অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

தமிழ்நாடு மாநில தரவு மையம் மற்றும் கணினி சர்வர் பண்ணை

தமிழ்நாடு மாநில தரவு மையம் மற்றும் கணினி சர்வர் பண்ணை

அறிமுகம்

தேசிய மின் ஆளுகைத் திட்டத்தின் கீழ் மின்ஆளுகைத் திட்டங்களைச் செயல்படுத்த தமிழ்நாடு மாநிலத் தரவு மையம் 01.08.2011 அன்று துவங்கப்பட்டது.

தகவல் பாதுகாப்பு நிர்வாகம் மற்றும் தரவு மைய இயக்கங்கள் ஆகியவற்றிற்கான தேசிய அளவில் ISO/IEC 20000-1:2005 மற்றும் 27001:2005 தரச் சான்றிதழ்களை பெற்ற முதல் மாநிலம் தமிழகம் ஆகும். இது தமிழ்நாடு மாநில தரவு மையத்தின் செயலாக்கத்தில் ஒரு முக்கிய மைல்கல் ஆகும்.

தமிழ்நாடு மாநில தரவு மையம் தற்போது மேம்படுத்தப்பட்ட ISO தரச் சான்றிதழ்களான ISO/IEC 20000-1:2011 மற்றும் ISO/IEC 27001:2013 ஆகியவற்றைப் பெற்றுள்ளது.

  • தமிழ்நாடு சுகாதாரத் திட்டம்
  • சென்னை மெட்ரோ இரயில் திட்டம்
  • தமிழகத் தேர்தல் ஆணைய வாக்காளர் பட்டியல் திட்டம்
  • விலையில்லா மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் வழங்கும் திட்டம்
  • மாணவர்களுக்கான மடிக்கணினி வழங்கும் திட்டம்
  • மின்ஆளுகை மற்றும் மின்மாவட்டத் திட்டம்

போன்ற 20-க்கும் மேற்பட்ட அரசுத் துறைகளைச் சார்ந்த 39 இணையப் பதிவுகள்/ செயற்பாடுகள் தமிழ்நாடு மாநிலத் தரவு மையம் வாயிலாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ரூ.40 கோடி செலவில் 40 அடுக்குகளுடன் கூடிய 5,000 சதுர அடி பரப்பளவிலான கட்டடத்தில் தமிழ்நாடு மாநில தரவு மையம் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு மாநில தரவு மையத்தில் தேவையான வன்பொருள், மென்பொருள் மற்றும் சோதனைக் கருவிகளுடன் கூடிய கணினி சர்வர் பண்ணை (Server Farm) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கணினி சர்வர் பண்ணை மூலமாக அரசுத் துறைகள் தங்களது செயல்பாடுகளை தரவேற்றம் செய்வதற்கு முன் பாதிப்பு மதிப்பீடு மற்றும் ஊடுருவல் சோதனை செய்து கொள்ள முடியும்.

மேகக் கணினியம்

சி-டாக் (C-DAC) நிறுவனத்துடன் இணைந்து ஒரு முன்னோடித் திட்டமாக தமிழ்நாடு மாநில தரவு மையத்தில் மேகக் கணினியம் (Cloud) அமைக்கப்பட்டுள்ளது. வேட்டிசேலை திட்டம், எல்காட் நிறுவனத்தின் நிறுவன வளத் திட்டமிடல் மற்றும் வசதி மேலாண்மை (ERP-FMS) ஆகியவை இக்கணினியத்தில் செயற்படுத்தப்பட்டுள்ளன.

