார வரம்பையும், அதிகாரங்களையும் பெற்றுள்ளது.

ஆரம்ப முறையீட்டு அதிகாரவரம்பு

மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய மூன்று மாநில நகரங்களும் தங்களுடைய மாநில நகரங்களில் உருவாகும் சிவில் மற்றும் குற்ற வழக்குகளில் ஆரம்ப முறையீட்டு அதிகாரவரம்பைப் பெற்றிருந்தன. இருப்பினும், 1973 ஆம் ஆண்டின் குற்ற வழிமுறைச் சட்டத்தால் உயர்நீதிமன்றத்தின் ஆரம்ப முறையீட்டு குற்ற அதிகார வரம்பு முழுவதும் எடுக்கப்பட்டது. சிவில் வழக்குகளை நடத்துவதற்கு நகர சிவில் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ள போதிலும், உயர்நீதிமன்றத்தின் ஆரம்ப முறையீட்டு சிவில் அதிகாரவரம்பு ஒழிக்கப்படவில்லை. அதாவது, வழக்கின் மதிப்பீடு உயர்வின் காரணமாக அது ஒழிக்கப்படவில்லை.

மேல் முறையீட்டு அதிகாரவரம்பு

தமிழ்நாட்டில் உயர்நீதிமன்றம் தலையாய நீதிமன்றமாக உள்ளது. சிவில் மற்றும் குற்ற வழக்குகள் இரண்டிலும் மேல் முறையீட்டு அதிகாரவரம்பை அது பெற்றுள்ளது. சிவில் பகுதியில், மாவட்ட நீதிபதியின் முடிவிலிருந்தும், உயர் மதிப்பீட்டின் காரணமாகத் துணை நீதிபதியின் முடிவிலிருந்தும் நேரடியாக மேல்முறையீடுகள் உயர்நீதிமன்றத்திற்கு வருகின்றன.

நீதிப்பேராணை அதிகாரவரம்பு

இந்திய அரசியலமைப்பு வடிவமைப்புக் குழுவின் தலைவரான பி.ஆர். அம்பேத்கரின் கருத்திற்கிணங்க, விதி-32 அரசியலமைப்பின் உயிரும் இதயமும் ஆகும். ஏனென்றால், நீதிப்பேராணைகள் மூலமாக ஒவ்வொரு இந்தியக் குடிமகளின் உரிமைகள், சுதந்திரம் மற்றும் தகுதிவினாட்டு பாராணை, கட்டபைபர்நீதிமன்றம் சலுகைகள் போன்றவற்றை அது பாதுகாக்கிறது. அதேபோல, விதி 226-ன் படி உயர்நீதிமன்றம் நீதிப்பேராணை அதிகார வரம்பைப் பெற்றுள்ளது. ஆட்கொணர்பேராணை, கட்டளைப்பேராணை, தடுப்புப்பேராணை, சான்றுபேராணை மற்றும் தகுதிவினாப் பேராணை போன்ற ஐந்து பேராணைகள் உள்ளன.

கண்காணிக்கும் அதிகாரம்

உயர்நீதிமன்றம் இராணுவத் தீர்ப்பாயங்களைத்தவிர, தனது அதிகார வரம்பின் பரப்பிலுள்ள அனைத்து நீதிமன்றங்களையும் மற்றும் தீர்ப்பாயங்களையும் கண்காணிக்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ளது. உண்மையில், அது பரந்த அதிகாரத்தைப் பெற்றுள்ளது.

மாநில நீதித்துறையின் தலைமையகம்

மாநில நீதித்துறையின் தலைமையகமாக, உயர்நீதிமன்றம் தனது மேல்முறையீட்டு மற்றும் மேற்பார்வை அதிகார வரம்பைத்தவிர, சில குறிப்பிட்ட விவகாரங்களில் துணை நீதித்துறையின் மீது நிர்வாகக் கட்டுப்பாட்டைப் பெற்றுள்ளது. இவ்வாறாக, உயர்நீதிமன்றம் அதிகாரம் பொதிந்ததாக உள்ளது. மேலும், அது பதிவு நீதிமன்றமாகவும் செயல்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, மாநிலத்தின் மிகமுக்கியமான வழக்குகளைத் தீர்த்துவைப்பதற்கு அமர்வு அதிகாரவரம்பையும் அது பெற்றுள்ளது.

துணை நீதிமன்றங்கள்

சிவில் வழிமுறை சட்டத்துடன் தொடர்புள்ள சிவில் நீதிமன்றங்கள் மற்றும் குற்ற வழிமுறைச் சட்டத்துடன் தொடர்புள்ள குற்றவியல் நீதிமன்றங்கள் போன்ற இரண்டு வகைகளாகத் துணை நீதிமன்றங்கள் பிரிக்கப்படுகின்றன. அகில இந்திய நீதிபதிகள் சங்கத்தின் வழக்கிற்கிணங்க, (1989) நாடு முழுவதும் துணை நீதித்துறையின் நீதி அலுவலர்களில் ஒரேமாதிரியான பதவிநிலை கொண்டுவர உச்சநீதிமன்றம் வலியுறுத்துகிறது. அதாவது, சிவில் பக்கத்தில் மாவட்ட நீதிபதி, கூடுதல் மாவட்ட நீதிபதி, சிவில் நீதிபதி (முதுநிலைப் பிரிவு) மற்றும் சிவில் நீதிபதி (இளநிலைப் பிரிவு) என்ற படிநிலையும், குற்றவியல் வழிமுறைச் சட்டம் வரையறுத்தபடி குற்றவியல் பக்கத்தில் செசன்ஸ் நீதிபதி, கூடுதல் செசன்ஸ் நீதிபதி, முதன்மை நீதித்துறை நடுவர் மற்றும் நீதித்துறை நடுவர் என்ற படிநிலையும் இருக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது. கீழே வருகின்ற அட்டவணை துணை நீதிமன்றங்களின் படிநிலையைக் காண்பிக்கிறது. துணை நீதிமன்றங்களின் படிநிலையைக் காட்டும் அட்டவணை சிவில் பக்கம்

குற்றவியல் பக்கம்

 1. மாவட்ட நீதிபதி செசன்ஸ் நீதிபதி
 2. கூடுதல் மாவட்ட நீதிபதி கூடுதல் செசன்ஸ் நீதிபதி
 3. சிவில் நீதிபதி (முதுநிலைப் பிரிவு) முதன்மை நீதித்துறை நடுவர்
 4. சிவில் நீதிபதி (இளநிலைப் பிரிவு) நீதித்துறை நடுவர்

இத்துடன், சிறு காரண நீதிமன்றங்களும் உள்ளன. பிராந்திய சிறு காரணங்கள் சட்டத்தின்படி இவ்வகையான நீதிமன்றங்கள் மாவட்ட அளவிலோ அல்லது மாநில சிறு காரணங்கள் நீதிமன்ற சட்டத்தின்படி மாநகரங்களிலோ அமைக்கப்படுகின்றன.

மாநில உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையுடன் ஆளுநரால் ஒரு மாவட்ட நீதிபதி நியமிக்கப்படுவார் என்றும், பணிநியமனம், இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு போன்றவைகளும் இதே வகையில் இருக்கும் என்றும் அரசியலமைப்பு கூறுகிறது. மாநில நீதிப் பணியின் பிற எந்தப் பதவியின் பணிநியமனம் தொடர்பாக, மாநில பொதுப்பணி ஆணையம் மற்றும் உயர்நீதிமன்றத்துடன் ஆலோசித்து உருவாக்கிய விதிகளின்படி ஆளுநரால் நியமனம் செய்யப்படும் என்று அரசியலமைப்பு கூறுகிறது. விதி 235க்கிணங்க, துணை நீதிப்பணி உறுப்பினர்கள் மீதான நிர்வாகக் கட்டுப்பாடு உயர்நீதிமன்றத்துடன் உள்ளது. குடும்ப நீதிமன்றங்கள்