பேரிடர் மீட்பு மையம் மற்றும் அருகாமை பேரிடர் மீட்பு மையம்

  • தமிழ்நாடு மாநில தரவு மையத்திற்கான பேரிடர் மீட்பு மையத்தை (Disaster Recovery Center) திருச்சியில் ஏற்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டு வருகிறது.
  • தமிழ்நாடு மாநில தரவு மையத்தின் உடனுக்குடனான தரவு மீட்புத் தேவைகளை பூர்த்தி செய்திடும் வகையில் ஒரு அண்மை தரவு மீட்பு மையத்தை (Nearline DRC) ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை மத்திய அரசின் தரவு மையத்துடன் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • தமிழ்நாடு பெரும்பரப்பு வலையமைப்பு மற்றும் தேசிய அறிவுசார் வலையமைப்பு  மாநில அரசின் முழுமையான நிதியுடன் தமிழ்நாடு மாநில பெரும்பரப்பு வலையமைப்பின் (Tamil Nadu State Wide Area Network – TNSWAN) இரண்டாம் கட்ட செயல்பாடுகள் 09.09.2013 அன்று தொடங்கப்பட்டன. 2000-க்கும் மேற்பட்ட அரசுத் துறை அலுவலகங்களுக்கு கிடைமட்ட இணைப்பு (Horizontal Connectivity) இதன் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
  • 100 mbps அளவு இணைய பரிமாற்றத்தினைக் கொண்ட தேசிய அறிவுசார் வலையமைப்பின் (National Knowledge Network) ஒரு 1 Gbps இணைப்பு தமிழ்நாடு மாநில தரவு மையத்துடன் 22.02.2012 முதல் இணைக்கப்பட்டு 34 mbps/100 mbps/1 Gbps என்ற அளவில் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

மின் அஞ்சல் பயன்பாடு

தலைமைச் செயலகத்தில் உள்ள தேசிய தகவல் மையத்தின் தற்போதைய உட்கட்டமைப்பை பயன்படுத்தி, குறுகிய கால மின் அஞ்சல் பயன்பாடு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மின் அஞ்சலை அலுவல் சார்ந்த பதிவுகளுக்கான சேமிப்பு மற்றும் பாதுகாப்பு ஆவணமாக மாற்றுவதற்கான விதிமுறைகளைச் செயல்படுத்தும் வகையிலும், தடையில்லா கணினி இணைப்பினை அளிக்கும் வகையிலும் இது அமையும்.

மின் மாவட்ட திட்டம் மற்றும் மின்மாவட்ட வலைதளம்

  • தேசிய மின்னாளுகைத் திட்டத்தின்கீழ் அரசின் மின் ஆளுகை சேவைகளை குடிமக்களுக்கு அரசு இ-சேவை மையங்கள் வாயிலாக வழங்கும் நோக்கில் மின்மாவட்டத் திட்டம் செயல்படுத்தப்பட்டு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்ந்த கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டங்கள் மற்றும் வருவாய், சமூகநலம் ஆகிய துறைகளின் மின்மாவட்ட சேவைகளும் இம்மையங்கள் வாயிலாக வழங்கப்பட்டு வருகின்றன.
  • விரிவாக்கப்பட்ட மின் மாவட்டத் திட்டத்தினை மாநிலம் முழுவதும் செயல்படுத்தும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட மின்ஆளுகை சங்கங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா ரூ.10 இலட்சம் நிதி ஒப்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது.
  • 5 மாவட்டங்களில் முன்னோடித் திட்டமாகச் செயல்படுத்தப்பட்டு வந்த மின்மாவட்டத் திட்டத்தை இதர 27 மாவட்டங்களுக்கும் 24.02.2014 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் விரிவாக்கம் செய்யப்பட்டது.
  • 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியிலேயே இணையத்தின் வாயிலாக பதிவு செய்து, வேலைவாய்ப்புப் பயிற்சித் துறை அலுவலகத்திலிருந்து பதிவு செய்ததற்கான அட்டையை, தங்களுடைய தகுதிநிலை மாறாமல் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அரசு இ-சேவை மையங்கள்

பொதுமக்கள் அனைவரும் ஒரே இடத்தில், அரசின் பல்வேறு சேவைகளை எளிதில் பெற்றிட அரசு இ-சேவை மையங்களை