முறையான நீதிமன்றங்களின் படிநிலைகளுடன், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் குடும்ப நீதிமன்றங்களும் அமைக்கப்படுகின்றன. 1984ஆம் ஆண்டின் குடும்ப நீதிமன்றங்கள் சட்டத்திற்கிணங்க, அதிகச் செலவினம் இல்லாமல் வழக்குகளைத் தீர்ப்பது மற்றும் முறையான நீதிமன்றங்களில் அதிகச் செலவு ஏற்படுவது போன்றவற்றைக் கருத்தில் எடுத்துக்கொண்டு, திருமணங்கள் மற்றும் குடும்ப விவகாரங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்கு இவ்வகையான நீதிமன்றங்கள் அதிகாரங்களையும், அதிகார வரம்பையும் பெற்றுள்ளன. குடும்பம், விவாகரத்து, வரதட்சணை போன்றவற்றின் பிரச்சினைகள் தொடர்பான விவகாரங்களும் இவ்வித நீதிமன்றங்களால் கவனிக்கப்படுகின்றன. இவ்வித நீதிமன்றங்கள் சிவில் வழிமுறைச் சட்டத்தைப் பின்பற்றுகின்றன.

செயலகம்

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் அதன் சொந்த செயலகத்தைப் பெற்றுள்ளது. அது மாநில நிர்வாகத்தின் நரம்பு மண்டலமாக இருக்கிறது. அது அரசாங்கத்தின் பல்வேறு துறைகளைப் பெற்றுள்ளது. ஒரு துறையின் அரசியல் தலைவராக அமைச்சரும், அத்துறையின் நிர்வாகத் தலைவராகச் செயலரும் உள்ளனர். ஒரு செயலர் ஒன்று அல்லது இரண்டு துறைகளுக்குத் தலைவராக இருக்கின்ற வேளையில், தலைமைச் செயலர் ஒட்டுமொத்த செயலகத்தின் தலைவராக இருக்கிறார். செயலர் என்பவர் வழக்கமாக ஒரு மூத்த அகில இந்தியப்பணி அலுவலராகவும் பொது நிர்வாகியாகவும் உள்ளார். இந்த விதிக்கு விதிவிலக்காக பொதுப்பணித் துறை ஒரு சிறப்பு நிர்வாகியான தலைமைப் பொறியாளரால் தலைமை வகிக்கிப்படுகிறது. தமிழ்நாட்டில் செயலகம் தலைமைச் செயலகம் என்று அழைக்கப்படுகிறது. அது சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ளது.

துறைகள்

பொதுவாகவே, செயலகத்தில் துறைகளின் எண்ணிக்கை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. அது 15 துறைகளிலிருந்து 35 துறைகள் வரை உள்ளது. தமிழ்நாட்டில் தலைமைச் செயலகத்தில் உள்ளடங்கியுள்ள துறைகள் பின்வருகின்றன.

 1. பொதுநிர்வாகம்
 2. உள்துறை
 3. நிதி
 4. பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள்
 5. வருவாய்
 6. சிறை
 7. வனம்
 8. விவசாயம்
 9. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு
 10. பஞ்சாயத்துராஜ்ஜியம்
 11. பொதுப் பணிகள்
 12. கல்வி
 13. திட்டமிடல்
 14. நீர்ப்பாசனம் மற்றும் மின்சாரம்
 15. சட்டம்
 16. சமூக நலம்
 17. வீட்டு வசதி
 18. சிவில்விநியோகம்
 19. போக்குவரத்து
 20. உள்ளாட்சி அரசாங்கம்
 21. வரிவிதிப்பு
 22. தொழில்கள்
 23. விளம்பரம் மற்றும் தகவல்
 24. கூட்டுறவு
 25. சுகாதாரம்

பணியாளர்களின் படிநிலை

தமிழ்நாட்டின் தலைமைச் செயலகம் நிலையான பதவிக்காலத்திற்கு நியமிக்கப்படுகின்ற அலுவலர்களைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் அரசாங்க ஊழியர்களின் ஓய்வு வயது 58ஆகும். அகில இந்தியப் பணியாளர்களையும், தமிழ்நாடு பொதுப்பணி ஆணையத்தால் பணிநியமனம் செயப்படுகின்ற அலுவலர்களையும் செயலகம் பெற்றுள்ளது. ஒரு துறையில் உள்ள செயலக அலுவலர்களின் படிநிலை பின்வருமாறு உள்ளது.

செயலகத்தின் பணிகள்

செயலகம் ஒரு ஆலோசனைச் செயலியாக இருந்துகொண்டு பொதுக் கொள்கைகளின் அமுலாக்கத்தில் செயல்துறைகளுக்கு ஆலோசனை வழங்கக் கடமைப்பட்டுள்ளது. அதன் அடிப்படைப் பணியாக இருப்பது அமைச்சர்கள் தங்களது கடமைகளை நிறைவேற்றுவதற்கு உதவிபுரிவதாகும்.

அது பின்வருகின்ற பணிகளைச் செய்கிறது.

 1. மாநில அரசாங்கத்தின் கொள்கைகளையும் திட்டங்களையும் செயலகம் உருவாக்குகிறது.
 2. மாநில அரசாங்கத்தின் கொள்கைகளையும் திட்டங்களையும் ஒருங்கிணைக்கிறது.
 3. மாநில வரவுசெலவுத் திட்டத்தை அது தயாரிக்கிறது. மற்றும் பொதுச் செலவினத்தின் மீது கட்டுப்பாடு விதிக்கிறது.
 4. சட்டங்கள் மற்றும் விதிகளை அது தயாரிக்கிறது.
 5. கள் முகமைகளால் அமுலாக்கம் செய்யப்படுகின்ற கொள்கைகளையும் திட்டங்களையும் அது மேற்பார்வையிடுகிறது.
 6. பொதுக் கொள்கைகளின் அமுலாக்க முடிவுகளை அது ஆய்கிறது.
 7. மற்ற மாநில அரசாங்கங்களுடன் அது தொடர்புகளை நிலைநிறுத்துகிறது.
 8. அமைப்பு மற்றும் முறைகளின் மூலமாக அமைப்புமுறை முன்னேற்றத்தை வளர்க்க அது ஆரம்ப நடவடிக்கைகளை எடுக்கிறது.
 9. சட்டசபை உறுப்பினர்கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு பதிலளிப்பது போன்ற சட்டத்துறைக்கு அமைச்சர்கள் செய்யும் பொறுப்புகளுக்கு அது உதவிபுரிகிறது.
 10. துறைகளின் தலைவர்களை அது நியமிக்கிறது மற்றும் சம்பளம் போன்ற அதுதொடர்பான பணிகளைக் கவனிக்கிறது.
 11. பணிவிதிகள் மற்றும் அவைகளின் திருத்தங்களுக்கு அது ஒப்புதல் அளிக்கிறது.
 12. மாநிலத்தின் நிதிநிலையை மேம்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை அது ஆராய்கிறது.
 13. மாநில அரசாங்கத்தின் ஒரு சிந்தனைக் களஞ்சியமாக அது பணிபுரிகிறது.
 14. செயலகத்தின் முறையான செயல்பாட்டில் தலைமைச் செயலருக்கு அது உதவுகிறது. மற்றும்
 15. மக்களிடமிருந்து புகார்கள், விண்ணப்பங்கள் மற்றும் முறையீடுகளைப் பெற்று அவைகளை அது தீர்த்துவைக்கிறது. தலைமைச் செயலர் தலைமைச் செயலர் மாநிலச் செயலகத்தின் செயல்துறைத் தலைவராக உள்ளார். மாநில நிர்வாகத்தின் நிர்வாகத் தலைவராக அவர் உள்ளார் மற்றும் மாநில நிர்வாகப் படிநிலையின் உச்சத்தில் நிற்கிறார். உண்மையில், அவர் அனைத்து செயலர்களின் தலைவராக இருந்து அனைத்துத் துறைகளையும் கட்டுப்படுத்துகிறார். அவர் மாநிலத்தில் மிகவும் மூத்த சிவில் பணியாளராக இருக்கிறார். மாநில அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்ட செயல் விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரங்களையும் பணிகளையும் அவர் பெற்றுள்ளார். மேலும், மரபுகளிலிருந்தும் சில அதிகாரங்களை அவர் பெறுகிறார். அவர் பின்வருகின்ற பிரதான பணிகளையும், மற்ற பணிகளையும் செய்கிறார்.

பிரதான பணிகள்

 1. முதலமைச்சருக்கு ஒரு ஆலோசகராக, மாநில அமைச்சர்களால் அனுப்பப்படும் முன்வரைவுகளின் நிர்வாக உள்ளடக்கங்களை தலைமைச் செயலர் விளக்குகிறார்.
 2. அமைச்சர் குழுவிற்கு செயலராக, அமைச்சர்குழு கூட்டங்களுக்கான நிகழ்ச்சிநிரலை அவர் தயாரிக்கிறார். மற்றும் அதன் செயல்பாடுகளின் பதிவுகளைப் பாதுகாக்கிறார்.
 3. சிவில் பணியின் தலைவராக, மூத்த மாநில சிவில் பணியாளர்களின் நியமனம், இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு தொடர்பானவற்றை அவர் கவனிக்கிறார்.
 4. தலைமை ஒருங்கிணைப்பாளராக, துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணப்பை நோக்கி அவர் பணிபுரிகிறார். துறைகளுக்கிடையேயான சிக்கல்களைப் போக்குவதற்கு அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக அவர் இருக்கிறார்.
 5. சில குறிப்பிட்ட துறைகளின் தலைவராக, அவைகளை மேற்பார்வையிடுகிறார் மற்றும் கட்டுப்படுத்துகிறார். மற்றும்
 6. சிக்கல் தீர்க்கும் நிர்வாகியாக, வெள்ளம், வறட்சி, இனக் கலவரங்கள் போன்ற சிக்கலான நேரங்களில் மிகவும் முக்கிய பங்கில் அவர் செயல்படுகிறார்.

மற்ற பணிகள்

 1. துறைகளுக்குள் அடங்காத அனைத்து விவகாரங்களையும் தலைமைச் செயலர் கவனிக்கிறார்.
 2. ஒட்டுமொத்த செயலகத்தின் மீதான பொது மேற்பார்வை மற்றும் கட்டுப்பாட்டை அவர்செயல்படுத்துகிறார்.
 3. தொடர்புடைய மாநில உறுப்பினராக உள்ள மண்டலக் கவுன்சிலின் செயலராக சுழற்சி முறையில் அவர் செயல்படுகிறார். செயலகக் கட்டிடம், அமைச்சர்களுடன் தொடர்புடைய பணியாளர்கள், செயலக நூலகம் மற்றும் செயலகத்துறைகளின் பணியாளர்கள் மீதான நிர்வாகக் கட்டுப்பாட்டை அவர் பெற்றுள்ளார்.
 4. மாநில அரசாங்கம், மத்திய அரசாங்கம் மற்றும் பிற மாநில அரசாங்கங்கள் போன்றவைகளுக்கிடையே தகவலின் பிரதான வழியாக அவர் இருக்கிறார்,
 5. சட்டம் மற்றும் ஒழுங்கு, திட்டமிடல் போன்ற நிர்வாகத்தில் ஒரு முக்கிய பங்கில் அவர் செயல்படுகிறார். மற்றும்
 6. மாநில அரசாங்கத்தின் ஒரு பேச்சாளராக அவர் செயல்படுகிறார்.
 7. தேசிய வளர்ச்சிக் கவுன்சிலின் கூட்டங்களில் அவர் கலந்து கொள்கிறார்.
 8. மாநில அரசாங்கத்தின் தலைமை பொதுமக்கள் தொடர்பு அலுவலராக அவர் செயல்படுகிறார்.
 9. அரசியலமைப்பு விதி 356-ன்படி மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமுல்படுத்தப்படும் போது, மத்திய ஆலோசகர்கள் நியமிக்கப்படாமல் இருக்கும்போது ஆளுநருக்கு முதன்மை ஆலோசகராக அவர் செயல்படுகிறார்.