  • தமிழக அரசு எல்காட் நிறுவனம்,
  • தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்,
  • முதன்மை வேளாண் கூட்டுறவு கடன்வழங்கு சங்கங்கள்,
  • கிராமப்புற வறுமை ஒழிப்புக் குழு அலுவலகங்கள்
  • கிராமப்புற தொழில் முனைவோர் அமைப்பு
  • நகர்ப்புற அரசு இ-சேவை மையங்கள்

மாநிலம் முழுவதும் அரசுத் துறைகளின் மின்ஆளுமை முயற்சிகளை கொண்டு செல்லும் வகையில், தகவல் தொழில்நுட்ப பணிநிலை உருவாக்கப்பட்டு, முதற்கட்டமாக 98 பதவியிடங்களுடன் மின்னாளுமை இயக்குநரகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

மாநில குடியிருப்போர் தகவல் தொகுப்பு மையம்

தமிழ்நாட்டில் மாநில குடியிருப்போர் தகவல் தொகுப்பு மையத்தினை நிறுவ ஆணையிடப்பட்டு, இம்மையத்தில், தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டின் மூலம் குடிமக்களின் பயோமெட்ரிக் தரவுத் தளத்தை உருவாக்கி, அது மைய அரசின் UIDAI நிறுவன ஆதார் எண்ணின் மூலம் சரிபார்க்கும் திட்டம் ரூ.25.93 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு புவிசார் தகவல் அமைப்பு

அரசுத் துறைகளுக்கிடையே தகவல் பரிமாற்றம் செய்துகொள்ளத்தக்க வகையில் மின்வரைபடத் தொகுப்பினை உள்ளடக்கிய புவிசார் தகவல் அமைப்பு ஒன்றினை நிறுவிட நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

குறுந்தகவல் மூலம் கண்காணிப்பு வசதி

பொதுமக்கள் மின்மாவட்ட வலைதளத்தில் சமர்ப்பித்திடும் விண்ணப்பங்களின் நிலையைக் குறுந்தகவல்கள் வாயிலாகக் கண்காணித்திடும் வகையில் “குறுந்தகவல் மூலம் கண்காணிப்பு வசதி” ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்

  • செயலிழந்த நிலையில் இருந்த அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்குப் புத்துயிரூட்டி, புனரமைத்து, அதன் செயல்பாடுகளை விரிவுபடுத்திட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ரூ.3 கோடி நிதியுதவி வழங்கி ஆணையிட்டுள்ளார்கள். மேலும், அந்நிறுவனத்தின் பெயரினை “தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்” என பெயர் மாற்றம் செய்துள்ளனர். தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் அதன் சேவைகளை தமிழகம் முழுவதும் 02.09.2011 அன்றும், சென்னையில் 20.10.2012 அன்றும் துவங்கியது.
  • ரூ.70 என்ற குறைந்த மாத கட்டணத்தில் நிறைவான சேவைகளை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 70.52 இலட்சம் மற்றும் ஆப்பரேட்டர்களின் எண்ணிக்கை 26,246 ஆக உள்ளது.
  • தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் இலவச சேனல்கள், கட்டணச் சேனல்கள் மற்றும் தனியார் உள்ளூர் சேனல்கள் உட்பட 90 முதல் 100 சேனல்களை வழங்கி வருகிறது. 137 கட்டணச் சேனல்களை கொள்முதல் செய்துள்ளது.
  • மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு சென்னை மாநகரத்தைச் சார்ந்த சி.ஏ.எஸ். பகுதிகளுக்கான எம்.எஸ்.ஓ. உரிமம் வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு DAS உரிமம் வழங்கப்பட்டவுடன், சென்னை மாநகரப் பகுதிகளுக்கு டிஜிட்டல் முறையில் கேபிள் டி.வி. சேவைகளை இந்நிறுவனம் வழங்கும்.
  • தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், தமிழ்நாடு முழுவதும் அதிவேக அகண்ட அலைவரிசை இண்டர்நெட் சேவைகளை உள்ளூர் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மூலம் வழங்குவதற்காக ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா எனும் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிராமப்புற வணிக வெளிப்பணி மையங்கள்