இவ்வாறாக, மொத்தத்தில் தமிழ்நாட்டின் தலைமைச் செயலகம் மாநில நிர்வாகத்தின் நரம்பு மண்டலமாக இருக்கிறது. இதேபோல, தமிழ்நாட்டில் அனைத்துச் செயலர்களின் தலைவராக உள்ள தலைமைச் செயலர் குறிப்பாகச் செயலக நிர்வாகத்தின் நரம்பு முறைமையாக இருக்கிறார்.

கிராம அலுவலர் (VAO) வரையிலான மாவட்ட நிர்வாக அமைப்பும் அவைகளின் பணிகளும்

இந்தியாவில் நிர்வாகத்தின் அடிப்படை அலகாக மாவட்டம் உள்ளது. "தனி நிர்வாக நோக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலப்பரப்பே மாவட்டம்” என்று ஆக்ஸ்போர்டு ஆங்கிலச் சொல்லகராதி இலக்கணப்படுத்துகிறது. ஒரு மாவட்டம் பொதுவாக பெரிய நகரத்தின் மீது பெயரிடப்படுகிறது. ஆதலால், படிநிலை நிர்வாகத்தின் ஒரு நிர்வாக அலகாக மாவட்டம் உள்ளது. அந்தப் படிநிலை நிர்வாகமானது கிராமங்கள், சிறு நகரங்கள் மற்றும் பெருநகரங்கள் போன்ற பூகோளப் பரப்பளவு களங்களின் எண்ணிக்கையைப் பெற்றுள்ளது. எனவே, ஒரு மாவட்டமாக சட்டப்படியாக அறிமுகமான ஒரு களமாக இருப்பதால், "மாவட்ட நிர்வாகம்' என்ற வார்த்தை அரசாங்கப் பணிகளின் மேலாண்மை எனப் பொருள்படுகிறது. இந்தியாவில் ஊரக மாவட்டம், நகர மாவட்டம், தொழில் மாவட்டம், பின்னிலை மாவட்டம் மற்றும் மலை மாவட்டம் என்று ஐந்து வகைகள் உள்ளன.

மாவட்ட நிர்வாகத்தின் தன்மைகள்

பொதுவாகவே, மாவட்ட நிர்வாகம் பின்வருகின்ற தன்மைகளைப் பெற்றுள்ளது.

 1. மாவட்ட அளவில்தான் மாநில அரசாங்கம் மக்களுடன் தொடர்புகொள்ள வருகிறது.
 2. ஆலோசனைச் செயலி அல்லது செயலகப் பணிகளுக்கு பதிலாக மாவட்ட நிர்வாகம் ஒரு களப்பணியாக உள்ளது.
 3. மாவட்ட அளவிலான பிரச்சினைகள் மாவட்டம் தொடர்பான ஸ்தலசுய தன்மையானவைகளாக உள்ளன.
 4. மாவட்ட அளவில் கொள்கை உருவாக்கம் முடிவடைந்து அமுலாக்கம் தொடங்குகிறது.
 5. மாநில அரசாங்கத்தின் இறுதி முகவராகவும், மாவட்டத்தில் எந்தச் செயல்பாடு அல்லது நிகழ்வுக்கான 'அவ்விட மனிதன்' என்றும் மாவட்ட அலுவலர் இருக்கிறார்.

மாவட்டத்தில் அலகுகளின் பணிச்செயல்பாடு ஒட்டுமொத்தமாக உள்ளது. அதிக எண்ணிக்கையுள்ள துறைகள் மாவட்ட அளவில் தங்களது கள முகமைகளைப் பெற்றுள்ளன. மாவட்ட அளவிலான பணியாளர்கள் மாவட்ட நிர்வாகத்தின் தலைவராக மாவட்ட ஆட்சியாளர் உள்ளார். 1772ல் வருவாய் வசூலித்தல் மற்றும் நீதி வழங்குதல் ஆகிய இரட்டை நோக்கத்திற்காக, முதல்முதலில் வாரன் ஹேஸ்டிங்ஸ் என்பவரால் மாவட்ட ஆட்சியாளர் பதவி உருவாக்கப்பட்டது. சரியாகக் கூறினால், ஆரம்பத்தில் நிலவருவாய் வசூலிப்பதற்காக மட்டுமே மாவட்ட ஆட்சியாளர் இருந்தார். ஆனால், தற்போது மாவட்ட ஆட்சியாளருக்கு மிகுதியான பணிகள் உள்ளன.

மாவட்ட ஆட்சியாளரின் பொதுவான பங்குகளும் பணிகளும்

 1. மாவட்ட ஆட்சியாளராக, நில வருவாயை வசூலிப்பதற்கு அவர் கடமைப்பட்டவர்.
 2. மாவட்ட நீதிபதியாக, மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்க அவர் கடமைப்பட்டுள்ளார்.
 3. மாவட்ட அலுவலராக, மாவட்டத்திற்குள் சம்பளம், இடமாற்றம் போன்ற பணியாளர் விசயங்களை கவனிக்க அவர் கடமைப்பட்டவர்.
 4. மேம்பாட்டு அலுவலராக, ஊரக மேம்பாட்டுத் திட்டங்களின் அமுலாக்கத்திற்கு பொறுப்புடையவராக அவர் உள்ளார்.
 5. தேர்தல் அலுவலராக, மாவட்டத்தில் பாராளுமன்றம், மாநிலச் சட்டசபை மற்றும் உள்ளாட்சி அரசாங்கம் ஆகியவைகளுக்கு நடத்தப்படும் தேர்தல்களுக்கு அவர் தலைவராக இருக்கிறார். எனவே, மாவட்டத்தில் தேர்தல் பணிகளை அவர் ஒருங்கிணைக்கிறார்.
 6. மாவட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலராக பத்து வருடங்களுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு செயல்பாடுகளை அவர் நடத்துகிறார்.
 7. தலைமைப் பாதுகாப்பு அலுவலராக, மாவட்டத்தில் மிக முக்கியமானவர்களின் சுற்றுலா மற்றும் தங்குதலில் பாதுகாக்க அவர் கடமைப்பட்டவர்.
 8. ஒருங்கிணைப்பாளராக, மாவட்ட அளவிலான மற்ற பணியாளர்களையும் துறைகளையும் அவர் மேற்பார்வையிடுகிறார்.
 9. மாவட்ட திட்ட அமுலாக்க குழுவிற்கு அவர் தலைமை வகிக்கிறார்.
 10. மாவட்டத்தில் பொது விழாக்களின் போது மாநில அரசாங்கத்தின் அலுவலகப் பிரதிநிதியாக அவர் செயல்படுகிறார்.
 11. மாநில அரசாங்கத்தின் பொதுமக்கள் தொடர்பு அலுவலராக அவர் செயல்படுகிறார்.
 12. இயற்கைச் சீற்றத்தின் போதும் மற்ற அவசர நிலைகளின் போதும் சிக்கல் தீர்க்கும் தலைமை நிர்வாகியாக அவர் செயல்படுகிறார்.
 13. உள்ளாட்சி அரசாங்க நிறுவனங்களை அவர் மேற்பார்வையிடுகிறார் மற்றும் கட்டுப்படுத்துகிறார்.
 14. சிவில், பாதுகாப்புத் தொடர்பான பணிகளை அவர் மேற்கொள்கிறார். மற்றும்
 15. உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் சிவில் விநியோகங்களுக்கு அவர் பொறுப்புடையவராக இருக்கிறார்.

எனவே, மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியாளர் பல்வேறு பணிபுரியும் பணியாளராக உள்ளார். உண்மையில், மக்களுக்காக அதிக எண்ணிக்கையுள்ள திட்டங்களை அமுல்படுத்தக் கடமைப்பட்டுள்ள அரசாங்கத்தின் பொதுநல அரசுக் கொள்கைக்கேற்ப, ஒரு மாவட்ட ஆட்சியாளருக்கு அதிகமான பணிப்பளுச் செயல்பாடுகள் உள்ளன. நடைமுறையில், மாவட்ட ஆட்சித் தலைவர் பதவி மிக அதிக மதிப்புள்ளதாக உள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் நாயகனாக மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளார்.

மாவட்ட அளவிலான மற்ற முக்கிய பணியாளர்கள்

 1. காவல் கண்காணிப்பாளர்
 2. மாவட்ட மருத்துவ அலுவலர்
 3. மாவட்ட சுகாதார அலுவலர்
 4. மாவட்ட வன அலுவலர்.
 5. கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர்
 6. மாவட்ட விவசாய அலுவலர்
 7. மாவட்ட தொழில்கள் அலுவலர்
 8. மாவட்ட நீதிபதி
 9. பின்னிலை வகுப்பு நல அலுவலர்
 10. சிறைகள் கண்காணிப்பாளர்
 11. மாவட்ட தொழிலாளர் அலுவலர் கோட்ட அளவு

தமிழ்நாட்டில், குறிப்பாக வருவாய் நிர்வாகத்திற்கும் சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கவும் கோட்ட நிர்வாகத் தலைவராக வருவாய் கோட்ட அலுவலர் உள்ளார். ஆனால், கோட்ட அளவிலான மேம்பாட்டு நிர்வாகம் உதவி இயக்குனர் (மேம்பாடு) என்பவரால் தலைமை வகிக்கப்படுகிறது.

உதவி இயக்குனர் (மேம்பாடு) என்ற அலுவலரின் கீழ் விவசாயம், கூட்டுறவு, தொழில், கல்வி, விலங்கு பராமரிப்பு மற்றும் சுகாதாரம் போன்றவைகளுக்கான விரிவாக்க அலுவலர்கள் பணியாளர்களாக உள்ளனர். தாலுகா அளவு

தமிழ்நாட்டில் தாலுகா அளவிலான நிர்வாகத்தின் தலைவராகத் தாசில்தார் என்ற வட்டாட்சியர் உள்ளார். இங்கே, தாலுகா என்பது வட்டம் என்று பொருள்படும். வட்ட அளவில் வட்டாட்சியருக்கு உதவி புரிவதற்குத் துணை வட்டாசியர்கள் உள்ளனர். மேம்பாட்டு நிர்வாகத்திற்காக ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. ஊராட்சி ஒன்றிய ஆணையர் அல்லது பிளாக் மேம்பாட்டு அலுவலர் (BDO) அதன் தலைவராக இருக்கிறார் மற்றும் அவருக்குக்கீழ் விவசாயம், சுகாதாரம், கூட்டுறவு, விலங்கு பராமரிப்பு, கல்வி மற்றும் தொழில் போன்றவைகளுக்கான விரிவாக்க அலுவலர்களும் உள்ளனர். பிர்க்கா அளவு பிர்க்கா அளவிலான வருவாய் நிர்வாகத்தின் தலைவராக வருவாய் ஆய்வாளர் உள்ளார். பிர்க்கா என்பது துணை வட்டம் என்று பொருள்படும். தமிழ்நாட்டில் ஒவ்வொரு தாலுகாவும் பல பிர்க்காக்களாகப் பிரிக்கப்படுகிறது. ஆனால், இதன் பெயர் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது.

கிராம அளவு கிராம் அளவிலான நிர்வாகத்தின் தலைவராக கிராம நிர்வாக அலுவலர் இருக்கிறார். களத்தில் குறிப்பாக கிராமத்தில் மிக முக்கியமான பணியாளராக அவர் உள்ளார். அவருக்குக்கீழ் கிராம மட்டத்திலான பணியாளர்கள் உள்ளனர். வருவாய், காவல் மற்றும் பொது நிர்வாகக் கடமைகளை அவர் செய்கிறார். கிராம் அளவில் அரசாங்கத்தின் பிரதிநிதியாகவும் அவர் செயல்படுகிறார்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

3.10344827586
Moorthi Elayappan Aug 16, 2019 10:48 AM

மிக பயனுள்ள தொகுப்பு.
உயர்நீதிமன்ற நீதிபதியின் பதவி நீக்க நடைமுறைகள் பற்றி தெரிவிக்கவும்...

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top