  • சமுதாய மற்றும் பொருளாதார வசதிகளில் மிகவும் பின்தங்கியுள்ள கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கி, அவர்கள் வேலைக்கு செல்வதற்கு ஏதுவாகவும், கிராமங்களிலிருந்து நகரங்களுக்குக் குடிபெயராமலும், மேலும், நக்சல் ஆதிக்கத்திற்கு இரையாகாமல் இருப்பதற்காகவும் அரசு மேம்படுத்தப்பட்ட கிராமப்புற வணிக வெளிப்பணிக் கொள்கையை 01.06.2012 அன்று வெளியிட்டு அதற்கென ரூ.8.96 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • ஸ்ரீரங்கத்தில் ஒரு கிராமப்புற வணிக வெளிப்பணி மையத்தை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் 03.06.2013 அன்று துவக்கி வைத்தார். தமிழகத்தின் மற்ற இடங்களில் இத்தகைய மையங்களை அமைத்திடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
  • கணித்தமிழ் ஆய்வுக்கூடம், தமிழ் மென்பொருள் உருவாக்க மையம், தமிழ் மின் நிகண்டு மற்றும் இணையவழி களஞ்சியம்
  • மொழியியல் அடிப்படையிலான இலக்கணக் குறிப்புடன் கூடிய விரிதரவு திட்டத்திற்காக சங்ககால நூல்கள், சங்கம் மருவிய கால நூல்கள், காப்பியங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய 56 நூல்களுக்கு முதல்கட்டமாக இலக்கணக் குறிப்பு இடும் பணி நடைபெற்று வருகிறது.
  • கணினி மொழிபெயர்ப்பு, OCR போன்ற தமிழ் மென்பொருள்களை உருவாக்குவதற்கு கணித் தமிழில் ஆராய்ச்சி மேற்கொள்ள ஒரு கணித்தமிழ் ஆய்வுக்கூடம் நிறுவப்பட்டுள்ளது.
  • ஒருங்குறி (Unicode) மற்றும் அனைத்துரு எழுத்துரு (TACE) முறைகள் தமிழ்நாடு அரசின் செந்தரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதற்கேற்ப, எழுத்துருக்களையும், விசைப்பலகை இடைமுகங்களையும் உருவாக்கி இலவசமாக பயனாளர்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன.
  • தமிழ் மென்பொருள் உருவாக்கத்தில் ஆர்வமுள்ளவர்களுக்குத் தேவையான ஆராய்ச்சி, வளர்ச்சி மற்றும் ஆய்வு மேற்கொள்ள தமிழ் மென்பொருள் உருவாக்க மையத்தை 22.09.2014 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள்.
  • தமிழ் இணையக் கல்விக்கழக இணையதளத்தில் மின்நூலகம், மொழியியல் அடிப்படையிலான தமிழ்விரிதரவு மற்றும் இணையவழிக் கல்விக்கான தமிழ்ப்பாடங்கள் உள்ளன. இதன் உதவியுடன் தமிழ் இணையக் கல்விக்கழகம் “தமிழ் மின் நிகண்டு” ஒன்றை உருவாக்கியுள்ளது.
  • நாட்டுடைமையாக்கப்பட்ட 2,217 நூல்கள் தமிழ் இணையக் கல்விக்கழக மின்நூலகத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்நூல்களை மின்னுருவாக்கம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • உலகெங்கும் உள்ள தமிழறிஞர்கள், வல்லுநர்கள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் ஒருங்கிணைந்து இணைய வழி பங்காற்றி தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், தமிழர், தமிழ்மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தின் சாதனைகளை உள்ளடக்கிய தமிழ்மொழி, கலை மற்றும் பண்பாட்டுக்கான விரிவான இணையவழி களஞ்சியம் ஒன்று தமிழ் இணையக் கல்விக் கழகத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : தமிழரசு இதழ்

கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate